சனி, 28 மே, 2011

ஒரே ஓர் நன்மையைத் தேடி... - மவ்லவி காரி அப்துல் பாரி பாகவி, வேலூர்



ஓர் ஹதீஸ்: நாளை தீர்ப்பு நாளன்று மக்களின் மத்தியில் நன்மை தீமைகள் தராசில் நிறுத்துப் பார்க்கப்படும். அப்போது ஒரு மனிதர் வருவார். அவருடைய நன்மைகள் தீமைகள் எடை போடப்படும் போது இரண்டும் சமமாக இருக்கும். அவருக்கு கட்டளையிடப்படும். உன் நன்மைகள் வைக்கப்பட்டுள்ள தட்டை தீமைகள் வைக்கப்பட்டுள்ள தட்டையைவிட கனமானதாகச் செய், அப்போதுதான் நீ விடுதலைப் பெற முடியும்.                 
ஒரே ஒரு நன்மை கிடைத்தால் போதும். நன்மைகள் தட்டு கனமானதாக ஆகிவிடும். அனுதாபத்திற்குரிய அம்மனிதன் ஆரம்பத்தில் ஒரே ஒரு நன்மைதானே, எவரிடமேனும் கேட்டுப் பெற்று விடலாம், அதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது என்று நினைப்பான். ஆனால் அதை அடைய முயற்சிக்கும்போதுதான் அது எவ்வளவு கஷ்டம் என்பது அவனுக்குத் தெரிய வரும்.
அன்பர்கள், நண்பர்கள், உறவினர்கள், கனவான்கள், சாமானியர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலரிடமும் கேட்டுப் பார்ப்பான். அனைவரும் இல்லை, இல்லை என்ற ஒரே பதிலைத்தான் தருவார்கள். ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களின் நிலைமை, முடிவு எப்படி அமையமோ என்ற அச்சத்தில் இருப்பார்கள். நம்முடைய செயல்கள் கணிக்கப்படும்போது அவருக்கு ஏற்பட்டதுபோல் ஒரே ஒரு நன்மை குறைந்து நாம் சிக்கிக் கொள்ள நேர்ந்தால் என்ன செய்வது என்று கவலைப் படுவார்கள்.
எங்கும் எதிலும் ஒரு விதிவிலக்கு உண்டல்லவா! அங்கு ஒரு மனிதன் இப்படி இருப்பான். அவனிடம் தீமைகளே இருக்கும். ஒரே ஒரு நன்மை மட்டுமே அவனிடம் இருக்கும். இவனிடம் ஒரு நன்மையைத் தேடி அலையும் அந்த மனிதன் வந்து தன் நிலையை எடுத்து மன்றாடி ஒரு நன்மையைக் கேட்பான்.
அப்போது ஒரு நன்மையை மட்டும் வைத்திருக்கும் மனிதன் சொல்வான், ‘சகோதரரே! நீ அவ்வளவு நன்மைகளைச் செய்திருக்கிறாய். ஒரே ஒரு நன்மை பற்றாக் குறையால் உன்னால் சுவனத்திற்குப் போக முடியவில்லை, தடுக்கப்பட்டிருக்கிறாய். மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்தான். நீ கவலைப்படாதே! உனக்கு நேர்மாறான நிலையில் நானிருக்கிறேன். என்னிடம் ஒரே ஒரு நன்மைதான் உள்ளது. மற்றபடி எல்லாம் தீமைகள். ஒரு நன்மைக் குறைவால் உன்னால் சொர்க்கம் போக முடியவில்லை என்றால் ஒரே ஒரு நன்மையை வைத்துக் கொண்டுள்ள என்னால் எப்படி போக முடியும்? என்னிடம் இருந்தால் அது வீணாகத்தான் போகும். நான் நரகம் அடைவது நிச்சயம். ஆகவே என்னிடமுள்ள ஒரு நன்மையை உனக்குத் தருகிறேன், எடுத்துச் செல். சொர்க்கத்திற்குச் சென்று சந்தோஷமாக இரு’ என்பான்.
எதிர்பாராத இடத்திலிருந்து கிடைத்த அந்த ஒரு நன்மையால் அவருடைய தட்டு, தீமைத் தட்டைவிட கனம் பெற்று விடும். வெற்றிதான்.
இந்நிகழ்ச்சியால் பொங்கும் இறையருளைக் காண்போம். இப்போது அந்த ஒரு நன்மையைக் கொடுத்தவன் அழைக்கப்படுவான். உன்னிடம் இருந்த அந்த ஒரு நன்மையை அவனுக்கு ஏன் கொடுத்தாய்?’ அதனால் உன்னிடம் பேருக்குக்கூட ஒரு நன்மையும் இல்லையே’ என்று கேட்கப்படும்.
அப்போது அந்த மனிதன் சொல்வான், ‘வணக்கத்திற்குரிய இறைவனே! அவரிடம் ஆயிரக்கணக்கான நன்மைகள் உள்ளன. ஒரே ஒரு நன்மைதான் குறைவு. அதனால் அவரால் சுவனம் செல்ல முடியவில்லை. என்னிடம் இருப்பதோ ஒரே நன்மை. சட்டப்படி அந்த ஒரு நன்மையை வைத்துக்கொண்டு நான் மன்னிக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆகவே அவருக்குக் கொடுத்தால் அவருக்கு மன்னிப்புக் கிடைக்க வழி பிறக்கும் என்பதால் அதை அவருக்குக் கொடுத்து விட்டேன்’ என்பான்.
இப்போது அல்லாஹுத்தஆலாவின் புறத்திலிருந்து உத்தரவு பிறக்கும். ‘நாம் உம்மை மன்னித்தோம். அவருடைய நன்மைகள் அதிகமாகி விட்டன என்ற சட்டப்படி அவரையும், உம்மை நம் அருளாலும் மன்னித்தோம். அவருக்கு நீ கருணை காட்டினாய், நாம் உம்மீது கருணை காட்டினோம்.
ஒவ்வொரு நன்மையின் பரிமாணம் என்ன என்பது நாளை கியாம தீர்ப்பு நாளன்றுதான் தெரியவரும்.
ஒரு ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள உண்மை என்னவெனில், ‘தீர்ப்பு நாளன்று மக்கள் ஒவ்வொரு நன்மை பற்றாக் குறையில் சிக்கித் தவிப்பார்கள். அவர்களால் வெற்றி பெற முடியாமல் போகும். ஆகவே நாம் ஒவ்வொரு நன்மையையும் தவற விடாமல் சேகரித்துக் கொள்வதில் முனைப்புடன் இருக்க வேண்டும்.
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்டு திர்மிதீ ஷரீஃபில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் ஒன்றையும் இங்கு சிந்தனைக்கு எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஒருநாள் மரணமடையும் ஒவ்வொரு மனிதனும் வருத்தமடைவான்' என்று கூறினார்கள். அருகிலிருந்த தோழர்கள் அவர்கள் வருத்தமடைய காரணம் என்ன?’ என்று கேட்டார்கள்.
உம்மி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரைத்தார்கள், 'மரணமடைந்தவர் நல்லவராக இருந்தால் நாம் மேலும் அதிகமான நன்மைகளைச் செய்யாமல் போனோமே (அப்படிச் செய்திருந்தால் நம் நிலை மேலும் உயர்ந்திருக்குமே) என்று வருந்துவார். இறந்தவன் தீயவனாக இருந்தால் (நாம் ஏன் தான் தீமையைத் தடுக்காமல் இருந்தோமோ என்று) வேதனைப்படுவான்.'
தேர்வில்; வென்ற மாணவனும் வருந்துவான். தோற்றவனும் வருந்துவான். இன்னும் கொஞ்சம் நன்றாகப் படித்திருந்தால் மேலும் அதிக மதிப்பெண்கள் கிடைத்திருக்குமே என்று வருந்துவான் வென்றவன். நன்கு படித்திருந்தால் தோல்வியைத் தவிர்திருக்கலாமே என்று வருந்துவான் தோற்றவன்.
மேலே உள்ள இரண்டு ஹதீஸ்களுக்கும் அறிவிப்பாளர் பெயரோ, பதிவு செய்யப்பட்ட நூலின் பெயரோ இல்லை. மூன்றாவது ஹதீஸுக்கு மட்டும் அறிவிப்பாளரின் பெயரும், பதிவு பெற்ற கிதாபின் பெயரும் கொடுக்கப் பட்டுள்ளதே என்று நினைக்கலாம். வேறொன்றுமில்லை. முதல் இரண்டு ஹதீஸ்களும் மவ்லானா அஷ்ரஃப் அலீ தானவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் பேச்சிலிருந்து எடுக்கப்பட்டவை. மூன்றாவது ஹதீஸ் அடியேன் எடுத்துத் தொகுத்தது. முதல் இரண்டு ஹதீஸ{ம் பிரபலமானவையே. (பசந்தீதா வாகிஆ).
நன்றி: ஜமா அத்துல் உலமா, மாத இதழ் செப்டம்பர் 1998

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக