வியாழன், 9 ஏப்ரல், 2020

காபி ஆற்றுவதில் பாடம் கற்கலாம்.



சூடாகக் காப்பியைக் கொண்டு வந்து வைப்பார்கள் நன்றாகச் சுவைத்துச் சாப்பிடத் தெரிந்தவர்கள், வட்டாவை எடுத்து, மெல்ல ஆற்றுவார்கள். அதன்பின் வாயில் வைத்து சூடும், சுவையும் சரியாக இருக்கிறதா? என்று ருசித்துப் பார்ப்பார்கள். தேவையானால் மீண்டும் ஆற்றிவிட்டு மெல்லமெல்ல உறிஞ்சி சுவைப்பார்கள்.

அவ்வாறு செய்வதன் மூலம், சூடும் இதமாகும் சர்க்கரையும் பதமாகக் கலக்கும். காபி வாயைச் சுடாது

குடும்பத்தில் கணவன் மனைவி தொடர்பு என்பது கூட, காபி ஆற்றிப் பருகும் கலை போன்றதுதான். குடும்பத்தில் ஏதாவது திடீரென்று சண்டைவரும்போது, கணவனும் மனைவியும் சூடேறி நிற்பார்கள் அப்போது அவர்கள் உள்ளத்தில் உள்ள நல்ல குணங்கள் எல்லாம் கீழே போய், கோபம் மட்டும் மேலெழுந்து நிற்கும்.

இந்த நேரத்தில் அவர்கள் எதிரெதிராக ஒரேயிடத்தில் இருக்கக் கூடாது. சூடான காபியை ஆற்ற வட்டாவிலுள்ளதை டம்ளருக்கும், டம்ளரிலுள்ளதை வட்டாவிற்கும் மாற்றி ஆற்றுவது போல, கணவன் இந்த அறையிலிருந்தால் மனைவி அந்த அறைக்குச் சென்றுவிட வேண்டும். மனைவி இந்த அறைக்கு வந்தால் கணவன் அந்த அறைக்குச் சென்றுவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோபம் தணியும்.

அது மட்டுமல்ல, காபி ஆற்றும்போது சூடு மட்டும் ஆறுவதில்லை, அடியில் கிடக்கும் சர்க்கரையும் மேலே வந்து எல்லாவற்றையும் சுவையாக்கும். அதேபோல், கோபம் மெல்ல மெல்ல ஆறும்போதே, அவர்களின் உள்ளத்தின் அடிக்குச் சென்ற நல்ல குணங்களும், மெல்லமெல்ல மேலே வரும் அப்போது உணர்வு அடங்க, அறிவு செயல்படும். கணவனைப் பற்றி மனைவியும் மனைவியைப் பற்றி கணவனும் சிந்திப்பார்கள். பழைய, அன்பான உறவுகள் மனக்கண்முன்வர, அந்த இனிய நிகழ்வுகள் உள்ளம் முழுதும் கலக்கும். அதன் மூலம் அவர்களின் கோபம் அகல அன்பு பிறக்கும்.

பெரிய மோதலும் அடிதடியும் தவிர்க்கப்பட்டு, அன்போடு இருவரும் நெருங்குவர். அதன்பின் மெல்ல மெல்ல காபி அருந்துவது போல, வாழ்வும் மெல்ல மெல்ல சுவைக்கும்.


மதிப்பிற்குரிய மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு இச்செய்தியை பயன்படுத்திக் கொள்ளவும்.


A. காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ மஸ்ஜித். 
அசநெல்லிக் குப்பம். 
அரக்கோணம். 9952129706.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக