திங்கள், 27 ஏப்ரல், 2020

பெற்றோரின் உபதேசம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக. நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் ................................................

நான் இங்கு ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி உபதேசம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி  பேச வந்துள்ளேன்.

என் அருமை குழந்தைகளே...

சுத்தம் என்பது ஒரு சிறந்த சுகாதாரம் ஆகும், அதனால் தான் அன்பு நபி "சுத்தம் ஈமானின் சரிபாதி!" அதாவது சுகாதாரம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்றார்கள்.

அதனால் நாம் உடலை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க
வேண்டும். இயற்கை தேவைகளின் போது அதாவது மலம் ஜலம் கழிக்க ஒதுக்குப்புறமான இடங்களுக்குச் செல்ல வேண்டும். அந்த தேவைகள் முடிந்த பின் மண் கட்டிகள், நீர் இவற்றின் மூலமாக உடலை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

காலில் எப்போதும் செருப்பு அணிந்திருக்க வேண்டும் "செருப்பு அணியாதவனின் சாட்சியை ஏற்க வேண்டாம்- என்று அன்பு நபிகளார் சொல்லி இருக்கிறார்கள் 

ஏனென்றால்.. காலில் செருப்பு அணியாதவன் சுகாதாரத்தை பேணாதவன் ஆவான், உடல் சுத்தமில்லாதவனின் மனதும் சுத்தமில்லாமலிருக்கும். அவனது வார்த்தைகளும் சுத்தமில்லாமலிருக்கும். அவனது சாட்சியில் உண்மை இருக்காது என்பது அதன் அர்த்தமாக இருக்கிறது.

என் அழகு செல்லங்களே......

உணவு வேளைகளின் போது, இரண்டு கைகளையும் சுத்தமாக
வைத்திருக்க வேண்டும். உணவு கீழே சிந்தாமலிருக்க உணவு விரிப்பு பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு உணவு பருக்கையும் இறைவனின் அருளால் கிடைப்பது. அதனால் உணவை சிந்தி வீணாக்கக் கூடாது உணவு உண்ணும் போது வலது கையால் உண்ணத் தொடங்க வேண்டும். உள்ளங்கையில் உணவு ஒட்டாமல் விரல்களால் உணவை எடுத்துச் சாப்பிட வேண்டும்

கண்ட இடங்களில் மூக்குச் சிந்தக்கூடாது. எச்சில் துப்பக்கூடாது
யாருக்காவது நீரோ அல்லது ஏதாவது பொருளையோ தருவதாக
இருந்தால் வலது கையால் கொடுக்க வேண்டும்.

பெரியவர்கள் அழைக்கும் போது, "இதோ வருகிறேன்!" - என்று உடனே பதில் அளித்துவிட்டு அவர்கள் சொல்லும் வேலைகளை தட்டாமல் செய்ய வேண்டும்

இரகசியங்களை யாரிடமும் சொல்லாமல் காப்பற்ற வேண்டும்
அன்பு நபியின் பெயரை உச்சரிக்கும் போது, "ஸல்லல்லா அலைஹி வஸல்லம் - அன்பு நபிகளமது இறைவனின் சாந்தியும்-சமாதானமும் உண்டாவதாக"- என்று பிரார்த்திக்க வேண்டும்.

அன்பு நபிகளாரின் தோழர், தோழியர் பெயர்களை உச்சரிக்கும் போது, "ரலியல்லாஹு அன்ஹு - இறைவன் அவர் மீது கருணை காட்டுவானா" என்றும், "ரலியல்லாஹு அன்ஹா - இறைவன் அந்த அம்மையார் மீது கருணைக் காட்டுவானாக!" - என்றும் பிரார்த்திக்க வேண்டும்.

இறைவனின் நல்லடியார்களின் பெயர்களை உச்சரிக்கும் போது ரஹ்மதுல்லாஹி அலைஹி - இறைவன் அருள் பொழிவானாக! என்று பிரார்த்திக்க வேண்டும்.

என்னுடைய பாசத்திற்குரிய குழந்தைகளே.....

யார் வீட்டிற்காவது சென்றால் உடனே உள்ளே நுழைந்து விடக்கூடாது. கதவு வழியாகவோ... சன்னல் வழியாகவே உள்ளே எட்டிப் பார்க்கவும் கூடாது.

கதவின் ஓரமாக நின்று வீட்டில் உள்ளவர்களுக்கு கேட்கும் விதமாக சலாம் சொல்ல வேண்டும். வந்திருப்பது யார் என்றும் தெரிவிக்க வேண்டும். உள்ளே வரும்படி அனுமதி கிடைத்தபின் தான் வீட்டில் நுழைய வேண்டும்

அன்பான குழந்தைகளே....

இஸ்லாம் நம்மை மிகச் சிறந்த மனிதர்களாக்க இறைவனால் அருளப்பட்ட வாழ்க்கை முறை. அதன் போதனைகளை முழுமையாக செயல்படுத்தினால் நாம் மிகச் சிறந்த மனிதர்களாக விளங்கலாம்
அப்படி வாழ்ந்தால் இந்த உலகத்தில் நமக்கு நல்ல பெயர் கிடைக்கும். மறுமையிலும் இறைவனிடம் நமக்கு சொர்க்கம் கிடைக்கும்.

எனவே நமது உயிரனும் மேலான கண்மணி நாயகம் ஸல் அவர்கள் எவ்வழியில் வாழந்து காட்டினார்களே... அவ்வழியில் வாழ்ந்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்று செர்க்கம் செல்லும் நல்லோர்களில் ஒருவராக நம் அனைவரையும் வல்லோன் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக.

எனக்கு இங்கு பேச வாய்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்று கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

மேலும் விபரங்களுக்கு.

A. காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்
அசநெல்லிக் குப்பம்.
அரக்கோணம்.
9952129706


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக