திங்கள், 13 ஏப்ரல், 2020

மஸ்ஜிதில் சேர் கலாச்சாரமும் தேவ்பந்த் ஃபத்வாவும்.



மெளலானா காஜா நிஜாமுத்தீன் யூஸுஃபி, திண்டுக்கல்

மார்க்கத்தில் தொழுகைக்கு மற்ற வணக்கங்களுக்கு இல்லாத முக்கியத்துவமும் சிறப்பும் இருக்கிறது.
தொழுகை நேரம் குறிப்பிடப்பட்ட கடமை. யுத்த களமாக இருந்தாலும் அந்தந்த நேரத்தில் தொழுகை தவறிவிடக் கூடாது. அதற்குரிய முறைகளையும் குர்ஆனே தெளிவுபடுத்துகிறது. யுத்தம் மும்முரமாக நடந்து கொண்டிருப்பதால் ஜமாஅத்தாகவோ ஓரிடத்தில் நிலையாக நின்றோ தொழ முடியவில்லையானாலும் தனித்தனியாக நடந்து கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று குர்ஆன் வலியுறுத்துகிறது.

فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا ۖ فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ

யுத்தம் போன்ற அச்சம் தரும் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் நீங்கள் நடந்து கொண்டோ வாகனத்தில் சவாரி செய்து கொண்டோ தொழுங்கள்." அல்குர்ஆன் 2.239)

ஒருவன் தண்ணீரில் மூழ்கிவிட்டாலும் (நீச்சலில் திறமையானவராக இருந்து.) தொழுகைக்கு முரணான அதிகமான செயல்கள் இன்றி தொழ முடியுமென்றால் தொழுகையை களாவாக்கி விடக்கூடாது. உடனடியாக தொழ வேண்டும்.

தொழுகையில் சலுகை

தொழுகையை எந்நிலையிலும் விடக்கூடாது என்று வலியுறுத்தும் மார்க்கம் நிர்ப்பந்த சூழ்நிலைகளில் தொழுகையின் நிபந்தனைகளை தளர்த்துகிறது. யுத்த களத்தில் நடந்து கொண்டே தொழும் போது கிப்லாவை முன்னோக்குவது கட்டாயமில்லை. பயணத்தில் சுருக்கித் தொழுது கொள்ளலாம். நிற்க முடியவில்லலையானால் உட்கார்ந்து தொழலாம்

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் "நீங்கள் நின்று தொழுங்கள் முடியவில்லையானால் உட்கார்ந்து தொழுங்கள். அதுவும் முடியவில்லையானால் படுத்து தொழுங்கள்" என்றும் "ஓர் அடியார் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அனுமதிக்கப்பட்ட சலுகைகளைப் பயன்படுத்தி தொழுதால்) அவர் ஆரோக்கியமாக ஊரில் இருக்கும் போது (எல்லா நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நிறைவாக) செய்த அமல்களுக்குரிய கூலியே அவருக்கு எழுதப்படும்" என்றும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி

தொழுகையில் நிற்பது கடமை

நிற்க முடிந்தவருக்கு நின்று தொழுவது கட்டாயம். இல்லையானால் தொழுகையே கூடாமல் போகலாம். அதே சமயம் ஒருவருடைய வியாதியின் காரணமாக நிற்பதற்கோ அல்லது உட்காருவதற்கோ மிகவும் சிரமப்படுகிறார். நிற்பதால் ஏற்படும் வேதனையால் தொழுகையில் கவனம் செலுத்த முடியவில்லையானால் அவருக்கு நபிமொழியில் கூறப்பட்ட சலுகை இருக்கிறது. ஒருவருக்கு ருகூஃ, ஸுஜூத் முறையாக செய்ய முடிந்து) சிறிது நேரம் சுயமாக சுவற்றில் சாய்ந்து நிற்க முடிந்தாலும் அதாவது தக்பீர் சொல்லுமளவுக்கோ அல்லது ஓர் இறைவசனம் ஓதும் அளவுக்கோ நிற்க முடிந்தாலும் (முடிந்தவரை) நிற்பது கட்டாயம்.
(நூல் : அத்துர்ரு மஅர்ரத் 2:97)

ஆனால் இன்று பெரும்பாலான மஸ்ஜித்களில் பாய் வரிசையைப் போல சேர் வரிசையையும் பார்க்க முடிகிறது. ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட தக்க காரணம் இல்லாதவர்களும் சேரில் அமர்ந்து விடுகிறார்கள் என்பது தான் பரவலாக எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள் என்பது மட்டுமல்ல இந்த சட்டம் பற்றி ஃபத்வா எழுதப்படுகிற அரபி, உர்தூ நூல்களிலும் இதே குற்றச்சாட்டு தான் கூறப்படுகிறது. உண்மையிலேயே முடியாதவரை குறை கூறுவது தவறு என்பதைப் போலவே தொழுகையில் சேர்" தவறாக உபயோகிக்கப்படுவதும் மிகப் பெரும் தவறுதான்

சேர், டேபிள் கலாச்சாரம்

சேரில் அமர்ந்து தொழுவது கூடுமா? கூடாதா? என்பதற்கு அப்பாற்பட்டு சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதால் மஸ்ஜித்களில் "சேர்"க் கலாச்சாரத்தை அனுமதிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும். காலப்போக்கில் மஸ்ஜித்கள் சேர்கள் நிரம்பிய தேவாலயங்களைப் போல ஆகிவிடக்கூடாது. நபி ஸல் அவர்களின் காலத்திலும் நபித்தோழர்கள் காலத்திலும் தொழுகை விஷயத்தில் ஏற்பட்ட நவீனத்தை ஒழிப்பதில் எவ்வளவு கடுமையாக நடந்து கொண்டார்கள் என்பதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம்

நபித்தோழர்களின் காலத்தில்

நபி ஸல் அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சென்றார்கள். அவர் தலையணையின் மீது (ஸஜ்தா செய்து) தொழுது கொண்டிருப்பதைப் பார்த்த நபியவர்கள் அதைத் தூக்கி எறிந்து விட்டார்கள். அவர் (ஸஜ்தா செய்வதற்காக) ஒரு குச்சியை எடுத்தார். அதையும் நபியவர்கள் எறிந்து விட்டார்கள். உங்களால் முடிந்தால் பூமியில் (ஸஜ்தா செய்து) தொழுங்கள். இல்லையானால் சைகை செய்தால் போதுமானது. உங்களுடைய ருகூவை விட ஸஜ்தாவுக்கு அதிகமாக குனிந்து சைகை செய்யுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல் : அல்பைஹகி)

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஸஃப்வான் பின் முஅத்தல் என்பவரை தலையணையின் மீது ஸஜ்தா செய்து தொழுவதைப் பார்த்ததும் அவரை கல் அல்லது தலையணையின் மீது ஸஜ்தா செய்வதைத் தடுத்தார்கள். சைக்கினை செய்யுமாறு ஏவினார்கள்
முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக் - 4137)

தலையணையின் மீது ஸஜ்தா செய்வது (நபியவர்களின் காலத்தில் இல்லாத பித்அத் என்று முஹம்மதுப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இப்னு உமர் (ரலிஅவர்களிடம் ஒரு குச்சியை (நிறுத்தி அதன்) மீது ஸஜ்தா செய்வது பற்றி கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள் "நான் அல்லாஹ்வை விட்டு விட்டு சிலைகளை எடுத்துக் கொள்ளுமாறு உங்களை ஏவமாட்டேன். முடிந்தால் நின்று தொழுங்கள் இல்லையானால் அமர்ந்து தொழுங்கள். அதுவும் முடியவில்லையானால் படுத்து தொழுங்கள்" என்று கூறினார்கள்

உமர் (ரலி) அவர்கள் குச்சியின் மீது எஜ்தா செய்வதை வெறுத்தார்கள். அதாஃ ரஹ்) அவர்கள் இப்னு ஸஃப்வான் அவர்களை தலையணையின் மீது ஸஜ்தா செய்ததை தடுத்தார்கள். அப்துல்லாஹிப்னு மஸ்வூத் (ரலி அவர்கள் தம்முடைய சகோதரரை நலம் விசாரிக்க சென்றார்கள் அவர் ஒரு குச்சியின் மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருந்தார். அதைத் தூக்கி எறிந்து விட்டு இது உங்களுக்கு ஷைத்தான் காட்டித் தந்தது. முகத்தை பூமியில் வையுங்கள் முடியவில்லையானால் சைகை செய்யுங்கள் என்று கூறினார்கள். இவையனைத்தும் முஸன்னஃப் இப்னு அபீஷைபா எனும் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்கள் காலத்தில் இந்த நடைமுறை புதிதாக பரவி வந்ததை அறிய முடிகிறது எனவே அப்படி செய்தால் ஸஜ்தா கூடுமா? கூடாதா? என்று சர்ச்சை செய்யாமல் அதைக் கடுமையான முறையில் தடுத்திருக்கிறார்கள்.

இன்றும் பல மஸ்ஜித்களில் சேரோடு சேர்த்து டேபிளும் போடப்பட்டிருக்கிறது உட்கார்ந்து தொழும் போது ஸஜ்தா செய்ய முடியவில்லையானால் கையை முழங்காலில் வைத்துக் கொண்டு தலையை மட்டும் தாழ்த்தி சைக்கினை செய்தால் போதுமானது கையை நீட்ட வேண்டிய தேவையுமில்லை, டேபிளும் தேவையில்லை. ஆனால் இன்று டேபிள் போட்டு பழகிவிட்டதால் சைக்கினை மட்டும் கூடாது. டேபிளில் தான் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நம்பவும் பேசவும் ஆரம்பித்து விட்டார்கள்

நபியவர்களின் காலத்தில் நாற்காலி

நபித்தோழர்களின் காலத்தில் குச்சியின் மீது ஸஜ்தா செய்ததையே இவ்வளவு கடினமாக கண்டித்துள்ளார்கள். நாற்காலிகளில் உட்கார்ந்து தொழுவதைப் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? அந்த காலத்தில் சேர் இருந்திருக்காது என்று சொல்லமுடியாது. தற்காலத்தில் இருப்பது மாதிரி நவீன முறையில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாற்காலி கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் நாற்காலி பற்றி நாம் அறிய முடிகிறது. நபி ஸல் அவர்களும் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள்.

அபூரிஃபாஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபியவர்களிடம் வந்தேன் அவர்கள் குத்பா பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது நான் யாரஸூலல்லாஹ்! ஒரு சாதாரண மனிதர் தன்னுடைய தீனைப் பற்றி அறியாதவர் அது பற்றி கேட்டு அறிந்து கொள்ள வந்திருக்கிறார் என்ற கூறினேன். உடனே நபியவர்கள் குத்பாவை நிறுத்திவிட்டு என்னிடம் வந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது, அதனுடைய கால்கள் இரும்பால் ஆனது என்று நினைக்கிறேன் அதில் நபி அவர்கள் உட்கார்ந்தார்கள், அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததை எனக்கு கற்றுத்தர ஆரம்பித்தார்கள். (நூல்: முஸ்லிம் - 1450)

அலீ ரலி) அவர்களுக்கு உளூ செய்வதற்காக நாற்காலி (குர்ஸீ) கொண்டு வரப்பட்டது. அதன் மீது உட்கார்ந்தார்கள்.. என்று அபூதாவூதில் 99-ம் எண் ஹதீஸில் வருகிறது. இப்னு மாஜாவில் பாபு மாலில் கஃபா என்ற பாடத்தில் 3107-ம் எண் ஹதீஸில் ஷைபா நாற்காலியின் மீது உட்கார்ந்திருந்திருந்தார் என்று வருகிறது

மஸ்ஜிதின் நல்லொழுக்கம்

இன்று மஸ்ஜித்களில் டேபிள், சேர் வரிசையாக போடப்பட்டிருப்பதால் தக்க காரணம் இல்லாமல் அதில் உட்கார்ந்து தொழுகிறார்கள் என்ற விமர்சனம் ஒரு புறமிக்க தொழுகையல்லாத மற்ற நேரங்களில் நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்களும் அதில் சும்மா உட்கார்ந்திருப்பதையும் அல்லது பலர் உட்கார்ந்து கதை பேசுவதையும் அல்லது அதில் உட்கார்ந்து குர்ஆன் ஓதுவதையும் பார்க்க முடிகிறது. இது பள்ளிவாசலின் மகத்துவத்திற்கு முரணானது. ஒழுக்கக் கேடானது. ஃபிக்ஹ் சட்ட நூல்களில் உட்கார்ந்து தொழும் போது கூட ஒழுக்க நடைமுறைகளைப் பேணுவது பற்றி அதிகமாக கூறப்பட்டுள்ளது, உட்கார்ந்து தொழுபவர் சம்மணம் போட்டு உட்காருவதை விட அத்தஹிய்யாத் இருப்பில் உட்காருவது சிறந்தது. ஏனெனில் அத்தஹிய்யாத் இருப்பே வணக்க வழிபாட்டின் இருப்பு, காலை நீட்டி உட்காருவது மக்ரூஹ் ஆகும். அவ்வாறே தக்க காரணமின்றி சாய்ந்து உட்காருவதும் மக்ரூஹ். ஏனெனில் இது நல்லொழுக்கத்திற்கு முரணானது. இவை பரவலாக ஃபிக்ஹ் நூல்களில் கூறப்பட்டுள்ளன

இன்று இந்த எல்லா ஒழுக்கக் கேடுகளும் சேரில் உட்காருவதால் ஏற்படுகின்றன இதன் மூலம் சேரில் உட்கார்ந்து தொழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் சாயும்படியான சேரில் உட்காரக்கூடாது என்றே விளங்குகிறது. தனி நபர் ஒருவர் மக்ரூஹான காரியத்தை செய்வதற்கும் பள்ளிவாசலில் பகிரங்கமாக ஜமாஅத்துடைய முழு அங்கீகாரத்துடன் மக்ரூஹான காரியத்தை செய்வதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது

தொழுகையாளிகளின் குஷூஃ, குளூவை (பணிவு, உள்ளச்சம்) கெடுக்கும் விதத்தில் மஸ்ஜிதின் மிஹ்ராபுடைய சுவரை அலங்கரிக்கக் கூடாது என்று சொல்லும் போது 'தவறாக பயன்படுத்துவதால் தொழுகையே கூடாது' என்ற நிலை ஏற்படும் போது வரிசையாக சேர்களைப் போட்டு வைப்பது பற்றி என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? எனவே தான் ஃபதாவா ரஹீமிய்யாவில் சேரில் தொழ வேண்டிய நிர்பந்தம் உள்ளவர்கள் தாங்களாகவே சேருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அது நிர்வாகத்தின் பொறுப்பாகாது. ஏற்கனவே சேர் போடப்பட்டிருந்தால் தங்கடமில்லாதவர்களும் உட்காருவார்கள். அவர்களுடைய தொழுகையே கூடாமல் போய்விடும். எனவே இந்த முறை பொருத்தமானதல்ல என்று கூறப்பட்டுள்ளது. (9:98)

தேவ்பந்த் ஃபத்வா

சேரில் உட்கார்ந்து தொழுவது கூடுமா? கூடாதா? எப்பொழுது கூடும்? எப்பொமுது கூடாது? என்பது பற்றி உலகப்பிரசித்தி பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மத்ரஸாவிலிருந்து பெறப்பட்ட ஃபத்வா - மார்க்கத் தீர்ப்பின் தமிழாக்கத்தை அப்படியே இங்கு தருகிறோம். நேரடியாக விளக்கம் கேட்டு பெறப்பட்ட அஸல் ஃபத்வாவின் மொழியாக்கம் இது, டேபிளில் ஸஜ்தா செய்வது பற்றி கேள்வியில் கேட்கப்பட வேண்டியது விடுபட்டு விட்டதால் அது பற்றிய விளக்கம் இந்த ஃபத்வாவில் இல்லை. எனினும் சமீபத்தில் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸா வழங்கிய (179/v.27) ஃபத்வாவில் மஸ்ஜிதை டேபிள்களால் நிரப்புவதால் மஸ்ஜிதின் மகத்துவம் பாதிக்கப்படும் என்பதால் டேபிள் போடுவதை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

ஃபத்வா வருமாறு

ஒருவருக்கு நிற்க முடியவில்லை. ஆனால் தரையில் உட்கார்ந்து ஸஜ்தா செய்து தொழ முடியுமென்றால் அவர் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது

ஒருவருக்கு தரையில் அமர்ந்து தொழ முடியும். ஆனால் அவரால் ருகூஃ ஸஜ்தா செய்ய முடியாது என்றால் தரையில் உட்கார்ந்து தொழ வேண்டும் அப்பொழுது சைக்கினை மூலம் ருகூஃஸஜ்தா செய்ய வேண்டும். இந்நிலையில் சேரில் உட்கார்ந்து தொழுவது ஏற்றமானதல்ல. (கிலாஃபுல் அவ்லா)

தரையில் உட்கார்ந்து தொழுபவர் அத்தஹிய்யாத்துடைய இருப்பில்
அமர்வதே சிறந்தது. அத்தஹிய்யாத் இருப்பில் அமர்வது சிரமமாக இருந்தால் மற்ற முறையில் அமர்ந்து கொள்ளலாம். தரையில் அமர்வதும் கஷ்டமாகி விட்டால் சேரில் அமர்ந்து கொள்ளலாம்

ஆக சுருக்கம் என்னவெனில், எவர்கள் உண்மையிலேயே தங்கடமுள்ளவர்களாக இருக்கிறார்களோ மேலும் பூமியின் மீது (தரையில்) எந்த முறையிலும் உட்கார முடியாதோ (எப்படி உட் கார்ந்தாலும் கஷ்டமாக இருக்குமோ) அவர்களுக்கு நாற் காலியில் அமர்ந்து தொழுவது கூடும்.

இப்படிப்பட்டவர்களுக்காக (அதாவது உண்மையான தங்கடமுள்ளவர்களுக்காக மஸ்ஜிதில் சேர்களுக்கு ஏற்பாடு செய்வது தவறில்லை. அதே சமயம் சேர்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதிலும் இந்த (சேர்) நடைமுறை அதிகமாகி விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்

தேவைக்கு அதிகமாக சேர்களை போட்டு வைக்கக்கூடாது

எல்லா நேரத்திலும் சேர்கள் ஸஃப்பில் - வரிசையில் இருக்கக்கூடாது. மாறாக அவற்றை எடுத்து தனியாக வேறொரு இடத்தில் வைக்க வேண்டும். ஏனெனில் அவசியமான நேரத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் (சேர்) தேவையுள்ளவர்கள் தாங்களே தேடி எடுத்துக் கொள்ள வேண்டும்
ஃபத்வா பெறப்பட்ட தேதி: ஹிஜ்ரி 1432, ரபீவுல் ஆகிர் 24-ம் தேதி. (மார்ச்-30, 2011



மனாருல் ஹுதா 2011 ஜுன் மாத இதழிலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக