செவ்வாய், 21 ஜூன், 2011

அழகில்லை.... இது அழகில்லை!




1. ஏழைகளுக்கு பெருமை அழகில்லை


2. உலமாக்களுக்கு பேராசை அழகில்லை

3. அரசர்களுக்கு அவசரம் அழகில்லை

4. சீமான்களுக்கு கஞ்சத்தனம் அழகில்லை

5. மேதைகளுக்கு மாண்பற்ற செயல் அழகில்லை

6. உயர் வம்சத்தினருக்கு வஞ்சிப்பது அழகில்லை


7. கணவனுக்கு சந்தேகம் அழகில்லை.

8. மாணவர்களுக்கு மறதி அழகில்லை.


9. மனைவிகளுக்கு மறைத்தல் அழகில்லை

10. வியாபாரிகளுக்கு எடைகுறைப்பு அழகில்லை

11. யாசகர்களுக்கு ஆணவம் அழகில்லை

12. ஆசிரியர்களுக்கு பாரபட்சம் அழகில்லை.

13. உயர் அதிகாரிகளுக்கு மெத்தனம் அழகில்லை

14. காவலாளிக்கு தூக்கம் அழகில்லை.

15. நண்பர்களுக்கு எதிர்பார்ப்பு அழகில்லை.

16. போட்டியாளருக்கு பொறுமையின்மை அழகில்லை.

17. பெரியவர்களுக்கு புலம்பல் அழகில்லை.

18. சிறியவர்களுக்கு அகம்பாவம் அழகில்லை.

19. மருத்துவர்களுக்கு மனிதநேயமின்மை அழகில்லை.

20. மனிதனுக்கு சகிப்பின்மை அழகில்லை.

வியாழன், 16 ஜூன், 2011

அமெரிக்காவின் இன்னொரு முகம்! கலீல் பாகவீ






உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைச் சேர்ந்த நான், இரண்டாவது பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கு வந்திருப்பது இதுதான் முதல் முறை. தாராள அகலத்தில் சாலைகள், குப்பைகள் இல்லாத மிகச் சுத்தமான தெருக்கள், ஜொலிக்கும் தெரு விளக்குகள், பறந்து செல்லும் கார்கள் என எல்லாமே என்னை வாயடைக்கச் செய்தன. சிகாகோவின் ஓ'ஹாரே விமான நிலையத்திலிருந்து நான் தங்கியிருக்கும் இடம் வரையிலான 10 மைல் சாலைப் பயணத்தில், ஏதாவது ஓர் அப்பாவியாவது சாலையில் நடந்து செல்வார் என்று தேடித் தேடி தோற்றுத்தான் போக வேண்டியிருந்தது. எல்லாம் ஒரு கனவு மாதிரித் தோன்றியது.

இங்குள்ள சாலைகளைப் பார்த்து அரசையோ ஒப்பந்தக்காரரையோ சபிக்க வேண்டியதில்லை. எல்லாம் முகம் பார்க்கும் அளவுக்குப் பளிச்சென்று இருக்கின்றன. ஒரு குடிசையோ, ஒண்டுக் குடித்தனமோ என் கண்களுக்குத் தென்படவேயில்லை.

கிராமப்புறங்களுக்குக்கூட மிகத் தரமான சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. நகரத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமங்களிலும் உண்டு. இது கிராமம், இது நகரம் என்று பிரித்தறிவது கூடச் சிரமம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இங்கு எல்லோரிடமும் கார் இருக்கிறது. கார் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அனைவரும் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்களே என்று நான் நினைத்துக் கொண்டேன். நடந்து போவோரைக் காண்பதே அரிது. உண்மையில் இங்குள்ள சாலைகளில் நடந்து போவதற்கென தனிப் பாதையே கிடையாது.

கொஞ்சம் விசாரித்துப் பார்த்தபோது, 2007-ம் ஆண்டுக் கணக்குப்படி அமெரிக்காவில் 25.44 கோடி பயணிகளுக்கு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. அப்படியென்றால், அமெரிக்காவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் கார் வைத்திருக்க வேண்டும். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள்கள்கூட வைத்திருக்கலாம்.

இதை என்னால் நம்பவே முடியவில்லை. நாம் பார்த்த நகரம் தவிர, மற்ற பகுதிகள் வேறு மாதிரி இருக்கலாமோ என்கிற சிந்தனைகூட என் மனதில் ஓடியது. ஆனால், அது தவறு என்று பின்னர் தெரிந்தது. வாஷிங்டன் டி.சி, நியூயார்க் போன்ற பெரிய நகரங்களுக்கும் போஸ்டன், மிச்சிகன் சிட்டி, நியூ ஜெர்சி, பால்திமோர் போன்ற சிறிய நகரங்களுக்கும் சென்றபோது, முன்பு கண்ட காட்சிகளையே கண்டேன். எல்லாம் வளமையான ஜொலிக்கும் நகரங்கள்தான்.

பத்துப் பதினைந்து ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்களிடம் கேட்டால் வேறு ஏதேனும் விவரங்கள் தெரியவரும் என்கிற எண்ணத்தில் பலரிடம் விசாரித்தேன். அவர்களும் இதையேதான் சொன்னார்கள். எல்லா நகரங்களும் இப்படித்தான் இருக்குமென்றார்கள். ஏழை நாடுகளில் உள்ள எந்தவொரு மூன்றாந்தரமான நிலைமையும் அமெரிக்காவில் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று எனக்குத் தோன்றியது.

நாட்டின் வளத்துக்கு ஏற்றபடி மக்களும் நவநாகரிகப் பழக்கவழக்கங்களுடன் வசதியான வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனது முதல் பார்வையிலேயே மற்ற நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வித்தியாசத்தைக் கண்டுகொள்ள முடிந்தது. இந்தியாவைக் காட்டிலும் மூன்று மடங்கு நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களே வாழ்கிறார்கள் என்பதும் ஆச்சரியமளித்தது.

அண்மையில் வெளியான பத்திரிகைச் செய்தியின்படி, அமெரிக்காவில் உள்ள 39 சதவீதம் வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. தேசிய செல்லப் பிராணிகள் வளர்ப்போர் அமைப்பினர் நடத்திய கணக்கெடுப்பில், 4.56 கோடி அமெரிக்க வீடுகளில் சுமார் 7.75 கோடி நாய்கள் வளர்க்கப்படுவதாகத் தெரியவந்திருக்கிறது. அதாவது, சில வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்கள்கூட வளர்க்கப்படுகின்றன.

நாய்களைத் தவிர வேறு சில செல்லப் பிராணிகளையும் அமெரிக்கர்கள் வளர்க்கின்றனர். பறவைகள் (1.5 கோடி), பூனைகள் (9.36 கோடி), குதிரைகள் (1.33 கோடி) போன்றவையும் அமெரிக்கர்களின் செல்லப் பிராணிகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

பொருளாதார மந்தநிலையாலோ, கதவடைப்புகளாலோ, வேலை இழப்புகளாலோ இந்தச்  செல்லப்பிராணிகள் வளர்ப்பு மட்டும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சொல்லப்போனால், கடந்த சில ஆண்டுகளில் செல்லப் பிராணி வளர்ப்பு 5% அதிகரித்திருக்கிறது.

2009-ம் ஆண்டுக் கணக்குப்படி செல்லப் பிராணிகளுக்காக அமெரிக்கர்கள் செலவு செய்த தொகை மட்டுமே கிட்டத்தட்ட | 2 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. உலக வங்கியின் ஆவணங்களின்படி, அந்த ஆண்டில் உலகில் 114 நாடுகளின் மொத்த வருவாயே இதைவிடக் குறைவுதான்.

அமெரிக்கர்கள் வளர்க்கும் நாய்களுக்குக் கிடைக்கும் சொகுசையும், அன்பையும் ஏழைநாடுகளில் உள்ள மனிதர்கள் கனவில்கூட அனுபவிக்க முடியாது. இதெல்லாம் என்ன பிரமாதம்.

நாய்களுக்கென்ற பிரத்யேகமாக ஹோட்டல்களே இயங்குகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அங்குள்ள அறைகளில் ஒரு நாள் தங்குவதற்கு | 4,500-க்கு மேல் செலவாகும். இதுதவிர, நாய்களுக்கென தனி காப்பகங்களும், மசாஜ் கிளப்களும் கூட இருக்கின்றன. இதிலிருந்து அமெரிக்காவில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.

இந்த நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு சுமார் | 640 லட்சம் கோடியாகும். நடப்பு ஆண்டில் பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை மட்டும் சுமார் | 31 லட்சம் கோடிகள். உலகின் ஒட்டுமொத்த ராணுவச் செலவில் இது 44 சதவீதமாகும். உலகின் 189 நாடுகளின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே, ராணுவத்துக்காக அமெரிக்கா செய்யும் செலவை விடக் குறைவானது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா ஒரு பணக்கார நாடு என்று நாம் முடிவுக்கு வருவதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டியிருக்கிறது?

ஆனால், இத்தனை பணக்கார நாடு, பொறுப்பான நாடாக இருக்கிறதா என்கிற கேள்வி நம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. உலகில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் ஏழைகளாகப் பசியால் வாடிக் கொண்டிருக்கும்போது, ராணுவத்துக்கும் நாய்களுக்கும் பல ஆயிரம் கோடிகளைச் செலவும் செய்யும் ஒரு நாட்டை பொறுப்பான நாடு என்று எப்படி ஏற்றுக்கொள்வது?

மக்கள் எப்படிப்பட்ட சொகுசான வாழ்க்கையைத் தேடுகிறார்கள் என்பதற்குத்தான் இங்கு நாய்களை உதாரணமாகக் காட்ட வேண்டியதாயிற்று. மற்றபடி நாய்களை நாம் வெறுக்க வேண்டும் என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது.

உலகின் மற்ற நாடுகளை விடுங்கள். மிக உன்னிப்பாகப் பார்த்தால், ஜொலிக்கும் அமெரிக்காவுக்குள்ளேயே ஏழ்மை இருக்கத்தான் செய்கிறது. முதலில் நாம் பார்த்த கணக்குக்கு நேர் எதிரான, ஆச்சரியப்படத்தக்க வகையிலான இன்னொரு புள்ளிவிவரம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

செல்வத்தில் கொழிக்கும் அமெரிக்காவிலேயே 5 கோடி பேர் ஏழைகளாம். 1.67 கோடி குழந்தைகளுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிலும் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களில் 25 சதவீதம் பேர் ஏழைகளாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. ஏழ்மையிலும் இனப்பாகுபாடு உள்ளது என்பது தனிக்கதை.

இதேபோல, துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோருக்கு வீடில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்நாட்டு வீட்டு வசதிவாரியம் கடந்த 2008-ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில் சுமார் ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் வீடில்லாதவர்கள் எனத் தெரியவந்தது.

இவற்றிற்கெல்லாம் மேலாக, வேலையில்லாத் திண்டாட்டம் அமெரிக்காவை ஆட்டிப் படைக்கிறது. கிட்டத்தட்ட 9.5 % அமெரிக்கர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இப்போதைக்கு இந்த நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை. நிறையப் பேருக்கு வேலையில்லையென்றால், வருமானம் இல்லாத ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகம் என்பதுதானே பொருள்.

எனது முதல் பார்வையில் நான் கவனிக்காமல்விட்ட இன்னொரு விஷயம் அமெரிக்காவின் சுற்றுச்சூழல் சீர்கேடு. சுமார் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் "உயிரை அச்சுறுத்தும்' அளவுக்கு காற்று மாசுபாடு நிறைந்த பகுதிகளில் வாழ்வதாக அமெரிக்க நுரையீரல் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் பத்தியில் நாம் பார்த்த கார்களின் அணிவகுப்பு காற்றை விஷமாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சமதர்ம சமூகம் பற்றி நாளுக்கு நாள் பேசிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் பளிச்சென்ற சாலைகளுக்கும், பகட்டான வாழ்வுக்கும், சுத்தமான சூழலுக்கும், ஜொலிக்கும் நகரங்களுக்கும் பின்னணியில் இருப்பது வறுமையும், சுற்றுச்சூழல் சீர்கேடும், இயற்கை வளங்களின் விரயமும்தான். வறுமையை விரட்டுவதற்கு அமெரிக்கா யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. ராணுவச் செலவைக் குறைத்துக் கொள்வதுடன் வீணாகப் போகும் வளத்தை முறைப்படுவத்துவதுமே போதுமானது.

- பிஎஸ்எம் ராவ்

ஹலாலான உழைப்பின் சிறப்பு மவ்லவி M. முஹம்மது இப்ராஹீம் பாகவி




இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)

ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல்: பைஹகீ)

உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களுடனும் இருப்பார். (நூல்: திர்மிதீ)
பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஃஜம்)

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :
நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார்.
இந்நிலையில் அவரைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை - மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் -  விவசாயம்

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - விவசாயம்
நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் -  விவசாயம்

நபி யஸஃ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் -  விவசாயம்
நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - வியாபாரம்

நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் -  வியாபாரம்
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - தச்சுத் தொழில்

நபி ஜக்கரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - தச்சுத் தொழில்
நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் -  வேட்டையாடுதல்

நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் - ஆடு மேய்த்தல்
நபி ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் -  ஆடு மேய்த்தல்

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் -  ஆடு மேய்த்தல

நபி லுக்மான்அலைஹிஸ்ஸலாம் அவர்கள் -  ஆடு மேய்த்தல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் -  ஆடு மேய்த்தல்

சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். ''உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள்''. (ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி)

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்
1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.
3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.
5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.
7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.
9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.
11. ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான். எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், "இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்" எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

ஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:

நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.

ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. (ஆதாரம்: கல்யூபி, பக்கம்: 37)
ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. "பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் ரளியல்லாஹு அன்ஹு நூல்: மிஷ்காத், பக்கம்: 243)

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர் களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1, பக்கம்: 203)

வியாழன், 9 ஜூன், 2011

பள்ளி சீருடையும், பாலியல் குற்றங்களும்











வருங்காலத் தூண்கள்

,
எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.


உணவு

,
உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. பள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தனியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.




பாடப்புத்தகம் தவிர

,
மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம். புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும்.
முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




சில சமூகவிரோதச் செயல்களுக்கு

,
இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும். சீருடை தொடர்பாக சிலரிடம் பேசினோம்.




அதிலிருந்து...






மனோத்தத்துவ நிபுணர் பொன்னி கூறியதாவது:

தற்போதைய பெரிய பிரச்னைகளில் ஒன்று குழந்தைகளின் பாதுகாப்பு. குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுதல்
, பாலியல் கொடுமைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒழுக்கம் என்பது குழந்தைகள் மீதான பெற்றோர்களின் வளர்ப்பு முறையைத்தான் குறிக்கிறது. பெற்றோர்களே மாடர்ன் கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர். மாடர்ன் ஆடைகளை அணிவதும், உணவு பழக்கங்களை மாற்றுவதுமாக கலாசாரம் மாறி வருகிறது. இதன் அடிப்படை எங்கே என்று தேடினால், மற்ற நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டது தான். கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருப்பினும், நமக்கு ஒத்துவராத விஷயங்களை மட்டும் காரணமே இல்லாமல் கற்றுக் கொள்கிறோம். நல்ல பழக்கங்கள் என்பது பெற்றோர்களிடம் இருந்து கற்க வேண்டியது. பெற்றோர்கள் முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கங்களை நாம் கற்று கொள்ளும் மற்றொரு இடம் பள்ளி. அடிப்படை கலாசாரங்களும், பண்பாடுகளும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளில் கூட ஒழுக்க விதிமுறைகள், தனிமனித பண்புகள், வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிக் கற்று கொடுக்க நேரம் இல்லை என்பது, இன்னும் பரிதாபமான விஷயம்.குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. "டிவி' மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தமும், தேவை இல்லாத ஊடுருவலும் அதிகம். அவற்றில் வரும் காட்சிகளும், முரண்பாடான கருத்துகளும் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலே பதிவாகிறது. அவற்றைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, பொன்னி கூறினார்.




சர்வஜன பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில்

,
""இன்டர்நெட், சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், குழந்தைகளின் மீது தவறாகத் திணிக்கிறது. இன்னும் சொல்வதானால், பல பெற்றோர்கள் அத்தகைய சீருடைகளை விரும்புகின்றனர். தாய்மார்கள், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், நடத்தை முறைகளைக் கற்றுத்தர வேண்டும்,'' என்றார்.




அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சுகுணா கூறியதாவது:

பெற்றோர் சம்மதத்தோடு தான் சீருடைகளை குழந்தைகள் அணிகின்றனர். இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமானாலும்
, இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. தங்களது குழந்தைகள் தவறாக சித்தரிக்கப்படுவதை, கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அரசால், மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் சேர்க்கின்றனர்; அது தவறான கருத்தாகும். அரசு பள்ளிகளில் மட்டும் சீருடையாக சுடிதார்கள் இருப்பதை தவிர்த்து, அனைத்து பள்ளிகளிலும் இதனை கொண்டு வர வேண்டும். "பின்னோபார்' சீருடைகளோடு மட்டும் நின்றுவிடாமல், "மினிபார்' சீருடைகளும் வந்துவிட்டன. அது இன்னுமொரு கொடுமையான விஷயம். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தான் பாதுகாப்பு அதிகம். அரசு பள்ளிகள் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை; ஆனால் தனியார் பள்ளிகள் செய்கின்றன. இத்தனை பிரச்னைக்கும் காரணம் பள்ளி நிர்வாகிகள் மட்டும்தான் என்று குறை கூற முடியாது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் அரசு, இதில் கவனம் செலுத்தி சீருடைகளை மாற்றி அமைக்க முடிவெடுக்கலாம். நம்முடைய கலாசார உடைகள், சீருடைகளாக வரலாம். அனைவரும் சுடிதார் மற்றும் பல விதமான நாகரீகமான உடை அணிவதன் மூலம், பல பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.இவ்வாறு, சுகுணா கூறினார்.




பி.எஸ்.ஜி.

,
பப்ளிக் பள்ளி முதல்வர் க்ரிஷ் கூறுகையில், ""ஆசிரியப்பணி சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்டது. வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத்தருவதில்லை. "டிவி', இன்டர்நெட் போன்ற ஊடகங்களின் தாக்கத்தை, குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கின்றனர். ஆண், பெண் இருபாலினத்துக்கும், சகபாலினத்தின் மீது பரஸ்பர மரியாதை இல்லை. வெளிநாட்டு கலாச்சார மோகம், பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நல்லவை இருக்கின்றன. ஆனால், நமது சூழலுக்கு ஒத்துவராத உடை உள்ளிட்ட தேவையற்றவைகளை மட்டுமே பின்பற்றுகிறோம்,'' என்றார்.




ஸ்டேன்ஸ் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன் கூறுகையில்

,
""பள்ளிச் சீருடைகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அதற்கேற்ற உள்ளாடைகளை அணிய, உடற்பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்பர். சீருடைகள் மட்டுமே குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என சொல்ல முடியாது. இருப்பினும், பள்ளிச் சீருடை முறை மாற்றுவது குறித்து, நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும்,'' என்றார்.




ஜி.டி.

,
பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "சீருடைகளை இறுக்கமாக அணியாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் எப்போதும் விளையாட்டுத் தனமாகத்தான் இருக்கும்; அவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. சீருடைகளை மாற்றுவதை விட மக்களின் மனதை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் இல்லாத குற்றச்சம்பவங்கள் தற்போது பெருகியதற்குக் காரணம், மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்தான்,' என்றனர்.




சினிமாக்களில் சித்திரிக்கும் கெட்ட விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களின் மனப்பாங்கு

;
தவறாக வழிகாட்டும், "டிவி', சினிமா துறைகள் பற்றி பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், குற்றம் சாட்டின. துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவனும் மொபைல்போன் வைத்திருப்பது, அந்தரங்க விஷயங்கள் இன்டர்நெட்டில் மிக எளிதாக கிடைக்கும் அவலம் போன்ற பெற்றோரின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கும் விஷயங்களையும் அவர்கள் தெரிவித்தனர். பாடப்புத்தகங்களைச் சொல்லித்தருவது மட்டுமே கடமை என்றில்லாமல், பண்பாட்டுடன் குழந்தைகள் வளர்வதற்கும் கல்வி நிறுவனங்களே பொறுப்பு. கவனச்சிதறல் ஏற்படுத்தாத கட்டுப்பாடான உடைகள் வேண்டும் என்பதால் தா­ன், கல்வி நிறுவனங்கள் உடை விஷயத்தைத் தீர்மானிக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று; எனினும், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சீருடைகளின் அளவுகளை கல்வி நிறுவனங்கள் ஒருமுறை பரிசீலிக்கத்தான் வேண்டும்.




பெற்றோரே முன்னுதாரணம்!

பேஷன் என்ற பெயரில் உடைகள் இன்று பெற்றுள்ள வடிவங்கள் பல. அதிலும்
, இன்றைய இளம் தலைமுறையினர் இதில் கலாச்சாரப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். இறுக்கிப் பிடிக்கும் மேற்கத்திய கலாசாரத்துடனான சில மாடர்ன் உடைகள் பலரது கண்களையும் உறுத்தவே செய்கின்றன. அதுவும், நமது உணவு மற்றும் புற சூழல்களால் இன்றைய குழந்தைகள் உடலளவில் அதீத வளர்ச்சியுடன் திகழ்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உடை விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதிலும், இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளே இன்று அதிகம் உள்ள நிலையில் பள்ளிச் சீருடைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இன்டர்நேஷனல், சி.பி.எஸ்.சி., ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், அரசு பள்ளிகள் என பல நிர்வாகங்கள் இருந்தாலும் அரசு பள்ளிகள் தவிர மற்றவற்றில் நவநாகரிமான மேற்கத்திய பாணியிலான யூனிபார்ம்கள் (குட்டி ஸ்கர்ட்டுகள், பெல்ட், டை, ஷு) போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.




நாளை நம் குழந்தைகள் வெளிநாடுகளில் பணியாற்ற படிப்பை விட இவையெல்லாம் தான் தலைமைத் தகுதிகள் என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சுடிதார்

,
தாவணி போன்ற கலாசார வகையிலான யூனிபார்ம்கள் அணிவது பலருக்கும் கட்டுப்பெட்டித்தனமாகவே படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, பள்ளிகளை மட்டுமே குறை கூறுவதைத் தவிர்த்து பெற்றோர்களும் சற்று விழிப்புடன் இருக்கலாம். எந்த வகையானாலும் யூனிபார்ம் தைக்கும் போதே இறுக்கிப்பிடிப்பதாய் இல்லாமல் சற்று தளர்வாய், குழந்தைகளின் உடல்வாகுக்கேற்ப தைப்பது நலம்.




பெண் பிள்ளைகள் சீக்கிரம் வளர்ந்துவிடும் என்பதைக் குறிக்க

, "
பெண் பிள்ளைகள் வளர்த்தி பீர்க்கங்காய் வளர்த்தி' என்பார்கள் கிராமப்புறத்தில். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் சிக்கனம் பார்க்காமல் ஆண்டுதோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப யூனிபார்ம்களை தைப்பது நலம். ஸ்கர்ட் அணிந்தாலும் சில பள்ளிகளில் முட்டிக்கால் வரையிலான ஸ்டாக்கிங்ஸ், லெகின்ஸ் போன்ற தரமான உள்ளாடைகள் அணிய வலியுறுத்துகின்றனர். இம்முறை இல்லாத பள்ளிகளில் பெற்றோர் தாங்களாகவே குழந்தைகளுக்கு இதை அணியப் பழக்கலாம். பின்புறமாக இருதோள்களில் அணியும் பைகளுக்கு பதிலாக ஒருபுறமாக அணியும் பைகளை வாங்கிக் கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்கள் தாங்களாகவே ஒரு உதாரணமாகத் திகழ்வது குழந்தைகளையும் கலாசாரம் பிறழாமல் வாழச் செய்யும்...