இஸ்லாம் கூறும் பெண்கள் ஆடை அலங்காரம்.
( ஆடியோ உரை மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ்
S.Sஅஹ்மது பாஜில் பாகவி
தலைமை இமாம் மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர் மலேசியா.)
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆடை அலங்காரம் குறித்து இஸ்லாமியப் பெண்கள் பேண வேண்டிய நாகரீகத்தை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
முஹாஜிர் அன்சாரிப் பெண்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகிற தன்மை உள்ளவர்கள்.
அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கக் கூடியவர்கள்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.
عَائِشَةَ
رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : يَرْحَمُ اللَّهُ نِسَاءَ الْمُهَاجِرَاتِ
الْأُوَلَ لَمَّا أَنْزَلَ اللَّهُ ( وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى
جُيُوبِهِنَّ ) : شَقَّقْنَ مُرُوطَهُنَّ فَاخْتَمَرْنَ بِهَا )
رواه البخاري ( 4480
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
“நபியே இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் தங்கள் மார்புக்கு மேலே முக்காடு போட்டு மறைத்துக் கொள்ளட்டும் என்று கூறுவீராக ( 24 :31) என்ற வசனத்தை அல்லாஹ் அருளிய போது தங்கள் போர்வையின் ஓரப்பகுதியினை கிழித்து அதை முக்காடாக ஆக்கி தங்கள் முகம் மார்பு ஆகியவற்றை மறைத்துக் கொண்டார்கள் எனக் கூறுகிறார்கள்.
(நூல் புகாரி 4, 480)
மேற்படி ஹதீஸில் மறைத்தார்கள் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அதை ஹதீஸ் கலை வல்லுநரும் மார்க்க சட்ட அறிஞருமான அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்)
அவர்கள் கீழ்வருமாறு விளக்கியுள்ளார்கள்.
முக்காட்டை தனது தலையின் மீது போட்டு தலையின் வலது புறத்திலிருந்து இடது புஜம் வழியாக அதை கொண்டுவந்து தமது முகத்தை மறைக்க வேண்டும்.
( ஆதாரம் பத்ஹுல்பாரி பாகம் 13. பக்கம் 270. )
ஸபியா பிந்த் ஷைபா (ரலி)
என்ற பெண்மணி கூறினார்கள்.
ஒரு தடவை நாங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இருந்தோம். அப்போது குறைஷி பெண்களைப் பற்றியும் அவர்களது சிறப்பைப் பற்றியும்
அங்கு பேசப்பட்டு கொண்டிருந்தது.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் நிச்சயமாக குரைஷிப் பெண்களுக்கு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. எனினும் நிச்சயமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக வேதத்தை விரைந்து ஈமான் கொள்ளக் கூடியவர்களாக அன்சாரிப் பெண்களை விட மிகச்சிறந்தவர்களை நான் கண்டதில்லை என்று
கூறுகிறார்கள்
நபியே இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் தங்கள் மார்பகங்களுக்கு மேல் முக்காட்டை போட்டுக்கொண்டு மறைத்துக் கொள்ளட்டும் என்று கூறுவீராக எனும் அத்தியாயம் (24: 34) வசனம் அருளப்பட்ட போது அன்சாரி ஆண்கள் தங்கள் மனைவிமார்களிடம் சென்று அவர்களுக்கு அருளப்பட்ட அந்த வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். அன்சாரிகளில் ஒவ்வொரு ஆணும் தன் மனைவி மகள் சகோதரிகள் தனது உறவுக்கார பெண்கள், என அனைவரிடமும் சென்று இந்த ஆயத்தை ஓதிக் காண்பித்தார்கள். உடனடியாக அந்த அன்சாரிப் பெண்களில் ஒவ்வொருவரும் தங்கள் போர்வையை நோக்கி விரைந்து சென்று இறைவன் அருளிய வசனத்தை மெய்ப்படுத்த, ஈமானை வெளிப்படுத்த அந்த போர்வை கொண்டு தங்கள் முகங்கள் மார்புகளை மறைத்துக் கொண்டார்கள்.
பின்பு அதிகாலையில் தங்கள் தலைகளுக்கு மேல் காகங்கள் இருப்பது போன்ற கருப்பு ஆடைகள் அணிந்த வண்ணம் சுபுஹு தொழுகைக்கு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப்பின்னால் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றினார்கள்.
( ஆதாரம் தப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம்.)
இந்த வகையில் கருப்பு நிற புர்காவிற்கு ஹதீஸ்களில் ஆதாரம் கிடைக்கப் பெறுகிறது. பெண்கள் புர்கா அணிகிற போது ஆண்களை கவரக்கூடிய வகையில் உள்ள பல வண்ணங்கள் உள்ள புர்கா அணிவதை தவிர்ந்து கொள்ள வேண்டும் மேலும் சஹாபிப் பெண்கள் தேர்வு செய்த கருப்பு நிற புர்காவையே நாமும் தேர்வு செய்ய வேண்டும்.
عَنْ
أُمِّ سَلَمَةَ قَالَتْ : لَمَّا نَزَلَتْ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ
جَلَابِيبِهِنَّ خَرَجَ نِسَاءُ الْأَنْصَارِ كَأَنَّ عَلَى رُءُوسِهِنَّ
الْغِرْبَانَ مِنْ الْأَكْسِيَةِ . سنن أبي داود : كتاب اللباس باب في قوله تعالى
( يدنين عليهن من جلابيبهن :
முஃமினான பெண்கள் தங்களுடைய முந்தானைகளை தங்கள் முகங்கள் மீது போட்டுக் கொள்ள வேண்டும். என்ற வசனம் இறங்கிய போது அன்சாரிப் பெண்கள் கருப்பு ஆடை அணிந்து இருந்த காரணத்தினால் அவர்கள் தலையின் மீது காகங்கள் அமர்ந்து இருந்ததைப் போன்று இல்லத்தை விட்டு வெளியேறிச் சென்றார்கள். என உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
( ஆதாரம் : அபூதாவுத் 3578.)
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ
الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ
أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ
اللَّـهُ غَفُورًا رَّحِيمًا
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும்,
உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும்,
அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.
மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
(அத்தியாயம்
33 வசனம் 59.)
முஃமினான பெண்கள் தங்கள் முந்தானைகளை என்ற (அத்தியாயம் 33 வசனம் 59) ஆயத் இறங்கியபோது அன்சாரிப் பெண்கள் கருப்பு ஆடை அணிந்து இருந்த காரணத்தினால் அவர்களுடைய தலைகளின் மீது காகங்கள் இருந்ததைப் போன்று இல்லத்தை விட்டு வெளியேறிச் சென்றார்கள் என உம்மு சல்மா ரலி அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸை பிரபல்யமான தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 6 பக்கம் 482 ல் பார்க்கலாம்
ஜில்பாப் அணியும் முறை பற்றி இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் விளக்கத்தைப் பார்ப்போம்.
முஃமினான பெண்கள் அவசிய தேவைக்காக தங்களின் இல்லத்தை விட்டு வெளியேற நாடினால் தங்களின் தலைக்கு மேலிருந்து தங்கள் முகத்தை ஜில்பாபைக் கொண்டு மறைக்க வேண்டும். மேலும் ஒரே ஒரு கண்ணை மட்டும் மறைக்காமல் வெளிப்படுத்தலாம் என்று பெண்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
( நூல் தப்ஸீர் இப்னு கசீர் பாகம் 6 பக்கம்
481. )
ஜில்பாப் அணியும் முறை பற்றி உபைது சல்மானி ரஹ் அவர்கள் தருகின்ற விளக்கத்தைப் பாருங்கள். முஹம்மது இப்னு சீரின் ரஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.
முஃமினான பெண்கள் தங்கள் முந்தானைகளை தங்கள் முகத்தின் மீது இறக்கிக் கொள்ள வேண்டும் என்ற வசனத்தைப் பற்றி உபைது சல்மானி அவர்களிடம் நான் விளக்கத்தை கேட்டேன் அதற்கு அவர் தன் முகத்தையும் தலையையும் மறைத்து தனது இடது கண்ணை மட்டும் வெளிப்படுத்தி காட்டினார்.
( நூல் தப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 6 பக்கம் 482.)
இப்னு உலையா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
மேற்படி (33: 59) வசனத்தை விளக்குவதற்காக இப்னு அவ்ன் அவர்கள் தனது ஆடையை அணிந்து காட்டினார்கள் மேலும் அவர் எனக்கு முஹம்மது ரஹ் அவர்கள் தனது ஆடையை அணிந்து காட்டினார் என்று கூறினார்கள் மேலும் முஹம்மது ரஹ் அவர்கள் எனக்கு உபைதா (ரஹ்)அவர்கள் தனது ஆடையை அணிந்து காட்டினார் என்று கூறினார்கள். இறுதியாக இப்னு அவன் அவர்கள் ஜில்பாபை அணியும் முறையைப் பின்வருமாறு விளக்கி காட்டினார்கள்.
மேலாடையை கொண்டு தனது தலை மூக்கு, இடதுகண் ஆகியவற்றை மறைத்து தனது வலது கண்ணை மட்டும் வெளிக்காட்டினார் மேலும் தனது மேலாடையை தலைக்குமேல் இருந்து புருவத்திற்கு நெருக்கமாக இறக்கிவிட்டார்
( நூல் தப்ஸீர் தபரி பாகம் 20 பக்கம்
324.)
பெண்கள் தங்கள் பாதங்களையும் மறைக்க வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
யார் தனது கீழாடையைக் கரண்டைக்குக் கீழ்வரை அணிந்து பெருமைக்காக இழுத்துச் செல்வாரோ கியாமத் நாளில் அல்லாஹ் அவரை அருள் பார்வை கொண்டு பார்க்க மாட்டான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அன்னை உம்மு சல்மா (ரலி) அவர்கள் பெண்கள் தங்கள் கீழாடையை எப்படி அணியவேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் பெண்கள் அவர்கள் பாதி கெண்டைக்காலிருந்து ஒரு ஜான் கீழே இறக்கிக் கொள்ளட்டும் என்று கூறினார்கள். அப்படி அணிந்தால் பெண்களின் பாதங்கள் வெளிப்படுமே என்று உம்மு சல்மா ரலி அவர்கள் கேட்ட பொழுது அப்படி என்றால் அவர்கள் பாதி கெண்டைகாலிலிருந்து ஒரு முழம் கீழே இறக்கி கொள்ளட்டும் அதை விட அதிகப்படியான ஆடையை கீழே இறக்கிக் கொள்ள வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்.
( நூல் : திர்மிதி 1731.)
சுருக்கமாகச் சொல்வதென்றால் அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் பெண்கள் தங்களுடைய முகம் உள்பட முழு உடலை மறைக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டுதலாகும்.
عن عبد الله بن مسعود رضي الله عنه
عن النبي صلى الله عليه وسلم قال
: المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டியவளாகும். ஏனெனில் அவள் இல்லத்தை விட்டு வெளியேறினால் ஷைத்தான் அவளை உற்றுப் பார்ப்பான். எனக் கூறினார்கள்.
இந்த நபிமொழிகளின் அடிப்படையில் பெண்கள் தங்கள் ஆடை நாகரிகத்தை கற்றுக் கொண்டு அதைச் செயலாற்ற வேண்டும்.
பெண்கள் வெளியே செல்வதற்கும் தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் இஸ்லாத்தில் அனுமதியுண்டு.
அந்த வகையில் முகத்தை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் அவசியமில்லாமல் அன்னிய ஆடவர்களுக்கு முன்பு அதை வெளிப்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என்பதுதான் இஸ்லாத்தின் வழிகாட்டுதலாகும்.
கண்ணியம் காக்க வேண்டிய பெண்மணிகள் இஸ்லாத்தின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும். தங்களது கண்ணியத்தையும் அதன் மூலமாக பாதுகாக்க வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பெரும் பாதுகாப்பை பெற்றுத் தருகிற ஒரு கவசமாகும்.
ஒரு சமயம் அன்னை பாத்திமா (ரலி) அவர்களிடம் எந்த பெண்மணி சிறந்தவள் என கேட்கப்பட்ட போது அவளை அன்னிய ஆண் பார்க்க மாட்டான் அவளும் அன்னிய ஆடவரைப் பார்க்க மாட்டாள் என்று பதிலளித்தார்கள்.
தானும் அன்னிய ஆடவனை பார்க்கக்கூடாது தன்னை அந்நிய ஆடவர்கள் பார்க்கும் விதத்தில் ஆடை அணியவோ அல்லது வெளியில் செல்லவோ கூடாது என்ற அடிப்படையில் அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் சொன்ன பதிலை கேட்டு அண்ணல் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
ذُرِّيَّةً بَعْضُهَا مِن بَعْضٍ ۗ
وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார்
- மேலும்,
அல்லாஹ்
(யாவற்றையும்)
செவியுறுவோனாகவும்,
நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
என்ற இறை வசனத்தை ஓதி அவர்களை புகழ்ந்தார்கள்.
அன்னை பாத்திமா ரலி அவர்கள் வெளியே செல்கின்ற பொழுது ஒரு மூதாட்டியைப் போன்று மற்றவர்களுக்கு தோற்றம் தருவார்கள்
ஒரு சமயம் ஒரு மூதாட்டி பாத்திமா ரலி அவர்களின் வீட்டில் நுழைந்த பொழுது அதைப் பார்த்த பெருமானார் நபி ஸல் அவர்கள் ஏதோ ஒரு மூதாட்டி பாத்திமா ரலி அவர்களின் வீட்டில் நுழைகிறார்களே அவர் யார் என விசாரித்து வருமாறு ஆளனுப்பினார்கள் அங்கே வேறுயாருமல்ல பாத்திமா (ரலி) அவர்கள் மட்டும்தான் இருந்தார்கள் என்று சொன்னபொழுது ஒரு மூதாட்டி நுழைய கண்டேனே என்று நபியவர்கள் கேட்டார்கள் அதற்கு பாத்திமா ரலி அவர்கள் கூறினார்கள் யா ரசூலல்லாஹ் நான் அல்லாஹ்விடம் துஆச் செய்தேன்
யா அல்லாஹ் என்னை அன்னியர்களுக்கு ஒரு மூதாட்டியைப்போன்று காட்டு என் கணவருக்கு மட்டும் என் இளமையைக் காட்டு என்று துஆச் செய்தேன் என கூறினார்கள் இதை கேட்டு மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மெய்சிலிர்த்தார்கள்.
பெண்கள் எந்தளவுக்கு மனத் தூய்மையாக இருக்க வேண்டும் என்று இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்கிறோம்.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களின் அந்தஸ்தை அவர்களின் கவுரவத்தை அவர்களின் உயர்ந்த தன்மைகளையெல்லாம் நமக்கு எடுத்துச் சொல்லியுள்ளார்கள்
இஸ்லாமிய பெண்கள் இவ்வுலகிலும் மறு உலகிலும் சொர்க்கத்துப் பெண்மணிகளாகத் திகழ வேண்டும் என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுடைய மணி மொழிகளை பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றுவதோடு கணவனின் சொல்லை மதித்து கணவனுக்குக் கட்டுப்பட்டு தன் அழகை கணவனுக்கு மட்டும் முழுமையாக வெளிப்படுத்தி அன்னிய ஆடவர்களுக்கு அதை மறைத்து வாழ வேண்டும்.
வெளியே செல்கிற பொழுது நாம் கண்ணியமான ஆடை உடுத்துவது தவறில்லை ஆனால் வீட்டில் கணவனுக்கு முன்னிலையில் இருக்கும்போது அழுக்கான ஆடைகள் அணிந்து இருக்கக் கூடாது பங்கரையான தோற்றத்தோடு இருக்கக்கூடாது.
சகோதரிகள் தாய்மார்கள் வீட்டிலே கணவனுக்கு முன்னிலையில் அழகான ஆடைகளை அணிந்து இருக்கவேண்டும். நல்ல தோற்றப் பொழிவோடு கணவனுக்கு முன்பு அவர்கள் காட்சியளிக்க வேண்டும். வெளியே செல்லும் பொழுது நறுமணம் பூசக்கூடாது ஆனால் கணவனுக்கு முன்பு நறுமணத்தை பூசிக்கொள்ள வேண்டும்.
ஒரு பெண்மணி தன் கணவனுக்கு முன்னிலையில் தன் அழகை தன் அலங்காரத்தை மணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வது தான் அவளுக்கு ஆரோக்கியமானது அவசியமானது என்று மார்க்கம் சொல்லித் தருகிறது
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கணவனுக்கு மனைவி கண் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்றார்கள்.
அந்த விதத்தில் சகோதரிகள் தாய்மார்கள் நடந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அத்தகைய நல்ல தவ்பீக்கை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.
ஆமீன் யரப்பல் ஆலமீன்.
( எழுத்தாக்கம் : A. முஹம்மது ஹதீஸ் மஸ்லஹி.
A.காதிர் மீரான் மஸ்லஹி. )
( தொடர்புக்கு : 9003609448 : 99521299706 )
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
பதிலளிநீக்குஅருமையான பதிவு மௌலவி அவர்களே
நான் நீண்ட காலமாக ஒரு விடயத்தை தேடிக் கொண்டிருக்கிறேன் எனக்கு இன்னும் வரைக்கும் கிடைக்கவில்லை என்ன விடயம் என்றால் பெண்கள் வீட்டில் கூட இருக்கும் போது தலையை மறைத்து தான் இருக்க வேண்டும் இல்லையெனில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என்ற ஹதீஸை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அதனுடைய ஹதீஸ் ஆதாரங்கள் தெரியவில்லை உங்களுக்குத் தெரிந்தால் என்னுடைய கீழ்காணும் Emailலுக்கு தயவுசெய்து eMail பண்ணவும்
shahidazmy512@gmail.com