வெள்ளி, 24 ஏப்ரல், 2020

*பிறை ஒரு பார்வை*



மௌலவி அல்ஹாபிழ் அஃப்ழலுல் உலமா                                               
டாக்டர்  M.ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி  Phd

தலைவர் : சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்

முதல்வர் : கைருல் பரிய்யா மகளிர் அரபிக் கல்லூரி

நோன்பு நோற்பதற்கும், பெருநாள் கொண்டாடுவதற்கும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் பிறை பார்த்தால் போதுமா அல்லது அந்தந்த பகுதிகளில் பிறை பார்க்க வேண்டுமா?


நோன்பு நோற்பதற்கும் பெருநாள் கொண்டாடுவதற்கும் அந்தந்த பகுதிகளில் பிறை பார்க்க வேண்டும்.

عَنْ كُرَيْبٍ أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَىَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْتُ الْهِلاَلَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِى آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِى عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ - رضى الله عنهما - ثُمَّ ذَكَرَ الْهِلاَلَ فَقَالَ مَتَى رَأَيْتُمُ الْهِلاَلَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ. فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ. فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلاَ نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلاَثِينَ أَوْ نَرَاهُ. فَقُلْتُ أَوَلاَ تَكْتَفِى بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ فَقَالَ لاَ هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-. (رواه مسلم , الرقم: 1983)

(இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீ முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை உம்முல் ஃபள்ல் பின்த் அல் ஹாரிஸ் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அனுப்பினார்கள்.

அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவு செய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.

பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்து சேர்ந்தேன்.அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். அப்போது "நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான், " நாங்கள் வெள்ளிக்கிழமை பிறை கண்டோம்" என்று பதிலளித்தேன். அவர்கள், "நீங்களே  அதைக் கண்டீர்களா ?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள் மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினேன்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்  "நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும் வரை நோன்பு நோற்றுக் கொண்டேயிருப்போம்" என்று சொன்னார்கள். அதற்கு நான், "முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் (முதல் பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?" என்று கேட்டேன். அதற்கு, "இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம், எண்: 1983)

மேக மூட்டத்தின் காரணமாக பிறை நமக்கு தென்படாமல் இருக்கலாம்; பிறையை நாம் பார்க்கவில்லை எனில் 30 நோன்பாக நோற்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதிகளிலும் பிறை பார்த்து நோன்பு நோற்றால் லைலத்துல் கத்ர் இரவு ஒவ்வொரு பகுதிகளுக்கும் வித்தியாசப்படுகிறதே! மலக்குகளின் வருகை எப்படி என்ற சந்தேகம் வருமே?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: ஒவ்வொரு நாளும் காலை பஜ்ர் நேரத்தில் மலக்குகள் வருகிறார்கள். மற்றொரு மலக்குகள் கூட்டம் அஸ்ர் நேரத்தில் வருகிறார்கள்.

உலகில் ஒரு பகுதியில் பஜ்ர் ஆக இருக்கும்போது மற்றொரு பகுதியில் லுஹர் ஆக இருக்கும். எல்லாவற்றிற்கும் ஒரே பிறை என்றால் ஒவ்வொரு நாடுகளுக்கும் நேரம் வித்தியாசப்படுகிறதல்லவா?

பிறையை எல்லோரும் பார்த்தாக வேண்டுமா? அல்லது ஒருவர் மட்டும் பார்த்தால் போதுமா?

عَنْ ابْنِ عُمَرَ قَالَ تَرَاءَى النَّاسُ الْهِلَالَ فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ فَصَامَهُ وَأَمَرَ النَّاسَ بِصِيَامِهِ. (رواه ابو داود , الرقم : 1995

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாவது:

மக்கள் அனைவரும் பிறையை தேடினார்கள். நான் பிறையை பார்த்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் சொன்னேன். (என் செய்தியை வைத்து) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோன்பு நோற்றார்கள். மக்களையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (நூல்: அபூதாவூத், எண்: 1995)

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي رَأَيْتُ الْهِلَالَ قَالَ أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ قَالَ نَعَمْ قَالَ يَا بِلَالُ أَذِّنْ فِي النَّاسِ أَنْ يَصُومُوا غَدًا. (رواه الترمذي , الرقم : 627 , وابو داود , الرقم : 1993)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

கிராமவாசி ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "நான் பிறையைப் பார்த்தேன்" என்றார். (அவரிடம்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நீர் உறுதியாக மொழிகிறீரா? முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்று நீர் உறுதிமொழிகிறீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம்" என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம்), "பிலாலே! நாளை நோன்பு நோற்குமாறு மக்களுக்கு அறிவிப்புச் செய்யுங்கள்" என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ, எண்: 627, அபூதாவூத், எண்: 1993)

எனவே பிறையை பார்க்கின்ற நபர் இறை நம்பிக்கையாளர்களாக இருக்க வேண்டும். மேற்கண்ட இரு ஹதீஸ்களும் தனி நபரால் பிறை பார்க்கப்பட்டு இருந்தாலும் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கீகரித்தது போல் இப்பொழுது தமிழகம் உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் இறை நம்பிக்கையாளரான ஒருவரால் பிறை பார்க்கப்பட்டு இருந்தாலும் அரசு காழியால்தான் அறிவிப்பு செய்யப்படவேண்டும்

இந்தியா போன்ற பரந்து விரிந்த நாடுகளில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலைமை காழிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். பிறை பார்க்கப்பட்டது என்ற செய்தியை தலைமை காழிகள் தான் அறிவிக்க வேண்டும்.

அந்தந்த பகுதிகளில் பிறை பார்த்து நோன்பு நோற்பதால் ஒரு மாநிலத்தில் ஒரு நாளும், அண்டை மாநிலத்தில் மற்றொரு நாளும் பெருநாள் கொண்டாடப்படுகிறதே! இது ஒற்றுமையின்மையை தானே வெளிப்படுத்துகிறது?

ஒற்றுமையாக இருக்கத் தான் வேண்டும் அதற்காக உலகம் முழுவதும் லுஹர் தொழுகையை ஒரே நேரத்தில், ஒரே மாதிரியாக தொழ முடியுமா? அந்தந்த நாடுகளில், மாநிலத்தில் கணக்கிடப்படுகின்ற நேரத்தின் அடிப்படையில் தொழுகை நடத்தப்படுவதால் ஒற்றுமை இல்லை என்று சொல்லி விட முடியுமா?

தொழுகையில் நேரம் வித்தியாசப்பட்டு அந்தந்த நாடுகளில் இருக்கின்ற நேரத்தின் அடிப்படையில் தொழுகின்ற போது நோன்பு நோற்பதற்கு மட்டும் உலகம் அனைத்திற்கும் ஒரே பிறை என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

எனவே, நோன்பு நோற்பதற்கும் பெருநாள் கொண்டாடப் படுவதற்கும் அந்தந்த பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டு, தலைமை காழிகளால் அறிவிக்கப்பட்ட பின் தான் நோன்பு வைக்க வேண்டும். பெருநாளும் கொண்டாட வேண்டும்.

அல் - அஸ்ரார் மாத இதழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக