புனித மிகு ரஜப்
மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது.
اللهم
بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان
அல்லாஹும்ம
பாரிக்லனா ஃபிரஜப... என்ற துஆ பிரபஞ்சமெங்கும் ஐங்காலத் தொழுகைக்களுக்குப் பின் ஏதோ
ஒரு வக்தில் ஓதப்படுவதை நமது செவிகள் நிச்சயம் செவியேற்று ஆமீன் சொல்லியிருக்க
கூடும்.
ரஜப் என்ற அரபுச்
சொல்லிற்கு கண்ணியம் என்று பொருள் அதனால்தான் இம்மாதத்தில் பண்டைய அரபுகள் சண்டை
நிறுத்தத்தை மேற்கொள்பவர்களாக இருந்தார்கள். இதனாலேயே இம்மாதம் "ரஜபுல் முரஜ்ஜப் - மகா மரியாதைக்குரியது." என்று சற்று அழுத்தந்தரு சொற்களால்
அழைக்கப்பட்டது.
"இஷ் ரஜபன் - தரா
அஜபன். ரஜபு மாதத்தில் வாழ்ந்து பார், அநேக ஆச்சரியங்களை காண்பாய்." என்பது அரேபியப் பழமொழி.
அரேபியர்களின்
அனுபவ மொழியான அப்பழமொழி பொய்யாகுமா என்ன...? இதனால் தான் கண்ணல் நபி ﷺ கற்றுக்கொடுத்தார்களோ
அந்த "அல்லாஹ்வே எங்களுக்கு
அதிகமதிகம் அபிவிருத்தி செய்...!" எனதொடங்கும் அதிஅற்புதமான துஆவை.... யோசிக்க வேண்டிய
ஒன்று.
உண்மையிலேயே இம்மாதம்
தன் பெயருக்கேற்ப கண்ணியமான மாதம் மட்டுமல்ல நமக்கும் அபரிமிதமான கண்ணியங்களை வாரி
வாரி வழங்கும் மாதமும் கூட.. நீங்களும் நானும் நினைப்பது போல் இம் மாதம்
சர்வசாதாரணமான ஒரு மாதமல்ல. இஸ்ரா மிஃராஜ் எனும் இருபெரும் அற்புதப் பயணங்கள்
நடைபெற்று இன்றுவரை அப்பயண ரகசிய முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாத எந்தவொரு
விஞ்ஞானத்தாலும் அவிழ்த்து விட முடியாத ஒரு பேரற்புதப் பயணம் தான் அது.
அவ்வதிசியப் பயணம் நடைபெற்ற மாஅற்புத மாதம் தான் இது.
மிஃராஜ் இரவின் சிறப்பு
மற்றும் அன்றிரவு நடைபெற்ற மக்கா - பைத்துல் முகத்தஸ் (ஜெரூசலம்) பைத்துல் மஃமூர் - அர்ஷ் - மக்கா என்று செவ்வக வடிவில்
சுழலும் ஆன்மீகப் பயணம் குறித்து வாழையடிவாழையாக நாம் அவ்வப்போது பயானில் கேட்டு
வந்தது சற்று முன்பின் நினைவுகளுடன் இன்றைக்கும் நம் நினைவகங்களில் நீடித்து
நிலைத்து நிற்கும் என்பதில் மறு சொல்லில்லை. எனினும் அந்நீள்வெளிப்
பயணங்களிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளும் ஏராளமுண்டு.
பொறுமைக்கு பரிசு.
தந்தை அபூதாலிப், அன்னை
ஹதீஜா ரலி ஆகியோரின் மரணம் தாயிஃப் நகரத்தாரின் கல்லடி போன்றவற்றை சகித்துக்
கொண்டதின் விளைவாகத்தான் அண்ணலார ஆறுதல் படுத்தும்விதமாக மிஅராஜ் பயணம் வழியாக
பேரருளாளன் அல்லாஹ்வை தரிசிக்கும் பெரும் பாக்கியம் கிடைக்கப்பெற்றது என்பது
யாவரும் அறிந்த ஒன்றுதான். இது பாக்கியங்களிலேயே பெரும்பாக்கியமன்றோ...? நமக்கும் அப்படித்தான் சோதனைக்கு மேல் சோதனை ஏற்படுகிற
போதுஅவற்றை பொருமை என்ற கேடயம் கொண்டு பாதுகாப்பு பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி
செய்தால் அதன் விளைவாய் அல்லாஹ் நமக்கும் நல்லதொரு வழியை ஏற்படுத்தித் தருவான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
நிச்சயமாக
அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் (02 - 153.) என்ற வான்மறைக் குர்ஆனின் வாக்கு என்றென்றைக்கும் மாறாத ஒன்று.
உண்மையே உயர்வு.
மிஃராஜ் பயணம்
இன்றைக்கும் நம் புலணறிவுக்கு புலப்படாத ஒன்றுதான். என்றாலும் அதை மக்கள்
ஏற்பார்களா அல்லது மறுப்பார்களா என்றெல்லாம் சற்றும் யோசிக்காமல் சொன்னார்கள்.
ஆம். உணைமையைச் சொன்னார்கள் ஏனெனில் உண்மைதான் வெல்லும் பொய் நம்மையே கொல்லும் ஏன்
நரகில் கூட தள்ளும்.
ஒரு கட்டத்தில்
யூதர்கள் சொன்னார்கள் ஆம் எங்கள் வேதத்தில்
இருக்கிறது அவர் ஓரிரவில் இறைவனை சந்தித்து வருவாரென... இக்கருத்தை அன்றைய
பைத்துல் முகத்தஸின் வாயிற்காப்போனாக இருந்த "ஈலியா" என்பவரும், மன்னர் ஹெர்குலிசை சந்திக்க
மக்கத்துத் தலைவர் அபூசுப்யான் வந்த போது அனைவரின் முன்னிலையிலும் உறுதிபடுத்திய
நிகழ்வு புகாரி முஸ்லிம் கிதாபுகளில் பதிவாகியிருக்கிறது.
பார்க்க அள்வாஉல்
பயான். பாகம்-3. பக்கம் 282.
இன்றைக்கு
நம்நிலை என்ன நிலையிலிருக்கிறது...? அதுவும் இந்த செல்போன் வந்ததும் போதும் நாம்
வாயைத் திறந்தாலே அருவியாய் வந்து கொட்டுகிறது பொய்யும், பொய்ச்சிரிப்பும்...
இதானலேயே குர்ஆன்
கூறிக்காட்டுகிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
"நீங்கள்
உண்மையாளர்களுடனேயே சேர்ந்திருங்கள். (09-119)" என்று.
அல்லாஹ்வை அறி...!
அவன் பேராற்றல்
மிக்கவன் ஓரிரவில் ஓராயிரம் காரியங்களை நடத்தி முடித்து விடுபவன் அவனால் முடியாது
என்று எதுவுமே இல்லை. சுலைமான் நபியின் அரசவையிலிருந்த "ஆஸிஃப் பின் பர்ஹியா" என்ற இறை நேசச் செல்வர் இதோ அந்த
சிம்மாசனத்தை கண்மூடித்திறப்பதற்குள் உள்ளது உள்ளபடியே கொண்டு வந்து வைக்கிறேன்.
என்று சொல்லி சொன்னவாரே கொண்டு வந்து அதை ஆடாமல் அசையாமல் வைத்துக் காட்டினார்.
قَالَ نَكِّرُوا لَهَا عَرْشَهَا
نَنظُرْ أَتَهْتَدِي أَمْ تَكُونُ مِنَ الَّذِينَ لَا يَهْتَدُونَ
27:41. (இன்னும் அவர்) கூறினார்: “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய
அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து
கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள
முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.”
என குர்ஆன்
கூறிக் காட்டுவதிலிருந்தே அவரது உயரிய
அந்தஸ்தை நாம் எடை போட்டுக் கொள்ள முடியுமன்றோ...?
இறையடியார்களில்
ஒருவர் அப்படியொரு அற்புதத்தை கணநேரத்தில் ஆடாமல் அசையாமல் செய்து முடிக்கிறபோது
அல்லாஹ்வால் மிஃராஜியப் பயணம் முடியாத ஒன்றா என்ன.....
அல்லாஹ்வுடைய குத்ரத்தை,
ஆற்றலை, சக்தியை நாம் புரிந்து கொள்ளாத வரை அல்லாஹ்வை நாம் அறிந்து கொண்டவர்களாக
ஆக முடியாது.
وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا
تُبْصِرُونَ
ஏன்... உங்களையே
நீங்கள் உற்று நோக்க வேண்டாமா....? (51 - 21)
என ஏகன் மறை
ஏறிட்டுப் பார்க்கச் சொல்வதிலிருந்தே இறையாற்றல்களை இனிதே நாம் புரிந்துகொள்ள
முடியும்.
உதாரணமாக,
வயிற்றுக்குள்ளே நாம் ஒவ்வொருநாளும் என்னவெல்லாம் அள்ளி அள்ளி கொட்டிக்கொள்கிறோம்.
அதுவும் பல்வேறு சுவைகளில், பல்வேறு நிறங்களில், பல்வேறு ரகங்களில்.
அவையாவற்றையும் அந்த மென்குடல் எப்படி தாங்குகிறது தாக்குப் பிடிக்கிறது. அதுவும்
சுமார் அறுபது வருடங்களுக்கு யோசிக்கையில் ரொம்பவும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் நாம் யோசிப்பதில்லை.
அண்ணலாரைப் புரி.
அல்லாஹ்வின்
அற்புதப் பயணத்திற்கு அண்ணலார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றால் அவர்கள்
எப்படிப்பட்டவர்கள்...? அவர்களது தகுதி என்ன..? அதை ஒரு கனவு என்று அவ்வளவு எளிதாய் நாம்
சொல்லிவிட முடியுமா என்ன... ஒரு கனவு எப்போதுமே ஆச்சரியத்திற்குரிய ஒன்றாக எப்படி
ஆக முடியும்...? அதற்கு "சுப்ஹான (ல்லாஹ்)" என்ற ஆச்சரியக் குறியீட்டுச் சொல் தேவையில்லையே...
ஏன் நபி ஈஸா அலை இன்றைக்கும் பூத உடலுடன் தானே இரண்டாம் வானில் இருக்கிறார்கள்.
மீண்டும் இப்பூவுலகிற்கு வருவார்கள் அண்ணலாருக்கு அருகில் அடக்கம்
செய்யப்படுவார்கள் என்பதெல்லாம் நாமறிந்த நல்வரலாறு தானே... இதில் மறுப்பதற்கு
ஒன்றும் இல்லையே.
அப்படியானால் அண்ணலாரின்
அதீத அந்தஸ்துதான் என்ன...? அவர்களது அகமியம்
தான் என்ன...? யோசிக்க வேண்டிய ஒன்று.
இன்றைக்கு நாம் நமது நபியைக் குறித்து எவ்வளவு தூரம் எவ்வளவு நீளம் விளங்கி
வைத்திருக்கிறோம்...? அவர்களது குடும்பம்
பற்றி, வம்சம் பற்றி, சிறப்பியல்புகள் பற்றி நமக்கு என்ன தெரியும்...? எல்லாமே "மீலாதுன் நபி
விழா" வோடு முடிந்து போய்விட்டதா..? நமது
நபியை நாம் புரிந்து கொண்டது அவ்வளவு தானா...
இப்படியாக
எண்ணற்ற கேள்விகள் கிளை விரிக்கிறது. மிஃராஜ் என்பது ஏதோ முதல் வானத்தில் தொடங்கி
ஏழாம் வானத்தில் முடிந்து விடும் ஒரு சடங்குகளைக் கூறும் "இரவுக் கலை நிகழ்ச்சி" யல்ல அது. நாம் பெறவேண்டிய பாடங்களும்
படிப்பினைகளும் நிறைந்த அற்புதமான நிகழ்வுதான் அது.
நின்று
நிதர்சனமாக யோசித்துப் பார்க்கையில் பல்வேறு பிரச்சனைகளுக்கான சிக்கல்களுக்கான
தீர்வுகள் பல மிஃராஜில் இருக்கிறது. அதை கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டமான
காரியமல்ல. சற்று ஆழ்மனயோசனையில் இறங்கினாலே போதும் விடைகள் பல நமக்கு புலப்பட
ஆரம்பித்துவிடும்.
மிஃராஜ் காட்டும்
பாதைகளில் ஐங்காலத் தொழுகை மிகமிக முக்கியமான ஒன்று அல்லாஹ் அர்ஷில் வைத்து,
நேருக்கு நேர் சந்தித்து வழங்க இத்தொழுகை நமக்கு இங்கு வந்து சேந்திருக்கிறது
என்றால் அத்தொழுகை எவ்வளவு கண்ணியத்திற்கும் கவனத்திற்கும் உரியது என்று நாம்
நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். "என்னை சந்திக்க
வேண்டுமா...? அப்படியானால் இதோ என்
தொழுகைகளை கடைபிடி." என்று சொல்லாமல்
சொல்வது போல்லவா உள்ளது இந்நிகழ்வு... ?
ஆம் உண்மையும் அதுதானே..... அல்லாஹு அக்பர்
என்று தக்பீர் கட்டியது முதல் அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஸலாம் கொடுக்கும் வரை இறை
ஞாபகம்தானே மிகைத்திருக்கிறது. இடையிடையே ஷைத்தானிய ஊசலாட்ட எண்ணங்கள் வந்து
போனாலும் அங்கு மிகைத்திருக்க வேண்டியது நாம் தொழுவது அல்லாஹ்வுக்காக என்ற என்ற
எண்ண அலைகளே..! ஆனால் இன்றய இந்த அவசர
உலகில் நமக்கான, மறுமையில் கட்டாயம் கேள்வி கேட்கப்படும் படியான நமது தொழுகைகள்
இன்றைக்கு எப்படி இருக்கின்றன...?
முன்பைவிட
பள்ளிவாசல்கள் பெருகியிருக்கின்றன.... தொழுகையாளிகள் அதிகரித்து இருக்கிறார்கள்
ரொம்பவும் சந்தோசமான விசயம்தான் ஆனால் அவர்களது தொழுகைகளின் தரம் (குவாலிட்டி) எப்படி
இருக்கிறது...? ஏதோ வருகிறார்,
நிற்கிறார், அமர்கிறார், சலாம் கொடுக்கிறார், சென்று விடுகிறார். என்ன தொழுதோம்..? என்ன ஓதினோம்...? எத்தனை ரக்அத் தொழுதோம்...? எதுவுமே தெரிவதில்லை. அவருக்கு...
இப்படிப்பட்டவர்களைக்
குறித்துதான் "தொழுகையாளிகளிக்கு
நாசம் உண்டாகட்டும்..!
الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ
سَاهُونَ
அவர்கள்
எப்படிப்பட்டவர்கள் என்றால் அவர்கள் தான் தங்களது தொழுகைகளில் பொடுபோக்காக
இருப்பார்கள். (107 - 05.)" என்று
குர்ஆன் எச்சரித்துச் சொல்கிறது.
தொழுகை அது ஒரு
அற்புதமான அமல் அதில் சின்னஞ்சிறு அசால்ட்டுத்தனம், சற்று மறந்த நிலை, கவனமின்மை
வந்து விடுகிற போது நாம் கட்டிய தக்பீர்களும், நாம் ஓதிய சூராக்களும், நாம்
கொடுத்த ஸலாம்களும் நமக்கு எதிராகவே மாறி நாசத்தை விளைவித்து விடுகின்றன. இந்நிலை
நமக்கு தேவையா... யோசிக்க வேண்டிய ஒன்று.
மிஃராஜ் நமக்கு
சொல்லிச் செல்லும் பாடங்களில் தொழுகை மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் அனைத்துப்
பிரச்சனைகளுக்கும், சிக்கல்களுக்கும், மன குழப்பங்களுக்குமான நிம்மதி
இத்தொழுகையில் தான் இனிதே நிறைந்திருக்கிறது. அது மட்டுமல்ல சொர்க்கமும் நரகமும்
சும்மா சொல்லப்பட்ட ஒன்றல்ல என்பதையும் மிஃராஜ் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்
கொண்டேயிருக்கிறது.
வாருங்கள் தொழுகையை கடை பிடிப்போம்.
சொர்கத்தில் இடம் பிடிப்போம்.
S.N.R. ஷவ்கத்அலி மஸ்லஹி.
ANI KNNTJF - திண்டுக்கல்.
98658 04000
அருமை மென்மேலும் கட்டுரைகள் வெளிவர துஆ செய்தவனாக அபூஅப்துல்லா உலவி 3,4,19.9585453351
பதிலளிநீக்கு