ஞாயிறு, 29 மே, 2011

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் சுவனத்தில் நுழையாதவர்கள்!




இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள்.
அப்போது ஒரு மனிதர் என்னுடைய உடைகளும் என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா? என்று கேட்டார்.
அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்என விளக்கினார்கள்.'' (ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி)
ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் சுவனபதியில் நுழையாதவர்கள்
அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்’ (அல்குர்ஆன்: 7:40)
மிக்க பாக்கியம் பெற்ற மறுமையின் வீடு பெருமையடித்தவர்களுக்கு அல்ல!
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு. (அல்-குர்ஆன் 28:83)
அகப்பெருமைக்காரர், ஆணவம் கொண்டோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்
‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)
அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவரும் நரக வாசிகளாவார்கள்
ஹாரிஸா இப்னு வஹப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டேன் "உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்." (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)
தற்பெருமை கொள்பவனுக்கு உவமானம்!
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: '‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்." (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)
தற்பெருமை மற்றும் ஆணவம் கொண்டோர் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானவர்களாவார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்." (ஆதாரம்: அல் அதபுல் முஃப்ரத்)
ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்பவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான்." (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)
பெருமையடிக்கும் ஏழையுடன் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை." (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
பெருமை அல்லாஹ்வுக்கே உரியது
"கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்" என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
மூன்று விஷயங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். அந்த முன்று விஷயங்களாவன:
1) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனைப் பார்த்தார் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்.
2) எவரேனும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாளை நடப்பது (மறைவான விஷயம்) தெரியும் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்.
3) எவரேனும் இறைவனிடம் இருந்து வந்த வஹியில் சிலவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைத்து விடடார் என்று கூறினால் அவா பொய்யுரைத்துவிடடார். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி)
"பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்" (அல்-குர்ஆன் 6:103)
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், ‘மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ‘(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்என்று கூறினார். (அல்-குர்ஆன் 7:143)
அல்லாஹ் கூறுகிறான்: ''(நபியே!) நீர் கூறும்: என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றனஎன்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.இன்னும் நீர் கூறும்: குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'' (அல்-குர்ஆன் 6:50)
''(நபியே!) நீர் கூறும்: அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’' (அல்-குர்ஆன் 7:188

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக