செவ்வாய், 21 ஏப்ரல், 2020

எலியும் ஒட்டகமும்


ஒட்டகம் ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டிருந்தது. அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு கிழே விழுந்து கிடந்தது. அங்கு வந்த எலி ஒன்று அந்த கயிற்றை வாயில் கடித்து பிடித்துக் கொண்டு ஒட ஆரம்பித்தது. எலியின் முட்டாள் தனமான செயலைக் கண்டு சினம் கொள்வதற்கு பதிலாக ஒட்டகம் சிரித்துக் கொண்டது, எலி என்னதான் செய்யும் பார்க்கலாம் என்றெண்ணி அது இழுத்த பக்கமெல்லாம் ஒரு அடிமையைப் போல் பின் தொடர்ந்து சென்றது. எலிக்கு பெருமை பிடிபடவில்லை
நிமிர்ந்து நடந்தது.

பாவும் எலியின் பெருமை நீடிக்கவில்லை காரணம் ஆறு ஒன்று குறுக்கிட்டதுதான். ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது
நின்று விட்ட எலிசிந்தனையில் மூழ்கியது. இவ்வளவு தொலைவுக்கு இத்துணைப் பெரிய மிருகத்த இழுத்துக் கொண்டு வந்து விட்டேன் மலை போன்று உயர்ந்த ஓர் மிருகம் என் பின்னால் வருவதைக் கண்டு பெருமைப்பட்டுக் கொண்டேன். பாழாய்ப்போன நதி என் விதியில் குறுக்கிடுகிறதே. தண்ணீரில் இதை எப்படி இழுத்துச் செல்வது என்று பிரமித்து நின்று விட்டது. திரும்பிப் பார்க்கவும் வெட்கம்

உள்ளத்துள் சிரித்துக் கொண்ட ஒட்டகம் நயமான நடிப்புடன்
கேட்டது. காட்டிலும் மலையிலும் என்னுடன் வசிக்கும் நண்பனே
ஏன் அச்சமுற்று நின்று விட்டாய்? தலைமை தாங்கி என்னை இதுவரை நடத்தி வந்த உனக்கு தயக்கமேன்? ஆண்மையுடன் வீரத்துடன் காலை எடுத்து ஆற்றில் வை. அஞ்சாதே நட விரைந்து

ஆற்றில் மூழ்கி விடுவேனோ என்று பயப்படுகிறேன் என்றது எலி
தலைவரே! தாங்கள் அஞ்சுவது வியப்பாயிருக்கிறது என்றுரைத்த
ஒட்டகம் சரி தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கிறோன் என்று தன் ஒரு காலை எடுத்து தண்ணீரில் வைத்தது. முழங்கால் வரை தண்ணீர் இருந்தது. தலைவரே என் வழி காட்டியே! முழங்காலளவு தண்ணீர் தானே உள்ளது. இதற்கு போய் பயப்படலாமா? இறங்கு தலைவரே என்னை வழி நடத்தி செல் வேந்தே! என்றது ஒட்டகம்

எலி கூறியது: உனக்கு முழங்கால் வரை தண்ணீர் இருந்தால் அது
என் தலைக்கு மேல் பன்மடங்கு அதிகமிருக்குமே, மூழ்கிவிடுவேனே உன் காலுக்கும் என் காலுக்கும் உயரத்தில் நிரம்ப வித்தியாசமிருக்கிறதல்லவா.

ஒட்டகத்திற்கு இப்போது கோபமான கோபம், கூறியது. மரியாதையாக வா, என்னை வழி நடத்திச் செல் இதுவரை எப்படி நடத்தி வந்தாயோ அதேபோல் தண்ணீரிலும் நடத்திச்செல். ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் என்னை இழுத்துக் கொண்டு தலையை உயர்த்திக் கொண்டு பெருமையாக நடந்தாய். புறப்படு! என்றது

உன்னை ஏன் தொடர்ந்து வந்தேன் தெரியுமா? உன் முட்டாள்தனத்தை மேலும் வெளிச்சப் படுத்திக் காட்டத்தான் என்றது. இக்கட்டத்தில் ஒட்டகம் எதற்காகவோ தன் முன் கால்களில் ஒன்றைத் தூக்கியது. எலி தன்னை மிதிப்பதற்காக என்று எண்ணியதோ எண்ணவோ பூனை வாய் சிக்கியது போல் கிரீச்சிட்டது. ஒட்டகம் தன்னுள் சிரித்துக் கொண்டது.

எலிக்கு பூர்த்தியான புத்தி வந்து விட்டது

நான் தண்ணீரில் இறங்கினால் மாண்டுபோவேன். நான் தவ்பா செய்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். இனி தங்களுக்கு தலைமை தாங்கும் எண்ணத்தை கனவிலும் நினைக்கமாட்டேன். அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து விடுங்கள். வெள்ள அபாயத்திலிருந்து என்னை விடுவித்து விடுங்கள் என்று கண்ணீருடன் மண்ணில் தலை வைத்து முறையிட்டது

எலி தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதும் ஒட்டகத்தின் உள்ளம் இளகி விட்டது மன்னித்து விட்டேன். எலியோ! வா. என் முதுகுத் திமிலில் அமர்ந்து கொள் உன்னைப் போன்று நூறு எலிகள் என் முதுகின் மேல் அமர்ந்து கொண்டாலும் இது போன்ற தண்ணீரைப் பாதுகாப்புடன் கடந்திட என்னால்முடியும்என்று அன்புடன் அழைத்தது.

இயக்க தெரியாத படகை செலுத்த முயற்சிக்காதே

நீ செம்பாக இரு. செம்பைப் பொன்னாக்கும் கலை கற்றவனிடம்

அவன் உன்னை பொன்னாக்கி விடுவான். தலைக்கனம் கொண்டால்
தங்கமாக முடியாது

இறையச்சமோ தீர்ப்புதினம் பற்றிய பயமோ உனக்கு இல்லா விட்டால் ஓடு.

அல்லாஹ்வின் நன்மக்களுடன் நட்புகொள். நீ ஒளி சிந்தும் முத்தாகி விடுவாய்

அல்லாஹுத்தஆலாவின் அன்பர்களை குறை கூறித்திரியாதே

அரசன் மீது திருட்டுக் குற்றத்தை சுமத்தாதே. அவன் திருடவேண்டிய தேவையில்லையே


அல்லா ஹுதஆலாவின் நன்மக்கள் அந்தரங்கத்தில் பெரும்செல்வம் படைத்தவர்கள், உலகம் அவர்களுக்கு சிறு துரும்புக்கு சமம் அவர்களை மட்டமாக மதிப்பிடாதே. இரவையும் பகலையும் உன்னைப் போல் தான் அவர்களும் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கணக்கு போடாதே

அவர்களைக்காண நீ உயர்ந்த நிலையில் இருப்பதாக எண்ணிக்
கொண்டிராதே ஏமாற்றமடைவாய் இழிவடைவாய். இறுதியில் நீ
அவர்கள் முதுகில் அமர்ந்துதான் வழி கடக்க வேண்டி வரும், எலியைப் போல் மன்னிப்பு கோர வேண்டியதாகி விடும். அவமானப்பட்டு நிற்கநேரிடும்

இப்போதே மூளையைப் பயன்படுத்தி பணமும் பதவியும் பட்டமும்
உயிரற்றவை என்றுணர்ந்து அவைகளை உதறித்தள்ளிவிட்டு நல்லோருடன் நட்பு கொண்டு நற்பதவி அடைந்திட முனைந்திடு. சிறந்திடுவாய்.

நல்லோரின் அன்பைப் பெற்றால் அடுத்து கிடைப்பது அல்லாஹ்

அல்லாஹ்வை நேசிக்க ஆசைப்பட்டால் நபிமணி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். இது குர்ஆன் கரீமின் கட்டளை.

(ஆக்கம்: அறிஞர் ரூமீ (ரஹ்))

(மவ்லவி காரி அப்துல் பாரி பாகவி, வேலூர், )

1995.ம் வருட ஜமாஅத்துல் உலமா இதழிலிருந்து...

மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக