புதன், 22 ஏப்ரல், 2020

ஜும்ஆ குத்பா. ஏன் அரபியில்...?


2004 ஜூன் 28,29 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற ஃபிக்ஹ் மாநாட்டில் கேட்கப்பட்ட சில கோள்விகளும் அவற்றுக்கு மெளலானா முஃப்தி சயத் அஹ்மத் சாஹிப் அவர்கள் அளித்த பதிலும். வாசகர்களுக்காக இங்கே தரப்படுகிறது.

கேள்வி : நபியவர்கள் மிம்பர் மீது அமர்ந்து ஜும்ஆ குத்பா ஓதினார்களா...?


பதில் : இல்லை! நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்துகொண்டு பயான் செய்ததாக வரும் அறிவிப்புகள், ஜும்ஆவுடைய குத்பா அல்லாத மற்ற சமயங்களில் செய்யப்பட்ட உபதேசங்களாகும்.

கேள்வி : நிற்க இயலாதவர் அமர்ந்துகொண்டு ஜும்ஆ குத்பா ஓதலாமா...? அவ்வாறு ஓதுவது சுன்னத்திற்கு மாற்றமா..?

பதில் : தாராளமாக ஓதலாம்! சுன்னத்திற்கு மாற்றமாகாது. இன்னும் சொல்லப் போனால் நிற்க இயலாத இமாம் அமர்ந்து தொழவைப்பதும் அவரை பின் பற்றுபவர்கள் நின்று தொழுவதும் கூடும்.

ஆனால், நின்று கொண்டு குத்பா ஓத சக்தியிருந்தும் அமர்ந்து குத்பா ஒதினால் குத்பா கூடிவிடும். என்றாலும் அது சுன்னத்திற்கு மாற்றமாகும்

குறிப்பு : ஷாபியீ மத்ஹபு முறையில் நின்று குத்பா ஓதுவது, குத்பாவின் நிபந்தனைகளில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது

கேள்வி : ஜும்ஆவின் குத்பாவை ஒருவர் ஓத, மற்றவர் ஜும்ஆ தொழு வைப்பது கூடுமா...?

பதில் : எவ்வித காரணமுமின்றி இவ்வாறு செய்வது சுன்னத்திற்கு மாற்றமாகும் தக்க காரணமிருப்பின் தவறல்ல.


கேள்வி : அரபி அல்லாத வேறு மொழியில், அல்லது அரபியுடன் மற்ற மொழியைக் கலந்து ஜும்ஆ குத்பா ஒதுவது கூடுமா..?

பதில் : நபியவர்கள், ஸஹாபாக்கள் காலம் முதல் இன்று வரை ஜும்ஆ குத்பா அரபியிலேயே ஓதப்பட்டு. உம்மத்தின் ஒரு நடைமுறை ஏற்பட்டு இஜ்மாவின் அந்தஸ்தைப் பெற்றுவிட்டதால், அதற்கு மாற்றமாக செய்வது மக்ரூஹ் தஹ்ரீம் ஆகும்.

கேள்வி : குத்பாவின் நோக்கமே. மக்களுக்கு உபதேசம் புரிவதுதான், அவர்களுக்கு தெரிந்த மொழியிலே உபதேசம் செய்வதுதான் பலன் தரும். தெரியாக மொழியில் (அரபியில்) குத்பா ஓதி என்ன பயன்

பதில் (1) : திருக்குர்ஆன் மக்களின் நேர்வழிக்காக இறங்கியவேதம். எனவே ஒவ்வொருவரும் திருக்குர்ஆனை கற்று. ஓதி, அதிலுள்ள சட்டதிட்டங்கள் படி செயலாற்றுவது அவசியம். ஆனால், தொழுகையில் திருக்குர்ஆன் அரபி மொழியில்தான் ஒதப்படுகிறது. அரபி தெரியாதவர்கள் அதன் பொருள் விளங்காமல் ஓதி வருகிறார்கள். இதுவே நபியவர்கள், ஸஹாபாக்கள் காலம் முதல் இன்று வரை செய்யப்பட்டு வரும் நடைமுறை. ஓதுவதன் அர்த்தம் விளங்க வேண்டும் என்பதற்காக அரபியல்லாத மொழியில் ஓதினால் தொழுகை முறிந்துவிடும். மேலும். நபியவர்கள் திருக்குர்ஆனை தொழுகையில், அரபியில்தான் ஓத வேண்டும் என்று கூறியதாக எந்த அறிவிப்பும் கிடையாது.

நபிகளார் காலம் முதல் இன்று வரை பின்பற்றப்படும் நடைமுறைதான் குர்ஆனை தொழுகையில் அரபியில் ஒதுவதற்கு பெரும் ஆதாரம். ஆக, ஜும்ஆ குத்பாவின் நோக்கம், மக்களுக்கு உபதேசம் செய்வது. திருக்குர்ஆனின் நோக்கம் மக்களுக்கு நேர்வழி காட்டுவது, தொழுகையில் திருக்குர்ஆனை அரபியில் ஓதுவது நபிகளார் காலம் முதல் இன்று வரை உம்மத்தின் நடைமுறையாக இருப்பதுபோல் தான், ஜும்ஆவின் குத்பாவும். அன்று முதல் இன்று வரை அரபியில் ஒதுவது உம்மத்தின் நடைமுடையாக உள்ளது.

எனவே திருக்குர்ஆனை அவரவர் மொழியில் தொழுகையில் ஓத வேண்டும் என்று எவரும் கூறாதபோது ஜும்ஆவின் குத்பாவை மட்டும் அவரவர் மொழியில் ஓத வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்...?

பதில் (2) : அவரவர் மொழியில் குத்பா ஓத வேண்டும் என்பதற்கு. குத்பாவின் நோக்கம் மக்கள் தீனை விளங்கவேண்டும் என்பதே காரணமென மேலே கண்டோம். சற்று நடுநிலையுடன் சிந்திப்பின் இக்காரணம், இதன் தேவை தற்காலத்தை விட ஸஹாபாக்கள் காலத்தில் பன்மடங்கு இருந்தது.

ஏனெனில், அரபி மொழி அரேபிய தீபகற்பத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்தது வடக்கே ஈரானில் பார்ஸியும், ஈராக். சிரியா ஷாமில், ரூமியும், ஹபஷாவில் ஹபஷியும். திமிஷ்கில் திக்ரிக்கும், பலஸ்தீனில் கத்தானியும் பேசப்பட்டு வந்தது. இந்நாடுகளை ஸஹாபாக்கள் வெற்றி கொண்ட பின்னர் ஸஹாபாக்களின் நடைமுறை நம்பிக்கை நாணயத்தில் கவரப்பட்ட இந்நாட்டுமக்கள் தீனுல் இஸ்லாமை விரைவாக ஏற்றுக்கொண்டார்கள் பிறப்பிலேயே முஸ்லிமாக இருப்பவர்களுக்கு தீனை அறியும் தேவை அதிகமா? புதிதாக முஸ்லிமாக உள்ளவருக்கு தேவை அதிகமா? என்பதை இங்கு சிந்திக்க வேண்டும்.

ஆக புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அரபி மொழி அறியாத அம்மக்களுக்கு அவர்கள் மொழியிலேயே தீனை விளக்க வேண்டிய அவசியம் இருந்தும் நூறுவருட ஸஹாபாக்கள் காலத்தில், எங்கும், எப்போதும் அரபி அல்லாத பிராந்திய மொழிகளில் ஜும்ஆவுடைய குத்பா ஓதப்பட்ட வரலாறு இல்லை எனவே, தீனை விளங்குவதற்கு குத்பாவுக்கு முன் சிறிது நேரம் அவரவர் மொழியில் பிரசங்கம் செய்யும் வாய்ப்பு இருக்கும்போது. உம்மத்தின் நடைமுறையை மாற்றவேண்டிய அவசியம் என்ன? இவ்வாறு செய்வதால் தீன்
விளக்கமும் கிடைக்கும், உம்மத்தின் நடைமுறையும் பாதுகாக்கப்படும்.

கேள்வி : ஜும்ஆ குத்பா தொழுகையின் அந்தஸ்தே தவிர தொழுகையல்ல எனவே, தொழுகையில் குர்ஆனை அரபியில் ஓதவேண்டும் என்பதால் ஜும்ஆவின் குத்பாவும் அரபியில் தான் ஓதவேண்டும் என்று வலியுறுத்துவதன் அவசியம் என்ன...?

பதில் : ஒவ்வவொரு நாட்டிற்கும், ஒவ்வொரு மதத்திற்கும் தனிப்பட்ட மொழி உண்டு. அம்மொழி பரவலாக்கப்படுவதை, பிரபல்யபடுத்தப்படுவதை முன் வைத்தே அந்நாடும், மதமும் நிலைபெறும். நாட்டின் தேசிய மொழி பரவலாக்கப்படவில்லையெனில் அரசின் வலிமை குன்றி கட்டுக்கோப்பு சிதைந்துவிடும். அதுபோல் ஒரு மார்க்கத்தின் மொழி பிரபல்யபடவில்லையெனில் காலப்போக்கில் அம்மொழி மங்கி, அம்மொழியிலுள்ள மார்க்கத்தின் வேத நூல்களும் அழிந்துவிடும்

உதாரணமாக, தவ்ராத், இன்ஜீல், சுர்யானி மொழியில் இறங்கியது. அது பரவலாக்கப்படாததால் அம்மொழியும் இல்லை. அதை அறிந்தவரும் இல்லை சுர்யானி மொழியில் இறங்கிய தவ்ராத் இன்ஜீல் இன்று இல்லை. அதை ஹீப்ருவில் மொழி பெயர்த்து இருப்பினும் அதையும் பரவலாக அறிந்தவர் தற்போதுஇல்லை.

இதுபோல் இந்திய அரசின் ஆட்சி மொழியாக ஹிந்தி, ஆங்கிலம் இருப்பதினால் ரூபாய் நோட்டுகளில், முதலில் ஹிந்தியையும் அடுத்து ஆங்கிலத்தையும் குறிப்பிடப்படுகிறது. ஹிந்தி பேசப்படாத மாநிலங்களிலும் இதுவே கடைப்பிடிக்கப்படுகிறது

ஏனெனில், இதுதான் அரசின் ஆட்சி மொழி. அதைப் பரப்புவதில் தான் நாட்டின் கண்ணியமும், கட்டுக்கோப்பும் வலிமை பெறும்

இதுபோல் தான் மார்க்க மொழியினை பரப்பி, பாதுகாப்பதன் மூலம் அம்மொழியும். அம்மொழியிலுள்ள வேத நூல்களும் பாதுகாக்கப்படும்

மொழிகளை எப்படி பரப்புவது, பிரபலப்படுத்துவது என்பதையும் நாம் ஆராய வேண்டும். அரசின் மொழி பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், தபால் நிலையம், இரயில் நிலையங்களில் எழுதப்படுவதன் மூலம் பரப்பப்படுகிறது

அதுபோல் மார்க்க மொழியைப் பரப்புவதற்கும், சில முக்கிய இடங்கள், சந்தர்ப்பங்கள் உண்டு. இதனடிப்படையில் உலகம் முழுவதும் தொழுகை அழைப்பு அரபியல் சொல்லப்படுகிறது. மக்கள் ஒன்று சேரும் ஐவேளைத் தொழுகை அரபி மொழியில் நிறைவேற்றப்படுகிறது. எனவே. மக்கள் மிக அதிகமாக கூடும் ஜும்ஆ, பெருநாள் தினங்களிலும் நம் பாரம்பரிய மார்க்க, வேத மொழியான அரபியில் குத்பா ஓதப்படவேண்டும் என வலியுறுத்துகிறோம்

நபியவர்கள் காலம் முதல் இன்று வரை இந்நடைமுறை பின்பற்றப்பட்டதால் தான் அரபி மொழி பாதுகாக்கப்பட்டு, முஸ்லிம்களின் குழந்தைகள் அரபி மொழியை அறிந்திருப்பது ஒருபுறமிருக்க. மாற்று மத சகோதரர்களும் இம்மொழியை அறிந்து வருவது இங்கு சிந்திக்க வேண்டிய விஷயம்.

முக்கிய சந்தர்ப்பங்களில் தம் மொழியை முன்னோர்கள் விட்டுக் கொடுக்கவில்லையென்பதை பின்வரும் இரு சம்பவங்கள் மூலம் உணரலாம்.

1. ஒரு முறை ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்கள் பாரசீகத்திலுள்ள ஒரு கோட்டையை முற்றுகையிடுகிறார்கள். கோட்டைத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கமாண்டரான ஸல்மான் பார்ஸீ (ரலி அவர்கள் பாரசீக மொழி தெரிந்தும் அரபியில் பேசுகிறார்கள் அதை கோட்டைத் தளபதிக்கு மொழி பெயர்க்கப்படுகிறது.

2. மெளலானா அபுல் கலாம் ஆஜாத் (ரஹ் அவர்கள் ஆங்கிலேய வைஸ்ராயை சந்திக்கச் செல்கிறார்கள், ஆங்கிலப் புலமைபெற்ற, ஆங்கில நூற்கள் எழுதியுள்ள மெளலானா அவர்கள், உர்தூவில் பேசுகிறார்கள். அதை வைஸ்ராவுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது. வைஸ்ராய் ஆங்கிலத்தில் கூறுவதை மெளலானாவுக்கு உர்தூவில் மொழி பெயர்க்கப்படுகிறது.

ஒரு சமயத்தில் மொழி பெயர்ப்பாளர்கள் தவறாக மொழி பெயர்க்க மெளலானா அவர்கள் திருத்திக் கொடுக்கிறார்கள், மௌலானாவுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை உணர்ந்த வைஸ்ராய் தாங்கள் நேரடியாக ஆங்கிலத்தில் பேசலாமே மொழிப்பெயர்ப்பாளர் எதற்கு என்று கேட்டார்கள்.

அதற்கு மெளலானா அவர்கள், நான் ஆங்கிலத்தில் பேசினால், ஆங்கிலேயனை எதிர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். எங்களது மெழியை இதுபோன்ற முக்கிய சமயத்தில் விட முடியாது என பதிலளித்தார்கள்.

மேலும், இரு வரலாற்று உண்மைகளை இங்கு குறிப்பிடுவது உசிதம்.

1.ஸஹாபாக்கள் வெற்றிக்கொண்ட நாடுகளிலெல்லாம் ஆட்சிமொழி. மார்க்க மொழி இரண்டுமே அரபியாக இருந்த காரணத்தினால் இன்று அவைகள் அரபுநாடுகளாக ஆகிவிட்டன.

நம் இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து மன்னர்கள் வந்தனர். அவர்கள் ஆட்சி மொழியாக பார்ஸியையும், மார்க்க மொழியாக அரபியையும் வைத்தனர், எனவே, இந்தியா அரபு நாடாக மாறவில்லை. அம்மன்னர்கள் இந்தியாவிலிருந்து சென்றபோது அவர்கள் மொழியான பார்ஸியும் உடன் சென்றது.

ஆனால், இந்தியாவில் மார்க்க மொழி அரபியாக இருந்த காரணத்தால் இன்று சிறு குழந்தைகளும் அரபி மொழியை அறிந்துள்ளனர்.

ஒருமுறை தில்லி விமான நிலையத்தில் இருந்தபோது, என்னிடத்தில் ஒரு ஹிந்துப் பெண்மணி வந்து, உங்களது குர்ஆன் அரபியல்லாத மொழிகளிலும் உள்ளதா என்று வினவினார். அதற்கு நான் உர்தூ. பார்ஸி, ஹிந்தி, ஆங்கிலம் பல மொழிகளில் உள்ளது என்று கூறினேன். இதன் மூலம் குர்ஆனுக்கென்று ஓர் அசல் மொழி இருப்பதை அப்பெண் உணர்ந்துள்ளது தெரிகிறது.

ஆக, ஒரு வேளை அரபு நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ, இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் மார்க்க விஷயத்திலும் அரபிமொழி புறக்கணிக்கப்பட்டலோ, கைவிடப்பட்டு விட்டாலோ, பிறகு, ஸ்பெயின், தாஷ்கண்ட், ஸமர்கந்த், புகாரா, உஸ்பெஸ்கிஸ்தான், கஜகிஸ்தானில் போன்ற நாடுகளுக்கு ஏற்பட்ட முடிவுகளே நமக்கும் ஏற்படும். அதன்பின் அல்லாஹ் என்ற சொல்லையே உச்சரிக்கக் கூட இயலாமல் ஆகிவிடும்.

எனவே மார்க்க மொழியைப் பாதுகாக்க வேண்டும். மார்க்க விஷயத்தில் சிந்தனைக் கோளாறுகளை அனுமதிக்க கூடாது. உம்மத்தின் நடைமுறையை கைவிடாது, தீனின் விஷயத்தை விளங்கவே, அவரவர் தாய்மொழிகளில் சொற்பொழிவுகளும், குத்பா அரபியிலும் ஓதப்பட்டு வருகிறது.

2. மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பை அரபி மூலம் இன்றி வெளியிடுவது கூடாது.

வெறும் மொழிபெயர்ப்பை மட்டும் வெவெளியிட்டு அரபி மூலத்தை அகற்றிவிட்டால், மொழி மங்கிப் போய் வேதமே இல்லாது போய்விடும். எனவேதான் அரபி விளங்கினாலும் விளங்காவிட்டாலும், அரபி மூலத்துடன் தான் மொழிப் பெயர்ப்பு செய்ய வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது

கேள்வி : அரபியல்லாத மொழியில், அரபி கலந்து வேறு மொழியில் குத்பா ஓதினால் தொழுகை கூடுமா? கூடாதா..?

பதில் : ஹனபி மத்ஹபு படி குத்பாவில் அல்லாஹ்வின் திக்ர் இருப்பின் ஜும்ஆ கூடிவிடும்.

ஷாபியீ மத்ஹபு படி. 
1. அல்லாஹ்வை புகழ்தல்
2. நபியின் மீது ஸலவாத்து
3. தக்வாவின் வஸிய்யத்
4. குர்அனின் ஓர் ஆயத்
ஆகிய நான்கு விஷயங்கள் இருப்பின் ஜும்ஆ கூடும். எனினும் இஜ்மாவுக்கு மாற்றம் செய்வது மக்ரூஹ் தஹ்ரீம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை


2004 செப்டம்பர் மாத மனாருல் ஹுதா  இதழிலிருந்து...

மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக