வெள்ளி, 10 ஏப்ரல், 2020

நமது சிந்தனைக்கு சில விசயங்கள்.





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக... நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக.

நபி ஸல் அவர்கள் கூறிய ஒரு சில வார்த்தைகளை உங்கள் சிந்தனைக்கு எடுத்துச் சொல்ல நான் இங்கு வந்துள்ளேன்.

ஒரு முஸ்லிமின் இஸ்லாம் சீரடைவது தொழுகை, நோன்பு, ஹஜ்
போன்ற வணக்கங்களைக் கொண்டு மட்டுமல்ல. மாறாக இஸ்லாமிய வழி காட்டுதல்படி தன்னை அவன் தூய்மைப்படுத்துவதன் மூலமே சீரடைகிறது

அன்பிற்கினியவர்களே.....

அல்லாஹு தஆலா கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று நபர்களுடன் நான் மறுமை நாளில் வாதிடுவேன்.
1. என் பெயரால் சத்தியம் செய்து பின்பு மோசடி செய்தவன்
2. சுதந்திரமான ஒருவரை அடிமையெனக் கூறி அவரின்
கிரயத்தை சாப்பிட்டவன்.
3. தனது வேலைக்கு கூலிக்காரரை அமர்த்தி அவரிடம்
முழுமையாக வேலை வாங்கிக் கொண்டு அவருக்கு கூலி
கொடுக்காதவன் (ஸஹீஹுல் புகாரி)

இம்மூன்று நபர்களுக்கு எதிராக யாஅல்லாஹ் இவர்களை நீ நரகத்திற்கு அனுப்பு நபியவர்கள் சொல்வாராகள் என்றால் அன்பானவர்களே.... அந்த பாவம் எவ்வளவு மோசமானது என்பதை நாம் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான் (முஸ்லிம்)

அருமையானவர்களே...... கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

இன்னிக்கு நமக்கு நேரம் போகலன்ன நாம செய்யும் முதல் காரியம் போனிலோ அல்லது நேரிலோ நாம் அடுத்தவர்களின் குறையைத் தான் மணிக்கணக்கில் பேசுகிறோம். மச்சான் உனக்கு விசயம் தெரியுமா...?  நம்ம பக்கத்து தெரு அப்துல் காதர் மேட்டர் ஒன்னு எனக்கு தெரியும். யாருக்குமே தெரியாது.... வெளியா மட்டும் தெரிஞ்சது அவன் யார்கிட்டயும் மூஞ்ச காட்ட முடியாது... அதை உனக்கு மட்டும் சொல்லுறேன் யார்கிட்டயும் சொல்லிறாத சரியா.... என்று அடுத்தவர்களின் குறையை மறைக்காமல் ஊருக்கே பகிரங்கப்படுத்தும் நமது நிலை நாளை என்னவாகும் என்று கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மூன்று குணங்களை விரும்புகிறான் மூன்று குணங்களை வெறுக்கிறான். அவன் விரும்பும் மூன்று குணங்கள்
1. அல்லாஹ்வையே நீங்கள் வணங்க வேண்டும்
2. அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்கக் கூடாது
3. நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றி பிடித்து கொள்ள
வேண்டும்.

அல்லாஹ் வெறுக்கும் மூன்று குணங்கள்
1. அவர் சொன்னார், இவ்வாறு) சொல்லப்பட்டது என்பது
போன்ற வதந்திகளில் ஈடுபடுவது
2. அதிகமாக கேள்விகள் கேட்பது
3. செல்வத்தை வீணடிப்பது. முஸ்லீம்)

மதிப்பிற்குரியவர்களே.... கொஞ்சம் யோசிச்சு பாருங்க இந்த ஆறு குணங்களில் அல்லாஹ்வுக்கு பிடித்த குணங்களில் எத்தனை நம்மிடம் இருக்கு... பிடிக்காத குணம் எத்தனை இருக்குன்னு கொஞ்சம் யோச்ச்சு பாருங்க.

அல்லாஹ்விற்கு பிடித்த குணம் நம்மிடம் இருக்கோ இல்லையோ... ஆனா அல்லாஹ்வுக்கு பிடிக்காத அந்த மூன்று குணங்களும் அதாவது வதந்திகளை பரப்புவது.... அதிகமாக கேள்விகள் கேட்பது.... செல்வத்தை வீணடிப்பது.... இக்குணங்கள் இன்று நம்மிடம் நிறைந்து இருக்கிறது.

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா...?  ஒருவன் பொய்யன் என்பதற்கு அடையாளமாக நபியவர்கள் எதை கூறினார்கள் என்றால்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு மனிதன் பொய்யன் என்பதற்கு, அவன் (பிறரிடம்) கேட்டதையெல்லாம் பேசுவதே போதுமாகும். (முஸ்லீம்)

அதாவது தன் காதில் கேட்டதையெல்லாம் அடுத்தவங்கிட்ட போய் சொல்வது என்பது அவன் ஒரு பொய்யன் என்பதின் அடையாளாம் என்பதாக நபியவர்கள் கூறியுள்ளார்கள். பொழுது போக்கிற்காக அடுத்தவங்க கதை பேசும் அனைவரும் இவ்விசயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உமது சகோதரரின் துன்பத்தில் மகிழ்ச்சியடையாதே. அல்லாஹ் அவருக்கு அருள்புரிந்து உம்மை சோதித்து விடுவான். (திர்மிதி

இன்று நம்மில் சிலருக்கும் முகத்தில் சிரிப்பு என்பதே அடுத்தவர்களுக்கு கஷ்டம் வந்துருச்சின்னு சொன்னா உடனே முகத்துல பல்பு எரியுது. இப்படிப்பட்ட குணத்தை விட்டு அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.

நபி (ஸல் அவர்கள் கூறியதாக அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும்
மாட்டான், அவர்களை பார்க்கவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை அளிக்கும் வேதனையும் இருக்கிறது' என நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். அபூதர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே இத்தகையவர்கள் தோல்வியடைந்து விட்டார்கள். நஷ்டப்பட்டு விட்டார்கள் அவர்கள் யார்என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், "தனது கீழாடை கரண்டைக் காலுக்குக் கீழே இழுத்துச் செல்பவன், செய்த தர்மத்தை சொல்லி காட்டுபவன், பொய் சத்தியம் செய்து பொருள்களை விற்பவன்
என்று கூறினார்கள். (முஸ்லீம்)

இந்த ஹதீஸில் நபியவர்கள் அல்லாஹ்வுக்கு பிடிக்காத மூன்று குணங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.
முதலாவது பெருமைக்காக ஆடையணிவது. இரண்டாவது செய்த தர்மத்தை சொல்லிக்காட்டுவது. மூன்றாவது சொய்த தர்மத்தை சொல்லிக் காட்டுவது.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க.... சமீபத்தில் கொரோனா நோய் தாக்க்கி உலகில் எத்தனையே பேர்கள் கொத்து கொத்தாக இறந்து போனார்கள். அந்த நேரத்தில் பலரும் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் சில பேர் ரெண்டு வாழைப்பழத்தை எட்டு பேர் சேர்ந்து கொடுத்து அதை பேஸ்புக் வாட்சப் வழியாக பகிர்ந்தார்கள். இது எவ்வளவு வேதனைக்குரிய ஒரு விசயம் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இன்று உலகில் பலருக்கும் வந்திருக்கும் வியாதிகளில் BP சுகர்க்கு அடுத்து இருக்கும் நோய் என்னவென்றால் செல்பி வியாதி. இதை பேசன் என்று சொல்வதை விட வியாதி என்று சொல்வது தான் பொருத்தமான சொல்லாகும்.

குனிஞ்சா செல்பி.... நிமிர்ந்தா செல்பி... படுத்தா செல்பி... அந்த வரிசையில் தர்மத்தையும் செல்பி போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீஸை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்மில் முதியவருக்கு மரியாதை செய்யாதவனும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதவனும், நமது (சமுதாய) அறிஞனின் உரிமையை அறிந்திராதவனும் என் உம்மத்தைச் சேர்ந்தவன் அல்ல' என்றார்கள். (அஹ்மத் தப்ரானி)

எனவே நபியவர்கள் நம்மை எப்படி வாழச் சொன்னார்களோ.... அதன்படி வாழ்வதற்கு நம் அனைவருக்கும் அருள்புரிவானாக...


எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...



மேலும் விபரங்களுக்கு...
A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக