திங்கள், 20 ஏப்ரல், 2020

பேர் சொல்லும் பிள்ளைகள்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக. நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.


எனது பெயர் ................................................

நான் இங்கு குழந்தைகளுக்கு எப்போது எப்படி பெயர் வைக்க வேண்டும் என்ற தலைப்பில்  பேச வந்துள்ளேன்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

காலங்காலமாக நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு அழகியப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து சூட்டுவதில் மிகக் கவனமாக இருந்து வந்திருக்கிறார்கள். மறுமையில் அதாவது நியாயத் தீர்ப்பு நாளில் உயிர் கொடுத்து அல்லாஹ் நம்மை எழுப்பும் போதுஉலகில் நமது பெற்றோர் நமக்கு சூட்டிய பெயராலும் உங்கள் பெற்றோர் பெயராலும் அழைக்கப்படுவீர்கள் எனவே, உங்கள் குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை சூட்டுங்கள் என்பதாக நமது நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும் ஒரு நபரை புதிதாகப் பார்த்ததும் உங்கள் பெயரென்ன? உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா? என்று கேட்பதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.


பெயர் வைப்பதை நாம் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. ஒருவரின் பெயரைக் கேட்டதும் அவர் முஸ்லிமா, கிறித்தவரா ஹிந்துவா? என்பது தெரிந்துவிடும். அரபு நாடுகளில் முப்பெயர் கொண்டிருப்பது அவர்களின் வழக்கம். முதல் பெயர் சொந்தப் பெயர் இரண்டாவது தகப்பனார் பெயர் மூன்றாவது பாட்டனார் பெயர் என்று அமையும். முஹம்மத் இப்னு இப்ராஹீம் இப்னு அஹ்மத் என்றிருந்தால் சொந்தப் பெயர் முஹம்மத்; தந்தையின் பெயர் இப்ராஹீம்; பாட்டனார் பெயர் அஹ்மத் என்பதை அந்த நபர் விளக்காமலேயே விளங்கிக் கொள்ளலாம்.

நேரடியாக ஒருவரின் பெயரைக் கேட்க முடியாதவர்கள் கூட அடுத்த நபரிடம் இவர் பெயர் என்னங்க? யாரு மகனுங்க.. என்று விசாரிக்
ஆரம்பித்துவிடுவார்கள். இப்படிப்பட்ட கேள்விக்கு பதில் கூறும் போது அந்த பெயர்களை சொல்வதற்கு கூச்சப்படாத, தயக்கப்படாத அளவுக்கு அழகிய அர்த்தமுள்ள பொருள் பொதிந்த பெருமைக்குரிய பெயராக இருக்க வேண்டும். பெயர் வைப்பதில் நாம் அலட்சியமாக இருக்க கூடாது.

குழந்தையாக இருக்கும்போது பெற்றோர் கவனமாகத் தேர்ந்தெடுத்து சூட்டும் பெயர் அக்குழந்தை வளர்ந்து பள்ளிக்கு செல்லும்போதும் கல்லூரி, அலுவலகம் செல்லும்போதும், வியாபாரம் செய்யும்போதும், திருமணத்தின் போதும் மொத்தத்தில் நம் உயிருடன் உடல் இருப்பது இணைந்து இருப்பது போன்று நம்மோடு இணைந்திருக்கும்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

அதுமட்டுமல்ல நமது உடலை விட்டு உயிர் பிரிந்த பிறகும் கூட உலகில் நிலைத்து நிற்பதும் பெயர்தான். ஆகவே பெயரில் என்ன இருக்கிறது என்று ஏதாவது வாயில் வந்த பெயரை வைக்கக் கூடாது. பெயர் வைப்பதில் அலட்சியமாக இருக்கவும் கூடாது உலகிலேயே மிக இனிமையான பதம் அவரவர் பெயர்தான்.

குழந்தைக்கு நல்ல பெயரிடுவதும், நற்கல்வி அளிப்பதும் பெற்றோரின் தலையாய கடமை என்று கோமான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றால் எந்தப் பெயர்களில் அகிலத்தை படைத்தாலும் அல்லாஹ்வின் தனித் தன்மையும் அவனது புகழும், கீர்த்தியும், மேன்மையும் வெளிப்படுகிறதோ அத்தகைய பெயர்களோடு அவனது அடிமை என்று பொருள்படக்கூடிய பதத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  உதாரணமாக

அப்துல்லாஹ் - அல்லாஹ்வின் அடிமை,
அப்துர் ரஹீம் - அன்பாளனின் அடிமை,
அப்துல் குத்தூஸ் - தூயவனின் அடிமை.
அப்துல் பாஸித் - தாராளமாக கொடுப்பவன்ன் அடிமை.

என்பது போன்ற அஸ்மாவுல் ஹுஸ்னா எனும் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் வரும் தொன்னூற்றி ஒன்பது பெயர்களில் பிரியப்பட்ட பெயரோடு 'அப்து' எனும் பதத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்

அதே போல் நல்ல பொருள் நிறைந்த வார்த்தைகளோடு இறைத்தூதரின் பெயரைச் சேர்த்தும் வைக்கலாம் உதாரணமாக

முஹம்மத் ஜாபிர் (புகழப்பட்ட உறுதி செய்பவன்.)
முஹம்மத் அக்ரம் (புகழப்பட்ட கொடை வள்ளல்.)
முஹம்மது இஸ்ஸத் - (மதிப்பு மிக்கவன்.)

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நபிமார்களின் பெயரைக் கொண்டு பெயரிடுங்கள் என ஸஹாபாக்களுக்கு அறிவுறுத்திய நபிகளார் (ஸல்) தனது கண்மணி மகனுக்கு இப்ராஹீம் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.

அதைப்போல மூசா, தாவூத், ஜகரிய்யா, யூனுஸ், யூசுஃப் ஹாரூன், இஸ்மாயீல், இஸ்ஹாக், இத்ரீஸ் என்றெல்லாம் கூட பெயரிடலாம்

குழந்தைக்கு எப்போது பெயரிட வேண்டும் என்றால் குழந்தை பிறந்த ஏழாம் நாளன்று அதற்கு அழகிய பெயரிடுங்கள் என்று தாஹா நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ சிறப்பான அழகிய பெயரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாரம் நமக்கு அவகாசமாக இருக்கிறது.

சிலபேர் தனது சொந்த பந்தங்கள் பக்கத்து வீட்டார்களை  அழைத்து மாடுவாங்கும் முன்பே நெய்விலை பேசிவைப்பது போன்று) கருவுற்றதுமே பெயர் தேர்ந்தெடுத்து வைப்பார்கள் வேறு சிலரோ ஏழாம் நாள் கழிந்த பின்னர்கூட முறையாக பெயரிடாமல் குழந்தை வளரும்போது இஷ்டப்படி வாய்க்கு வந்த பெயர்களைக் கொண்டு அழைப்பார்கள்.

ராஜாக் கண்ணு, பப்பி, ராசாத்தி, பொட்டு, அத்தா ராசா, செல்லக்கனி, ராணி, பேபி, பாப்பா, குஞ்சம்மா தங்கராசு, பிச்சைக்கனி இப்படி எத்தனை எத்தனையோ பெயர்களைக் கொண்டு செல்லமாக ஆரம்ப காலத்தில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கொஞ்சலோடு அழைத்து பெரியவர்களாக வளர்ந்த பிறகும் கூட அந்த செல்லப் பெயரைக் கொண்டே அவர்களை கூப்பிடும் போது தன்னை மற்றவர்கள் கேலி பண்ணுகிறார்கள் என்பதாக அந்தப் பிள்ளைகளே உணர்வார்கள்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

இன்னும் சிலர் ஏனோ தானோவென்று பெயரை தேர்வு செய்து வைப்பார்கள். ஆனா பேர் வச்ச சில வருடங்களில் அல்லது சில மாதங்களில் இந்த பேர் இவனுக்கு ராசியில்ல அதிர்ஷ்டமில்ல. பையன் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறான் என்ற காரணங்களைக் கூறிக்கொண்டு அடிக்கடி பெயர் மாற்றம் செய்வதை நடை முறையில் காண்கிறோம்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

இறைநம்பிக்கையை விட பெயர் மாற்றும் நம்பிக்கை ஆட்டி வைக்கிறது. இது மிகவும் தவறானதொரு செயலாகும் எந்தப் பிரச்சினைகளுக்கும் இடமில்லாத முறையில் இறைவன் விரும்பும் வகையில் இறைத்தூதர் வாழ்ந்து காட்டிய பாதையில் அழகிய பெயரை குழந்தை பிறந்த ஏழாம் நாள் தலைமுடி இறக்கி அந்த முடியின் எடைக்கு தங்கம் அல்லது வெள்ளியை அவரவர் சக்திக்கேற்ப தானமாகக் கொடுத்து குழந்தை ஆணாக இருந்தால், இரண்டு ஆடுகளும் பெண்ணாக இருந்தால் ஓர் ஆடும் அகீகா கொடுத்து கடமையாற்றுவது பெற்றோரின் பொறுப்பாகும்.

எனவே நமது மன்னர் நபி ஸல் அவர்கள் எவ்வழியில் வாழ்ந்து காட்டினார்களோ அவ்வழியில் வாழ்ந்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் அடைவோமாக.

எனக்கு இங்கு பேச வாய்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரகாத்துஹு.

மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக