வியாழன், 15 அக்டோபர், 2026

பொருளாதாரப் புயலும் ஈமானியப் படகும்

 


பொருளாதாரப் புயலும் ஈமானியப் படகும் 


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ ، أَمَّا بَعْدُ:

وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ


நிச்சயமாக நாம் உங்களை பயம், பசி, செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்களின் சேதம் ஆகியவற்றைக் கொண்டு சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. அல்குர்ஆன் 


مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلَام كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எவரும் தன் கைகளால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்டதில்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் கைகளால் உழைத்தே உண்டு வந்தார்கள்.

இன்றைய காலகட்டத்தில் கடுமையான விலைவாசி உயர்வு அன்றாடம் கடைத்தெருவுக்குச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் கடும் சிரமம் படுகின்றான்.

மளிகைப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எண்ணெய், கல்விச் செலவு, வீட்டு வாடகை, மருத்துவச் செலவு என ஒவ்வொன்றும் நாளுக்கு நாள் விண்ணைத் தொடுகிறது.

500 ரூபாய் நோட்டு சில்லறையாகக் கூட கைக்குள் நிற்பதில்லை, காலையில் எடுத்த பணம் மாலையில் காணாமல் போகிறது.

ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்க குடும்பங்களும் தங்களின் மாதாந்திர பட்ஜெட்டைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.

ஒரு புறம் உழைப்பு கூடுகிறது, இன்னொரு புறம் அந்த உழைப்புக்குரிய பணத்தின் மதிப்பு குறைகிறது.

குடும்பத் தலைவர்கள் மத்தியில் எதிர்காலத்தைப் பற்றிய பெரும் பயமும் மன அழுத்தமும் சூழ்ந்துள்ளது.

இந்த விலைவாசி உயர்வுக்குப் பின்னால் வெறும் உலகியல், அரசியல், பொருளாதார காரணங்கள் மட்டும்தான் இருக்கின்றனவா?

நமது மார்க்கம் இதற்கு என்ன வழிகாட்டுகிறது, இதற்கான காரணங்கள் என்ன?

அல்லாஹ் இந்த பூமியை நிர்வகிப்பவன் என்றால், அவனது அனுமதியின்றி ஒரு இலையும் அசைவதில்லை என்றால், இந்த பஞ்சம் எதன் வெளிப்பாடு என்பதை நாம் உணர்ந்து திருந்த வேண்டும்.

விலைவாசி உயர்வு மற்றும் கடும் 

சோதனைகளுக்கான காரணங்கள்

மக்களின் பாவங்களும் மார்க்க வழிகாட்டலை மறப்பதும் 

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

மனிதர்களின் கைகள் சம்பாதித்த தீவினைகளின் காரணமாகத் தரையிலும் கடலிலும் குழப்பங்கள் வெளிப்பட்டுவிட்டன; அவர்கள் செய்த சில தீமைகளின் பலனை அவர்கள் சுவைப்பதற்காகவும், அவர்கள் பாவங்களிலிருந்து மீள்வதற்காகவும் அல்லாஹ் இவ்வாறு செய்கிறான். நூல்: இப்னு மாஜா

لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمُ الطَّاعُونُ وَالأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلاَفِهِمُ الَّذِينَ مَضَوْا، وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ

எந்த ஒரு சமுதாயத்தில் மானக்கேடான செயல்கள் பகிரங்கமாகத் தோன்றுகிறதோ, அங்கு அவர்களின் முன்னோர்கள் கண்டிராத கொள்ளை நோய்களும் புதுவித வேதனைகளும் பரவாமல் இருப்பதில்லை; அவர்கள் அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யும் போதெல்லாம் கொடிய பஞ்சத்தினாலும், கடுமையான விலைவாசி மற்றும் வாழ்வாதாரச் சுமையினாலும், ஆட்சியாளர்களின் அநீதியினாலும் தண்டிக்கப்படாமல் இருப்பதில்லை. நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா / அறிவிப்பாளர்:இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு 

إِذَا ظَهَرَ الزِّنَا وَالرِّبَا فِي قَرْيَةٍ أُذِنَ بِهَلَاكِهَا

ஒரு ஊரில் விபச்சாரமும் வட்டியும் பகிரங்கமாகிவிட்டால், அந்த ஊர் அழிந்துபோவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.

வானத்திலிருந்து பெய்யும் மழையோ, பூமியிலிருந்து விளையும் தானியங்களோ தானாக நடக்கும் நிகழ்வுகள் அல்ல; அவை அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடப்பவை.

மனிதர்கள் பாவங்களில் மூழ்கும்போது பூமி தனது பரக்கத்தை இழக்கிறது; விளைச்சல் குறைந்து உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் விலைவாசி உயர்வும் உண்டாகிறது.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம்

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் பனீ இஸ்ராயீல் மக்களுக்குக் கடுமையான வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஒன்று கூடி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்யுமாறு உங்கள் இறைவனிடம் பிரார்த்தியுங்கள் என்று வேண்டினர்.

உடனே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு புறப்பட்டு திறந்தவெளி மைதானத்திற்குச் சென்றார். அவர்களுடன் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்தனர். மூஸா அலைஹிஸ்ஸலாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். ஆனால் வானத்தில் வெயிலும் தகிக்கும் வெப்பமும் அதிகரித்ததே தவிர எந்த மேகக் கூட்டமும் கூடவில்லை.

அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம், என் இறைவனே! என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதை எனக்கு வழக்கமாக்கி வைத்திருந்தாயே, இப்போது ஏன் ஏற்கவில்லை என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ் அவரிடம் வஹீ மூலம் கூறினான்:

إِنَّ فِيكُمْ عَبْدًا يُبَارِزُنِي بِالْمَعَاصِي مُنْذُ أَرْبَعِينَ سَنَةً... فَبِشُؤْمِهِ مُنِعْتُمُ الْقَطْرَ

நிச்சயமாக உங்களிடையே நாற்பது ஆண்டுகளாக எனக்கு மாறு செய்து, தொடர்ந்து பாவம் செய்து வரும் ஒரு மனிதன் இருக்கிறான். அவனைக் கூட்டத்திலிருந்து வெளியேறிச் செல்லும்படி மக்களிடம் பகிரங்கமாக அறிவியுங்கள். அவனது தீய செயல்களின் காரணமாகவே நான் மழையைத் தடுத்து நிறுத்தியுள்ளேன்.

அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம், என் இறைவனே! நான் பலவீனமான ஒரு மனிதன், என் குரலும் பலவீனமானது. இவ்வளவு பெரிய எழுபதாயிரம் பேர் கொண்ட கூட்டத்திற்கு என் குரல் எவ்வாறு எட்டும் என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ், அழைப்பு விடுப்பது உமது கடமை, அதை அனைவரின் செவிகளுக்கும் எட்டச் செய்வது எனது பொறுப்பு என்று பதிலளித்தான்.

உடனே மூஸா அலைஹிஸ்ஸலாம் எழுந்து நின்று உரத்த குரலில் அழைத்தார்:

நாற்பது ஆண்டுகளாக அல்லாஹ்வுக்கு மாறு செய்து பெரும் பாவம் செய்து கொண்டிருக்கும் அடியாரே! எங்கள் மத்தியிலிருந்து உடனே வெளியேறிச் சென்றுவிடு! உனது பாவத்தின் காரணமாகவே எங்களுக்கு மழை தடுக்கப்பட்டுள்ளது!

அப்போது அந்தப் பாவி வலப்பக்கமும் இடப்பக்கமும் பார்த்தார்; கூட்டத்திலிருந்து எவரும் வெளியேறவில்லை. எனவே இறைவனால் குறிவைக்கப்பட்ட அந்த மனிதன் நாம்தான் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

அவர் தனது மனதிற்குள் கூறினார் நான் இப்போது கூட்டத்திலிருந்து வெளியேறினால், இந்த ஒட்டுமொத்த பனீ இஸ்ராயீல் மக்கள் முன்பும் என் மானம் போய்விடும். நான் இங்கேயே உட்கார்ந்திருந்தால், என் ஒருவனுக்காக மக்கள் அனைவருக்கும் மழை கிடைக்காமல் பஞ்சம் தொடரும்.

உடனே அவர் மிகுந்த வெட்கத்துடனும் வருத்தத்துடனும் தன் தலையைத் தனது ஆடைக்குள் புதைத்துக் கொண்டு உள்ளூரக் கதறி அழுதார்:

عَصَيْتُكَ أَرْبَعِينَ سَنَةً وَأَمْهَلْتَنِي، وَقَدْ أَتَيْتُكَ طَائِعًا نَادِمًا تَائِبًا فَاقْبَلْنِي

என் இறைவனே! என் எஜமானே! நாற்பது ஆண்டுகள் உனக்கு நான் மாறு செய்தேன்; நீயோ என் மானத்தைக் காத்து எனக்கு அவகாசம் தந்தாய். இதோ இன்று உனக்குக் கீழ்ப்படிந்து, என் தவறுகளுக்கு உளமார வருந்தி, தவ்பா செய்து உன்னிடம் வந்துவிட்டேன். என்னை மன்னித்து ஏற்றுக்கொள், என் மானத்தை மறைத்துக் காப்பாற்று!

அவர் தனது வார்த்தைகளை முழுமையாக முடிப்பதற்கு முன்பாகவே, வானத்தில் ஒரு வெண் மேகம் திரண்டு எழுந்தது. அடுத்த கணமே வானத்திலிருந்து பெருமழை கொட்டித் தீர்த்தது.

இதைக் கண்ட மூஸா அலைஹிஸ்ஸலாம் ஆச்சரியமடைந்து, என் இறைவனே! எங்கள் மத்தியிலிருந்து எவருமே வெளியேறவில்லையே, அப்படியிருக்க எங்களுக்கு எவ்வாறு மழையைத் தந்தாய் என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ் கூறினான்: மூஸாவே! எவன் காரணமாக நான் மழையைத் தடுத்தேனோ, அவனது உண்மையான தவ்பாவின் காரணமாகவே இப்போது நான் உங்களுக்கு மழையைத் தந்துள்ளேன்!

அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம், என் இறைவனே! அந்த நல்லடியானை யார் என்று எனக்குக் காட்டித் தருவாயாக என்று வேண்டினார்.

அதற்கு கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறினான்:

سَتَرْتُهُ وَهُوَ يَعْصِينِي أَرْبَعِينَ سَنَةً، أَفَأَفْضَحُهُ وَهُوَ يُطِيعُنِي

மூஸாவே! அவன் நாற்பது ஆண்டுகள் எனக்கு மாறு செய்து பாவம் செய்தபோதே அவனது குற்றத்தை வெளிப்படுத்தாமல் மறைத்துப் பாதுகாத்தேன்; அவன் இன்று திருந்தி என்னை வணங்கும் நல்லடியானாக மாறிவிட்ட நிலையில், அவனை நான் காட்டிக்கொடுத்து அவமானப்படுத்துவேனா? நூல்: பிதாயா வந்நிஹாயா 

தண்டனையின் நோக்கம் அழிவல்ல, திருந்துவதற்கே

குர்ஆன் வசனத்தின் ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُم بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

இறுதியில் لَعَلَّهُمْ يَرْجِعُونَ அவர்கள் பாவங்களிலிருந்து மீள்வதற்காகவும் அல்லாஹ் இவ்வாறு செய்கிறான் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இதன் நோக்கம் மனிதர்களை அடியோடு அழிப்பது அல்ல; மாறாக விலைவாசி உயர்வு, வறுமை, பசி போன்ற நெருக்கடிகள் ஏற்படும்போது மனிதன் தன் தவறுகளை உணர்ந்து, பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதே.

வியாபாரத்தில் சரியான அளவைக் கொடுக்காமல் குறைப்பது பஞ்சம் வர முக்கிய காரணம்..

وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ۝ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ۝ وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ

அளவையில் மோசடி செய்பவர்களுக்கு கேடுதான்! அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்கிக்கொள்கிறார்கள்; ஆனால், பிறருக்கு அளந்தோ அல்லது நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்து விடுகிறார்கள்.. சூரஹ் அல்-இஸ்ரா (17:35)

 ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமுதாயம்

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ

எந்த ஒரு சமூகம் அளவையிலும் நிறுவையிலும் குறைவு ஏற்படுத்துகிறதோ, அவர்கள் பின்வரும் மூன்று தண்டனைகளைக் கொண்டு பிடிக்கப்படாமல் இருப்பதில்லை:நூல்: சுனன் இப்னு மாஜா

கொடிய பஞ்சம் (السِّنِينَ)

கடுமையான விலைவாசி / வாழ்வாதார நெருக்கடி (شِدَّة الْمَئُونَة)

அநியாயக்கார ஆட்சியாளர்களின் அக்கிரமம் (جَوْر السُّلْطَان)

அளவையில் குறைப்பது என்பது தனிநபரின் திருட்டு மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொருளாதார ஒழுக்கத்தைச் சீரழிக்கும் சமூகத் துரோகம்.

வாங்கும் போது ஒரு அளவையும், விற்கும் போது குறைந்த அளவையும் பயன்படுத்துவது அநியாயமான சுரண்டல். இதன் மூலம் மக்களின் உழைப்பும் உரிமையும் சூறையாடப்படுகிறது.

மூன்று தண்டனைகளுக்கு இடையிலான தொடர்பு

பூமி விளைச்சலைத் தரும் ஆற்றலை இழக்கிறது; மழையின்மை மற்றும் வறட்சி ஏற்படுகிறது.

ஒரு மனிதன் எவ்வளவுதான் அதிகம் சம்பாதித்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும் நிலை உண்டாகிறது. பணம் தண்ணீராகக் கரையும்; பரக்கத் முற்றிலும் அகன்றுவிடும்.

சமுதாயத்தின் எளிய வணிகர்களே ஏமாற்றுக்காரர்களாக மாறும்போது, இறைவன் அவர்களுக்குத் தலைவர்களாக அநியாயக்காரர்களை அனுப்பி, அவர்களின் வரிச் சுமைகளாலும் கெடுபிடிகளாலும் அவர்களை வாட்டுகிறான்.

ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரமும் மக்களின் ஆணவமும் 

அல்லாஹ் இவர்களை நல்வழிப்படுத்த அவர்களிலிருந்தே நாவன்மைமிக்க ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபியாக அனுப்பினான். அவர்களின் இனிய பேச்சாற்றல் காரணமாக அவர்கள் 'கதீபுல் அன்பியா' (நபிமார்களின் பேச்சாளர்) என அழைக்கப்பட்டார்கள்.

அவர் தன் சமுதாயத்தை நோக்கிப் பின்வருமாறு அறிவுரை கூறினார்கள்:

وَلَا تَنقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِنِّي أَرَاكُم بِخَيْرٍ وَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُّحِيطٍ ۝ وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ

(ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் தன் சமுதாயத்திடம் கூறினார்:) நீங்கள் அளவையிலும் நிறுவையிலும் குறைத்து விடாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களை நல்ல செழிப்பான நிலையில் காண்கிறேன்; எனினும் சூழ்ந்துகொள்ளும் ஒரு நாளின் வேதனை உங்கள் மீது வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். மேலும் என் சமூகத்தாரே! அளவையையும் நிறுவையையும் நீதியுடன் முழுமையாக நிறைவேற்றுங்கள்.

என் சமூகத்தாரே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அளவையிலும் நிறுவையிலும் எடையைக் குறைக்காதீர்கள். நீங்கள் நேர்மையாக வியாபாரம் செய்து அல்லாஹ் வழங்கும் ஹலாலான சொற்ப லாபமே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

ஆனால் மத்யன் மக்கள் ஆணவத்தோடு அவரைப் பரிகாசம் செய்தனர். அவர்கள் கூறினார்கள்:

ஷுஐபே! எங்கள் முன்னோர்கள் வணங்கிய தெய்வங்களை நாங்கள் கைவிட வேண்டும் என்றும், எங்கள் செல்வங்களை எங்கள் விருப்பப்படி செலவிடுவதையோ வியாபாரம் செய்வதையோ விட்டுவிட வேண்டும் என்றும் உமது தொழுகையா உமக்குக் கட்டளையிடுகிறது?

மேலும் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பலவீனமானவர் என்று கேலி செய்ததோடு, நீங்கள் கூறுவது உண்மையானால் வானத்திலிருந்து எங்கள் மீது வேதனையை இறக்கிக் காட்டுங்கள் என்று பகிரங்க சவால் விடுத்தனர்.

மக்களின் திமிரும் அநீதியும் எல்லை மீறிய போது, அல்லாஹ் மூன்று விதமான வேதனைகளை ஒன்றன்பின் ஒன்றாக இறக்கி அந்த ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அழித்தான்.

அல்லாஹ் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் கடுமையான அனல் காற்றையும் தாங்க முடியாத வெப்பத்தையும் அவர்கள் மீது சாட்டினான். வீடுகளுக்குள் இருந்தும், கிணறுகளில் இறங்கியும் அவர்களால் அந்த வெப்பத்தைத் தணிக்க முடியவில்லை; தண்ணீர் கூட கொதித்தது.

நிழல் மேகத்தின் வேதனை (அதாபு யவ்மிஸ் ஸுல்லா):

எட்டாவது நாள் வானத்தில் ஒரு பெரிய கரு மேகம் தோன்றி நிழல் தந்தது. கடும் வெப்பத்தில் தவித்த மக்கள், தங்களுக்குக் குளுமை கிடைக்கப் போகிறது என்று எண்ணி ஊரிலிருந்த அனைவரும் அந்த மேகத்தின் கீழ் திரண்டனர்.

நெருப்பு மழையும் பெரு நிலநடுக்கமும் (அர்-ரஜ்ஃபா):

மக்கள் அனைவரும் மேகத்தின் அடியில் கூடி நின்ற அந்த வினாடியில், மேகத்திலிருந்து கொதிக்கும் நெருப்புப் பொறிகள் அவர்கள் மீது கொட்டின. அதே நேரத்தில் வானத்திலிருந்து ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கடுமையான இடி முழக்கக் குரல் (அஸ்-ஸைஹா) எழுந்தது; பூமி பலமாக அதிர்ந்து பிளந்தது.

அனைவரும் தங்களின் வீடுகளிலேயே முகங்குப்புற விழுந்து பிணங்களாக மடிந்து போனார்கள். நேற்று வரை அங்கே அப்படி ஒரு மனித சமுதாயம் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாதவாறு அவர்கள் வேரோடு அழிக்கப்பட்டனர்.

فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ

பூகம்பம் அவர்களைப் பிடித்துக்கொண்டது; அவர்கள் தங்கள் வீடுகளிலேயே முகங்குப்புற விழுந்து மடிந்து கிடந்தார்கள்.சூரஹ் அல்-அஃராஃப் (7:91)

فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள்; எனவே நிழல் கொடுத்த அந்த மேகத்து நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது மகத்தான ஒரு நாளின் வேதனையாக இருந்தது.சூரஹ் அஷ்-ஷுஅரா (26:189)

பொருளாதாரத்தில் நடக்கும் ஏமாற்று வேலைகளையும் அளவை மோசடிகளையும் அல்லாஹ் ஒருபோதும் சாதாரணமாக விட்டுவிடுவதில்லை.

ஒரு சமுதாயம் இணைவைப்போடு சேர்த்து, சந்தைகளில் மோசடியையும் வாழ்க்கை முறையாக மாற்றினால், அவர்களின் செல்வச் செழிப்பும் கட்டிடங்களும் அவர்களை இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியாது.

நேர்மையான வியாபாரமே சமூகத்தின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு அடிப்படை; மோசடி அழிவை மட்டுமே தரும்.

நவீன கால அளவை மோசடிகள்

பழைய காலத்தில் தராசில் எடை குறைத்தார்கள்; இன்று தொழில்நுட்ப ரீதியாக எடை மெஷின்களை மாற்றுவது, பேக்கிங் எடையில் குறைப்பது.

கலப்படம் செய்து தரமற்ற பொருட்களை உயர்தரப் பொருட்களின் விலைக்கு விற்பது.

குறைகளை மறைத்து போலியான உத்தரவாதங்களுடன் விற்கும் ஆன்லைன் மோசடிகள்.

ஜகாத் கொடுக்காமல் தடுப்பதும் ஏழைகளின் உரிமையை மறுப்பதும்

செல்வந்தர்கள் தங்களின் சொத்துக்களுக்குரிய ஜகாத்தை முறையாக கணக்கிட்டு வழங்காமல் இருப்பது பரக்கத்தை பறித்துவிடும்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ، وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا

மக்கள் தங்களின் செல்வத்திற்கான ஜகாத்தை கொடுப்பதை நிறுத்தும் போது, வானத்திலிருந்து பொழியும் மழை தடுக்கப்படுகிறது. வாயில்லாப் பிராணிகள், கால்நடைகள் மட்டும் பூமியில் இல்லையென்றால் அவர்களுக்கு ஒரு துளி மழைகூட பெய்யாது.

திருக்குர்ஆனின் எச்சரிக்கை…

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ۝ يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ

எவர்கள் தங்கம் மற்றும் வெள்ளியைப் பதுக்கி வைத்துக்கொண்டு, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என நற்செய்தி கூறுவீராக. நரக நெருப்பில் அவை பழுக்கக் காய்ச்சப்பட்டு, அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் நாளில், இதோ இதுதான் உங்களுக்காக நீங்கள் பதுக்கி வைத்த செல்வம்; நீங்கள் சேமித்து வைத்ததை இப்போது சுவையுங்கள் என்று கூறப்படும். சூரஹ் தவ்பா (9:34-35)

ஜகாத் என்பது உபகாரமல்ல, கட்டாய உரிமை

செல்வந்தர்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும் சில்லறை தர்மம் அல்ல ஜகாத்; அது பணக்காரர்களின் சொத்தில் ஏழைகளுக்கு அல்லாஹ் நிர்ணயித்த அடிப்படை உரிமை.

குர்ஆனில் சூரஹ் அத்தாரியாத் 19 வது வசனத்தில், அவர்களின் செல்வங்களில் யாசிப்போருக்கும், வசதியற்றோருக்கும் உரிமையுண்டு என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

இந்த உரிமையை ஒருவர் கொடுக்காமல் தன் கஜானாவிலேயே வைத்திருந்தால், அவர் ஏழையின் சொத்தைத் திருடி தன் சொத்தோடு கலந்த பாவியாக மாறுகிறார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

مَا خَالَطَتِ الزَّكَاةُ مَالًا قَطُّ إِلَّا أَهْلَكَتْهُ

ஜகாத் கொடுக்கப்படாத எந்த ஒரு செல்வத்துடனும் அந்த ஜகாத்தின் பங்கு கலந்திருக்குமானால், அது அந்த செல்வத்தையே அடியோடு அழித்துவிடும் (பைஹகீ).

ஜகாத் கொடுக்காத பணம் மனிதனின் கையில் தற்காலிகமாகப் பெருகினாலும், அதில் உள்ள நிம்மதி மற்றும் அருள் முற்றிலும் போய்விடும்.

தேவையற்ற மருத்துவச் செலவுகள், விபத்துக்கள், தொழிலில் எதிர்பாராத இழப்புகள், ஏமாற்றுகள் என பல வழிகளில் அந்தப் பணம் மனிதனை விட்டு விரயமாகிவிடும்.

செல்வந்தர்களின் கஞ்சத்தனமும் ஏழைகளின் உரிமையை மறுப்பதும் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் ஒழுங்கையே பாதிக்கிறது.

வானத்தின் மழையைத் தடுக்கும் அளவுக்கு ஜகாத் மறுப்பு கொடிய பாவமாக இருக்கிறது.

وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ ، وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا

மக்கள் தங்களின் செல்வத்திற்கான ஜகாத்தை கொடுப்பதை நிறுத்தும் போது, வானத்திலிருந்து பொழியும் மழை தடுக்கப்படுகிறது; கால்நடைகள் மட்டும் இல்லையென்றால் அவர்களுக்கு மழையே பெய்யாது.பொருளாதார சுழற்சி முடங்குதல் நூல்: ஸுனனு இப்னு மாஜா

ஜகாத் முறையாகக் கணக்கிட்டு சமுதாயத்தில் விநியோகிக்கப்படும் போது, எளிய மக்களிடம் வாங்கும் சக்தி கூடுகிறது. அது பணப்புழக்கத்தை அதிகரித்து விலைவாசியையும் வறுமையையும் குறைக்கிறது.

பணக்காரர்கள் பணத்தைப் பதுக்கி வைக்கும்போது பணம் குறிப்பிட்ட சில நபர்களிடம் மட்டுமே சுழல்கிறது; சந்தையில் பணத்தட்டுப்பாடு உருவாகி, ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், நடுத்தர வர்க்கம் தத்தளிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

பெரும்பாலானவர்கள் ரமலான் மாதத்தில் மட்டுமே ஜகாத் பற்றி யோசிக்கிறார்கள்; ஆனால் ஆண்டுக் கணக்கு எப்போது பூர்த்தியாகிறதோ அப்போதே தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம், வியாபாரப் பொருட்கள் என அனைத்தையும் துல்லியமாகக் கணக்கிட்டு ஜகாத் கொடுப்பது கடமை.

தோராயமாக ஒரு தொகையைக் கொடுப்பது போதாது; 2.5 சதவீதத்தை ஒரு பைசா கூட குறையாமல் சரியாகக் கணக்கிட வேண்டும்.

ஜகாத் கொடுப்பதால் செல்வம் ஒருபோதும் குறைந்துவிடாது; மாறாக அது மீதமிருக்கும் செல்வத்தைப் பரிசுத்தப்படுத்தி, வளர்த்து, பலமடங்கு பரக்கத்தை ஏற்படுத்துகிறது.

நல்ல தந்தை காட்டிய வழி

அந்த ஊரில் மாபெரும் பழத்தோட்டம் வைத்திருந்த ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் பழங்களை அறுவடை செய்யும் போதெல்லாம், பழ மரங்களிலிருந்து தானாக உதிரும் பழங்களை ஏழைகளுக்கு விட்டுவிடுவார்.

அறுவடை செய்த பழங்களில் ஒரு குறிப்பிட்ட பங்கை தனியாகப் பிரித்து ஏழை, எளியவர்களுக்கும் மிஸ்கீன்களுக்கும் வழங்கிவிட்டுத்தான் மீதியைத் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்வார்.

இதனால் அல்லாஹ் அவருடைய தோட்டத்தில் அபரிமிதமான விளைச்சலையும் பரக்கத்தையும் கொடுத்தான்.

அந்த நல்ல தந்தை காலமான பிறகு, அவருடைய மகன்கள் அந்தத் தோட்டத்திற்கு வாரிசானார்கள். அவர்கள் பேராசை பிடித்தவர்களாகவும், ஏழைகளின் மீது இரக்கமற்றவர்களாகவும் இருந்தனர்.

அவர்கள் தங்களுக்குள் ஒன்று கூடிப் பேசினார்கள்: நம் தந்தை ஏழைகளுக்குக் கொடுத்துக் கொடுத்து பெரும் செல்வத்தை வீணடித்து விட்டார். நாம் அவ்வாறு செய்யக்கூடாது. பழங்களை விற்கும்போது நமக்கு முழு லாபமும் கிடைக்க வேண்டும்.

அவர்களில் ஒருவர் மட்டும், அல்லாஹ்வுக்குப் பயந்து தன் தந்தை வழியில் ஏழைகளுக்குக் கொடுக்கலாம் என்று அறிவுறுத்தினார்; ஆனால் மற்ற சகோதரர்கள் அவருடைய பேச்சைக் கேட்கவில்லை.

அவர்கள் ஒரு சதித்திட்டம் தீட்டினார்கள்: விடியற்காலையிலேயே, ஏழைகள் விழித்து எழுந்து வருவதற்கு முன்பாகவே நாம் தோட்டத்திற்குச் சென்று பழங்களை அறுவடை செய்து மறைத்து எடுத்து வந்துவிட வேண்டும். ஏழை எளியவர்கள் எவரும் நமது தோட்டத்திற்குள் நுழைய விடக்கூடாது.

அவர்கள் அல்லாஹ்வின் நாட்டத்தை நாடாமல், இன்ஷா அல்லாஹ் என்று கூடச் சொல்லாமல், கஞ்சத்தனத்தோடு நள்ளிரவிலேயே திட்டமிட்டு உறங்கச் சென்றனர்.

அந்த சகோதரர்கள் அதிகாலையில் விரைந்து செல்வதற்காக உறங்கிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவு வேளையில், வானத்திலிருந்து அல்லாஹ்வின் வேதனை அந்தத் தோட்டத்தின் மீது இறங்கியது.

ஒரு கொடிய நெருப்புக் காற்று அந்த ஒட்டுமொத்தப் பழத்தோட்டத்தையும் சுட்டெரித்துப் பொசுக்கியது.

நேற்று வரை கனிந்து தொங்கிய பழங்களும், பசுமையான மரங்களும் கருகி, சாம்பல் குவியலாகி, அறுக்கப்பட்ட தரிசு நிலம் போல காட்சியளித்தது.

அதிகாலை விடிந்ததும், அவர்கள் ஒருவரையொருவர் ரகசியமாக அழைத்துக் கொண்டு, எவரும் நம்மைப் பார்த்துவிடக் கூடாது என்று பதுங்கிப் பதுங்கித் தோட்டத்திற்கு ஓடினார்கள். அங்கே சென்று பார்த்த அவர்களுக்குத் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை.

அவர்கள் பயந்து நடுங்கி, நாம் வழி தவறி வேறொரு இடத்திற்கு வந்துவிட்டோமோ என்று கூறினார்கள். பின்னர் உற்றுப் பார்த்து, இல்லை, நாம் வழி தவறவில்லை; நமது கஞ்சத்தனத்தாலும் பேராசையினாலும் அல்லாஹ்வின் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துவிட்டோம் என்று கதறினார்கள்.

அப்போது அவர்களில் நற்பண்புள்ள சகோதரர் கூறினார்:

நான் உங்களிடம் முன்னரே கூறவில்லையா? இறைவனைத் துதித்து, ஏழைகளின் உரிமையைக் கொடுத்து அவனுக்கு அஞ்சியிருக்க வேண்டாமா?

அவர்கள் அனைவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து, எங்கள் இறைவனே! உன்னைத் துதிக்கிறோம்; நிச்சயமாக நாங்களே அநீதி இழைத்த பாவிகளாகிவிட்டோம் என்று கூறி ஒருவரையொருவர் கடிந்து கொண்டு அழுதார்கள்.

فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَائِمُونَ ۝ فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ

அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், உமது இறைவனிடமிருந்து ஒரு பேரழிவு அத்தோட்டத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டது. உடனே அது அறுவடை செய்யப்பட்டு கருகிய நிலத்தைப் போலாகிவிட்டது.சூரத்துல் கலம் (68:19-20)

كَذَٰلِكَ الْعَذَابُ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا يَعْلَمُونَ

பொருள்: இவ்வுலகின் வேதனை இவ்வாறே இருக்கும்; அவர்கள் அறிந்து கொள்வார்களாயின் மறுமையின் வேதனை இதைவிட மிகப் பெரியதாகும்.சூரத்துல் கலம் (68:33)

ஏழைகளின் பங்கை மறுத்து, பேராசையோடு செல்வத்தைச் சுருக்க நினைத்தால், கையில் இருக்கும் அசல் மூலதனமும் சொத்தும் ஒரே இரவில் சாம்பலாகிவிடும்.

ஒருவன் பிறருக்குக் கொடுப்பதால் செல்வம் குறையாது; கொடுக்காமல் பதுக்குவதால்தான் சொத்துக்களில் உள்ள அருள் நீங்கி நஷ்டம் ஏற்படுகிறது.

வர்த்தகத்திலும் விவசாயத்திலும் கிடைக்கும் லாபத்தில் எளிய மக்களின் பங்கை நிறைவேற்றுவதே நமது செல்வத்திற்குப் பாதுகாப்புக் கவசம்.

வட்டியும் அநியாயமான குறுக்கு வழிகளும் பெருகுவது

சமுதாயத்தில் வட்டி, கந்துவட்டி, லஞ்சம் மற்றும் ஆன்லைன் சூதாட்டங்கள் பெருகும்போது அல்லாஹ்வின் பரக்கத் நீங்கி கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.

 اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான்; தர்மங்களை வளர்க்கிறான். மேலும் அல்லாஹ் நன்றி மறந்த பாவிகள் எவரையும் நேசிப்பதில்லை.அல்குர்ஆன்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ ۝ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; வட்டியில் எஞ்சியிருப்பதை விட்டுவிடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் கொள்ளுங்கள்.சூரத்துல் பகரா (2:278-279)

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

مَا ظَهَرَ فِي قَوْمٍ الرِّبَا وَالزِّنَا إِلَّا أَحَلُّوا بِأَنْفُسِهِمْ عِقَابَ اللَّهِ

எந்த ஒரு சமுதாயத்தில் வட்டியும் விபச்சாரமும் பகிரங்கமாக பரவுகிறதோ, அவர்கள் தங்களுக்குத் தாங்களே அல்லாஹ்வின் வேதனையை இறக்கிக் கொள்கிறார்கள்.நூல்:முஸ்னத் அஹ்மத்

مَا أَحَدٌ أَكْثَرَ مِنَ الرِّبَا إِلَّا كَانَ عَاقِبَةُ أَمْرِهِ إِلَى قِلَّةٍ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவன் வட்டியின் மூலம் தனது செல்வத்தை எவ்வளவுதான் அதிகப்படுத்திக் கொண்டாலும், அவனது விவகாரத்தின் இறுதி முடிவு பற்றாக்குறையாகவும் இழப்பாகவுமே இருக்கும்.நூல்:சுனன் இப்னு மாஜா

لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லஞ்சம் கொடுப்பவரையும் லஞ்சம் வாங்குபவரையும் சபித்தார்கள்.நூல்:சுனன் அபூதாவூத்

வட்டி என்பது பெருக்கமல்ல, மறைமுக அழிவு

மனிதப் பார்வைக்கு வட்டி பணத்தை அதிகப்படுத்துவது போல் தோன்றினாலும், குர்ஆன் يَمْحَقُ اللَّهُ الرِّبَا என்று தெளிவுபடுத்துகிறது. அதாவது அல்லாஹ் அந்தப் பணத்தில் உள்ள செழிப்பையும் மன அமைதியையும் உருத்தெரியாமல் அழித்துவிடுகிறான்.

வட்டி வாங்குபவனும் கொடுப்பவனும் மன உளைச்சல், குடும்ப நிம்மதியின்மை மற்றும் தீராத பயத்திலேயே வாழ்கிறார்கள். வட்டியால் சேர்த்த பணம் பல தலைமுறைகளுக்கு நிலைப்பதில்லை; ஏதேனும் ஒரு இழப்பில் முற்றிலும் தொலைந்து போகிறது.

எளிய மனிதர்களின் இயலாமையைப் பயன்படுத்தி கந்துவட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி எனப் பிழிந்தெடுக்கும் கும்பல்கள் சமுதாயத்தில் ரத்தக் காட்டேரிகளாக மாறுகின்றன.

நூறு ரூபாய்க்குப் பத்து ரூபாய் வட்டி கேட்டு மனிதர்களை மிரட்டுவதும், பெண்களைத் துன்புறுத்துவதும் இறுதியில் குடும்பங்களை ஒட்டுமொத்தமாகத் தற்கொலைக்குத் தள்ளுகிறது. இத்தகைய அநியாய உழைப்பு மறுமையில் கொடிய நரக நெருப்பாக உருமாறும்.

நவீன கால குறுக்கு வழி: ஆன்லைன் சூதாட்டம் மற்றும் லோன் ஆப்கள்

ரம்மி, கேசினோ, கலர் பிரடிக்ஷன், கிரிப்டோ மோசடிகள் போன்ற ஆன்லைன் சூதாட்டங்கள் இன்று இளைய தலைமுறையைச் சீரழிக்கின்றன.

சில நிமிடங்களில் லட்சங்களை ஈட்டிவிடலாம் என்ற ஆசையைக் காட்டி, உள்ள பணத்தையும் கடன் வாங்கி இழக்கச் செய்கிறது.

உடனடிக் கடன் தரும் சீன லோன் ஆப்கள் மற்றும் வரம்பற்ற கடன் செயலிகள் மக்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அச்சுறுத்தி உயிரைப் பறிக்கும் நிலையை உருவாக்கியுள்ளன. இது சூதாட்டமும் வட்டியும் கைகோர்த்து நடத்தும் நவீன அக்கிரமம்.

லஞ்சம் என்பது உழைப்பின்றி பிறர் உரிமையைப் பறிக்கும் துரோகம். ஒரு தகுதியுள்ள ஏழையின் வேலைவாய்ப்பையோ உரிமையையோ, லஞ்சம் கொடுக்கும் தகுதியற்றவன் பறித்துக்கொள்கிறான்.

அரசு நிர்வாகத்திலும் தனிநபர் விவகாரங்களிலும் லஞ்சம் பெருகும்போது நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து, எளிய மக்களுக்கு நீதி கிடைக்காமல் தவிக்கின்றனர்.

உழைப்பின்றி பிறரைச் சுரண்டி வாழும் வட்டியும், குறுக்கு வழியில் வரும் லஞ்சமும் பணப் புழக்கத்தை ஒரு சில அநியாயக்காரர்களின் கைகளில் மட்டுமே முடக்கிவிடுகிறது.

இதனால் ஒட்டுமொத்த சந்தையில் பணச் சமநிலை உடைந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து சாமானிய மக்களைப் பசியிலும் பட்டினியிலும் தள்ளுகிறது.

دِرْهَمُ رِبًا يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ، أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلَاثِينَ زَنْيَةً

ஒரு மனிதன் வட்டி என்று தெரிந்தே உண்ணும் ஒரு திர்ஹம், முப்பத்தாறு முறை விபச்சாரம் செய்வதை விடக் கொடியதாகும். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்தார்கள் (நூல்:முஸ்னத் அஹ்மத்).

குறுக்கு வழியில் கோடி ரூபாய் சம்பாதிப்பதை விட, வியர்வை சிந்தி உழைத்து உண்ணும் நூறு ரூபாயில்தான் உடலுக்கு ஆரோக்கியமும் உள்ளத்திற்கு நிம்மதியும் இருக்கிறது.

கஷ்டங்கள், கடன் சுமைகள் வரும்போது உடனடித் தீர்வாகத் தோன்றும் வட்டி மற்றும் சூதாட்ட வலையில் ஒருபோதும் காலடி எடுத்து வைக்கக் கூடாது; மாறாக எளிய வாழ்க்கை முறையையும் அல்லாஹ்வின் மீதான தவக்குலையும் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்.

பனீ உமய்யா ஆட்சியாளர்களின் வட்டி மற்றும் அநீதியான வரிச் சுமை

உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, உமையா வம்சத்து ஆட்சியாளர்கள் மற்றும் ஆளுநர்கள் மத்தியில் ஆடம்பரமும் அநீதியும் மலிந்திருந்தது.

அரசு கஜானாவை நிரப்பவும் தங்களின் வீண் விரயங்களுக்காகவும் மக்கள் மீது மார்க்கத்திற்கு முரணான அநியாய வரிகளைச் சுமத்தினார்கள்.

சந்தைகளில் பணக்காரர்கள் ஏழைகளை வட்டி மற்றும் கந்துவட்டி மூலம் சுரண்டுவதை அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர்.

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தே காரியங்களைச் சாதிக்கும் நிலை உருவானது.

பெரும் பணக்காரர்கள் மட்டுமே மேலும் செல்வக் கொழிப்பில் மிதந்தார்கள்; சாமானிய மக்களோ நிலங்களை விற்றும், வட்டிக்குக் கடன் வாங்கியும் கடனாளிகளாகி பஞ்சத்தில் தவித்தார்கள். நிலங்களில் விளைச்சல் குறைந்து உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது.

நீதியை நிலைநாட்டிய உமர் இப்னு அப்தில் அஸீஸ்

ஹிஜ்ரி 99 இல் உமர் இப்னு அப்தில் அஸீஸ் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். அவர்கள் எடுத்த முதல் நடவடிக்கையே அனைத்து விதமான அநீதிகளையும், குறுக்கு வழிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்ததுதான்:

மக்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மார்க்கத்திற்கு முரணான அனைத்து அநியாய வரிகளையும், வட்டிப் பரிவர்த்தனைகளையும் ஒரே உத்தரவில் அடியோடு ரத்து செய்தார்கள்.

ஆளுநர்களும் அதிகாரிகளும் குறுக்கு வழியிலும் லஞ்சமாகவும் சேர்த்த சொத்துக்களைப் பறிமுதல் செய்து பைத்துல்மால் பொது கஜானாவில் சேர்த்தார்கள். தன் சொந்தக் குடும்பத்தினர் வசமிருந்த அநியாய சொத்துக்களையும் அரசுக்கு ஒப்படைத்தார்கள்.

விவசாயம் செய்யவும், சொந்தக் காலில் நிற்கவும் ஏழைகளுக்கு அரசு கஜானாவிலிருந்து வட்டி இல்லாத கடன்களை வழங்க ஏற்பாடு செய்தார்கள்.

இரண்டே ஆண்டுகளில் உண்டான வரலாற்று அற்புதம் வட்டியும் லஞ்சமும் அநீதியும் ஒழிக்கப்பட்டு, உழைப்பும் நீதியும் நிலைநாட்டப்பட்ட போது, இரண்டரை ஆண்டு ஆட்சிக் காலத்திற்குள் அல்லாஹ் அந்தப் பூமியில் ஏற்படுத்திய பரக்கத் உலக வரலாற்றையே வியக்க வைத்தது:

ஈராக் மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளின் ஆளுநர்கள் உமர் இப்னு அப்தில் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்:

எங்களின் அரசு கஜானாவில் ஜகாத் பணம் குவிந்து கிடக்கிறது; அதை வாங்குவதற்கு ஒரு ஏழையைக் கூட இந்த நாட்டில் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை!

உடனே உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கட்டளையிட்டார்கள்:

கஜானாவிலுள்ள பணத்தைக் கொண்டு கடன் சுமையோடு இருக்கும் மக்களின் கடன்களை அடைத்துவிடுங்கள்; திருமணம் செய்ய வசதியில்லாத ஏழை வாலிபர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்!

கடன் பட்டவர்களின் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு, ஏழை இளைஞர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பிறகும் கஜானாவில் பணம் மிஞ்சியது. மலைகளின் உச்சிப் பகுதிகளில் கோதுமைத் தானியங்களைத் தூவுங்கள்; முஸ்லிம்கள் ஆளும் நாட்டில் ஒரு பறவை கூடப் பசியோடு திரிந்தது என்று யாரும் கூறிவிடக் கூடாது!

ஒரு ஆளுநர் அவரிடம் வந்து, வரியைக் குறைத்து விட்டால் அரசு கஜானாவில் வருமானம் குறைந்து நாடு நலிந்துவிடும் என்று அஞ்சிக் கூறியபோது, உமர் ரஹிமஹுல்லாஹ் பின்வருமாறு பதிலளித்தார்:

إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَادِيًا وَلَمْ يَبْعَثْهُ جَابِيًا

நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மக்களுக்கு நேர்வழி காட்டியாகவே அனுப்பினானே தவிர, மக்களிடம் வரி வசூலித்துச் சுரண்டுபவராக அனுப்பவில்லை! நீதி எங்கு நிலைநாட்டப்படுகிறதோ, அங்கே அல்லாஹ்வின் பரக்கத் வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் கொட்டும்!

நூல்: தாரீகுல் குலஃபா ஆசிரியர்: இமாம் ஜலாலுத்தீன் அஸ்-ஸுயூத்தி ரஹிமஹுல்லாஹ்

வட்டியும் லஞ்சமும் குறுக்கு வழிகளும் இருக்கும் வரை ஒருபோதும் நாட்டில் பஞ்சம் தீராது; மாறாக ஏழைகள் நசுக்கப்பட்டு பணவீக்கம் கூடும்.

எப்போது ஒரு சமூகம் வட்டி மற்றும் லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நேர்மையான உழைப்பையும் நீதியையும் கையில் எடுக்கிறதோ, அப்போது அங்கே கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் கூட உணவளிக்கும் அளவிற்கு அல்லாஹ்வின் வாழ்வாதாரமும் பரக்கத்தும் பெருகும்.

பதுக்கலும் செயற்கையான தட்டுப்பாடும்

வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்து, சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டையும் விலைவாசி உயர்வையும் உருவாக்குவது.

وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

எவர்கள் தங்கம் மற்றும் வெள்ளியைப் பதுக்கி வைத்துக்கொண்டு, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என நற்செய்தி கூறுவீராக.

பதுக்கல்காரன் பெரும் பாவி 

மஃமர் பின் அப்தில்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

لَا يَحْتَكِرُ إِلَّا خَاطِئٌ

பெரும் பாவியைத் தவிர வேறு எவனும் பொருட்களைப் பதுக்கி வைக்க மாட்டான்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம்:

தொழுநோயும் வறுமையும் தண்டனையாக வரும் 

உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

مَنِ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامًا، ضَرَبَهُ اللَّهُ بِالْجُذَامِ وَالإِفْلاَسِ

யார் முஸ்லிம்களின் மீது அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பதுக்கி செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறானோ, அவனை அல்லாஹ் தொழுநோயைக் கொண்டும், கடுமையான வறுமையைக் கொண்டும் தண்டிப்பான்.நூல்:சுனன் இப்னு மாஜா

 அல்லாஹ்வுடைய பொறுப்பிலிருந்து வெளியேறுபவன் 

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

مَنِ احْتَكَرَ طَعَامًا أَرْبَعِينَ لَيْلَةً، فَقَدْ بَرِئَ مِنَ اللَّهِ تَعَالَى وَبَرِئَ اللَّهُ تَعَالَى مِنْهُ

யார் விலைவாசி உயர வேண்டும் என்ற நோக்கில் நாற்பது இரவுகள் உணவு தானியங்களைப் பதுக்கி வைக்கிறானோ, அவன் அல்லாஹ்வை விட்டும் விலகிவிட்டான்; அல்லாஹ்வும் அவனைக் கைவிட்டுவிட்டான்.நூல்:முஸ்னத் அஹ்மத்

இஸ்லாமிய சட்டவியலில் பதுக்கலுக்கு இஹ்திகார் என்று பெயர். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, வெங்காயம், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை சந்தையிலிருந்து பெருமளவில் வாங்கிப் பதுக்குவது.

சந்தையில் இயல்பாகப் பற்றாக்குறை இல்லாதபோதும், செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, தன்னிடம் உள்ள சரக்கிற்கு மக்கள் தவிக்கும் நிலையை உருவாக்குவது.

பின்னர் மக்கள் வேறு வழியின்றி கெஞ்சும் நிலைக்கு வரும்போது, பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்று மக்களின் இயலாமையைப் பணமாக்குவது.

பதுக்கல் என்பது வெறும் வியாபாரத் தந்திரம் அல்ல; அது மனித உயிர்களோடு விளையாடும் கொடிய வன்முறை.

பால் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, உணவு தானியத் தட்டுப்பாடு போன்றவற்றைச் செயற்கையாக உருவாக்கி கொள்ளை லாபம் ஈட்டுவது சாமானிய மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவதற்குச் சமம்.

குழந்தைக்குப் பால் வாங்க முடியாமலும், நோயாளிக்கு மருந்து வாங்க முடியாமலும் மக்கள் விடும் கண்ணீரும் சாபமும் பதுக்கல்காரனின் செல்வத்தையும் சந்ததியையும் நாசமாக்கும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதுக்கல்காரனைக் குறிக்க 'காதிஃ' என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். திருக்குர்ஆனில் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது படைகளைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பதுக்கிச் சம்பாதிக்கும் பணத்தால் ஒருவன் கோடீஸ்வரனாக மாறலாம்; ஆனால் இறுதியில் அவனுக்குத் தொழுநோய் போன்ற கொடிய வியாதிகளும், அவனது தலைமுறையை நடுரோட்டுக்குக் கொண்டு வரும் வறுமையும் தண்டனையாக இறங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாற்பது நாட்கள் பதுக்குபவன் அந்தப் பணத்தை அப்படியே தர்மம் செய்தாலும், அவனது பாவத்திற்கு அது பரிகாரமாகாது என முன்னோர்கள் எச்சரித்துள்ளனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் சந்தைக்குள் இடைத்தரகர்கள் வெளியிலிருந்து வரும் பொருட்களை வழியிலேயே மறித்து மொத்தமாக வாங்கிப் பதுக்குவதை வன்மையாகத் தடை செய்தார்கள்.

கிராமத்து வியாபாரிகள் நேரடியாக சந்தைக்கு வந்து விற்க வேண்டும்; வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் சரக்குகள் சென்று சேர வேண்டும் என்பதை உறுதி செய்தார்கள்.

ஒரு உண்மையான முஸ்லிம் வியாபாரி மக்களின் கண்ணீரிலும் பசியிலும் லாபம் பார்க்க மாட்டான்; மாறாக மக்களுக்குத் தேவையான பொருட்களை நியாயமான விலையில் கொண்டு சேர்த்து அவர்களின் துஆவைப் பெறுவான்.

விலையேற்றத்தை எதிர்பார்த்து குடோன்களில் பொருட்களை முடக்கி வைக்கும் வியாபாரிகள் அல்லாஹ்வின் சாபத்தை விலைக்கு வாங்குகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

வியாபாரத்தில் சொற்ப லாபத்தோடு அதிகப் புழக்கத்தை ஏற்படுத்துவதே இறையருளுக்கும் பரக்கத்திற்கும் நேரடி வழியாகும்.


மதீனாவை உலுக்கிய பஞ்சம் மற்றும் தட்டுப்பாடு

அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கிலாஃபத் ஆட்சிக் காலத்தில், மதீனாவில் கடுமையான வறட்சியும் உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது.

நீண்ட நாட்களாக மழை பெய்யவில்லை; நிலங்கள் காய்ந்து விளைச்சல் முற்றிலும் நின்றது.

மக்கள் பசியால் வாடினர்; குழந்தைகளுக்குப் பாலூட்டக் கூட வழியின்றித் தவித்தனர். மக்கள் அனைவரும் கலீஃபா அபூபக்கர் சித்தீக் அவர்களிடம் வந்து தங்கள் பட்டினியைக் கூறி முறையிட்டனர்.

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களை அமைதிப்படுத்தி, பொறுமையாக இருங்கள், இன்ஷா அல்லாஹ் மாலைப் பொழுதை நீங்கள் அடைவதற்குள் அல்லாஹ் தனது வாழ்வாதாரத்தை இறக்கி உங்களுக்கு ஒரு வழியைக் காட்டுவான் என்று ஆறுதல் கூறினார்கள்.

அன்று மாலை வேளையில், ஷாம் தேசத்திலிருந்து உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குச் சொந்தமான ஆயிரம் ஒட்டகங்கள் கொண்ட மாபெரும் வணிகக் கூட்டம் மதீனாவிற்குள் நுழைந்தது.

அந்த ஆயிரம் ஒட்டகங்களின் மீதும் கோதுமை, மாவு, சமையல் எண்ணெய், உலர்ந்த திராட்சை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நிரப்பப்பட்டு வந்திருந்தன.

இந்தச் செய்தி மதீனா நகரம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவியது.

மதீனாவின் பெரு வியாபாரிகள் அனைவரும் அவசர அவசரமாக உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டின் முன் கூடினர்.

சந்தையில் நிலவும் கடும் உணவுத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, இந்த ஆயிரம் ஒட்டகச் சரக்குகளையும் மொத்தமாக வாங்கிப் பதுக்கி வைத்து, பின் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்ட அவர்கள் திட்டமிட்டனர்.

அவர்கள் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று பேரம் பேசத் தொடங்கினர்:

வியாபாரிகள்: உஸ்மானே! இந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் எங்களுக்கே விற்றுவிடுங்கள்.

உஸ்மான்: நீங்கள் எனக்கு எவ்வளவு லாபம் தருவீர்கள்?

வியாபாரிகள்: நீங்கள் வாங்கிய அசலை விட ஒரு திர்ஹமுக்கு இரண்டு திர்ஹம்கள் லாபமாகத் தருகிறோம்.

உஸ்மான்: எனக்கு இதை விட அதிக லாபம் தருவதாக ஒருவர் வாக்களித்துள்ளாரே!

வியாபாரிகள்: அப்படியானால் ஒரு திர்ஹமுக்கு நான்கு திர்ஹம்கள் தருகிறோம்!

உஸ்மான்: எனக்கு இதை விடவும் அதிகம் தருவதாக வாக்களிக்கப்பட்டுள்ளது!

வியாபாரிகள் வியப்புடன்: உஸ்மானே! மதீனாவில் இருக்கும் அனைத்துப் பெரிய வியாபாரிகளும் இதோ உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறோம். எங்களை விட உங்களுக்கு யார் அதிகம் தருவது? ஒரு திர்ஹமுக்கு ஐந்து திர்ஹம்கள் லாபம் தருகிறோம், இதற்கு மேல் யாராலும் தர முடியாது!

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமானியப் பதில்

அப்போது உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த வியாபாரிகளைப் பார்த்து கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் ஒரு நன்மைக்கு பத்து நன்மைகள் தருவதாக எனக்கு வாக்களித்துள்ளான்!

مَن جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا

நன்மையைச் செய்தவருக்கு அதுபோன்று பத்து மடங்கு கூலி உண்டு என்று அல்லாஹ் தன் வேதத்தில் வாக்களித்திருக்கிறான். உங்களால் எனக்குப் பத்து மடங்கு லாபம் தர முடியுமா?

வியாபாரிகள் தலைகுனிந்து, இல்லை, எங்களால் முடியாது என்று கூறினர்.

அப்போது உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்கு மத்தியில் ஒரு மாபெரும் அறிவிப்பைச் செய்தார்கள்:

فَقَالَ: فَإِنِّي أُشْهِدُ اللَّهَ أَنِّي قَدْ جَعَلْتُ مَا جَاءَتْ بِهِ هَذِهِ الْإِبِلُ صَدَقَةً لِلَّهِ عَلَى فُقَرَاءِ الْمُسْلِمِينَ وَمَسَاكِينِهِمْ

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த ஒட்டகங்களில் வந்துள்ள அத்தனை உணவுப் பொருட்களையும், மதீனாவின் ஏழை எளிய மக்களுக்கும் வறியவர்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் தர்மமாக ஆக்கிவிட்டேன் என்பதற்கு அல்லாஹ்வை நான் சாட்சியாக்குகிறேன்! இதில் ஒரு தானியத்தைக் கூட நான் காசுக்கு விற்க மாட்டேன்; அனைவரும் வந்து தங்களுக்கு வேண்டியதை இலவசமாக எடுத்துச் செல்லுங்கள்!

மதீனாவில் இருந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் பல மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தன; செயற்கைத் தட்டுப்பாடும் பஞ்சமும் ஒரே நாளில் சுவடு தெரியாமல் மறைந்து போனது.

அன்றிரவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கனவு கண்டார்கள்:

فَرَأَى الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي مَنَامِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ حُلَّةٌ مِنْ نُورٍ، وَهُوَ مُسْتَعْجِلٌ رَاكِبٌ عَلَى نَاقَةٍ مِنْ نُورٍ، فَقَالَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، مَا لِي أَرَاكَ مُسْتَعْجِلًا؟

فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا عَبَّاسُ، إِنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ قَدْ تَصَدَّقَ بِأَلْفِ رَاحِلَةٍ فِي سَبِيلِ اللَّهِ عَلَى فُقَرَاءِ الْمَدِينَةِ، وَإِنَّ اللَّهَ تَعَالَى قَدْ تَقَبَّلَهَا مِنْهُ، وَزَوَّجَهُ عَرُوسًا فِي الْجَنَّةِ، وَقَدْ دُعِينَا إِلَى عُرْسِهِ فَأَنَا أُسْرِعُ لِحُضُورِهِ

நபிகள் நாயகம் அவர்கள் மிக அழகான பட்டாடை அணிந்து, அதிவேக வாகனத்தில் பறந்து செல்வதைப் பார்த்தார்கள்.

அப்பாஸ் அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்கு இவ்வளவு அவசரமாகச் செல்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

அப்பாஸே! உஸ்மான் இன்று மதீனாவின் பசியைப் போக்க ஆயிரம் ஒட்டகங்களின் தானியங்களை தர்மம் செய்துள்ளார். அவரது தர்மத்தை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், சுவனத்தில் அவருக்கு ஒரு பிரம்மாண்ட திருமண விருந்தை ஏற்பாடு செய்துள்ளான்; அதில் கலந்து கொள்வதற்காகவே நான் விரைந்து கொண்டிருக்கிறேன்!நூல்: அர்-ரியாதுன் நளிரா ஃபீ மனாக்கிபில் அஷரா

சந்தையில் பற்றாக்குறை ஏற்படும் போது, அதைச் சாதகமாகப் பயன்படுத்திப் பொருட்களைப் பதுக்கி மக்களைச் சுரண்டுவது ஷைத்தானிய குணம்; மக்கள் துயரத்தில் பங்கெடுத்து உதவுவதே உண்மையான இறைநம்பிக்கையாளரின் குணம்.

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு நினைத்திருந்தால் அந்தப் பஞ்ச காலத்தில் பெரு வியாபாரிகளுக்கு விற்று கோடீஸ்வரர்களுக்கெல்லாம் கோடீஸ்வரராக மாறியிருக்க முடியும்; ஆனால் அவர் மக்களின் கண்ணீரையும் பசியையும் துடைப்பதே உண்மையான நிரந்தர லாபம் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

இறைவன் தந்த செல்வத்திற்கு நன்றி செலுத்தாமல் வீண் விரயம் செய்வதும், வரவுக்கு மீறி ஆடம்பரமாக வாழ்வதும் சோதனையை கொண்டு வரும்.

நிம்மதியாகவும் வாழ்வாதாரம் தாராளமாகவும் கிடைத்துக் கொண்டிருந்த ஒரு ஊர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தபோது, அவர்கள் செய்த செயல்களின் காரணமாக அல்லாஹ் அவர்களுக்குப் பசியையும் பயத்தையும் சுவைக்கச் செய்தான்.

وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا ۝ إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا

வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாக இருக்கிறார்கள்; ஷைத்தானோ தன் இறைவனுக்கு பெரும் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

وكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

உண்ணுங்கள், பருகுங்கள்; ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. அல்-அஃராஃப் 7:31


 وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُّطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ

அல்லாஹ் ஓர் ஊரை முன்னுதாரணமாகக் கூறுகிறான். அது அமைதியாகவும் நிம்மதியாகவும் இருந்தது; அதன் வாழ்வாதாரம் அனைத்து திசைகளிலிருந்தும் தாராளமாக வந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த ஊர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது; ஆகவே அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களின் காரணமாக பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக அல்லாஹ் சுவைக்கச் செய்தான்.சூரா அந்-நஹ்ல் 16:112

كُلُوا وَاشْرَبُوا وَتَصَدَّقُوا وَالْبَسُوا فِي غَيْرِ إِسْرَافٍ وَلَا مَخِيلَةٍ

பெருமையோ வீண் விரயமோ இல்லாமல் நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள், தர்மம் செய்யுங்கள், ஆடை அணியுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.நூல்:ஸஹீஹ் புகாரி

அல்லாஹ் தந்த செல்வத்தை அவனது வழியில் பயன்படுத்தாமல், கஷ்டப்படும் ஏழைகளைக் கண்டுகொள்ளாமல் தன் சுய திருப்திக்கு மட்டுமே செலவிடுவது மிகப்பெரிய நன்றி கெட்டத்தனம்.

நவீன கால ஆடம்பர கலாச்சாரம்

சமூக வலைதளங்களில் படங்களை பதிவேற்றுவதற்காக செய்யப்படும் தேவையற்ற பொருட்கள் வாங்குதல்.

திருமண நிகழ்வுகளில் உணவுகளை கொட்டுவதும், மண்டப அலங்காரங்களுக்காக லட்சங்களை வாரி இறைப்பதும்.

ஒரு புறம் கடன் வாங்கி விட்டு, மறுபுறம் நவீன மாடல் கார்கள், போன்கள் என ஊருக்குக் காட்ட ஆடம்பரம் செய்வது.

வரவுக்குள் வாழப் பழகாத மனிதன் இறுதியில் வட்டி, கிரெடிட் கார்டு சுழற்சி மற்றும் கடன் வலைகளில் சிக்குகிறான்.

தனிநபர் ஆடம்பரம் குடும்ப அமைதியைச் சிதைக்கிறது; ஒட்டுமொத்த சமூகத்தில் பணவீக்கத்தையும் செயற்கையான வாழ்வாதார அழுத்தத்தையும் உருவாக்குகிறது.

இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் ஆடம்பரம் செய்து, உணவையும் வாழ்வாதாரத்தையும் அவமதித்ததால் பசியையும் பஞ்சத்தையும் சந்தித்த நிகழ்வு. நூல்: தஃப்ஸீர் அல்-குர்துபீ

 மக்கா நகரின் ஆரம்பகால செழிப்பும் ஆடம்பரமும்

قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: هِيَ مَكَّةُ، كَانَتْ آمِنَةً مُطْمَئِنَّةً، يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِنْ كُلِّ مَكَانٍ، فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ حِينَ كَذَّبُوا مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

وَرُوِيَ أَنَّهُمْ بَلَغَ مِنْ كَفْرِهِمْ بِالنِّعْمَةِ وَبَطَرِهِمْ أَنَّهُمْ كَانُوا يَسْتَنْجُونَ بِالْخُبْزِ، وَيَمْسَحُونَ بِهِ أَبْدَانَهُمْ وَأَوْلَادَهُمْ، فَابْتَلَاهُمُ اللَّهُ تَعَالَى بِالْجُوعِ حَتَّى أَكَلُوا الْجِيَفَ وَالْعِلْهِزَ.

சூரா அந்-நஹ்லில் அல்லாஹ் ஓர் ஊரை முன்னுதாரணமாகக் கூறுகிறான். அந்த ஊர் மக்கா நகரம் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளிட்ட பல விரிவுரையாளர்கள் விளக்கியுள்ளனர்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றுக்குப் பிறகு, கஃபாவின் புனிதம் காரணமாக மக்கா நகரம் பெரும் அமைதியோடும் பாதுகாப்போடும் திகழ்ந்தது.

சுற்றிலும் பாலைவனமாக இருந்தபோதிலும், அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வணிகக் கூட்டங்கள் மூலமாக விதவிதமான கனிவர்க்கங்களும் உணவு தானியங்களும் மக்காவுக்கு வந்து குவிந்தன.

மக்களுக்கு எந்தவித உழைப்புச் சிரமமுமின்றி அனைத்து வகையான உணவுகளும் எளிதாகக் கிடைத்தன.ஆனால் அந்த மக்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துவதை விடுத்து, வீண் விரயத்திலும் ஆடம்பரத்திலும் மூழ்கினர்.

அளவுக்கு அதிகமான செல்வமும் உணவுப் பொருட்களும் கொழித்ததால், அவர்கள் உணவின் மதிப்பையே மறந்தனர்.

அவர்கள் நல்ல மென்மையான மாவை எடுத்து ரொட்டிகள் சுட்டு, அதை உண்ணாமல் தங்களின் உடலைத் துடைப்பதற்கும், கைகளைச் சுத்தப்படுத்துவதற்கும் கூட ரொட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர் என்று தஃப்ஸீர் குறிப்புகள் கூறுகின்றன.

எத்தனையோ ஏழை மக்கள் ஒரு பிடி உணவின்றித் தவித்த காலத்தில், இவர்கள் தங்களுக்குக் கிடைத்த வாழ்வாதாரத்தை காலடியில் போட்டு மிதிக்கும் அளவுக்கு ஆடம்பரக் கர்வத்தில் மிதந்தனர்.

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்ட முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக அனுப்பியபோது, அந்த இறைத்தூதரையும் நிராகரித்து, அவரை ஊரை விட்டே விரட்டும் அளவுக்கு நன்றி கெட்டவர்களாக மாறினர்.

அவர்களின் இந்த வரம்புமீறிய ஆடம்பரத்திற்கும் நன்றி மறந்த போக்கிற்கும் தண்டனையாக, அல்லாஹ் அவர்கள் மீது கடுமையான பஞ்சத்தை ஏவினான்.

 வானத்திலிருந்து மழை முற்றிலும் நின்றது; நிலங்கள் பாளம்பாளமாக வெடித்தன.

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 

اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ

மக்கத்து குறைஷிகளுக்கு எதிராக, யூசுஃப் நபியின் காலத்து ஏழு ஆண்டுப் பஞ்சத்தைப் போன்ற ஒரு பஞ்சத்தை இவர்கள் மீது இறக்குவாயாக என்று துஆ செய்தார்கள்.

அடுத்த சில மாதங்களிலேயே மக்கா நகரம் இதுவரை கண்டிராத கொடிய பசியில் சிக்கியது.

فَأَصَابَتْهُمْ سَنَةٌ حَصَّتْ كُلَّ شَيْءٍ، حَتَّى أَكَلُوا الْعِظَامَ، وَأَكَلُوا الْجِيَفَ وَالْقِدَّ، وَحَتَّى جَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَى السَّمَاءِ فَيَرَى بَيْنَهُ وَبَيْنَهَا مِثْلَ الدُّخَانِ مِنَ الْجَهْدِ

நேற்று வரை உணவை காலில் மிதித்து வீணடித்த மக்கள், பசியின் கொடுமையால் செத்த பிராணிகளின் தோல்களையும், எலும்புகளையும், அழுகிய விலங்குகளின் இறைச்சியையும் தேடித் தின்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பசியின் மயக்கத்தால் வானத்தைப் பார்த்தால் மேகங்களுக்குப் பதிலாக வெறும் புகை மண்டலமாகவே அவர்களுக்குத் தோன்றியது.

இறுதியில் குறைஷிகளின் தலைவரான அபூ சுஃப்யான், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கெஞ்சினார்:

فَجَاءَ أَبُو سُفْيَانَ فَقَالَ: يَا مُحَمَّدُ، جِئْتَ تَأْمُرُ بِطَاعَةِ اللَّهِ وَبِصِلَةِ الرَّحِمِ، وَإِنَّ قَوْمَكَ قَدْ هَلَكُوا، فَادْعُ اللَّهَ لَهُمْ!

فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسُقُوا الْغَيْثَ حَتَّى طَبَّقَتْ عَلَيْهِمْ، ثُمَّ قَرَأَ: إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلًا إِنَّكُمْ عَائِدُونَ

முஹம்மதே! நீர் உறவினர்களை ஆதரிக்குமாறும் கருணை காட்டுமாறும் கட்டளையிடுகிறீர். உமது சொந்தக் கூட்டத்தாரோ பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்காக உம் இறைவனிடம் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்யும்!

கருணை நபியான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்காக துஆ செய்த பிறகே வானத்திலிருந்து மழை பொழிந்து, அந்தப் பஞ்சம் நீங்கியது.

 فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ

அந்த ஊர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்தது; ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களின் காரணமாக பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஓர் ஆடையைப் போல அல்லாஹ் சுவைக்கச் செய்தான்.சூரா அந்-நஹ்ல்

குர்ஆன் இந்த இடத்தில் பசியை ஓர் ஆடைக்கு ஒப்பிடுகிறது. ஆடை எப்படி ஒரு மனிதனின் உடலை முழுமையாகச் சுற்றி மூடிக்கொள்கிறதோ, அதுபோல ஆடம்பரம் செய்து நன்றி மறப்பவர்களைப் பசியும் பஞ்சமும் நாலாபுறமும் சூழ்ந்து கொள்ளும் என்பதை இது எச்சரிக்கிறது.

உணவையும் நீரையும் வீணடிப்பது அல்லாஹ்வின் கோபத்தை மிக வேகமாக வரவழைக்கும் கொடிய பாவமாகும்.

இன்று திருமண வீடுகளிலும் விருந்துகளிலும் தட்டுகளில் உணவு வீணடிக்கப்பட்டு குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுவதைப் பார்க்கிறோம்; இதுவே பிற்காலத்தில் நம் தலைமுறைக்கு விலைவாசி உயர்வாகவும் பஞ்சமாகவும் மாறுகிறது.

ஒரு பிடி உணவாக இருந்தாலும் அதை வீணடிக்காமல் சாப்பிட்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதே வீட்டில் பரக்கத் நிலைத்திருக்க அடிப்படை வழக்கம்.


ஈமானை உரசிப் பார்க்கும் இறைவனின் சோதனை

மனிதர்கள் கஷ்டங்கள் வரும்போது அல்லாஹ்வை நோக்கி மீளுகிறார்களா, அல்லது பொறுமை இழக்கிறார்களா என்பதைப் சோதிப்பதற்காகவும் இறைவன் இத்தகைய காலங்களை ஏற்படுத்துகிறான்.

أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ ۝ وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ

பொருள்: மனிதர்கள் நாங்கள் ஈமான் கொண்டோம் என்று கூறுவதோடு, அவர்கள் சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தவர்களையும் நாம் சோதித்திருக்கிறோம். ஆகவே உண்மையாளர்களை அல்லாஹ் நிச்சயமாக அறிவான்; பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.அல்குர்ஆன்

 أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا

உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனம் சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? அவர்களை வறுமையும் நோய்களும் பீடித்தன; அவர்கள் பெரும் நடுக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.சூரத்துல் பகரா 2:214

ஈமானின் அளவுக்கு ஏற்ப சோதனை வரும் 

ஸஅத் பின் அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மனிதர்களில் மிகக் கடுமையான சோதனைக்குள்ளாவோர் யார் என்று கேட்கப்பட்டது:

الأَنْبِيَاءُ ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ، يُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ، فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلاَؤُهُ، وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்கள்; பின்னர் அவர்களைப் போன்ற நல்லவர்கள், பின்னர் அவர்களைப் போன்றவர்கள். ஒரு மனிதன் அவனது மார்க்கப் பற்றின் அளவிற்கு ஏற்ப சோதிக்கப்படுகிறான். அவனுடைய மார்க்கப் பற்று உறுதியாக இருந்தால் அவனது சோதனையும் கடுமையாகும். அவனுடைய மார்க்கப் பற்றில் பலவீனம் இருந்தால் அவனது நிலைக்கு ஏற்ப சோதிக்கப்படுவான்.

مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلاَّ كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ

ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் உடல் சோர்வு, நோய், கவலை, துக்கம், துன்பம், மன உளைச்சல், அவனது காலில் தைக்கும் ஒரு முள்ளாக இருந்தாலும் சரியே, அதன் மூலம் அல்லாஹ் அவனது பாவங்களைப் பரிகாரம் செய்யாமல் இருப்பதில்லை.நூல்: ஸஹீஹ் புகாரி

சோதனை என்பது வெறுப்பின் அடையாளம் அல்ல

துன்பமும் பொருளாதார நெருக்கடியும் வரும்போது, இறைவன் நம்மைக் கைவிட்டுவிட்டான் என்றோ அல்லது கோபப்பட்டுவிட்டான் என்றோ எண்ணிவிடக் கூடாது.

தங்கம் நெருப்பில் இட்டு உருக்கப்படும் போதுதான் அதிலுள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமான தங்கமாக மாறுகிறது. அதுபோலவே முஃமின்களின் ஈமானில் உள்ள குறைகளை நீக்கி, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தவே சோதனைகள் வருகின்றன.

உலகிலேயே மிகச் சிறந்த மனிதர்களான இறைத்தூதர்கள்தான் கடுமையான பட்டினியையும் இழப்புகளையும் சந்தித்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சோதனை வரும்போது மனிதன் தன்னைத்தானே பரிசோதித்துக் கொள்ளும் களம் இது.

நயவஞ்சக குணம்: கஷ்டம் வந்தவுடன் இறைவனைப் பழிப்பது, விதியைத் திட்டுவது, ஹராமான குறுக்கு வழிகளை நோக்கி ஓடுவது மற்றும் தொழுகையை விட்டு விலகுவது.

உண்மையான முஃமினின் குணம்: இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறி பொறுமை காப்பது; தன் தவறுகளுக்கு தவ்பா செய்து, துஆ மற்றும் தஹஜ்ஜுத் மூலம் அல்லாஹ்விடம் கையேந்துவது.

ஒரு முஃமினுக்கு மறுமையில் அல்லாஹ் ஒரு உயர்ந்த சுவனப் பதவியை நிர்ணயித்திருப்பான். ஆனால் அவனது நற்செயல்களால் அந்த நிலையை எட்ட முடியாது.

அப்போது அல்லாஹ் அவனுக்கு உலகில் வறுமை, நோய், விலைவாசி உயர்வு போன்ற சிரமங்களைத் தந்து, அதில் அவன் காட்டும் அழகிய பொறுமையின் காரணமாக அந்த உயர்ந்த அந்தஸ்துக்கு அவனை உயர்த்துகிறான் என நபிமொழி கூறுகிறது. குர்ஆன் கூறுகிறது:...

اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا‏ 

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.(அல்குர்ஆன் : 94:6)

சோதனை எவ்வளவுதான் கடுமையாக இருந்தாலும் அது நிரந்தரமானது அல்ல. இரவு எவ்வளவு இருட்டாக இருந்தாலும் விடியல் வருவது போல, கடுமையான கஷ்டத்திற்குப் பின் இறைவன் நிம்மதியையும் வாழ்வாதாரத்தையும் தந்தே தீருவான்.

வறுமையோ பணப் பற்றாக்குறையோ வரும்போது சோர்ந்துவிடாமல், இது ஈமானை உறுதிப்படுத்தும் இறைவனின் பயிற்சிப் பாசறை என்பதை உணர வேண்டும்.

நாம் காட்டும் ஒவ்வொரு துளி பொறுமைக்கும் மறுமையில் கணக்கின்றி நற்கூலி காத்திருக்கிறது.

நாவால் அல்லாஹ்வைப் போற்றி, உள்ளத்தால் அவனது விதியைத் திருப்தி கொண்டு ஏற்றுக்கொள்வதே சோதனையை வெற்றிகரமான அருளாக மாற்றும் வழியாகும்.

நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு…

இஸ்லாத்தின் எழுச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கத்து குறைஷித் தலைவர்கள் ஓர் அநீதியான ஒப்பந்தத்தை எழுதினார்கள்:

ஹாஷிம் மற்றும் முத்தலிப் குடும்பத்தாரோடு யாரும் பேசக்கூடாது, பெண் கொடுக்கவோ எடுக்கவோ கூடாது.

மிக முக்கியமாக, அவர்களுக்கு எந்தவிதமான உணவு தானியங்களோ அத்தியாவசியப் பொருட்களோ விற்கக்கூடாது; உணவை முற்றிலும் தடுத்து பட்டினியால் அவர்களைச் சாகடிக்க வேண்டும்.

وَحُصِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْمُسْلِمُونَ وَبَنُو هَاشِمٍ وَبَنُو الْمُطَّلِبِ فِي شِعْبِ أَبِي طَالِبٍ ثَلَاثَ سِنِينَ، حَتَّى بَلَغَهُمُ الْجَهْدُ، وَأَكَلُوا خَبَطَ الشَّجَرِ وَالْأَوْرَاقَ وَالْجُلُودَ.

இந்த ஒப்பந்தத்தை கஃபாவின் சுவரில் தொங்கவிட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்களின் குடும்பத்தாரையும், முஸ்லிம்களையும் 'ஷஅப் அபீ தாலிப்' என்ற வறண்ட மலைக் கணவாயில் மூன்று ஆண்டுகள் சிறை வைத்தனர்.

முஸ்லிம்களுக்கு வெளி உலகத்துடனான அனைத்து வர்த்தகத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. மக்காவுக்கு வரும் வணிகக் கூட்டத்தாரிடம் முஸ்லிம்கள் உணவு வாங்கச் சென்றால், குறைஷிகள் பல மடங்கு அதிக விலை பேசி முஸ்லிம்களுக்கு ஒரு பிடி தானியம் கூட கிடைக்காமல் தடுத்தனர்.

குழந்தைகள் பசியால் கதறி அழுத சத்தம் கணவாயைத் தாண்டி மக்கா நகரம் வரை கேட்டது.

உண்ண உணவு எதுவும் கிடைக்காமல் மரங்களின் இலைகளையும், காய்ந்த சருகுகளையும், பாலைவனக் கள்ளிச்செடிகளையும் பறித்து உண்டனர்.

மர இலைகளைத் தொடர்ந்து தின்றதால் நபித்தோழர்களின் உதடுகளும் தொண்டைகளும் கிழிந்து புண்ணாகி, வாய்வழியாக ரத்தம் கசிந்தது; ஒட்டகங்களின் தோல் உதிர்வது போல அவர்களின் உடலெங்கும் புண்கள் உண்டாயின.

ஸஅத் பின் அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: ஒரு நாள் நள்ளிரவில் பசி தாங்காமல் கணவாயில் நடந்தபோது என் காலில் ஏதோ மென்மையாகத் தட்டுப்பட்டது; அதை உடனே வாயில் போட்டு விழுங்கினேன். அது என்ன பொருள் என்றுகூட இன்று வரை எனக்குத் தெரியாது. மற்றொரு நாள் காய்ந்து கிடந்த தோல் துண்டொன்றை எடுத்து, நெருப்பில் வாட்டி, கல்லால் அரைத்து, தண்ணீரில் கரைத்துக் குடித்து மூன்று நாட்கள் பசியாறினேன்.

இத்தகைய மரணப் பசியிலும் மூன்று நீண்ட ஆண்டுகள் ஒருவர்கூட ஈமானை விட்டு வெளியேறவில்லை; தன் மார்க்கத்தைக் கைவிட்டு எதிரிகளிடம் மண்டியிடவில்லை.

அவர்கள் பசியை இறைவனின் சோதனையாகவும், சுவனத்தின் விலையாகவும் பார்த்தார்கள். தொழுகையையும் இறை வழிபாட்டையும் ஒருபோதும் கைவிடவில்லை; தஹஜ்ஜுதில் விழுந்து அழுதார்கள்.

இறுதியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கஃபாவில் தொங்கவிடப்பட்டிருந்த அந்த அநீதியான ஒப்பந்தப் பத்திரத்தை கறையான்கள் அரித்துத் தின்றிருந்தன; அல்லாஹ்வின் பெயரான 'பிஸ்மிகல்லாஹும்ம' என்பதைத் தவிர வேறு எதுவும் அதில் மிஞ்சவில்லை. இறைவனின் அற்புத உதவியால் அந்த முற்றுகை உடைந்து, முஸ்லிம்கள் கண்ணியத்துடன் வெற்றி பெற்று வெளியே வந்தார்கள்.நூல்:அர்ரஹீகுல் மக்தூம் 

கஷ்ட காலங்களில் பொறுமையைக் கடைப்பிடித்து நின்றால், அல்லாஹ்வின் உதவி மிக அருகில் இருக்கிறது என்பதற்கு இந்த வரலாறு சான்று.

விலைவாசி உயர்வுக்கும் பொருளாதார முடக்கத்திற்கும் ஆட்சியாளர்களையோ சந்தையையோ மட்டும் குறை கூறாமல், ஒவ்வொருவரும் தன் சொந்தப் பாவங்களை உணர்ந்து உள்ளத்தூய்மையோடு அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும். நாம் செய்யும் தவ்பாவே வானத்தின் மழையையும் பூமியின் பரக்கத்தையும் கொண்டு வரும் திறவுகோல்.

வியாபாரிகள் அளவை நிறுவை மோசடிகள், கலப்படம், பதுக்கல் போன்றவற்றை அடியோடு கைவிட வேண்டும். சொற்ப லாபமாக இருந்தாலும் ஹலாலான வருமானத்தில் மட்டுமே மன அமைதியும் உடல் நலமும் கிடைக்கும்.

வீண் விரயம், ஆடம்பரம், ஊருக்குக் காட்டுவதற்காகச் செய்யும் செலவுகளை உடனே நிறுத்த வேண்டும். வரவுக்குள் வாழப் பழகி, உணவை ஒரு பருக்கைகூட வீணடிக்காமல் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

நம்மைச் சுற்றி வாழும் ஏழை, எளிய மக்கள், கடன் சுமையில் தவிப்பவர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் பசியை அறிந்து உதவ வேண்டும். செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களுக்குரிய ஜகாத்தை ஒரு பைசா குறையாமல் கணக்கிட்டு வழங்கி, வட்டியற்ற கடனுதவி மூலம் எளியோரைத் தூக்கி நிறுத்த வேண்டும்.

யா அல்லாஹ்! எங்கள் பாவங்களை மன்னித்து அருள் புரிவாயாக. எங்கள் வாழ்வாதாரத்தில் பரக்கத்தை ஏற்படுத்துவாயாக. விலைவாசி உயர்வு, கொடிய பஞ்சம், கடன் சுமை மற்றும் தீராத சோதனைகளிலிருந்து எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக. ஹராமான அனைத்து வழிகளையும் விட்டும் எங்களை விலக்கி, ஹலாலான சொற்ப வருமானத்தில் மன அமைதியையும் திருப்தியையும் தந்தருள்வாயாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.



தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.

முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்

வியாழன், 8 அக்டோபர், 2026

வானம் திறந்த தருணங்கள்!

 


வானம் திறந்த தருணங்கள்!


اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِيْنَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِيْنَ.

 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ:

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ

عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحْيِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا خَائِبَتَيْنِ»

மனித வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக நகர்வதில்லை. சில நேரங்களில் எதிர்பாராத சோதனைகளும், தாங்க முடியாத துயரங்களும் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.

வியாழன், 1 அக்டோபர், 2026

கண்ணீரைத் துடைக்கும் கரங்கள்



கண்ணீரை துடைக்கும் கரங்கள் 


اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ. أَمَّا بَعْدُ:

فَقَالَ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْكَرِيمِ:

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ


أَحَبُّ النَّاسِ إِلَى اللَّهِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ



● இஸ்லாம் என்பது கலிமா,தொழுகை ,நோன்பு, ஹஜ்ஜோடு முடிந்துவிடும் ஒரு மார்க்கம் அல்ல. 


● பள்ளிவாசலுக்குள் நாம் இறைவனுக்குச் செய்யும் வணக்கங்கள் எவ்வாறு கடமையோ, அவ்வாறே பள்ளிவாசலுக்கு வெளியே சக மனிதர்களுக்குச் செய்யும் நன்மைகளும் மார்க்கக் கடமையாகும்.

வியாழன், 24 செப்டம்பர், 2026

அல்லாஹ்வின் நான்கு வாக்குறுதிகள்

 


அல்லாஹ்வின் நான்கு வாக்குறுதிகள்


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ •

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ •

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ •

          وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُون •


عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ«يَا غُلاَمُ، إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ: احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ:


புனித அல்குர்ஆனில் அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ள வாக்குறுதிகள் ஒருபோதும் மாறாதவை. "நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதிகளில் மாறு செய்யமாட்டான்" (3:9) என்பது இறைமறையின் பிரகடனம். மனிதனின் ஆன்மீக மற்றும் உலகியல் வாழ்வை உறுதிப்படுத்தும் அந்த நான்கு மகத்தான வாக்குறுதிகளையும், அவற்றின் விளக்கங்களை விரிவாகக் காண்போம்.

வியாழன், 17 செப்டம்பர், 2026

இறைநேசர்களின் நெருக்கம் ஈமானுக்கு அவசியம்

 


இறைநேசர்களின் நெருக்கம் ஈமானுக்கு அவசியம் 


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ اما بعد… بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ


أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ۝ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ»


ரபீஉல் ஆகிர் மாதம் என்றதுமே உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் நினைவுக்கு வருவது 'சுல்தானுல் அவ்லியா' முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் தியாகமும் ஆன்மீக வழிகாட்டலும்தான்.

வியாழன், 10 செப்டம்பர், 2026

இறுதி நபியின் இறுதி உபதேசம் ﷺ.”


“இறுதி நபியின் இறுதி உபதேசம் ﷺ.”


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ اما بعد… بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ


இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான தலைவர்கள் வந்திருக்கிறார்கள்.

மன்னர்கள் வந்திருக்கிறார்கள்.

அறிஞர்கள் வந்திருக்கிறார்கள்.

பெரும் செல்வந்தர்கள் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார்கள். 

உலகத்திற்கே அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மது ﷺ அவர்கள் விட்டுச் சென்ற செய்தி மட்டும் இன்று வரை உயிரோடு இருக்கிறது.

நபி ﷺ அவர்கள் நம்முடைய காலத்தில் வாழவில்லை, நாம் அவர்களைப் பார்த்ததில்லை.,அவர்களுடன் அமரவில்லை,அவர்களுடன் சாப்பிடவில்லை. ஆனால் ,அவர்கள் நம்மைப் பற்றி கவலைப்பட்டார்கள்.


அல்லாஹ் கூறுகிறான்:


لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ

“உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்துள்ளார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு மிகவும் வருத்தமானது. உங்கள் மீது அதிக அக்கறை கொண்டவர். முஃமின்களிடம் இரக்கமும் கருணையும் கொண்டவர்.” (அல்குர்ஆன் 9:128)


இந்த வசனத்தை நமது உள்ளத்தில் வைத்துக்கொள்ளுங்கள்:

“நபி ﷺ அவர்கள் நம்மைப் பற்றி கவலைப்பட்டார்கள்.”


ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு துல்ஹஜ் 9-ஆம் நாள் அரஃபா பெருவெளியில், ஜபலுர் ரஹ்மா குன்றின் அடிவாரத்தில், தன் ஒட்டகமான 'கஸ்வா'வின் மீது அமர்ந்து இறுதித் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் ஆற்றிய உரை ‘ஹஜ்ஜத்துல் வதா’ (விடைபெறும் ஹஜ்ஜின் இறுதிப் பேருரை) என்று அழைக்கப்படுகிறது. 


லட்சத்திற்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் முன்னிலையில் மனித உரிமைகள், சமத்துவம், இறையச்சம் ஆகியவற்றை நிலைநிறுத்திய முழுமையான உரை இதுவாகும்.


ஹிஜ்ரி 10-ல் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமது ஒரே ஹஜ்ஜை நிறைவேற்ற மதீனாவிலிருந்து மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். அரஃபா மைதானத்தில் மக்கள் திரண்டிருந்த வேளையில், நண்பகல் தொழுகைக்குப் பின் நபியவர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை நிகழ்த்தினார்கள். நபியவர்களின் வார்த்தைகளை ரபீஆ இப்னு உமய்யா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உரத்த குரலில் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.


நபியவர்கள் உரையைத் தொடங்குவதற்கு முன் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு இவ்வாறு கூறினார்கள்:


 أَيُّهَا النَّاسُ، اسْمَعُوا قَوْلِي، فَإِنِّي لاَ أَدْرِي لَعَلِّي لاَ أَلْقَاكُمْ بَعْدَ عَامِي هَذَا بِهَذَا المَوْقِفِ أَبَدًا

"மக்களே! எனது வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டிற்குப் பிறகு இதே இடத்தில் உங்களை மீண்டும் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது." நூல்: சீரா இப்னு ஹிஷாம்


மனித உயிர்கள் மற்றும் உடைமைகளின் புனிதம்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-


 فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا

"உங்கள் இந்த நாளும், உங்கள் இந்த மாதமும், உங்கள் இந்த நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அதுபோலவே உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும், உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும் (ஒருவருக்கொருவர் பாழாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது)." நூல்: ஸஹீஹ் அல்-புகாரி


அரஃபா பெருவெளியில் குழுமியிருந்த லட்சக்கணக்கான மக்களிடம் நபியவர்கள் நேரடியாகத் தடையை மட்டும் விதிக்காமல், மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் விதமாக மூன்று தொடர் கேள்விகளை முன்வைத்தார்கள்:

"இது எந்த மாதம்?" — மக்கள், "இது துல்ஹஜ் (புனித மாதம்)" என்றனர்.

"இது எந்த ஊர்?" — மக்கள், "இது மக்கா (புனித பூமி)" என்றனர்.

"இது எந்த நாள்?" — மக்கள், "இது ஹஜ்ஜுடைய (புனித) நாள்" என்றனர்.

ஒவ்வொரு கேள்விக்கும் நபியவர்கள் சிறிது மௌனம் காத்ததால், அந்தப் பெயர்களை மாற்றி வேறு பெயர் வைப்பார்களோ என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு அந்தச் சூழலில் ஒரு ஆழ்ந்த அமைதியும் கவனக்குவிப்பும் உருவானது.

அனைவரின் கவனமும் முழுமையாக ஈர்க்கப்பட்டதும் நபியவர்கள் கூறினார்கள்:

"உங்கள் இந்த நாளும், உங்கள் இந்த மாதமும், உங்கள் இந்த நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அதுபோலவே உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும், உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்."


அதாவது, ஒரு முஸ்லிம் புனித நகரமான மக்காவில், புனித மாதத்தில், ஹஜ்ஜின் நாளில் எந்த அளவுக்குப் பாவம் செய்ய அஞ்சுவானோ, அதே அச்சமும் புனித உணர்வும் எக்காலத்திலும் பிற மனிதர்களின் உயிர், சொத்து மற்றும் மானத்தின் மீது இருக்க வேண்டும் என்பதை இந்த உவமை உணர்த்துகிறது.


உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் 

போர்க்களத்தில் ஒரு எதிரி நிலைகுலைந்து, "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று கூறிய பிறகும், அவர் உயிருக்குப் பயந்துதான் பொய் சொல்கிறார் என்று கருதி உஸாமா ரலியல்லாஹு அன்ஹு அவரைக் கொன்று விடுகிறார்கள்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கடுமையான கோபமும் வேதனையும் அடைந்து:


أَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَقَتَلْتَهُ؟

"அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறிய பிறகா அவரைக் கொன்றாய்?!" என்று மீண்டும் மீண்டும் கேட்டார்கள்.


உஸாமா ரலியல்லாஹு அன்ஹு, "இறைத்தூதரே! அவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே கூறினார்" என்றார். அதற்கு நபியவர்கள், "அவரது உள்ளத்தைப் பிளந்து பார்த்தாயா?" என்று கேட்டுவிட்டு, "மறுமை நாளில் 'லா இலாஹ இல்லல்லாஹ்' உனக்கு எதிராக சாட்சி சொல்ல வரும்போது நீ என்ன செய்வாய்?" 


என்று கூறினார்கள் உஸாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "நான் அன்றுவரை முஸ்லிமாகாமல் இருந்திருக்கக் கூடாதா (அப்போது இந்த மாபெரும் தவறு நடந்திருக்காதே)" என்று ஏங்கும் அளவுக்கு உயிரின் புனிதத்தை நபியவர்கள் உறுதிப்படுத்தினார்கள். நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 96)


பிறர் உடைமையின் புனிதம்: 

போர்க்களத்தில் மரணித்த கிர்கிரா நபியவர்களின் பயணப் பொதிகளைப் பாதுகாத்து வந்த 'கிர்கிரா' என்ற நபித்தோழர் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். மக்கள் அவரைப் பார்த்து, "அவருக்குச் சொர்க்கம் கிடைத்துவிட்டது" என்று வாழ்த்தினார்கள். ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அதிர்ச்சியளிக்கும் உண்மையை உடைத்தார்கள்:


كَلَّا، إِنَّ الشَّمْلَةَ الَّتِي أَخَذَهَا يَوْمَ خَيْبَرَ مِنَ المَغَانِمِ، لَمْ تُصِبْهَا المَقَاسِمُ، لَتَشْتَعِلُ عَلَيْهِ نَارًا

"நிச்சயமாக இல்லை! கைபர் போரின்போது பொதுச் சொத்திலிருந்து பங்கு வைப்பதற்கு முன்பாக அவர் திருடி மறைத்து வைத்த ஒரு போர்வை, அவர் மீது நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது."

பொது உடைமையிலிருந்து ஒரு போர்வையை அநீதியாக எடுத்த செயலானது, ஒருவரின் களப்பணியையே வீணாக்கி நரகிற்குக் கொண்டுசெல்லும் அளவுக்கு பிறர் உடைமையின் புனிதம் கடுமையானது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.

நூல்: ஸஹீஹ் அல்-புகாரி


மனித மானத்தின் புனிதம்: 

மாஇஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலை இழிவாகப் பேசிய இருவர்

விபச்சாரம் செய்ததாகத் தாமாகவே முன்வந்து ஒப்புக்கொண்டு மரண தண்டனை (கல்லெறி தண்டனை) பெற்று இறந்த மாஇஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி, வழியில் சென்ற இருவர்: "நாய் செத்ததைப் போல இவர் செத்துப் போனார்" என்று இழிவாகப் பேசிக்கொண்டனர்.


அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டு வந்த நபியவர்கள், சற்று தூரம் சென்றதும் அழுகிய ஒரு கழுதையின் சடலத்தைக் கண்டார்கள். அந்த இருவரையும் அழைத்து, "இறங்கி இந்தக் கழுதையின் பிணத்தை உண்ணுங்கள்" என்றார்கள். அவர்கள் பதறிப்போய், "இறைத்தூதரே! இதை யாராவது உண்பார்களா?" என்றனர்.

அப்போது நபியவர்கள் கூறினார்கள்:


فَمَا نِلْتُمَا مِنْ عِرْضِ أَخِيكُمَا آنِفًا أَشَدُّ مِنْ أَكْلِ مَيْتَةٍ

"சற்றுமுன் உங்கள் சகோதரரின் மானத்தில் கைவைத்தீர்களே, அது இந்தக் கழுதையின் பிணத்தை உண்பதை விடக் கொடிய பாவமாகும்!" நூல்: சுனன் அபீ தாவூத்


உயிரைக் காப்பது, அடுத்தவர் உழைப்பையும் உடமையையும் அபகரிக்காமல் இருப்பது, சமூகத்தில் பிறரது நற்பெயரையும் கண்ணியத்தையும் குலைக்காமல் பேணிக் காப்பது ஆகியவையே ஓர் இஸ்லாமிய சமூக ஒழுங்கமைப்பின் அடிப்படைத் தூண்கள் என்பதை இந்த இறுதிப் பேருரை ஆணித்தரமாக நிலைநிறுத்துகின்றன.


அடுத்து வட்டி ஒழிப்பு…


அறியாமைக் காலத்துப் பழக்கமான வட்டியை அடியோடு ஒழித்துக்கட்டிய நபியவர்கள், தம் சொந்தக் குடும்பத்திலிருந்தே அதைத் தொடங்கினார்கள்:


 وَإِنَّ رِبَا الجَاهِلِيَّةِ مَوْضُوعٌ، وَأَوَّلُ رِبًا أَضَعُ رِبَانَا رِبَا عَبَّاسِ بْنِ عَبْدِ المُطَّلِبِ، فَإِنَّهُ مَوْضُوعٌ كُلُّهُ

"அறியாமைக் காலத்து வட்டி அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. முதன்முதலாக நான் தள்ளுபடி செய்யும் வட்டி, எனது பெரிய தந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியாகும். அது முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது."நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 1218)


அறியாமைக் கால வட்டி முறை

இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா) வட்டி முறை மிகக் கொடூரமான சுரண்டலாக இருந்தது. ஒருவர் கடன் வாங்கி, தவணை நாளில் அதைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், கடன் கொடுத்தவர்: "கடனை அடைக்கிறாயா அல்லது தொகையை (வட்டியை) அதிகரிக்கட்டுமா?" என்று கேட்பார். இதனால் அசல் தொகையை விட வட்டி பல மடங்கு பெருகி (இரட்டிப்பாகி), எளிய மக்கள் தங்கள் வீடுகளையும், கால்நடைகளையும், இறுதியில் தங்கள் பொருட்களையும் தங்கள் பிள்ளைகளையும் அடிமைகளாக விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


சொந்தக் குடும்பத்திலிருந்தே தொடங்கிய சீர்திருத்தம்


ஒரு தலைவன் கொள்கைகளைப் பிரசங்கிப்பது எளிது; ஆனால் அதைத் தன் சொந்தக் குடும்பத்தின் மீது முதலில் அமல்படுத்துவதே உண்மையான தலைமைத்துவம்.


நபியவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் பெரும் செல்வந்தராகவும், மக்களுக்குப் பெரிய அளவில் கடன் வழங்கி வட்டி ஈட்டுபவராகவும் இருந்தார்கள். மக்கா வெற்றிக் காலத்தில்தான் அவர் தம் இஸ்லாத்தை பகிரங்கப்படுத்தினார்கள்.


அதற்கு முன்பிருந்தே பலரிடமும் அவருக்கு வர வேண்டிய வட்டிப் பாக்கிகள் பெருந்தொகையாக நிலுவையில் இருந்தன.


நபியவர்கள் சட்டம் போடும்போது:"பிறர் வாங்கிய வட்டியை ரத்து செய்கிறேன்" என்று கூறாமல், "நமது வட்டியிலிருந்து முதன்முதலாக நான் தள்ளுபடி செய்வது எனது பெரிய தந்தை அப்பாஸ் உடைய வட்டியாகும்" என்று அறிவித்தார்கள்.

தன் சொந்தக் குடும்பத்திற்கு வர வேண்டிய மிகப்பெரிய பொருளாதார லாபத்தை ஒரு நொடியில் ரத்து செய்ததன் மூலம், எந்தவொரு தனிமனிதனுக்கும் இதில் விதிவிலக்கு இல்லை என்பதை உலகுக்கு நிரூபித்தார்கள்.


அல்லாஹ் குர்ஆனில் வசனம் இறக்கிய சூழல் 

தாயிஃப் நகரத்து 'பனூ ஸகீஃப்' கோத்திரத்தினர், மக்காவிலிருந்த 'பனூ மக்ஸூம்' கோத்திரத்தினருக்கு அறியாமைக் காலத்தில் வட்டிக்குக் கடன் கொடுத்திருந்தனர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, தாயிஃப் வாசிகள் மக்காவாசிகளிடம் வந்து, "நாங்கள் ஒப்பந்தப்படி வாங்கிய கடனுக்கான வட்டிப் பாக்கியைத் தாருங்கள்" என்று கோரினர்.


மக்காவாசிகள், "நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிவிட்டோம்; இஸ்லாத்தில் வட்டி வாங்குவது ஹராம் என்பதால் இனி ஒரு பைசா கூட வட்டியாகத் தர மாட்டோம்" என்று மறுத்துவிட்டனர்.


இப்பிரச்சினை மக்காவின் ஆளுநரான அத்தாப் பின் அஸீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றது. அவர் இதை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார். அப்போது அல்லாஹ் இந்தத் தீர்க்கமான வசனங்களை இறக்கி வைத்தான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ۝ فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ

"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உண்மையான முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சுங்கள்; வட்டியிலிருந்து எஞ்சியிருப்பதை விட்டுவிடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால், அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் ஒரு போர்ப் பிரகடனத்தை எதிர்பாருங்கள்! நீங்கள் தவ்பா செய்து மீண்டுவிட்டால், உங்கள் மூலதனம் (அசல் தொகை) உங்களுக்கே உரியது. நீங்கள் அநீதி இழைக்கவும் கூடாது; அநீதிக்கு உள்ளாக்கப்படவும் கூடாது." திருக்குர்ஆன் 2:278-279


இந்த வசனம் இறங்கியதும் நபியவர்கள், "அசல் தொகையை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள்; எஞ்சிய ஒரு ரூபாய் வட்டியைக்கூட வசூலிக்கக் கூடாது" என்று தீர்ப்பளித்தார்கள். வட்டி வாங்குபவர்கள் மீது இறைவன் போர்ப் பிரகடனம் செய்கிறான் என்ற கடுமையான எச்சரிக்கை சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


பேரிச்சம்பழப் பரிவர்த்தனையில் வந்த மறைமுக வட்டி (ரிபா அல்-ஃபள்ல்)


பணத்தில் மட்டுமல்லாமல், பொருட்களின் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி நுழைந்துவிடக் கூடாது என்பதில் நபியவர்கள் மிகக் கண்டிப்புடன் இருந்தார்கள்.

ஒருமுறை அபூஸயீத் அல்-குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு மற்றும் பிலால் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் தரமான 'பர்னீ' ரகப் பேரீச்சம்பழத்தை நபியவர்களிடம் கொண்டு வந்தார்கள்.


நபியவர்கள், "இவ்வளவு நல்ல பேரீச்சம்பழம் உனக்கு எங்கிருந்து கிடைத்தது?" என்று கேட்டார்கள்.

அதற்கு பிலால் ரலியல்லாஹு அன்ஹு"எங்களிடம் தரம் குறைந்த பேரீச்சம்பழம் இருந்தது; நபியவர்கள் உண்பதற்காக, அந்தத் தரம் குறைந்த பேரீச்சம்பழத்தில் இரண்டு மரக்காலைக் கொடுத்து, இந்த நல்ல பேரீச்சம்பழத்தில் ஒரு மரக்காலை பண்டமாற்று முறையில் மாற்றிக்கொண்டு வந்தேன்" என்றார்.

இதைக்கேட்டதும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பதறிப்போய் இவ்வாறு கூறினார்கள்:

أَوَّهْ أَوَّهْ، عَيْنُ الرِّبَا، عَيْنُ الرِّبَا، لاَ تَفْعَلْ

"அந்தோ பரிதாபம்! இது அப்பட்டமான வட்டியாகும்! இது அப்பட்டமான வட்டியாகும்! இனி ஒருபோதும் இவ்வாறு செய்யாதீர்!"

பிறகு அதற்குச் சரியான பொருளாதார வழியையும் கற்றுக் கொடுத்தார்கள்:

"உயர்தரப் பழம் வாங்க விரும்பினால், உன்னிடமுள்ள தரம் குறைந்த பழத்தைப் பணத்திற்கு விற்றுவிடு; பிறகு அந்தப் பணத்தைக் கொண்டு நல்ல பழத்தை விலைக்கு வாங்கிக்கொள்." நூல்: ஸஹீஹ் அல்-புகாரி (ஹதீஸ் எண்: 2312),


வட்டியோடு தொடர்புடைய நால்வருக்குமான சாபம்

வட்டியை வாங்குபவர் மட்டுமின்றி, அந்தப் பொருளாதாரச் சுரண்டல் அமைப்புக்குத் துணைபோகும் அனைவரையும் நபியவர்கள் எச்சரித்தார்கள்:

لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ

"வட்டி வாங்குபவர், வட்டி கொடுப்பவர், அதற்கான ஆவணத்தை எழுதுபவர், அதற்குச் சாட்சியாக இருக்கும் இருவர் ஆகிய அனைவரையும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சபித்தார்கள். மேலும், 'அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவர்களே' என்றும் கூறினார்கள்." நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 1598)


உழைப்பின்றிப் பிறரது உழைப்பை உறிஞ்சும் வட்டி முறையை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஒழித்து, அதற்கு மாற்றாக 'ஸகாத்' (கட்டாயத் தர்மம்), 'ஸதகா' (தன்னார்வக் கொடை), 'கர்ள் ஹஸன்' (மறுமை நன்மையை நாடித் தரப்படும் வட்டியில்லாக் கடன்) ஆகியவற்றை நிலைநாட்டி, அடித்தட்டு மக்களைக் கடன் வலையிலிருந்து விடுவித்தார்கள்.


அறியாமைக் கால பழிவாங்கும் கொலைகள் ரத்து

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 

 وَإِنَّ دِمَاءَ الجَاهِلِيَّةِ مَوْضُوعَةٌ، وَإِنَّ أَوَّلَ دَمٍ أَضَعُ مِنْ دِمَائِنَا دَمُ ابْنِ رَبِيعَةَ بْنِ الحَارِثِ

"அறியாமைக் காலத்துப் பழிவாங்கும் கொலைகள் அனைத்தும் செல்லாததாக்கப்பட்டுவிட்டன. நமது இரத்தப் பழிகளிலிருந்து முதன்முதலாக நான் தள்ளுபடி செய்வது இப்னு ரபீஆ இப்னுல் ஹாரிஸின் இரத்தப் பழியாகும்."

நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 1218)


இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில் முறையான அரசாங்கமோ, பொதுவான நீதிமன்றங்களோ, சட்ட விதிகளோ இருக்கவில்லை. "பழங்குடிவாதம்" (அஸபிய்யா) மட்டுமே சமூகத்தை இயக்கியது.

ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவன் வேறொரு கோத்திரத்து நபரை கொன்றுவிட்டால், கொலையாளியை மட்டும் தண்டிக்கும் வழக்கம் அவர்களிடம் இல்லை. மாறாக, பாதிக்கப்பட்ட கோத்திரம், கொலையாளியின் முழு கோத்திரத்தின் மீதும் போர் தொடுக்கும்.

ஒரு சாமானியன் கொல்லப்பட்டால், அவனுக்குப் பகரமாக எதிரிக் கோத்திரத்தின் தலைவரையோ அல்லது பலரையோ கொன்றால்தான் பழி தீர்ந்ததாகக் கருதினர்.


ஒரு கொலைக்குப் பதிலாக மற்றொரு கொலை, அதற்குப் பதிலாக இன்னொன்று எனப் பல தலைமுறைகளுக்கு ரத்தப் பழி தொடரும். 


அற்ப காரணங்களுக்காகத் தொடங்கிய போர்கள் (உதாரணமாக, ஒரு குதிரைப் பந்தயத் தகராறினால் மூண்ட 'தாஹிஸ் வல் கப்ராவ்' போர் 40 ஆண்டுகளும், ஒட்டகத்தைத் தாக்கியதால் மூண்ட 'பஸூஸ்' போர் 40 ஆண்டுகளும்) பல தலைமுறைகளை அழித்தொழித்தன.

நபியவர்கள் இந்த நீண்ட ரத்தச் சங்கிலியை ஒரே பிரகடனத்தின் மூலம் அறுத்தெறிந்தார்கள்:

"அறியாமைக் காலத்துப் பழிவாங்கும் கொலைகள் அனைத்தும் காலடியில் போட்டு மிதிக்கப்பட்டுவிட்டன (செல்லாததாக்கப்பட்டுவிட்டன)."

இதன் மூலம் சட்டத்தைக் கையில் எடுக்கும் தனிநபர் பழிவாங்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, குற்றவியல் நீதியும் தண்டனை வழங்கும் அதிகாரமும் இஸ்லாமிய அரசு மற்றும் நீதிமன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

சொந்தக் குடும்பத்திலிருந்தே தொடக்கம் வட்டியை ஒழிக்கும் போது தன் பெரிய தந்தை அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வட்டியை முதலில் ரத்து செய்தது போலவே, ரத்தப் பழியை ரத்து செய்யும்போதும் நபியவர்கள் தன் சொந்தக் குடும்பமான பனூ ஹாஷிம் வம்சத்திலிருந்தே தொடங்கினார்கள்:

"நமது இரத்தப் பழிகளிலிருந்து முதன்முதலாக நான் தள்ளுபடி செய்வது இப்னு ரபீஆ இப்னுல் ஹாரிஸின் இரத்தப் பழியாகும்."


ரபீஆ இப்னுல் ஹாரிஸ் என்பவர் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பெரிய தந்தை ஹாரிஸின் மகனாவார் (அதாவது நபியவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்). ரபீஆவுக்கு 'ஆயித்' (அல்லது 'ஆதம்') என்ற பச்சிளம் ஆண் குழந்தை இருந்தது.

அறியாமைக் காலத்தில், அந்தப் பச்சிளங்குழந்தை பால் குடிப்பதற்காகவும் கிராமப்புறச் சூழலில் வளர்வதற்காகவும் 'பனூ ஸஅத்' கோத்திரத்தில் விடப்பட்டிருந்தது (நபியவர்கள் ஹலீமா அஸ்ஸஅதிய்யாவிடம் வளர்ந்தது போல).

அப்போது 'பனூ ஸஅத்' கோத்திரத்திற்கும், 'ஹுதைல்' கோத்திரத்திற்கும் இடையே கடுமையான போர் மூண்டது. போரின்போது பனூ ஸஅத் கூடாரங்களில் இருந்த அந்தப் பச்சிளங்குழந்தையின் மீது ஹுதைல் கோத்திரத்தார் எறிந்த கல் அல்லது அம்பு பட்டு, குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.


நபியவர்களின் குடும்பமான 'பனூ ஹாஷிம்' மிக வலிமையான, கௌரவமிக்க குடும்பம் என்பதால், நினைத்திருந்தால் ஹுதைல் கோத்திரத்தாரிடம் ரத்தத்திற்கு ரத்தம் பழிவாங்கியிருக்க முடியும் அல்லது பெரும் நஷ்டஈடு வசூலித்திருக்க முடியும். ஆனால் நபியவர்கள்: "நமது குடும்பத்திற்கு வர வேண்டிய அந்த ரத்தப் பழியை எந்த இழப்பீடும் கோராமல் அல்லாஹ்வுக்காக நான் தள்ளுபடி செய்கிறேன்" என்று பொதுவெளியில் அறிவித்தார்கள். இது எதிரிகளுக்கும் நடுநிலையாளர்களுக்கும் மிகப்பெரிய தார்மீகப் பாடமாக அமைந்தது.


மக்கா வெற்றி நாளில் நபியவர்களின் பொதுமன்னிப்பு

பழிவாங்கும் உணர்வை நபியவர்கள் எவ்வாறு அடியோடு வேரறுத்தார்கள் என்பதற்கு மக்கா வெற்றி மிகச்சிறந்த உதாரணம்.

13 ஆண்டுகள் முஸ்லிம்களைச் சித்திரவதை செய்து, அவர்களின் வீடுகளைப் பறித்து, சொந்த ஊரை விட்டு விரட்டியடித்த குறைஷிகள் தலைகுனிந்து நின்றனர். கஃபாவின் வாசலில் நின்ற நபியவர்கள் குறைஷிகளைப் பார்த்து:

"மக்காவாசிகளே! நான் உங்களிடம் எவ்வாறு நடந்துகொள்வேன் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், "நீங்கள் கண்ணியமிக்க சகோதரர்; கண்ணியமிக்க சகோதரரின் மகன்" என்றனர்.

நபியவர்கள் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் சகோதரர்களுக்குக் கூறிய வார்த்தைகளைக் கூறி:

لاَ تَثْرِيبَ عَلَيْكُمُ اليَوْمَ، اذْهَبُوا فَأَنْتُمُ الطُّلَقَاءُ

"இன்று உங்கள் மீது எந்தப் பழியும் இல்லை; நீங்கள் செல்லுங்கள், நீங்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள்!"

என்று அறிவித்தார்கள். தங்களைக் கொடுமைப்படுத்திய கொடிய எதிரிகளையும் பழிவாங்காமல் பொதுமன்னிப்பு வழங்கி, பழிவாங்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். நூல்: அஸ்-ஸீரதுன் நபவிய்யா (இப்னு ஹிஷாம்)

ஜுஹைனா மற்றும் லுகைத் கோத்திரத்தாரின் இழப்பீட்டு வழக்கு

நபியவர்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக, ஒரு கொலை நிகழ்ந்துவிட்டால் அதைத் தனிநபர்கள் கையில் எடுக்க அனுமதிக்காமல் சட்டப்படி நஷ்டஈடு (திய்யா) அல்லது தகுந்த தண்டனையை அரசு மூலமாக மட்டுமே பெற்றுத் தந்தார்கள்.

அறியாமைக் காலத்துப் பகைமையின் காரணமாக ஒருவர் பிறரைக் கொன்றுவிட்டால், பழிக்குப் பழி என்ற பெயரில் அவரது குடும்பத்தாரையோ கோத்திரத்தாரையோ தாக்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். திருக்குர்ஆனின் இந்த வசனத்தை நடைமுறைப்படுத்தினார்கள்:

وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ

"சுமக்கும் எந்த ஓர் ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவின் சுமையைச் சுமக்காது (ஒருவர் செய்த குற்றத்திற்கு மற்றொருவர் தண்டிக்கப்பட மாட்டார்)."திருக்குர்ஆன் 6:164


நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அரஃபா மைதானத்தில் ஆற்றிய இந்தப் பிரகடனம், ஆத்திரத்திலும் பழிவாங்கும் வெறியிலும் இயங்கிக்கொண்டிருந்த ஓர் காட்டுமிராண்டிச் சமூகத்தை, சட்டம், நீதி, ஒழுங்கு மற்றும் மன்னிப்பின் வழியில் இயங்கும் உலகளாவிய நாகரிகச் சமூகமாக மாற்றியமைத்தது.


பெண் உரிமை மற்றும் பாதுகாப்பு

நபியவர்கள் லட்சக்கணக்கான ஆண்களுக்கு மத்தியில் பெண்களின் உரிமையை வலியுறுத்தி ஆணித்தரமாக இவ்வாறு கூறினார்கள்:


فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ، فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ، وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ، وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لاَ يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ... وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالمَعْرُوفِ

"மக்களே! பெண்களின் விவகாரத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக நீங்கள் அவர்களை அல்லாஹ்வின் அடைக்கலத்திலேயே (பொறுப்பிலேயே) உங்கள் வசம் எடுத்துள்ளீர்கள்; அல்லாஹ்வின் வாக்கைக் கொண்டே (திருமண உடன்படிக்கை மூலம்) அவர்களை உங்களுக்கு ஆகுமானவர்களாக ஆக்கிக்கொண்டீர்கள். உங்கள் படுக்கைகளில் நீங்கள் விரும்பாத எவரையும் அனுமதிக்காமல் இருப்பது அவர்கள் மீது உங்கள் உரிமையாகும்... மேலும், அவர்களுக்கு முறைப்படி உணவும் உடையும் வழங்குவது உங்கள் மீதுள்ள கடமையாகும்."நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 1218)


பெண்ணியத்திற்கு நபியவர்கள் தந்த கண்ணியம்

"அல்லாஹ்வின் அடைக்கலம்" (بِأَمَانِ اللَّهِ) என்ற பொறுப்புணர்வு

அறியாமைக் காலத்தில் பெண்கள் விற்பனைப் பொருளாகவும், தந்தை இறந்தால் மகனுக்குச் சொத்தாகப் பங்கு பிரிக்கப்படும் அடிமையாகவும், பெண் குழந்தை பிறந்தாலே உயிரோடு புதைக்கும் அவல நிலையிலும் இருந்தனர்.

நபியவர்கள் பெண்களை ஆண்களின் "சொத்து" என்ற நிலையிலிருந்து மாற்றி, "அவர்கள் அல்லாஹ்வின் அமானிதம் (அடைக்கலம்)" என்று அறிவித்தார்கள். ஒரு கணவன் தன் மனைவியிடம் அநீதியாக நடந்துகொண்டால், அவன் அவளது குடும்பத்திற்கு மட்டுமல்ல, அவளை அடைக்கலமாகத் தந்த சர்வலோக இரட்சகனான அல்லாஹ்வுக்கே பதில் சொல்லக் கடமைப்பட்டவன் என்ற இறையச்சத்தை விதைத்தார்கள்.


கணவன் மட்டுமே அதிகாரம் செலுத்தும் ஒருதலைப்பட்ச அதிகார அமைப்பை நபியவர்கள் உடைத்தெறிந்தார்கள். மனைவிக்குக் கணவன் மீது என்ன கடமை உள்ளதோ, அதேபோன்று கணவனுக்கும் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (உணவு, உடை, இருப்பிடம், பாசம், பாதுகாப்பு) உண்டு என்பதை "முறைப்படி" (بِالمَعْرُوفِ - சமூக மதிப்பிற்குரிய வகையில்) வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்கள்.


உமர் பின் அல்-கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்கள்: "அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்கள் விஷயத்தில் எந்தவொரு மதிப்பையும் உரிமையையும் நாங்கள் கருதியதில்லை. அல்லாஹ் அவர்கள் குறித்து (குர்ஆனில்) வழிகாட்டுதலை இறக்கி, அவர்களுக்கென்று உரிமைகளை ஒதுக்கும் வரை இந்நிலையே நீடித்தது.


ஒருநாள் நான் ஒரு விஷயத்தை ஆலோசித்துக்கொண்டிருந்தபோது, என் மனைவி ஒரு ஆலோசனையைச் சொன்னார். உடனே நான், 'இதில் தலையிட உனக்கு என்ன வேலை?' என்று கடிந்து கொண்டேன். அதற்கு என் மனைவி, 'கத்தாபின் மகனே! உங்களை வியக்கிறேன்; உங்களிடம் யாரும் மறுத்துப் பேசக் கூடாதா? இறைத்தூதர் ﷺ அவர்களிடம் அவர்களுடைய மனைவியர் கருத்து வேறுபட்டு விவாதிக்கிறார்கள்; அவர்களில் ஒருவர் நபியவர்களிடம் ஒரு நாள் முழுக்கப் பேசாமல் கோபித்துக் கொள்ளவும் செய்கிறார்' என்றார்." நூல்: ஸஹீஹ் அல்-புகாரி (ஹதீஸ் எண்: 4913)


பெண்களுக்குத் தன் கருத்தைக் கூறும் உரிமையையும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் தார்மீக சுதந்திரத்தையும் நபியவர்கள் வழங்கியிருந்ததை இந்த நிகழ்வு காட்டுகிறது.


கன்ஸா பின்த் கிதாம் (ரலி) வழக்கு

பெண்களின் விருப்பத்திற்கு மாறாகத் தந்தையோ பொறுப்பாளரோ திருமணம் செய்து வைக்க முடியாது என்பதை நபியவர்கள் சட்டமாக்கினார்கள்.

கன்ஸா பின்த் கிதாம் ரலியல்லாஹு அன்ஹா என்ற பெண் விவாகரத்து பெற்றவராக இருந்தார். அவரது தந்தை, அவரது விருப்பத்திற்கு மாறாக ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார். அப்பெண்மணி நேராக நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் வந்து முறையிட்டார்.


நபியவர்கள் அந்த வழக்கைத் தீர விசாரித்துவிட்டு: அந்தத் திருமணத்தை ரத்து செய்து (செல்லாது என) அறிவித்தார்கள். அப்பெண்மணி தான் விரும்பிய நபரைத் திருமணம் செய்துகொள்ள முழு சுதந்திரம் அளித்தார்கள். நூல்: ஸஹீஹ் அல்-புகாரி (ஹதீஸ் எண்: 5138)


ஒரு பெண் தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படைத் தன்னுரிமையை நபியவர்கள் நிலைநாட்டிய விதம் இதுவாகும்.


பெண்கள் பளிங்குப் பாத்திரங்கள் போன்றவர்கள்:


நபியவர்கள் பெண்கள் மீது எவ்விதக் கடுமையான வார்த்தைகளோ அல்லது உடல்ரீதியான வன்முறையோ பிரயோகிக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்தார்கள்.


ஒரு பயணத்தின் போது, 'அன்ஜஷா' என்ற தோழர் ஒட்டகங்களை வேகமாக ஓட்டுவதற்காகப் பாடல்களைப் பாடினார். ஒட்டகங்கள் வேகமாக ஓடத் தொடங்கியதும், அவற்றின் மீதிருந்த கூடாரங்களில் அமர்ந்திருந்த பெண்கள் குலுங்கி அச்சமடைந்தனர். உடனே நபியவர்கள் அவரைப் பார்த்து:

رُوَيْدَكَ يَا أَنْجَشَةُ، رِفْقًا بِالقَوَارِيرِ

"அன்ஜஷாவே! நிதானமாக ஓட்டு; பளிங்குப் பாத்திரங்களைக் கையாள்கிறாய், மென்மையாக நடத்து!" என்று உத்தரவிட்டார்கள். பெண்களின் மென்மையான மனதையும் உடலமைப்பையும் கண்ணாடியைப் போன்று உடையக்கூடிய 'பளிங்கு' என உவமித்துக் காத்தார்கள்.நூல்: ஸஹீஹ் அல்-புகாரி (ஹதீஸ் எண்: 6149)


நபியவர்களின் சொந்த நடைமுறை:

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சாட்சியமளிக்கிறார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தம் வாழ்நாளில் தம் கரங்களால் எந்தவொரு பெண்ணையோ, எந்தவொரு பணியாளரையோ அல்லது எவரையுமே அடித்ததில்லை (போர்க்களத்தில் அநீதிக்கு எதிராகப் போரிட்டதைத் தவிர)."

— நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 2328)


நன்மக்களின் அடையாளம்

நபியவர்கள் தம் வாழ்வின் பல்வேறு தருணங்களிலும், குறிப்பாக இந்த இறுதிப் பேருரையிலும் ஆண்களின் தார்மீகத் தரத்தை அளக்கும் அளவுகோலாகப் பெண்களை நடத்தும் முறையையே வைத்தார்கள்:

خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي

"உங்களில் சிறந்தவர் யாரெனில், தன் மனைவியிடம் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே ஆவார். உங்களை விட என் மனைவியரிடம் நான் சிறந்தவனாக நடந்து கொள்கிறேன். நூல்: ஜாமிஉத் திர்மிதி (ஹதீஸ் எண்: 3895)


பெண்களைச் சுமையாகவும் போகப் பொருளாகவும் மட்டுமே பார்த்த ஒரு காட்டுமிராண்டி யுகத்தில், அவர்களை அல்லாஹ்வின் அமானிதம் என்றும், சொர்க்கத்தின் வாயில்கள் (தாய், மகள், மனைவி வடிவில்) என்றும் அறிவித்து, அவர்களின் பாதுகாப்பை இறுதி மூச்சு வரை போதித்தார்கள்.


இனவாத எதிர்ப்பு மற்றும் மனித சமத்துவம்

மனிதர்கள் அனைவரும் சமம், இறையச்சமே சிறப்பிற்கான ஒரே அளவுகோல் என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்தினார்கள்:

يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى

"மக்களே! அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக உங்கள் இறைவன் ஒருவனே; உங்கள் தந்தையும் ஒருவரே (ஆதம்). ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விடவோ, அரபி அல்லாதவருக்கு அரபியரை விடவோ எந்த உயர்வும் இல்லை. ஒரு வெள்ளையருக்கு கறுப்பரை விடவோ, ஒரு கறுப்பருக்கு வெள்ளையரை விடவோ எவ்வித மேன்மையும் இல்லை; இறையச்சத்தைத் (தக்வா) தவிர!" நூல்: முஸ்னத் அஹ்மத் 


நபியவர்கள் மனித சமத்துவத்தை நிலைநிறுத்த இரண்டு 

அசைக்க முடியாத அடிப்படைகளை முன்வைத்தார்கள்:

இறைவன் ஒருவனே: படைத்தவன் ஒருவனே என்பதால், எந்தவொரு குறிப்பிட்ட இனத்திற்கும் இறைவனிடம் தனிச் சலுகை கிடையாது.

தந்தை ஒருவரே: மனிதர்கள் அனைவரும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் என்ற ஒரே மனிதரின் வழித்தோன்றல்களே; ஆதமோ மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர். எனவே, பிறப்பால் ஒருவருக்கு உயர்ந்த அந்தஸ்தோ தாழ்ந்த அந்தஸ்தோ இருக்க முடியாது.


அன்றைய அரபுகள் தங்களை மட்டுமே நாகரிகமானவர்களாகக் கருதி, அரபி அல்லாத பிற நாட்டினரை 'அஜமீ' (பேசத் தெரியாத ஊமைகள்/காட்டுமிராண்டிகள்) என்று இழிவாக அழைத்தனர். அதேபோல், குறைஷி வம்சத்தினர் மற்ற கோத்திரங்களை விட தங்களை உயர் குலத்தவர்களாகப் பாவித்தனர். நபியவர்கள் அந்த அரபு மேலாதிக்கத்தையும், நிற மேட்டிமையையும் ஒரே பிரகடனத்தில் அடியோடு காலடியில் போட்டு மிதித்தார்கள்.


மேன்மையின் ஒரே அளவுகோல் 'இறையச்சம்' (தக்வா)

மனிதனை உயர்த்தும் ஒரே காரணி அவனது நற்செயல்களும், உள்ளத்தில் இருக்கும் இறைபயமும் மட்டுமே. இது திருக்குர்ஆனின் இந்த வசனத்தை மெய்ப்பிக்கிறது:

إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ

"நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிக இறையச்சம் உடையவர்தான்."திருக்குர்ஆன் 49:13


ஒருமுறை குறைஷி அல்லாத கிஃபார் கோத்திரத்தைச் சேர்ந்த மூத்த நபித்தோழர் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், கருப்பின அபிசீனியரான பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. கோபத்தின் உச்சியில் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி:

يَا ابْنَ السَّوْدَاءِ

"கருப்புப் பெண்ணின் மகனே!" என்று அவரது தாயின் நிறத்தைக் குறிப்பிட்டு ஏசிவிட்டார்.

பிலால் ரலியல்லாஹு அன்ஹு மிகுந்த மனவேதனையுடன் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் வந்து முறையிட்டார். இதைக் கேட்ட நபியவர்களின் முகம் கோபத்தால் சிவந்தது. அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து:

أَعَيَّرْتَهُ بِأُمِّهِ؟! إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ

"அவரது தாயை இழிவாகக் கூறி அவரைக் கேவலப்படுத்தினாயா? நிச்சயமாக நீ அறியாமைக் காலத்துப் பண்பு இன்னும் மிச்சமிருக்கும் மனிதராகவே இருக்கிறாய்!" என்று மிகக் கடுமையாகக் கண்டித்தார்கள்.


நபியவர்களின் இந்த வார்த்தையைக் கேட்டதும் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு கதறி அழுது, தனது கன்னத்தை நிலத்தில் வைத்து, "பிலாலின் பாதம் என் முகத்தை மிதிக்கும் வரை என் முகத்தை இந்த மண்ணிலிருந்து எடுக்க மாட்டேன்" என்று பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மன்னிப்புக் கோரினார். நிறவெறிக்கு நபியவர்களின் அவையில் எள்முனையளவும் இடமில்லை என்பதற்கு இது பெரும் சான்று.நூல்: ஸஹீஹ் அல்-புகாரி (ஹதீஸ் எண்: 30)


மக்கா வெற்றியின் போது பிலால் (ரலி) கஃபாவின் மீது அதான் கூறியது


மக்கா வெற்றியடைந்த தருணம், அரபு வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாகும். மக்கத்து குறைஷித் தலைவர்கள் அனைவரும் தலைகுனிந்து நின்ற வேளையில், கஃபாவின் உச்சிக்கு ஏறித் தொழுகைக்கான அழைப்பை (அதான்) விடுக்க நபியவர்கள் யாரைத் தேர்ந்தெடுத்தார்கள்

முன்னாள் அடிமையாகவும், கருப்பினத்தவராகவும் இருந்து மக்கத்துத் தெருக்களில் சித்திரவதை செய்யப்பட்ட பிலால் இப்னு ரபாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையே தேர்ந்தெடுத்தார்கள்.


கஃபாவின் மீது ஏறி பிலால் ரலியல்லாஹு அன்ஹு கம்பீரமாக அதான் கூறியதைக் கண்ட குறைஷித் தலைவர்கள் சிலர்: "இந்தக் கறுப்புக் காகத்திற்குத்தான் கஃபாவின் மீது ஏற இடம் கிடைத்ததா? என் தந்தை இறந்துபோய் இந்த நாளைப் பார்க்காமல் தப்பியது எவ்வளவோ நல்லது" என்று தங்களின் குலப்பெருமையைப் புலம்பினர். அப்போதுதான் அல்லாஹ், 


يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் : 49:13)

என்ற வசனத்தை இறக்கி அவர்களின் போலிப் பெருமையை உடைத்தான். நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்


 பாரசீக சல்மான் மற்றும் ரோம் சுஹைப் ஆகியோரின் கண்ணியம்

இஸ்லாமியச் சமூகத்தில் வெளிநாட்டினர் எவ்வாறு மதிக்கப்பட்டனர் என்பதற்கு இவர்களின் வரலாறு சிறந்த சான்றாகும்:

பாரசீக நாட்டைச் சேர்ந்த சல்மான் ரலியல்லாஹு அன்ஹு அகழ் போரின் போது அகழி வெட்டும் யோசனையை முன்வைத்தார். அப்போது அன்ஸாரிகள், "சல்மான் எங்களைச் சேர்ந்தவர்" என்றும், முஹாஜிர்கள், "இல்லை, சல்மான் எங்களைச் சேர்ந்தவர்" என்றும் உரிமை கொண்டாடினர். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள்:

سَلْمَانُ مِنَّا أَهْلَ البَيْتِ

"சல்மான் எங்களைச் சேர்ந்தவர்; எனது குடும்பத்தைச் (அஹ்லுல் பைத்) சேர்ந்தவர்!" என்று அறிவித்து, அரபி அல்லாத ஒருவருக்குத் தங்கள் சொந்தக் குடும்பத்தின் அந்தஸ்தை வழங்கி கௌரவித்தார்கள்.நூல்: அல்-முஸ்தத்ரக் (ஹதீஸ் எண்: 6539)


பிறப்பு, நிறம், குலம், நாடு ஆகிய புறக் காரணிகளை வைத்து மனிதர்களைப் பிரித்தாளும் அனைத்துக் கொடுங்கோன்மைகளையும் உடைத்தெறிந்து, "மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போல சமமானவர்கள்" என்ற உலகளாவிய சமத்துவக் கோட்பாட்டை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நடைமுறையில் சாத்தியப்படுத்திக் காட்டினார்கள்.


வழிகேட்டிலிருந்து காக்கும் இரு வழிகாட்டிகள்


நபியவர்கள் கூடியிருந்த லட்சக்கணக்கான தோழர்களை நோக்கிக் கூறினார்கள்:

تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ

"உங்களிடையே இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்; அவ்விரண்டையும் நீங்கள் உறுதியாகப் பற்றிப் பிடித்திருக்கும் வரை ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள்: ஒன்று அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்), மற்றொன்று அவனுடைய தூதரின் சுன்னத் (நபிவழி)."நூல்: முஅத்தா இமாம் மாலிக்


திருக்குர்ஆன் (كِتَابَ اللَّهِ) — நிலையான அரசியல் மற்றும் வாழ்வியல் சாசனம்

திருக்குர்ஆன் என்பது மனிதகுலத்திற்கான இறுதி இறைவேதம். முந்தைய இறைவேதங்கள் காலப்போக்கில் மனிதக் கரங்களால் மாற்றங்களுக்கு உள்ளாயின. ஆனால் குர்ஆனைப் பற்றி அல்லாஹ்வே கூறுகிறான்:

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

"நிச்சயமாக நாமே இந்த அறிவுரையை (குர்ஆனை) இறக்கி வைத்தோம்; மேலும் நிச்சயமாக நாமே அதைப் பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்."திருக்குர்ஆன் 15:9


குர்ஆன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ மக்களுக்கோ உரியதல்ல; அது மறுமை நாள் வரை வாழும் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் தேவையான அடிப்படைக் கொள்கைகள், சட்டங்கள், ஒழுக்க விழுமியங்களை உள்ளடக்கிய முழுமையான வழிகாட்டியாகும்.

சுன்னத் (سُنَّةَ نَبِيِّهِ) — குர்ஆனின் நடைமுறை விளக்கம்

சுன்னத் (நபிவழி) என்பது திருக்குர்ஆனை நடைமுறையில் வாழ்ந்து காட்டிய வடிவமாகும். குர்ஆனின் சட்டதிட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான நேரடி வழிகாட்டலே சுன்னத் ஆகும்.


சுன்னத் இன்றி குர்ஆனை முழுமையாகப் பின்பற்ற முடியாது:

குர்ஆன் தொழுகையை நிலைநிறுத்தக் கூறுகிறது; ஆனால் ஃபஜ்ருக்கு 2 ரக்அத்கள், லுஹ்ருக்கு 4 ரக்அத்கள் தொழ வேண்டும் என்பதையும், ருகூஃ, சுஜூது செய்யும் முறையையும் சுன்னத்தே கற்றுத்தருகிறது ("என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்" — புகாரி: 631).


குர்ஆன் ஸகாத் கொடுக்கப் பணிக்கிறது; ஆனால் எந்த அளவிற்கு எவ்வளவு சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்பதை நபியவர்களின் சுன்னத்தே நிர்ணயிக்கிறது.


குர்ஆன் ஹஜ்ஜை விதியாக்குகிறது; ஆனால் அதன் கிரியைகளைச் செய்யும் முறையை நபியவர்கள் இறுதி ஹஜ்ஜில், "உங்களின் ஹஜ்ஜுடைய வழிமுறைகளை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்" (முஸ்லிம்: 1297) என்று செயல்வடிவமாகக் காட்டினார்கள்.


அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபியவர்களின் குணநலன் பற்றிக் கேட்கப்பட்டபோது:

كَانَ خُلُقُهُ الْقُرْآنَ

"அவர்களின் நற்குணம் திருக்குர்ஆனாகவே இருந்தது (அதாவது குர்ஆனின் நடமாடும் வடிவமாகவே திகழ்ந்தார்கள்)." நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 746)


"உறுதியாகப் பற்றிப் பிடித்தல்" (تَمَسَّكْتُمْ بِهِمَا) என்பதன் பொருள்

நபியவர்கள் "படியுங்கள்" அல்லது "மனனம் செய்யுங்கள்" என்று மட்டும் கூறாமல், "பற்றிப் பிடியுங்கள்" என்று கூறினார்கள். இதன் பொருள்:

தனிநபர் வாழ்க்கையில் குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டலின்படி நடப்பது.

குடும்பம், சமூகம், பொருளாதாரம் மற்றும் நீதி நிர்வாகத்தில் இவ்விரண்டையுமே இறுதியான நடுவராக ஏற்றுக்கொள்வது.

கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது சுயவிருப்பத்திற்கோ பழக்கவழக்கங்களுக்கோ முன்னுரிமை தராமல் இவ்விரண்டின் பக்கமே மீள்வது.


 இர்பாழ் பின் ஸாரியா ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்:

وَعَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:

«وَعَظَنَا رَسُولُ اللَّهِ ﷺ مَوْعِظَةً وَجِلَتْ مِنْهَا القُلُوبُ، وَذَرَفَتْ مِنْهَا العُيُونُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كَأَنَّهَا مَوْعِظَةُ مُوَدِّعٍ فَأَوْصِنَا، قَالَ:

أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ تَأَمَّرَ عَلَيْكُمْ عَبْدٌ، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الخُلَفَاءِ الرَّاشِدِينَ المَهْدِيِّينَ، تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ، فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»

"அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஒருமுறை எங்களுக்குக் கண்களில் கண்ணீர் வழியும்படியும், இதயங்கள் நடுங்கும்படியும் ஓர் உருக்கமான உபதேசம் செய்தார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதரே! இது விடைபெறுபவரின் உபதேசம் போலிருக்கிறதே! எங்களுக்கு எதை உபதேசிக்கிறீர்கள்?' என்றார்.

அதற்கு நபியவர்கள்:

'அல்லாஹ்வை அஞ்சி நடக்குமாறும், ஓர் அபிசீனிய அடிமை உங்கள் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் பணிக்கிறேன். எனக்குப் பின்னால் உங்களில் யார் வாழ்கிறாரோ, அவர் பல கருத்து வேறுபாடுகளைக் காண்பார். அப்போது எனது சுன்னாவையும், நேர்வழி நின்ற நல்லாட்சி புரிந்த கலீஃபாக்களின் (குலஃபாவுர் ராஷிதீன்) சுன்னாவையும் நீங்கள் பற்றிப் பிடியுங்கள்; அதைக் கடைவாய்ப் பற்களால் கவ்விப் பிடித்துக் கொள்ளுங்கள்! மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் பித்அத்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன்; ஏனெனில் ஒவ்வொரு புதுமையும் வழிகேடாகும்!' என்றார்கள்." நூல்: சுனன் அபீ தாவூத்


 கலீஃபா அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் ஆட்சிப் பிரகடனம்

நபியவர்களின் மறைவுக்குப் பின் முதல் கலீஃபாவாகப் பொறுப்பேற்ற அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆட்சியின் முதல் உரையே குர்ஆன் மற்றும் சுன்னாவை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது:


"மக்களே! நான் உங்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்; ஆனால் உங்களை விட நான் சிறந்தவன் அல்லன். நான் நன்மையைச் செய்தால் எனக்கு உதவுங்கள்; நான் தவறிழைத்தால் என்னை நேர்வழிப்படுத்துங்கள்... அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் நான் கட்டுப்பட்டு நடக்கும் வரை நீங்கள் எனக்குக் கட்டுப்படுங்கள். நான் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்தால், எனக்குக் கட்டுப்படும் கடமை உங்களுக்கு இல்லை!" நூல்: அல்-பிதாயா வந்-நிஹாயா (இப்னு கஸீர்)


ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்கு எல்லை வகுப்பதும், நீதியை நிலைநாட்டுவதும் குர்ஆனும் சுன்னாவும் மட்டுமே என்பதை இந்த நிகழ்வு தெளிவுபடுத்துகிறது.


உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் சீர்திருத்தம்


உமைய்யா ஆட்சிக்காலத்தில் பழங்குடிப் பெருமைகளும் குடும்ப ஆதிக்கமும் மீண்டும் தலைதூக்கிய போது, 'ஐந்தாவது நேர்வழி நின்ற கலீஃபா' என்று போற்றப்படும் உமர் பின் அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் முழங்கிய வாசகம்:

أَلَا لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ، أَلَا إِنَّهُ لَيْسَ بَعْدَ نَبِيِّكُمْ نَبِيٌّ، وَلَا بَعْدَ الْكِتَابِ الَّذِي أُنْزِلَ عَلَيْهِ كِتَابٌ

"படைத்தவனுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் எந்தப் படைப்பினத்திற்கும் கட்டுப்படக் கூடாது. அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் நபிக்குப் பிறகு எந்த நபியும் இல்லை; அவருக்கு அருளப்பட்ட வேதத்திற்குப் பிறகு எந்த வேதமும் இல்லை. அல்லாஹ் எதை ஆகுமாக்கினானோ அது மறுமை நாள் வரை ஆகுமானது; அவன் எதைத் தடுத்தானோ அது மறுமை நாள் வரை தடுக்கப்பட்டதே ஆகும்!"


நபிகள் நாயகம் ﷺ அவர்கள் விட்டுச் சென்ற இந்த வழிகாட்டுதல் வெறும் தத்துவக் கோட்பாடு அல்ல; காலங்கள் மாறினாலும், சவால்கள் உருவெடுத்தாலும் முஸ்லிம் சமூகம் தன் சுயத்தை இழக்காமல், திசைமாறாமல் நேர்வழியில் பயணிப்பதற்கான நிரந்தரத் திசைகாட்டியாகும்.


உரையின் முடிவில் நபியவர்கள் திரண்டிருந்த லட்சக்கணக்கான தோழர்களை நோக்கி:

 وَأَنْتُمْ تُسْأَلُونَ عَنِّي، فَمَا أَنْتُمْ قَائِلُونَ؟

"என்னைப்பற்றி (மறுமையில்) உங்களிடம் விசாரிக்கப்படும் போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று வினவினார்கள்.


அதற்கு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில்:

 نَشْهَدُ أَنَّكَ قَدْ بَلَّغْتَ وَأَدَّيْتَ وَنَصَحْتَ

"நிச்சயமாக நீங்கள் (இறைச் செய்தியை) முழுமையாகச் சேர்த்துவிட்டீர்கள், உங்கள் தூதுத்துவப் பொறுப்பை நிறைவேற்றிவிட்டீர்கள், நன்மையையே நாடினீர்கள் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்றனர்.


அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்னர் மக்களை நோக்கிச் சுட்டிக்காட்டி மூன்று முறை இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:

 اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ

"இறைவா! நீயே சாட்சி! இறைவா! நீயே சாட்சி! இறைவா! நீயே சாட்சி!" நூல்: ஸஹீஹ் முஸ்லிம்.


மேலும் இறுதியாக:

 فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ

 "இங்கு வந்திருப்பவர், வராதவருக்கு இந்தச் செய்திகளை எத்திவைக்கட்டும்" என்று கட்டளையிட்டார்கள். நூல்: ஸஹீஹ் அல்-புகாரி 


மார்க்கம் முழுமை பெற்றதை அறிவிக்கும் திருக்குர்ஆன் ஆயத்

அரஃபா மைதானத்தில் நபியவர்களின் இந்த பேருரை நிறைவடைந்த தருணத்தில், ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக அல்லாஹ் வசனத்தை இறக்கி வைத்தான்:

 الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; எனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைப்படுத்தி விட்டேன்; இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்."திருக்குர்ஆன் 5:3 


இந்த வசனம் இறங்கியதும் மார்க்கப் பணி நிறைவடைந்துவிட்டது, நபியவர்கள் நம்மைப் பிரியும் காலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்ணீர் சிந்தினார்கள். இந்நிகழ்வு நடந்து சுமார் 81 நாட்களுக்குப் பிறகு பெருமானார் ﷺ அவர்கள் வஃபாத்தானார்கள்.


அரஃபா பெருவெளியில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை என்பது ஒரு சகாப்தத்தின் நிறைவாக மட்டுமின்றி, எக்காலத்திற்குமான மனிதகுலத்தின் வாழ்வியல் சாசனமாகவும் திகழ்கிறது.


மனித உயிர்கள், உடைமைகள் மற்றும் மானத்தின் புனிதத்தை நிலைநிறுத்தியது; உழைப்பைச் சுரண்டும் வட்டி முறையை அடியோடு ஒழித்தது; பழிவாங்கும் வன்முறைக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது; பெண்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாத்தது; நிறம், இனம், மொழி கடந்த உலகளாவிய மனித சமத்துவத்தை நிலைநாட்டியது என இந்த உபதேசத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒட்டுமொத்த சமுதாய நீதிக்கான அடித்தளங்களாகும்.


தான் கொண்டுவந்த இறைச்செய்தியை முழுமையாக மக்களிடம் எத்திவைத்துவிட்டதற்கு வானையும் பூமியையும் சாட்சியாக்கிய நபியவர்கள், உலக முடிவுக்குள் எந்தக் குழப்பமும் வழிகேடும் தங்களை அண்டாமல் இருக்க அல்லாஹ்வின் வேதத்தையும் (திருக்குர்ஆன்), தன் வழிகாட்டலையும் (சுன்னத்) மட்டுமே பற்றிக்கொள்ளுமாறு இறுதிப் புகலிடத்தை வழங்கிச் சென்றார்கள்.


அந்தப் பேருரையின் நிறைவில் நபியவர்கள் இட்ட கட்டளையான, "இங்கு வந்திருப்பவர், வராதவருக்கு இந்தச் செய்திகளை எத்திவைக்கட்டும்!" என்பது வெறும் வார்த்தையல்ல; ஒவ்வொரு காலத்திலும் வாழும் மனிதர்களின் பொறுப்புணர்வை உலுக்கும் வரலாற்று அழைப்பாகும். அவ்வழிகாட்டல்களை தனிநபர் மற்றும் சமூக வாழ்வில் பிரதிபலிப்பதே அந்த இறுதித் தூதருக்கு நாம் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகும்.


யா அல்லாஹ்! அகிலங்களின் அருட்கொடையாக வந்த எங்கள் உயிரினும் மேலான இறுதித் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் எமக்குக் கற்றுத்தந்த இந்த உயரிய உபதேசங்களை எங்கள் வாழ்க்கையில் முழுமையாகப் பின்பற்றி வாழும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள்வாயாக!


யா ரஹ்மான்! பிற மனிதர்களின் உயிர், உடைமை, மானத்திற்கு மதிப்பளித்து, எந்தவொரு அநீதியும் செய்யாமல் வாழுமளவிற்கு எங்கள் உள்ளங்களில் தூய இறையச்சத்தையும் நீதியையும் நிலைநிறுத்துவாயாக!

யா கரீம்! அனைத்து விதமான வட்டி, அநியாயச் சுரண்டல்கள், ஏமாற்று வழிகளிலிருந்து எங்களையும் எங்கள் குடும்பங்களையும் எங்களின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பாயாக! ஹலாலான பரக்கத்தான வாழ்வாதாரத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.

முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்