வெள்ளி, 17 ஏப்ரல், 2020

நலம் காக்க.




وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ
 وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
அவன் தான் எனக்கு உண்ணத்தருகிறான் பருகத்தருகிறான் நான்
நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

அல்குர்ஆன் : (26:79)


சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்" என்றொரு முதுமொழி
வழக்கில் உள்ளது. அது போன்றே உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் பொருளையும், அருளையும் தேட முடியும். எனவே, இஸ்லாம் உடல்நலத்தைப் பேணுவதை கடமை ஆக்கியிருக்கிறது. அதுவும் தொழுகை நோன்பு போன்று கட்டாயக்கடமையாக ஆக்கியுள்ளது.

கொழுப்புள்ள பண்டங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உப்பைக்
குறைக்க வேண்டும். புகையிலைப் பொருளை தொடல் ஆகாது. நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். காலை மாலை நடக்க வேண்டும் என்றெல்லாம் சிறந்த மருத்துவர், உண்மையாக நமக்கு ஆலோசனை வழங்குவாரானால் அதைக் கடைப்பிடித்து ஒழுகுவது நம்மீது கடமையாகும்.

வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகவேண்டியதுதான்!என்ற வறட்டு வேதாந்தத்தை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. அல்லாஹ் விட்டபடி நடக்கும். அதற்காக சர்க்கரையையும் குறைக்கமாட்டேன், உப்பையும் குறைக்கமாட்டேன் என்று கூறுவது உண்மையான தவக்குல் ஆகாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தவக்குல்' என்பதற்கு விளக்கம்
தரும்போது ஒட்டகத்தைக் கட்டிப் போட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கவேண்டுமென்று கூறியிருக்கிறார்கள். அது போன்றே நோயாளி வாயைக் கட்டிப்போட்டு விட்டு இறைவன் மீது நம்பிக்கை வைப்பதே 'தவக்குல்ஆகும்

இறைக் கடமைகள்

இறைவன் நம்மீது கட்டாயமாக்கிய கடமைகளிலேயே உடல் நலத்தைக் கருத்தில் கொள்ளப்பட்டு சலுகைகள் வழங்கப் பெற்றிருப்பதைக் காணலாம்.  தண்ணீரை உபயோகித்தால் நலம் பாதிக்கப்படும் என்றிருக்குமேயானால் தயம்மம் செய்வதை இறைவன் அனுமதிக்கிறான் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு நோன்பை பிற்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நின்று தொழுக முடியாதவர்கள் உட்கார்ந்து தொழுகவும், உட்கார்ந்து தொழுக முடியாதவர்கள் படுத்துக்கொண்டே தொழுகவும் இஸ்லாம் அனுமதி வழங்குகிறது.

ஒரு தற்காப்பு யுத்தத்தின் போது நாயகத் தோழர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு தூங்கும்போது இந்திரியம் வெளிப்பட்டுவிட்டது. குளிப்பு கடமையான அவர், தனக்கு தயம்மம் செய்ய அனுமதியுண்டாவென பிற நண்பர்களிடம் விளக்கம் கேட்டார். இந்த அளவு  சுகவீனத்துக்கெல்லாம் தயம்மம் செய்ய அனுமதி கிடையாது என நண்பர்கள் மறுத்துரைத்து விட்டார்கள். எனவே அவர் நீரில் குளித்தார் அதனால் ஜன்னி கண்டு அவர் இறந்து விட்டார். அவரின் நிகழ்வு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் கடும் சினம் அடைந்தார்கள் கொன்று விட்டார்கள் கொன்று விட்டார்கள் அல்லாஹ் அவர்களைக் கொல்லுவானாக அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டாமா எனக் கூறி கடிந்து கொண்டார்கள் அறிவிப்பவர் : 
ஹள்ரத் ஜாபிர் (ரலி), நூல் : புகாரி

இறைவனைத் திருப்திப்படுத்த இதுவா வழி

பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பதிக்கும் எந்தக் காரியத்தைச்
செய்வதையும் இறைவன் விரும்புவதில்லை. குறிப்பாக இறைவனுக்காக அத்தகைய காரியங்களைச் செய்வதை அவன் அறவே பொருந்திக் கொள்வதில்லை

ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குத்பா பேருரை ஆற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் நின்று கொண்டே இருந்தார் அவர் ஏன் நின்று கொண்டிருக்கிறார் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் வினவினார்கள். இவர் பெயர்தான் அபு இஸ்ராயீல். இவர் நின்று கொண்டே இருப்பேன், உட்கார மாட்டேன். நிழலுக்கு செல்ல மாட்டேன், யாருடனும் பேசமாட்டேன், தினமும் நோன்பு வைப்பேன் என நேர்ச்சை செய்திருக்கிறார் என்பதாக நண்பர்கள் பதிலுரைத்தார்கள். அதைச் செவியுற்ற அண்ணலார் இவரை அமரச் சொல்லுங்கள். நிழலுக்குச் செல்லவும், பிறரிடம் பேசவும் நோன்பை முடித்துக் கொள்ளவும் இவரிடம் கூறுங்கள்ஆணையிட்டார்கள்
அறிவிப்பவர் : ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி

மற்றொரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வயோதிகர்
அவரின் இருமகன் களின் பிடியில் தள்ளாடிக் கொண்டு செல்வதைக்
கண்டார்கள். அதற்கான காரணத்தை வினவினார்கள். அந்த வயோதிகர் கால் நடையாகவே ஹஜ்ஜுக்குச் செல்வதாக நேர்ச்சை செய்திருக்கிறார் என நண்பர்கள் பதில் கூறினார்கள். அதைச் செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) இவர் தன்னை வேதனைப்படுத்திக் கொள்ளுவதை விட்டும், இறைவன் தேவையற்றவன். இவரை வாகனத்தில் ஏறிச் செல்லக் கோருங்கள் என்று கூறினார்கள்.  .

அறிவிப்பவர்: ஹள்ரத் அனஸ் (ரலி), நூல் : புகாரி


அமைதி தேவை

கல்லு, முள்ளுகளில் நடப்பதையோ தரையில் உருண்டு பக்தி பரவசத்தைக் காட்டுவதையோ, கத்தி, ஆணிகளைக் குத்தி உடலை வருத்துவதையோ, நெருப்பில் நடப்பதையோ, மேலாடை அணியாமலும் கடுங்குளிரில் ஈர உடைகளை அணிந்தும் வழிபாடு செய்வதையோ, இதுபோன்ற காரியங்களையோ, இஸ்லாம் புண்ணியம் தரும் செயலாகக் கருதவில்லை. அவைகளுக்கு மாற்றமாக, இஸ்லாம் மன நேர்மைக்கே முக்கியத்துவம்
அளிக்கிறது.

நாயகத் தோழர் ஒருவர் தூங்கிக் கொண்டே தொழுவதை கண்ணுற்ற
நாயகம் (ஸல்) அவர்கள் அவரை சற்று நேரம் படுத்துறங்கும் படியாகக் கூறினார்கள். உடல் அயர்வால் தூங்கிக் கொண்டே தொழுதால் அல்லாஹ்வை துதிக்கின்றோமா? அல்லது ஏசுகின்றோமா?வென அறியமுடியாமற் போய்விடும் என அவர்கள் காரணங்காட்டினார்கள்

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஹள்ரத் முஆது பின் ஜபல் (ரலி)
அவர்கள் பெருமானாருடன் இஷாத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, பின்னர் தான் குடியிருக்கும் பகுதியில் இருப்போருக்கு அந்த தொழுகையை ஜமாஅத் நடத்தவார்கள். அப்போதுஅவர்கள் பின்னால் நின்று தொழுத ஒருவர் இடையில் தொழுகையை விட்டுச் சென்று விட்டார் ஹளரத் முஆத்-ரலி அவர்கள் அதை அறிந்ததும் அவரைக் கடிந்து கொண்டார்கள். உடனே குறிப்பிட்ட அந்த நபர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார் யாரஸூலல்லாஹ் நாங்களெல்லாம் பேரீத்தம் பழத்தோட்டத்தில் கடினமான வேலை செய்யும் உழைப்பாளிகள், நாங்கள் வேலை முடித்துக் கொண்டு ஜமா அத்துடன் தொழுக வந்தால், இவர் சூரத்துல் பகரா போன்ற நீண்ட அத்தியாயங்களை ஒதத் துவங்கிவிடுகிறார். அயர் வு மிகுதியால் எங்களால் தொடர்ந்து தொழுகமுடியவில்லை என்று கூறினார். அதைச் செவியுற்ற நாயகம் (ஸல்) அவர்கள் ஹள்ரத் முஆது (ரலி) அவர்களை அழைத்து "முஆதே! நீர் குழுப்பம் விளைவிக்கிராவென கடிந்து கொண்டார்கள் உங்களில் ஒருவர் மக்களுக்கு தொழுகை நடத்தினால் அவர்களின் நிலையறிந்து இலகுவாக தொழுகை நடத்த வேண்டும்என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : ஹள்ரத் அபூஹுரைரா (ரலி), நூல். புகாரி

வணக்க வழிபாட்டின்போது ஆரோக்கியத்தையும் மன ஒன்று தலையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் குறிக்கின்றன சுகமான சூழ்நிலையில் மன ஓர்மை அதிகப்படுமென்றால் அத்தகைய சூழ்நிலையைத் தேர்ந்தெடுப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை.

புழுக்கமான இடத்தில் நின்று தொழுவதை விட, காற்றோட்டமான
இடத்திலோ, மின் விசிறி வசதியுள்ள இடத்திலோ தொழுவது மன ஓர்மையை அதிகப்படுத்தும். குளிர் சாதன வசதிகள் இருக்குமானால், அங்கே தொழுவது அதைவிட சிறப்பைத் தரும். எனவே தூங்கும் அறைகளுக்கு ஏர் கண்டிஷன் வசதி செய்பவர்கள் தொழும் அறைகளுக்கு அத்தகைய வசதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். புனித ஹரம் ஷரீபிலும், மஸ்ஜிதுன் நபவியிலும் அத்தகைய வசதிகளுக்கு முதலிடம் அளிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

உடல்நலமாக இருந்தால்தான் மன நலம் கிடைத்திடும். மனம் நலமாக இருந்தால்தான் இறைவழிபாட்டில் ஒன்றிட முடியும்

நலம் காத்த பெருமானார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் உண்ணத் தருகிறான்
பருகத்தருகிறான். அவர்களின் உடலில் நோய்த்தாக்கங்கள் ஏற்பட முடியாது இருப்பினும், அவர்கள் நமக்கு கற்றுத்தவதற்காக உடல்நலத்தைக் காப்பதில் மிகவும் அக்கறை காட்டினார்கள். அக்கால வழக்கத்திற்கிணங்க உடலில் சேரும் தீய இரத்தத்தை அப்புறப்படுத்த இரத்தம் குத்தி எடுக்கும் வழக்கத்தை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். மேலும் பிரசித்தி பெற்ற அலோபதி, ஹோமியோபதி யூனானி, சித்தமருத்துவ முறைகளை விடச்சிறந்த திப்பநபவிஎன்ற மருத்துவ முறையை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள் ஆனால் அந்த சிகிச்சை முறையை செயல்படுத்தும் பாக்கியத்தை இந்த உலகம் பெறவில்லை. அவர்கள் அத்தகைய மருத்துவ முறையை அறிமுகப்படுத்தியிருப்பதே உடல்நலத்தின் அவசியத்தை நன்குணர்த்துகிறது

மருந்தளிப்பது மருத்துவர் பணி, குணமளிப்பது இறைவனருள்" எனவே எல்லா நலன்களையும் இவைனிடம் கோட்டுப்பெற பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத்தருவதைப் போன்றே உடல் நலத்தையும் இறைவனிடம் கேட்டுப் பெறும் முறையையும் அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.

அல்லாஹும்ம இன்னி அஸ் அலுக்கல் அஃப்வ வல் ஆபியத்த
இறைவா! மன்னிபபையும், உடல் நலத்தையும் உன்னிடம் நான்
வேண்டுகிறேன்)

அறிவிப்பவர் : ஹள்ரத் இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவுது

அல்லாஹும்ம ஆபினீ பீ பதனீ, வபி ஸம்ஈ, வபி பஸரீ, லா இலாஹா இல்லா அன்த்த. (யா அல்லாஹ்! எனது சரீரத்திலும், எனது செவிப்புலனிலும், எனது பார்வையிலும் நல்லாரோக்கியத்தைத் தந்தருள் புரிவாயாக! வணக்கத்துக்குரியவன் நீயன்றி வேறில்லை)

அறிவிப்பவர்: ஹள்ரத் அப்தூர் ரஹ்மான்பின் அபீ பக்ரா (ரலி), நூல்: ஆபூதாவூது


உடல் நலம் பாதிக்கப்பட்ட மனிதனை நீங்கள் சந்தித்தால்
அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆபானீ மிம்மப்தலக்க வபள்ளலனி அலா கதீரிம் மிம்மன் கலக்க தப்லீளா” (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே அவன் உம்மை சோதித்த நலக்கேட்டிலிருந்து என்னைக் காத்தான் அவன் படைத்த அதிகமான படைப்புக்களைக் காண என்னை சிறப்புப்படுத்தினான்) என்று துஆச் செய்யுங்கள் உங்கள் நலம் பாதுகாக்கப்படும்.

அறிவிப்பவர் : ஹள்ரத் அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி

இறைவனிடம் இறைஞ்சி, மருத்துவரின் நல்லாலோசனைகளை மதித்து நலம்காக்க பாடுபடுவோமாக! அதன்மூலம் அருளும், பொருளும் அதிகம் பெறுவோமாக.


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு  எல்லா வளமும் நலமும் அல்லாஹ் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக