ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

புரியாத கேள்வி? புதிரான பதில்.


நீங்கள் இந்த உயர் அந்தஸ்தை எப்படி அடைந்தீர்கள்?” என அறிவுக் களஞ்சியம் இமாமுல் அஃளம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது

தெரியாதவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வெட்கப்பட்டதுமில்லை தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க கஞ்சத்தனம் செய்ததுமில்லை என பதிலளித்தார்கள்.

நூருல் ஈளாஹ் முன்னுரை, பக்கம்: 6


அவர்கள் கூறிய இவ்வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதைப்
பல வரலாறுகள் நிரூபித்துள்ளன. அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் எவ்வளவு முக்கியமான வேலையிலிருந்தபோதிலும் கேட்டவர் எந்த முறையில் கேட்டிருந்தாலும் அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற பதிலை அவருக்கு புரிகின்ற பாணியில் கூறுவது அவர்களுக்கே உரிய தனிக் கலை என்றே சொல்லலாம். அவற்றில் ஒன்று இது

மாணவர்கள் புடைசூழ அமர்ந்திருக்கின்றனர். ஒரு கிராமவாசி வருகிறார் விறுவிறுவென மாணவர்களை விலக்கிக்கொண்டு இமாம் அருகே வந்தவர் ஒரு 'வாவை' (و) கொண்டு ஒதுவதா? அல்லது இரு 'வாவை' (و) கொண்டு ஓத வேண்டுமா? என்று கேட்டார். அவர் எதைப் பற்றி இவ்வாறு கேட்கிறார் என்று மாணவர்கள் யாருக்குமே புரியவில்லை. ஆனால், ஆசிரியப் பெருந்தகை அபூஹனீஃபா (ரஹ் அவர்கள் அவருக்கு இப்படிப் பதில் சொன்னார்கள்.

இரு வாவைக் கொண்டுதான் ஓத வேண்டும்" இவ்வாறு சொன்னதும்
அந்த நபர், "அப்படியா? மிக்க மகிழ்ச்சி. அல்லாஹ் தங்களுக்கு பரக்கத் செய்வானாக 'லா லா'விலே பரக்கத் செய்தது போல என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

திருதிருவென விழித்த மாணவர்கள், ஒருவரையொருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கியவர்களாக இருந்தாலும் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும் போலிருந்ததால் உடனே கேட்டுவிட்டார்கள். 'ஹள்ரத் அவர் எதைப் பற்றிக் கேட்டார் என்று புரியவில்லை. தாங்கள் கூறிய பதிலும் விளங்கவில்லை. இறுதியில் அவர் சொல்லிச் சென்றதும் புதிராக இருக்கிறது" என்றனர்

புன்முறுவலுடன் பதில்ளித்த இமாமவர்கள் விளக்கமாகச் சொல்ல
ஆரம்பித்தார்கள்: தொழுகையின் இருப்பில் ஒத வேண்டிய அத்தஹிய்யாத் பற்றி அவர் வினவினார், அபூமூசா அல்அஷ்அரீ (ரலி அவர்களின் அறிவிப்பில் உள்ளபடி அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலாவத்துத் தய்யிபாத்து என்ற ஒரு 'வாவைக் கொண்டு ஓத வேண்டுமா? அல்லது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தபடி அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து என்று இரண்டு 'வாவு'களைக் (و) கொண்டு ஒத வேண்டுமா? என்பதே அவர் கேட்ட கேள்வியின் விளக்கம்.

அவருக்கு நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள இரு வாவுகளைக் கொண்ட அத்தஹிய்யாத்தை ஓதுவதே சிறந்தது என்று பதில் கூறினேன்.

அப்படியானல், அவர் போகும்போது 'லா லா" என்று ஏதோ சொன்னாரே......

ஒ...அதுவா? அவர் எனக்காக துஆச் செய்தார். எப்படியெனில், "அல்லாஹு நூருஸ்ஸமாவாத்தி வல் அர்ழி" என்று தொடங்கும் வசனத்தில் அந்த ஒளி கிழக்கிற்கோ மேற்கிற்கோ சொந்தமில்லாத அபிவிருத்தி நிறைந்த ஜைத்தூன் மரத்திலிருந்து கிடைக்கிறது என்று சொல்வதற்காக அல்லாஹ் பயன்படுத்தியுள்ள "லா ஷர்க்கியத்தின் வலா ஃகர்பிய்யத்தின்" என்ற இறைவசனத்தை அவர் சுட்டிக்காட்டவே அவ்வாறு கூறிச் சென்றுள்ளார். அல்லாஹ் அந்த ஜைத்தூன் மரத்திற்கு பரக்கத் செய்துள்ளது போல உங்களுக்கு (பரக்கத்தை) அபிவிருத்தியைத் தந்தருள்வானாக என்று அவர் வாழ்த்தினார். என விளக்கியபோது போதுதான் அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது
(நூல்: குதூரி பக்கம் 27 ஓரக் குறிப்பு)

இதே போன்ற பிறரால் புரிந்துகொள்ள முடியாத பல கேள்விகள் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் கோட்கப்பட்டு, அதைப் புரிந்துகொண்டு அதற்குத் தக்கவாறு அவர்கள் பதில் கூறியதாக நாம் வரலாற்றைப் புரட்டினால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆம்' ஒரு வாவா ? இரு வாவா? என்ற வுடன் அத்தஹிய்யாத்துகளை மனக்கண்களில் புரட்டிப் பார்க்கும் அளவுக்கு ஹதீஸ்களில் புலமையும் லா லா என்றவுடன் அந்த வசனத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு குர்ஆனில் திறமையும் கொண்டிருந்த இப்படிப்பட்ட மார்க்க மாமேதைகள்தான் எந்த நபிமொழித் தொகுப்புகளும் எழுத்து வடிவம் பெறாத அந்த இரண்டாம் நூற்றாண்டுக் காலத்தில் சமுகத்தின் பல்வேறு சிக்கல்களுக்கும் ஷரீஅத் வழியில் ஆய்வு செய்து விடையளித்து மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றார்கள்.

இன்றைய நவீன முஜ்தஹிதுகள் புரிந்துகொள்வார்களா...?

மெளலானா, எஸ். லியாகத் அலி மன்பா
2007 ம் ஏப்ரல் மாத மனாருல் ஹுதா மாத இதழிலிருந்து...

மேலும் விபரங்களுக்கு.
A. காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்.
அசநெல்லிக் குப்பம்.
அரக்கோணம்.
9952129706


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக