வியாழன், 30 ஏப்ரல், 2020

யார் அந்தப் பேரறிஞர்..?


மெளலானா, எஸ், லியாகத் அலீ மன்பஈ

திடீரென ஒரு நாள் கனவொன்று கண்டேன். ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணமாகிறார்கள். மக்களெல்லாம் ஜனாஸா இறுதி ஊர்வலத்தில் திரளாகச் செல்வது அவர்களின் போன்று அதில் காட்சி ஓடியது.

விழித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்து, கனவு விளக்கம் சொல்வோரிடம் சென்று விசாரித்தேன். இப்பொழுதுள்ள பேரறிஞர்களில் ஒருவர் சமீபத்தில் மரணிக்கப்போகும் முன்னறிவிப்புதான் இது


 وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا
ஆதமுக்கு அனைத்துப் பெயர்களை (கலைகளை)யும் அல்லாஹ் கற்றுக்கொடுத்தான் என்ற (2: 31) வசனத்தின் அடிப்படையில் இந்த விளக்கம் அமைகிறது என்று அவர்கள் சொன்னார்கள். யார் அந்த அறிஞர்? என்ற கவலையில் நான் மூழ்கிவிட்டேன் என்கிறார் இமாம் ரபீஃ இப்னு சலீம் என்ற மாமேதை

சில நாட்கள் கழிந்தன. முஸ்னீ (ரஹ்) என்ற மாமேதை தம் ஆசான் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களைப் பார்க்கச் செல்கின்றார். அவர்கள் மரண நோயில் கிடந்தார்கள். "எப்படி இருக்கிறீர்கள்?" என்று முஸ்னி (ரஹ்)அவர்கள் கேட்கின்றார்கள். இம்மையிலிருந்து விடைபெறப் போகிறேன். நண்பர்களைப் பிரிய இருக்கின்றேன். மரணம் எனும் பானத்தை அருந்தி, என் தீய செயல்களுடன், பாவங்களுடன் என் இறைவனை சந்திக்கச் செல்கிறேன். அந்தோ! என் ஆத்மா சொர்க்கம் செல்லுமா? என்று தெரிந்தால் நான் மகிழ்ச்சியுடன் அதை வாழ்த்துவேன். நரகம் செல்லும் என்றால் அதற்கு அனுதாபம் தெரிவிக்க யார் இருக்கின்றார்" என்று கூறிவிட்டு அழுதார்கள் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள்

தாங்கள் எழுதிய பல்லாயிரக்கணக்கான பக்கங்களுக்கும், போதித்தஇலட்சக்கணக்கான நபிமொழிகளுக்கும் இரவு பகல் தூங்காமல் ஆய்வு செய்த சன்மார்க்கச் சட்டங்களுக்கும் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்ற இலாபக் கணக்குப் பார்க்காமல் தாங்கள் செய்து விட்ட சின்னஞ்சிறு தவறுகளுக்காக அஞ்சிக் கதறி அழுகிறார்கள் இதுவல்லவா இறையச்சம்? தொடர்ந்து இறைவனிடம் பேச ஆரம்பிக்கிறார்கள்

இறைவா! எனது உள்ளம் வன்மையாகி, என் வழிகள் நெருக்கடியாகிவிட்டிருக்கும் இவ்வேளையில் உனது மன்னிப்பின்பால் ஆதரவை ஏணியாக்கி உன்னை நோக்கி வருகின்றேன். என் பாவங்கள் பெரிதுதான்

ஆனால், அன்புள்ளம் கொண்ட ஆண்டவனே! உன் கருணையடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். உன் கருணைதான் எவ்வளவோ மகாப் பெரிதல்லவா? உன்னருள் மட்டும் இல்லையெனில், இப்லிசின் சூழ்ச்சியிலிருந்து நான் தப்பியிருக்க முடியுமா..? எங்கள் மூலவரான ஆதமையே வழிகெடுத்தவனாயிற்றே அவன் என்னை உன்னருளால் ஏற்பாயாக என் ரப்பே

இவ்வாறு அவர்கள் கதறி அழுகிறார்கள். ஆதம் (அலை) அவர்கள் இறப்பதாகக் கனவு கண்ட அவர்களின் மாணவரான இமாம் ரபீஃ இப்னு சலீம் (ரஹ்) அவர்களுக்கு அன்று புரிந்துவிட்டது. இறந்த அந்தப் பேரறிஞர் யாரென்று? (மிஷ்காத், பக்கம்: 626)

இவர்கள்தான் அந்த இமாம்கள். தாம் கற்றிருந்த கல்விக் கடலால் எந்தப் பெருமையும் கடுகளவும் ஏற்பட்டதில்லை. காலமெல்லாம் மக்களுக்குக் கல்விச் சேவை புரிந்து தங்களுக்காக துஆச் செய்யும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் நன்மைகள் தமக்கு வந்து குவியுமே என்ற பெருமிதம் இல்லை

எங்கே தம் பாவங்களின் காரணமாக நரகம் செல்ல வேண்டி வருமே  என்ற கவலையும் என் இறைவனை என் பாவங்களுடன் எப்படிச் சந்திக்கப்போகிறேன் என்ற அச்சமும் அவர்களை வாட்டி  வதைத்தன

நயவஞ்சகன், தான் செய்துள்ள பாவங்களை தம்மீது அமர்ந்திருந்து பறந்து விட்ட ஒரு ஈயைப் போன்று கருதுவான். ஆனால் இறைநம்பிக்கையாளரோ தமது சிறு தவறைக்கூட தன்மீது விழவிருக்கும் ஒரு மலையைப் போன்று எண்ணி அஞ்சுவான்" என்ற நபிமொழி இங்கே சிந்திக்கத் தக்கதல்லவா..?

2007 ஜூலை மாத மனாருல் ஹுதா மாத இதழிலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக