செவ்வாய், 7 ஏப்ரல், 2020

அகீகா


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்ல்ஹி வபரகாத்துஹு...

நஹ்மத்ஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

பகத் காலல்லாஹு தஆலா பில்குர்ஆனில் அழீம். வல்புர்கானில் மஜீத். அம்மா பஃத்.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக.

அகிலத்திற்கு அருட்கொடையாய் வந்துதித்த அண்ணலம் பெருமான் ஸல் அவர்கள் மீதும் அவர்கள் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இங்கு வந்தருக்கும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் அல்லாஹ்வின் அருள் நின்று நிலவட்டுமாக. ஆமீன்

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

அகீகா கொடுப்பதைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை இங்கு நான் உங்களிடையே பேச வந்துள்ளேன். அன்பானவர்களே.....

குழ்ந்தை பாக்கியம் என்பது மனிதனின் வாழ்க்கையில் இறைவன் அருளும் மிகப்பெரிய நிஃமத்தாகும். அப்படிப்பட்ட நிஃமத் கிடைக்காமல் உலகில் பலரும் அழுது புலம்புகிறார்கள். இன்னும் சிலர் தங்களை மாய்த்துக் கொள்கிறாகள்.

குழந்தை பாக்கியம் கிடைக்காத ஒரு பெண் இப்படி கவிதை எழுதினாள்.

கட்டித் தங்கம் உருக்கி எடுக்க வரம் கேட்கவில்லை அன்பு மகளே

உன்னைக் கட்டி அணைக்க வரம்கேட்டேன்

பட்டு மெத்தை மேல் படுத்து உறங்க வரம் கேட்கவில்லை

பத்து மாதம் உன்னைச் சுமக்க வரம் கேட்டேன் என்றாள்.

அன்பிற்கினியவர்களே..... அப்படிப்பட்ட பிள்ளைச் செல்வம் ஒரு மனிதருக்கு கிடைத்தால் அதாவது ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்தால் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். இரண்டாவது நமது உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டும்.

மூன்றாவது அகீகா கொடுக்க வேண்டும். அகீகா என்றால் குழந்தை பிறந்ததற்காக ஆட்டை அறுத்து அதை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படும்

ஏழையாக இருந்தாலும் அகீகாகொடுப்பது "சுன்னத் முஅக்கதா என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். நபியவர்களும் சஹாபாக்களும் அகீகா கொடுப்பவர்களாக இருந்துள்ளார்கள் என்று இமாம் அபுல் லைஸ் (ரஹ்) அவர்களும் மற்றும் சில மார்க்க அறிஞர்களும் கூறுகிறார்கள்.


ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும் பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் அகீகா கொடுக்க வேண்டும்.

"அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆண் குழந்தைக்கு (வயதிலும் அமைப்பிலும்) சமமான இரு ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் அகீகா கொடுக்க வேண்டுமென்று கூற நான் கேட்டுள்ளேன் என்று உம்முல் குர்ஜு (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்- அபூதாவூது

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

குழந்தைப் பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுக்க வேண்டும். முடியாவிட்டால் பதிநான்காம் நாள் அல்லது இருபத்தொன்றாம் நாள் கொடுக்க வேண்டும் இதற்கும் சக்தி பெறாவிட்டால் எப்பொழுது முடியுமோ அப்பொழுது கொடுக்கலாம்

குழந்தையின் காதில் முதலில் இறைவனின் திருநாமம் ஒலிக்க
வேண்டுமென்பதற்காக வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும்

அபீ ராபிஃ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் "பாத்திமா (ரலி) அவர்கள் ஹசன் (ரலியைப் பெற்றபோது அவர்களின் காதில் பாங்கு சொல்வதைப் பார்த்தேன். நூல் அபூதாவூத்.

குழந்தைக்கு அழகிய பெயரைச் சூட்டுவதும் குழந்தையின்  முடியை எடுத்து அதன் எடையளவு வெள்ளியை தர்மம் செய்வதும் "சுன்னத்' ஆகும்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலிஅவர்களுக்கு ஒரு ஆட்டை அகீகா கொடுத்தார்கள். மேலும் தங்களின் மகளிடம் பாத்திமாவே குழந்தையின் முடியை எடுத்து அதன் எடையளவு வெள்ளியை ஏழைகளுக்கு தர்மம் செய்! என்று கூறினார்கள் (நூல். திர்மிதி)


எனவே மன்னர் நபி ஸல் அவர்கள் எவ்வழியில் வாழ்ந்து காட்டினார்களே... அவ்வழியில் வாழ்ந்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் நாம் பெறுவதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

தொகுத்தவர்.
A. காதிர் மீரான் மஸ்லஹி
ஜாமிஆ மஸ்ஜித்.
அசநெல்லிக் குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக