வெள்ளி, 17 ஏப்ரல், 2020

பெண்ணைப் பெற்றோர் கவனத்திற்கு...




وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
அவனுடைய அற்புதத்தில் நின்றும் உள்ளது. அவன் உங்களில் இருந்தே உங்களுக்கு துணைவியர்களைப் படைத்திருக்கிறான் அவர்களின் மூலமாக நீங்கள் அமைதி பெறுகிறீர்கள் மேலும் உங்களுக்கிடையே அவன் அன்பையும், பாசத்தையும் ஆக்கியுள்ளான்.

(அல்குர்ஆன்.சூரா அர்ரூம். வசனம் 21)

திருமணம் என்பது உலகம் தோன்றியது முதல் எல்லா சமயத்தவராலும் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு பந்தமாகும். தொன்றுதொட்டு நிகழ்ந்து வரும் அந்த பந்தத்தின் லட்சியம் என்னவென்பதை மேல் காணும் திருவசனம் விளக்குகிறது. ஆம்! மன அமைதி காணுவதே திருமணத்தின் குறிக்கோளும்லட்சியமுமாகும்.

அந்த லட்சியத்தை மணமுடித்த அனைவரும் வென்றிருக்கிறார்களா
என்பது இன்றுவரை கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. சமீப காலமாக அந்த லட்சியம் ஈடேராமற் போவதற்கான பல காரணங்களில் ஒன்று மணப்பெண்ணின் தகுதிக் குறைவாகும்

எத்தனை அவசரம்.?

அவசரம் ஆபத்தைத் தருமென்று கூறுவார்கள். ஆனால் இஸ்லாம் மூன்று காரியங்களில் அவசரம் கொள்ளச் சொல்கிறது; தொழுகை, அதற்குரிய வேளை வந்து விட்டால் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும். ஒருவருக்கு உயிர் பிரிந்து விட்டால், அவரது உடலை துரிதமாக அடக்கம் செய்ய வேண்டும். ஒரு பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை அமைந்துவிட்டால், அப்பெண்ணை மண முடித்துக் கொடுப்பதில் அவசரம் காட்ட வேண்டும்

பெண்ணைப் பெற்ற அனைவரும் தங்களின் மகள் பருவமெய்தி விட்டால் அந்தப் பெண்ணை மணமுடித்துக் கொடுப்பதில் அவசரம் காட்டுகிறார்கள் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை அவசரம் தான்! ஆனால் அதற்கு முன்னால் அந்தப் பெண் மணவாழ்க்கைக்குத் தேவையான மனோ வலிமை உடல் வலிமை, மற்றும் விஷய ஞானம் பெற்றிருக்கிறாரா? என்பது பற்றிச் சிந்திப்பதில்லை

தன்மீது அன்பு செலுத்துவதையே கொள்கையாகக் கொண்ட பெற்றோர் உடன் பிறந்தோர்களுக்கு மத்தியிலேயே உலாவந்து கொண்டிருந்த ஒரு சிறுயை மண முடிப்பதன் மூலமாக மாற்று மனப்பான்பாமையும் கொண்ட குடும்பத்தார்களிடையே வாழ்வைத் துவங்கப் போகிறாள். எல்லோரும் தன் மீது அன்பைப் பொழிந்த நிலை மாறி ஒரேயொரு ஆத்மாவின் அன்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு அவள் புகுந்த வீடு செல்கிறாள். அந்த சூழ்நிலையில் எதிர் நீச்சலடிக்கும் பக்குவத்தை மணப்பெண்ணுக்கு முன்பே ஏற்படுத்தித் தருவது பெற்றோர் கடமையாகும்

அது மட்டுமல்ல! மனைவி என்பவள் தனது கணவனுக்கு ஆலோசனை தேவைப்படும் போது சிறந்த ஆலோசனை வழங்குபவளாகவும், அவன் மனம் சஞ்சலப்பட்டிருக்கும் போது, மன அமைதியைத் தருபவளகாவும், அவன் கலங்கி நிற்கும் போது அவனுக்கு ஆறுதல் மொழிகள் சொல்பவளாகவும், அவன் நோயுற்று விட்டால் ஒரு சிறந்த தாதியாகவும், அவன் உணவு உண்ணும் போது சிறந்த தாயாகவும் சேவையாற்றக் கடமைப்பட்டிருக்கிறாள்

இத்தகைய தகுதிகளைப் பெற்றவளே வாழ்க்கைக்கு சிறந்த துணைவியாவாள். அத்தகைய பொண்ணால்தான் இறைவன் குறிப்பிட்ட மனஅமைதி கிடைக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தகுதியும், திறமையும் படைத்திருந்தவர்களையே தனது வாழ்க்கைத் துணைவியராகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். உம்மஹாத்துல் முஃமினீன்களில் ஹள்ரத் ஆயிஷா (ரலி. அவர்கள் மட்டும் தான் சிறு வயது படைத்தவர்கள். ஆனால் அவர்கள் சிறந்த அறிவாளி அவர்களுக்கு இருந்த அறிவுபோன்று உலகில் எந்தப் பெண்ணும் பெற்றிருக்கவில்லை. 

அருமை நாயகம் (ஸல்) அவர்கட்கு முதன் முதல் வஹி வந்த போது ஹிராமலையிலிருந்து பதைபதைத்த மனதுடன் இல்லம் திரும்புகிறார்கள். அப்போது அவர்களின் துணைவியார் ஹள்ரத் கதீஜா (ரலி) அவர்கள் நடந்து கொண்ட முறை சரித்திரப்பிரசித்தி பெற்றதாகும். அவர்கள் சிறந்த விவேகமுடையவர்களாக இருந்ததால்தான் அவ்வாறு நடந்து கொள்ள முடிந்தது

அண்ணலே! பெருமானே! நீங்கள் பயப்படும்படியாக எதுவும் நடவாது கவலைப்படாதீர்கள். உங்களின் நல்ல மனதுக்கு அல்லாஹ் ஒரு குறையையும் வைக்கமாட்டான். நீங்கள் உறவினர்களைச் சேர்ந்து வாழுகிறீர்கள் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்கள். இல்லாதவர்களுக்காக உழைத்து உதவுகிறீர்கள். விருந்தினருக்கு உணவளிக்கிறீர்கள் உண்மையான தேவைகளுக்கு ஒத்துழைப்புத் தருகிறீர்கள் என்று ஹள்ரத் கதீஜா (ரலி) ஆறுதல் மொழி கூறுகிறார்கள்

ஆனால் தனது கணவருக்கு ஹிரா மலையில் என்ன நடந்திருக்கும் என்பதை அவர்களால் ஊகிக்க முடியாவில்லைதான். ஏனெனில் இது வரை
  இப்படியாருக்கும் நடைபெற்றதாக அவர்கள் கேள்விப்படவில்லை. அது நல்லதா கெட்டதாவென தான் ஒரு முடிவுக்கு வர முடியாமலிருந்தும், எதிர்பாராதது நடந்து விட்டால் கலக்கமிகக் கொள்ளும் பெண் இனமாக தான் இருந்தும் அம்மையார் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறுகிறார்கள். அதன் பின்னர் தனது உறவினர்களில் மூத்தவரும் விபரம் புரிந்தவருமான வரகா பின் நவ்பல் என்பரிவரிடம் பெருமானாரை அவர்கள் அழைத்துச் செல்கிறார்கள்

அதுவும் எடுத்தவுடன் வரகாவிடம் பெருமானாரை அழைத்துச்
செல்லவில்லை. இந்த நிகழ்வு நல்லதல்லாததாக இருந்தால், அதை வரக்கா தெளிவுபடுத்த தனது கணவர் மனச்சங்கடம் அடையக்கூடும். எனவே முதலில் வரக்காவிடம் தான் சென்று நிலமையை அறிந்து, அதற்குத் தக்க நடந்து கொள்ளலாமென்று முடிவு செய்து, அவ்வாறே செய்கிறார்கள். இந்த செயல்பாடுகள் அறிவார்ந்த செயல்களாகும். மேலும் கணவன் கலக்க முற்றிருக்கும் போது மனைவி எவ்வாறு ஆறுதலளிக்க வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகும்

ஹள்ரத் கதீஜா (ரலி) அவர்களைப் போன்றே பெருமானார் (ஸல்)
அவர்களின் புத்திசாலித்தனமாக நடந்திருப்பதாக சரித்திரத்தில் காணக் கிடைக்கிறது பெருமானாருக்கு துணைவியர் அமைந்தது போன்று எவருக்கும் அமையாது என்பது உண்மையானாலும், வாழ்க்கைத் துணைவி என்பவர் எத்தகைய தன்மை படைத்தவராக இருத்தல் வேண்டும் என்பதற்கு அவர்களின் வாழ்க்கை சிறந்த வழிகாட்டக் கூடியதாகும்

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்

பெண்ணைப் பெற்றோர் அந்தப் பெண்ணுக்கு மணவாழ்க்கையை
ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்னால் புதுவாழ்வில் எப்படியெல்லாம்
செயல்படவேண்டும் என்பதை எடுத்துக் கூறிக் கொண்டே இருக்கவேண்டும் ஆனால் இந்த நவயுகத்தில் பெரும்பாலான பெற்றோர் அத்தகைய விஷய ஞானங்கள் எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. சினிமா. டீவி வீடியோ போன்ற பொழுதுபோக்குச் சாதனங்களை கண்டுகளிக்கவே வசதி செய்து கொடுக்கிறார்கள். அதனால் அந்த இளஞ்சிட்டுகள் போலியான திரை வாழ்க்கையையே நிஜவாழ்க்கை என்ற கற்பனையிலேயே வளருகிறார்கள் மணமுடித்துக் கொடுத்த பின் போலித்தனமான வாழ்க்கையை எதிர்பார்க்து ஏனைய மனைவிமார்களும்
சந்தர்ப்பங்களில் அது கிடைக்காததால் மனமொடிந்து போகிறார்கள். எனவே அவர்களால் மணவாழ்க்கையின் லட்சியமான மன அமைதியைக் காண, மன அமைதிக்குத் துணைபோக இயலவில்லை. நாகரிகம் என்று நினைத்துக் கொண்டு அநாகரிக முயற்சிகளை மேற்கொள்ளும் பெண்கள் அதிகமாக வாழும் இக்காலாத்தில் இஸ்லாமியப் பெற்றோர் தங்கள் மகவுகளை நேர்வழியை விட்டும் தவறவிடுவதில்லை என்று கங்கணங் கட்டிக் கொண்டு, அவர்கள் வாழ வழி காட்ட வேண்டும்

பெண்கள் பருவ வயதடைந்ததிலிருந்து, மண முடித்துக் கொடுக்கப்படும் வரையிலான காலகட்டம், வாழ்க்கையைப்பற்றி போதிப்பதற்கு தகுந்த பொற்காலமாகும். அத்தகைய பெண்களுக்கு திருக்குர்ஆனிலுள்ள அன்நூர் என்ற அத்தியாயத்தை கற்றுக் கொடுக்க வேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அறிவுரை தருகிறார்கள். பெண்கள் பத்தினித்தனமாக எப்படி நடந்து கொள்ளல் வேண்டும்? அவர்கள் யார் யாரைத் தன் வீட்டினுள் அனுமதிக்கலாம்? யார் யார் முன் திரை மறைவின்றி தோன்றலாம்? பர்தா முறையை எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? வெளியில் செல்லும்போது எத்தகைய அலங்காரங்களுடன் செல்லவேண்டும்? வாழ்க்கையில் தவறிவிட்டால் எத்தகைய தண்டனை கிடைத்திடும்? என்பன போன்ற சட்டங்கள் அந்த அத்தியாயத்தில் தெளிவுபடுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் தனது வாழ்க்கையில் பிறர் சந்தேகம் கொள்ள பெண்கள் இடமளித்து விடலாகாது என்பதை உத்தமி ஹள்ரத் ஆயிஷா (ரலிஅவர்கள் வாழ்வில் நடந்து விட்ட ஒரு அசம்பாவிதத்தை மேற்கோள் காட்டி அந்த அத்தியாயம் விளக்குகிறது. நாம் உத்தமியான பெண். நம்மையாரும்
சந்தேகிக்க மாட்டார்கள். என்று இருமாந்து இருக்கலாகாது என்றும்
அண்ணலாரின் துணைவியாரின் மீதே இந்த பாழாய்ப் போன உலகம் சந்தேகம் கொண்டு விட்டதே! நான் என்ன அவர்களைவிட உயர்ந்தவளா?? என்னும் எண்ணம் கொள்ளல் வேண்டும் எனவும் அந்த அத்தியாயம் உபதேசிக்கின்றது

பெண்களுக்கு அந்நூர் அத்தியாயத்தைப் போதிப்பதுடன், மண
வாழ்க்கை மன அமைதியைக் கிட்டச் செய்யும் வகையில் பெருமானார் (ஸல்) அவர்கள் அருளிய எண்ணற்ற போதனைகளையும் அவர்களுக்கு போதித்திடல் வேண்டும்

ஒட்டகத்தில் பயணம் செய்யும் அராபியப் பெண்களிலேயே
சிறந்தவர்கள் குறைஷி குலத்தைச் சேர்ந்த நல்ல பெண்களாவார்கள்
அவர்கள் தங்களது குழந்தைகளின் அதிக பாசம் உள்ளவர்களாகவும் தங்களின் கணவனின் வரவுக்குத் தக்க செலவு செய்பவர்களாகவும் இருப்பார்கள்
அறிவிப்பவர் : ஹள்ரத் அபூ ஹுரரா (ரலி) நூல் : புகாரி

இறையச்சத்தை அடுத்து ஒரு மனிதனுக்கு சிறந்த மனைவி
கிடைக்கக் பெறுவதைப் போன்ற பாக்கியம் வேறெதுமில்லை. அவன் கட்டளையிட்டால் அவள் அதைச் செயலாற்றுவாள்; அவன் பார்த்தால் மகிழ்ச்சியைத் தருவாள் அவன் ஒன்றை ஆணையிட்டால் அதன்படி நடப்பாள்; அவன் வெளியில் சென்று விட்டால் அவனது உடமைகளையும் தன் கற்பையும் காத்து வருவாள்.

அறிவிப்பாளர். ஹழ்ரத் பூ உமாமா ரலி நூல். இப்னு மாஜா.

ஒரு பெண் தான் மரணமடையும் போது தன் கணவனின்
திருப்தியைப் பெற்று மரணமடைந்தால் அவள் சுவனம் செல்வாள்
அறிவிப்பவர் : ஹன்ரத் உம்மு ஸலமா (ரலி), நூல் : திர்மிதி

கணவன் மனைவியை ஒரு தேவைக்காக அழைத்தால் அவள்
அடுப்பில் வேலையாக இருந்தாலும் இணங்கிட வேண்டும்
அறிவிப்பவர்: ஹன்ரத் தல்க்குபின் அலி (ரலி), நூல் : திர்மதி

ஹன்ரத் இப்னுமஸ்வூது (ரலி) தன் மக்களுக்கு கற்றுக் கொடுத்த கல்வி

குர்ஆன், ஹதீஸின் ஒளியில் பெண்களுக்கு தேவையான அம்சங்களைக் கற்றுக் கொடுக்கும்போது மேற்கோளாக ஸஹாபியத்தான பெண்கள் வாழ்க்கையில் நடந்த அற்புதமான மேற்கோள்களையும் சேர்த்து போதித்திடல் வேண்டும்

ஹள்ரத் இப்னு மஸ்வூது (ரலி) அவர் கள் மரணப்படுக்கையில்
இருக்கிறார்கள். அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கும் நிலையில் பல மகள்கள் இருப்பதால் அவர்களுக்கு உதவும் நோக்கில் அமீருல் முஃமினீன் ஹள்ரத் உதுமான் (ரலி) அவர்கள் அங்கு வருகை தருகிறார்கள். அவர்கள் ஹள்ரத் இப்னு மஸ்வூது (ரலி) அவர்களிடம் எப்படி இருக்கிறீர்கள்? என்று விசாரிக்கிறார்கள். எனது வாழ்க்கையில் பாவ மன்னிப்பு பெறாது விட்டு விட்ட பாவங்கள் எதுவும் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் நான் இருக்கிறேன் என ஹள்ரத் இப்னு மஸ்வூது (ரலி) பதிலளிக்கிறார்கள். உங்களுக்கு ஏதும் ஆசை இருக்கிறதா என ஹள்ரத் உதுமான் (ரலி) கேட்கிறார்கள்.

அல்லாஹ்வின் அருளைப்பெற வேண்டுமென்ற ஆசைதான் என் உள்ளத்தில் நிரம்பியிருக்கிறது என ஹள்ரத் இப்னு மஸ்வூது (ரலி) பதிலளிக்கிறார்கள். உங்களுக்குச் சிகிச்சை செய்ய சிறந்த வைத்தியரை அழைத்து வரட்டுமா? வென ஹள்ரத் உதுமான் (ரலி) கேட்டபோது வைத்தியனே (அல்லாஹ்வே) என்னை நோயுறச் செய்திருக்கிறான் அப்படி இருக்கையில் எப்படி சிகிச்சை செய்ய முடியும்? என ஹள்ரத் இப்னுமஸ்வூது (ரலி) பதிலளித்தார்கள். தனது மறைமுகமான கேள்விகளுக்கு ஹள்ரத் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் தான் எதிர்பார்த்த பதிலைத் தாராததைக் கண்ட ஹள்ரத் உதுமான் (ரலி) நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறார்கள்

உங்களுக்கு மண முடித்துக் கொடுக்கும் நிலையில் பல குழந்தைகள்
இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர்களுக்காக நான் உதவி செய்ய முன்வந்துள்ளேன் என்றார்கள், என் மக்கள் தங்கள் உதவியை எதிர் நோக்கும் நிலையில் இல்லை. அல்வாக்கிஆ என்ற அத்தியாயத்தை தினந்தோரும் இரவில் ஒதி வரும் பழக்கத்தை நான் அவர்களுக்கு உண்டாக்கியிருக்கிறேன். அந்த அத்தியாயத்தை தினமும் ஒதுபவர் எவரும் பிறர்பால் தேவையாவதில்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெருமானார் சொன்னது ஒருக்காலும் பொய்த்ததில்லை என்று ஹள்ரத் இப்னு மஸ்வூது (ரலி) பதிலுரைத்தார்கள். அவர்களின் பதில் கேட்டு ஆச்சரியமடைந்து திரும்பிய உதுமான் (ரலி) ஹள்ரத் அவர்கள் கூறுகிறார்கள்: என்னே! ஆச்சரியம் அவர்கள் அறிவித்தது போன்றே அவர்களின் மகள்கள், எவருடைய தயவையும் எதிர்பாக்காமல் திருமண முடித்துக் கொடுக்கப்பட்டதை நான் கண்டேன்

திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்

பெண்களுக்கு குடும்ப வாழ்க்கைக்கு தேவையான கல்வி ஞானத்தைப் போதித்தன் பின், அவர்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் அவர்களின் கர்ப்பப் பை அடுத்த சில மாதங்களில் குழந்தை பெற தகுதி பெற்றிருக்கிறதா? என்பதைக் கண்டறிய வேண்டும். நமது குழந்தைகளுக்கு மணமுடித்துக் கொடுப்பதில் அவசரம் காட்ட வேண்டியது தான். ஆனால் பெண்கள் மனோ வலிமையும், உடல் வலிமையும் பெற்றபின், நல்ல பொருத்தமான மாப்பிள்ளை அமைந்த பின்தான் அந்த அவசரம் வேண்டும். மாப்பிள்ளை விசயத்தில் ஒன்றுக்கு நூறு தடவை யோசிக்க வேண்டும். கீழ்காணும் நபி மொழியை திரும்பத் திரும்ப சிந்திப்போமாக.

உங்களுக்கு திருப்தியளிக்கும் வண்ணம் நற்குணமும், மார்க்க ஈடுபாடும் கொண்ட மாப்பிள்ளை உங்கள் பெண்ணைக் கேட்டால் மண முடித்துக் கொடுப்பதில் அவசரம் காட்டுங்கள்

அறிவிப்பவர் : ஹள்ரத் அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு  எல்லா வளமும் நலமும் அல்லாஹ் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக