ஞாயிறு, 29 மே, 2011

பெருமை வேண்டாம்!




"பெருமை எனது மேலாடையாகும். வல்லமை எனது கீழாடையாகும். இதில் எதாவதொன்றில் எவனாவது என்னோடு போட்டியிட்டால், அவனை நரகத்தில் வீசுவேன" என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்க்ள கூறினார்கள். (ராவி: அபூ ஹ¤ரைரா ரளியல்லாஹ¤அன்ஹ¤, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்)
இது நன்கு கவனித்து மனதில் நிறுத்த வேண்டிய படிப்பினைக்குரிய ஹதீஸாகும். எந்த செயலால் நரகத்தில் தூக்கி வீசப்படும் நிலை ஏற்படுமோ, அந்த விஷயம் இன்று சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும், தாலுகா, ஊர், தெரு, வீடு என்ற உலகம் தழுவி வியாபித்து நிற்கின்றன.
பிறப்பால், இறப்பால், நிறத்தால், செல்வத்தால், கல்வியால் பெருமையடிக்கும் மக்களை சர்வ சாதாரணமாக எங்கும் காண்கிறோம். தாம் கொண்ட பெருமையால் சமுதாயத்தில் ஏற்படக் கூடிய பாதக விளைகள் என்ன? அது நம்மைப் போன்ற சக மனிதர்களிடம் எத்தனைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் பெருமையடிப்பதால் கடும் விளைவுகளை உலகம் சந்தித்துள்ளது.
பிறப்பால் பெருமை:
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தாய், தந்தையுடைய இச்சையின் வடிகால்களாகத்தான் உருவாகின்றன. கருவரையின் வாசம், அங்கு ஏற்படும் நிலை மாற்றங்கள், மாதவிடாய் ரத்தத்தை உட்கொள்ளும் விதம், இறுதியில் வெளியேறும் வழி, வந்த பின் இங்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை உள்ள இயலாமை இவை அனைத்தும் உலக குழந்தைகள் இடத்தில் பொது விதியாக இருக்கும் போது வளர்ந்த பின் பிறப்பால் ஒருவன் பெருமையடிக்கிறான் என்றால், தம்மைப் போன்ற இதர மனிதர்களை சிறுமைக் கண்ணோடு பார்க்கிறான் என்றால் இவன் இறைவனின் மேலாடையை அணிய முயற்சிக்கிறான் என்று பொருள்.
நிறத்தால் பெருமை:
மனிதர்களுக்கு மத்தியில் அனேக நிற வேற்றுமைகள் உண்டு. ஒரே குடும்பத்தில் ஒரே தந்தைக்குப் பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் கூட நிற வேற்றுமையுண்டு. இந்த நிற வேற்றுமைக்குக் காரணமாக அமைவது தந்தையின் விந்தணுவேயாகும். இறைவனின் ஒவ்வொரு படைப்பிலும் இந்த நிற வேற்றுமை இருக்கத்தான் செய்கின்றன.

இடத்தால் பெருமை:
கடவுளை வணங்கக்கூடிய, கடவுள் இருப்பதாக நம்பக்கூடிய இடத்திற்கு இழி பிறவிகள் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அந்த இடம் தீட்டுப் பட்டுவிடும் என்று இடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மனிதர்களைத் தள்ளி நிறுத்தி கௌரவம் பொருந்திய நாங்கள்தான் கடவுளை நெறுங்க முடியும் என்று பெருமையடிப்போர் இறைவனின் மேலங்கியில் கை வைக்கிறார்கள் என்று அர்த்தம்.
கல்வியால் பெருமை:
கல்வி கற்பவர்களுக்கு சமூகப் பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். நான் என்ற, என்னால்தான் என்ற தலைக்கனம் இருக்கக் கூடாது. கல்வி ஒருவனை பண்பாடு மிக்கவனாக பணிவு மிக்கவனாக மாற்ற வேண்டும். தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதும், பிறர் எனக்குச் சொல்வதா? என்பதும் பெருமையால் ஏற்படும் கர்வமேயாகும்.
'எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் எச்சரித்திருக்கிறார்கள். அப்போது ஒரு மனிதர் என்னுடைய உடையும், என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புவது பெருமையா? என்று கேட்டார். அதற்கு இறைத்தூதரவர்கள் இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும் என விளக்கினார்கள். (ராவி: இப்னு மஸ்வூத் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ நூல்: முஸ்லிம், திர்மிதி)
பொருளாதாரப் பெருமை:
உழைப்பும், திறமையும் மட்டும் ஒருவனைப் பெரும் செல்வத்திற்கு சொந்தக் காரணாக ஆக்கிவிடுவதில்லை. அதிர்ஷ்டம் என்ற இறைக்கருணை இருக்க வேண்டும். அந்த இறைக்கருணையால் பெரும் செல்வ வளம் பெற்ற மனிதர்களும், நாடுகளும், செல்வமற்ற ஏழ்மை நிலையில் உள்ள பிற மனிதர்களையும் நாடுகளை கேவலமாகக் கருதி இழிவாக நடத்துவது பெருமை சார்ந்த செயலாகும். தமக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளையும் பணியாட்களையும் கொடுமைப் படுத்துவது, அவர்களுடைய உரிமைகளை மறுத்து நாட்களைக் கடத்துவது, உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என்ற தோரணையில் நடந்து கொள்வது என்று தொடரும் எல்லா செயல்களும் எம்மை மிஞ்ச எவருண்டு என்ற பெருமையின் உச்சநிலை செயல்பாடுகளாகும்.
இப்படி எவர்களெல்லாம் பேராற்றலுக்குரியவனின் பெருமை என்ற மேலங்கியை அணிய முயல்கிறார்களோ அவர்களுக்கு இழிவுமிக்க வேதனையுண்டு என்ற கடும் எச்சரிக்கை பெருமைக்காரர்களின் உள்ளத்தில் பதிய வேண்டிய ஒன்றாகும்.
கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் இறைவன் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்: 4:36, 57:23, 31:18)
பெருமையடிப்போரே.. சிந்திப்பீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக