மூன்றாம் நாள் அன்னையவர்களின் தாய் மற்றும் தந்தை அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் வீட்டில் அமர்ந்து கொண்டு தங்களது ஆசை மகளுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு வருகின்றார்கள்.
ஆயிஷாவே! நீங்கள் தவறிழைத்திருக்கும் பட்சத்தில் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள் என்று அமைதியான குரழில் அன்னைக்கு அறிவுரை கூறினார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.கண்ணில் நீர் வற்றியிருந்த கண்களோடு சோகத்துடன் இருந்த அன்னையவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பதில் அளிக்க அனுமதி வழங்குமாறு தன் தாயிடம் கேட்கின்றார்கள். ஆனால் அன்னையின் தாயார் அவர்களோ எந்தப் பதிலையும் கூறாது அமைதியாக இருக்கின்றார்கள். பின் தனது தந்தையை நோக்கி, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நான் பதில் அளிப்பதற்கு எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்க, அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ வந்திருந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அனுமதியும் வழங்கவில்லை.
இறுதியாக, அன்னையவர்கள் தனது ஆருயிர்க் கணவரைப் பார்த்துக் கூறினார்கள், நான் தவறிழைத்திருக்கவில்லை என்று சொல்லி மறுத்தால், எனது சொல்லை யாரும் நம்பும் நிலையில் இல்லை. ஆனால் நான் குற்றமற்றவள், அல்லாஹ் மட்டுமே இதனை அறிவான் என்று கூறி விட்டு, என் மீது சுமத்தப்பட்ட களங்கத்திற்குச் சரியான பதில் இதுவாகத் தானிருக்கும் என்று, யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தந்தை அளித்த பதிலாக வருகின்ற, யூசுப் அத்தியாயத்தின் கீழ்க்கண்ட வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்; மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்'' என்று கூறினார். (12:18)
அன்னையவர்கள் இருந்த நிலையில், யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தந்தையாரான யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது பெயரைக் கூட ஞாபகப்படுத்த முடியாத அளவுக்கு மனதால் மிகவும் நொந்து போய் இருந்தார்கள். இந்த கணத்தில் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கீழ்க்காணும் வசனம் இறக்கி அருளப்பட்டு, அன்னையவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை இறைவன் அறிவித்துக் கொடுத்தான்.
இந்த வசனம் அருளப்பட்ட பின் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புருவங்களைச் சுற்றியும் வியர்வை முத்துக்கள் பணித்திருந்தன. பின் ஆயிஷா (ரழி) அவர்களின் பக்கம் திரும்பியவர்களாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்க்காணும் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது. மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. (24:11)
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, ''இது பகிரங்கமான வீண் பழியேயாகும்'' என்று கூறியிருக்க வேண்டாமா? (24:12)
அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள். (24:13)
இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும். (25:14)
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும். (25:15)
இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, ''இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்'' என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா? (24:16)
நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான். (24:17)
இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன். (24:18)
எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு. அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)
இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையயோனாகவும் இருக்கின்றான். (24:20)
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (24:21)
மேலே கண்ட இறைவசனம் இறங்கியதன் பின், தங்களது செல்வத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கம் பொய்யென்று இறைவனால் நிரூபிக்கப்பட்டு விட்டது குறித்தும், தனது மகளின் நிலை கண்டு, இறைவன் திருவசனத்தை இறக்கியது குறித்தும், அன்னையவர்களின் பெற்றோர்கள் அகமகழிந்து போனார்கள். நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
ஆயிஷாவே! நீங்கள் உங்கள் கணவரிடம் சென்று நன்றி கூறுங்கள்..! என்று கூறிய பொழுது, நான் அல்லாஹ்வுக்குத் தான் நன்றிக் கடன் பட்டிருக்கின்றேன் என்று பதில் கூறி, அல்லாஹ் தான் என்மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிந்தான். இன்னும் எனது கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு தனது வசனங்களை இறக்கி அருளியமைக்காக அல்லாஹ் தான் என் நன்றிக்கு உரியவன் என்று பதிலளித்தார்கள். இன்னும் இந்த வசனங்கள் மறுமை நாள் வரை ஒலிக்கும். இந்த வரலாற்றுச் சம்பவம், இஸ்லாமிய வரலாற்றில் உஃபுக் என்றழைக்கப்படுகின்றது.
மதிப்பும் கௌரவமும்
இந்த சம்பவத்திற்குப் பின்பாக அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வைத்திருந்த பிரியம் இன்னும் அதிகமாயிற்று. ஒருமுறை அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! இந்த உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர் யாராக இருக்கும்? என வினவிய பொழுது, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தான் இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமான நபர் என்று பதிலளித்தார்கள். பின்பு, ஆண்களில் யார் என வினவிய பொழுது, அபுபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு என்று பதிலளித்தார்கள்.
ஒருமுறை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது மகளும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவியுமான ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் போட்டி போட வேண்டாம் என்றும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கின்றார்கள் என்றும், அவரைக் குறைத்துமதிப்பிடாது கௌரவமாக உயர்ந்த அந்தஸ்துடன் கண்ணியத்துடன் பழகி வரும்படி அறிவுரை கூறினார்கள்.
இதன் காரணமென்னவெனில், அன்னையவர்கள் இஸ்லாமிய மார்க்க அடிப்படைச் சட்டங்களிலும், அதன் விளக்கத்திலும் தன்னிகரற்ற அறிவு ஞானத்தைப் பெற்றிருந்ததேயாகும்.
இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் பேச விட்டு ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த வீரர்கள், அம்புகளை எறிந்து கொண்டு தங்களுக்குள் வீர விளையாட்டு ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனை அன்னையவர்கள் பார்க்க விரும்பிய பொழுது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிற்க அவர்களுக்குப் பின் அன்னையவர்கள் மறைந்து நின்று கொண்டு, பிறர் தன்னைக் கவனிக்காதவாறு விளையாட்டைக் கண்டு ரசித்தார்கள். அந்த விளையாட்டு முடியும் வரைக்கும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இடத்தை விட்டும் நகரவில்லை. இன்னும் இருவரும் தங்களுக்கிடையில் மாறி மாறி பல கதைகளைப் சொல்லிக் காட்டிக் கொள்வார்கள்.
கணவனும் மனைவியும் எவ்வாறு நட்புடன் வாழ வேண்டும் என்பதற்கு அன்னையவர்களின் வரலாறு மிகுந்த படிப்பினை மிக்கது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது மனைவிமார்களுடனும், குடும்பத்தவர்களுடனும் பிரியத்துடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாலும், அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து அவர்கள் சிறிதும் கவனக் குறைவாக இருந்தது கிடையாது. தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டு விட்டால், தனக்கு அருகில் குடும்பத்தவர்கள் இருக்கின்றார்களே, அவர்களுடன் இருந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், பொழுது சந்தோசமாகக் கழிந்து கொண்டிருக்கின்றதே என்று எண்ண மாட்டார்கள். மாறாக, தங்களது குடும்பத்தவர்களுடன் தான் இதுவரை அமர்ந்திருந்தோமா என்று பிறர் நினைக்கும் அளவுக்கு, பாங்கு சொன்ன உடனேயே அந்த இடத்தை விட்டும் அகன்று பள்ளியை நோக்கி விரையக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தவர்கள் மீதான அன்பு இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமையினின்று அவர்களைப் பராக்காக்கி விடாது.
அன்னையவர்களின் வரலாற்றில் இன்னுமொரு சம்பவம் அவர்களது மதிப்புக்கு மணி மகுடம் சூட்டியது போலாகி விட்டது. ஆம்! அன்னையவர்களின் காரணத்தால் அப்பொழுது ஒரு இறைவசனத்தை இறைவன் இறக்கி அருளினான். ஒரு பயணத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அவர்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அந்தப் பயணத்தில் உடன் சென்றிருந்தார்கள். பாலைவனத்தில் ஒரு இடத்தில் பயணத்தை இடை நிறுத்தி தங்கிக் கொண்டிருந்த பொழுது, அன்னையவர்களின் கழுத்து மாலை ஒன்று மீண்டும் காணாமல் போய் விட்டது. நபித்தோழர்கள் பலர் அந்த மாலையைத் தேடிச் சென்றும், அதனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கூடாரத்தில் தங்கியிருந்தார்கள். அப்பொழுது அதிகாலைத் தொழுகைக்கு பாங்கும் சொல்லப்பட்டு விட்டது. ஆனால், அவர்கள் கூடாரம் அடித்துத் தங்கிய இடத்தில் அதிகாலைத் தொழுகைக்கு தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
நபித்தோழர்களோ அதிகாலைத் தொழுகைக்கு நேரமாகிக் கொண்டிருக்கின்றது, தண்ணீரும் அருகில் இல்லை, எங்கே தொழுகை தவறி விடுமோ என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் இந்த இக்கட்டான சூழ்நிலை ஏற்படுவதற்கு அன்னையவர்கள் தான் காரணம் என்றும், காரணம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். நபித்தோழர்களிடம் காணப்பட்ட அந்த வருத்தத்தக்க நிலையைக் கண்ட அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ, இந்த சூழ்நிலை உங்களால் தானே வந்தது என்று தனது மகளான அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைக் கடிந்து கொள்ளும் நிலைக்கு சூழ்நிலை இறுக்கமானது. அந்த நேரத்தில் தான் அன்னையவர்களின் காரணத்தால், இறைவன் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான்:
நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரைப் பெறாவிடின், சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி ''தயம்மும்'' செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (4:43)
இதுவரைக்கும் அன்னையவர்களைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த நபித்தோழர்கள், மேற்கண்ட இறைவசனம் இறங்கியதன் பின்பு, இறைவன் தங்கள் மீது காட்டிய கருணையை எண்ணி மகிழ்ந்தவர்களாக, அன்னையவர்களின் காரணத்தால்தான் இந்த சலுகை எங்களுக்குக் கிடைத்தது என்று புகழ ஆரம்பித்து விட்டார்கள்.
சற்று முன்பு தனது மகளைக் கடிந்து கொண்ட அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூட இப்பொழுது தனது மகள் மீது இறைவன் சொறிந்த கருணை மழையைக் கண்டு புன்னகை பூக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கூறினார்கள் : இந்த இறைவசனம் இறங்கும் வரைக்கும், இவ்வளவு பெரியதொரு அருட்கொடையை எனது மகளின் காரணத்தால் இறைவன் இறக்கி அருளுவான் என்று நான் நினைக்கவில்லை, இந்த அருட்கொடை எமக்கு மட்டும் உரித்தானதல்ல, மாறாக, உலக இறுதி நாள் வரைக்கும் தொடர்ந்து வரக் கூடியதல்லவா என்று தனது மகளுடன் இறைவன் இருந்து கொண்டிருக்கின்றான் என்பதை இட்டு எண்ணி எண்ணி அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மகிழ்ந்தார்கள். இன்னும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தவர்களாக, தனது மகளுக்கு இறைவன் நீடித்த ஆயுளை வழங்க வேண்டும் என்றும், அதன் மூலம் இந்த முஸ்லிம் உம்மத் எண்ணற்ற அருட்கொடைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள்.
அன்றைய தினத்தினுடைய அதிகாலைத் தொழுகை நிறைவடைந்து, பயணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, கிளம்பிய ஒட்டகங்களின் ஒன்றின் கீழாக இருந்து, காணாமல் போன கழுத்து மாலை கண்டெடுக்கப்பட்டும் விட்டது.
பிரிவும், பதிலும்
ஹிஜ்ரி 9 ம் வருடம், இஸ்லாம் அரபுப் பிரதேசத்தையும் தாண்டி தனது ஆட்சிப் பரப்பை அதிகரித்துச் சென்று கொண்டிருந்தது. இஸ்லாத்தை ஆறத் தழுவிக் கொண்ட அரபுப் பூமியின் புதிய தலைநகராக மதீனத்துந்நபவி திகழ்ந்து கொண்டிருந்தது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக, மிகவும் வசதி வாய்ப்புகளுடனும் வாழ்ந்திருந்த மனைவிமார்கள் சிலர், இப்பொழுது மதீனாவில் காணப்படும் செல்வச் செழிப்புக்கு ஈடாக தங்களுக்குக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செலவுத் தொகைகள் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவிமார்களது உலகாதாய நோக்கம் கொண்ட இந்த கோரிக்கை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சங்கடப்பட வைத்தது, கவலை கொள்ளச் செய்தது.
இதன் காரணமாக எந்த மனைவியரிடத்திலும் சேர்ந்திருப்பதில்லை என்று உறுதி பூண்டவர்களாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது வீட்டினை ஒட்டிய அறையில் தங்கிக் கொண்டார்கள். இந்த கால கட்டத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குதிரையில் இருந்து தவறி விழுந்ததன் காரணமாக சிறு காயமும் ஏற்பட்டிருந்தது. இந்த சூழ்நிலை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தவர்களிடையே சிறு சலனத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
28 நாட்கள் முடிந்து, 29 ம் நாள் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தங்கியிருந்த அறைக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து, ஆயிஷாவே! நான் சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள். பின் உங்களது பெற்றோர்களிடம் ஆலோசனை கலந்து விட்டு உங்களது முடிவினைச் சொல்லுங்கள் என்று கூறியவர்களாக, இந்த உலக வாழ்க்கையின் கஷ்டங்கள், வறுமை ஆகியவற்றையா அல்லது வசதியான வாழ்க்கையா.., இந்த இரண்டில் எது வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதற்கு முன் இதுபற்றி உங்களது பெற்றோர்களுடன் கலந்தாலோசனை செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இதனைக் கேட்ட ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது மனதில் இருந்து பட்டென பதில் வந்தது. நானும் என்னுடைய குடும்பத்தவர்களும், தேவை ஏற்படும் எனில் எங்களது வாழ்வையே உங்களுக்காக அற்பணம் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றோம். இது விசயத்தில் எனது குடும்பத்தவர்களுடன் கலந்தாலோசனை செய்வதற்கு எந்த அவசியமுமில்லை. நான் என்னுடைய வாழ்வை உங்களுடன் வாழ்வதற்கே விரும்புகின்றேன், இந்த உலக வாழ்க்கையின் ஆடம்பரங்களை அல்ல என்று அன்னையவர்கள் கூறி முடித்தார்கள். இந்த பதிலைக் கேட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வதனத்தில் அழகிய புன்சிரிப்பு தவழ்ந்தது. அதன் பின் அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் :
நபியே! உம்முடைய மனைவிகளிடம்; ''நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன். ''ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்'' என்றும் கூறுவீராக! (33:28-29)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் ஏற்பட்ட இந்த வாதங்கள் முடிவுற்ற பின், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! நீங்கள் என்னிடம் பெற்றுக் கொண்ட இந்த பதிலை நீங்கள் மற்ற மனைவியர்களிடத்தில் கூற வேண்டாம். அவர்கள் என்ன பதிலைச் சொல்கின்றார்கள் என்பதை நான் பார்க்க வேண்டும் என்று குலைந்தபடி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ..! ஆயிஷாவே! நான் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியனாகத் தான் என்னுடைய இறைவனால் அனுப்பப்பட்டுள்ளேனே தவிர, அடக்குமுறையாளனாக அல்ல..! அவரவர் முடிவில் தலையிடும் அதிகாரம் எனக்கில்லை என்று கூறி முடித்தார்கள்.
பின் மற்ற மனைவியர்களிடத்தில் அவரவர் விருப்பம் என்னவென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட பொழுது, அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் என்ன பதிலைக் கூறினார்களோ அதே பதிலையே மற்றவர்களும் கூற, மிக நீண்ட நாட்களாக வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது. மதீனாவைச் சூழ்ந்திருந்த இறுக்கமான சூழ்நிலை கலைந்து, மீண்டும் அமைதியும் மகிழ்ச்சியும் திரும்பியது.
வானவர் தலைவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் காணும் பாக்கியம் பெற்றவர்கள்
ஒரு சமயம், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குதிரையின் மீது அமர்ந்திருந்த ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். (இதனைப் பார்த்த ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! யார் அந்த மனிதர்? என்று வினவினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கேள்வியை ஆச்சரியத்துடன் கேட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த மனிதரை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டு விட்டு, அவர் தான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அவர்கள் மனித உருவில் வந்திருந்தார்கள், இன்னும் உங்களுக்கு அவர்கள் தனது ஸலாமை எத்தி வைத்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள் என்று கூறினார்கள். உடனேயே, யா அல்லாஹ்! எங்களது விருந்தினரும், இன்னும் உன்னுடைய கண்ணியமிக்க தூதுவருமான ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நற்பேறுகளை வழங்குவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது வீட்டில் தங்கியிருந்த சமயத்தில், ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு வருகை தந்தது பற்றி அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தியில், ஒரு முறை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது வீட்டின் முன் முன்பின் அறியாத மனிதர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பற்றி, தொழுது கொண்டிருந்திருந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது முடித்து விட்டு, வீட்டுக்கு வெளியில் வந்து பார்க்கின்றார்கள், யாரை எதிர்பார்த்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காத்திருந்தார்களோ, அந்த ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் அங்கு வந்து நின்று கொண்டிருந்தார்கள்.
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களே! ஏன் நீங்கள் உள்ளே வர மறுக்கின்றீர்கள்..! உள்ளே வாருங்கள்..! என்று அழைக்கின்றார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களோ, நாயும் இன்னும் உருவப் படங்களும் உள்ள இடங்களுக்கு நாங்கள் வர மாட்டோம் எனப் பதில் கூறுகின்றார்கள். பின்னர் வீட்டினுள் சென்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்த பொழுது, ஒரு பொம்மை வீட்டின் ஒரு மூலையில் கிடந்ததை அப்புறப்படுத்திய பின் வானவர் தூதர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது வீட்டினுள் நுழைந்தார்கள்.
நபிமொழி அறிவிப்பாளராக..!
இன்னும், அன்னையவர்களுக்கு இருந்த கல்வி ஞானத்தின் காரணமாக மிகச் சிறந்த உயர்ந்த அந்தஸ்திற்குரியவர்களாக திகழ்ந்தார்கள். மார்க்கத்தின் மிகவும் சிக்கலான பல கேள்விகளுக்கு பல நபித்தோழர்களும், பெண்களும் அன்னையிடம் வந்து அதற்கான விளக்கத்தையும் தெளிவையும் பெற்றுச் செல்லும் அளவுக்கு மார்க்க விசயங்களில் மிகவும் கற்றறிந்த மேதையாகத் திகழ்ந்தார்கள். இன்னும் ஸஹீஹான பல நபிமொழிகள் அன்னையின் மூலமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வாழ்ந்த இன்னும் அவர்களுடன் எப்பொழுதும் இருந்து கொண்டிருந்த பல நபித்தோழர்களில், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை முறையை நமக்கு நபிமொழிகளாக அறிவித்த, இன்னும் தனிச்சிறப்பாக ஆயிரக்கணக்காக நபிமொழிகளுக்கு சொந்தக்காரர்களின் முதல் ஏழு நபித்தோழர்களின் வரிசையில் அன்னையவர்களும் இடம் பெற்றுள்ளார்கள்.
1. அபூஹுரைரா அப்துர் ரஹ்மான் பின் சகர் தோசி ரளியல்லாஹு அன்ஹு (5374 ஹதீஸ்கள்)
2. அப்துல்லா பின் உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு – (2630 ஹதீஸ்கள்)
3. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (2210 ஹதீஸ்கள்)
4. அப்துல்லா பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு (1660 ஹதீஸ்கள்)
5. ஜாபிர் பின் அப்துல்லா அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு (1540)
6. சஅத் பின் மாலிக் அபூ ஸயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு (1540)
7. அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு (2286)
மற்ற பெண்களைக் காட்டிலும் அன்னையவர்கள் கல்வி ஞானத்தில் தேர்ச்சி பெற்ற முதல் தர பெண்மணியாகத் திகழ்ந்தார்கள். அன்னையைப் பற்றி மதிப்பிட வேண்டும் என்றால், அவர்கள் தனது இளமைக் காலத்தில் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு போன்ற உன்னதமிக்க மனிதரைப் பெற்றோராகவும், இன்னும் தனது மணவாழ்க்கையை மிக இள வயதில் ஆரம்பித்து அதனை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனும் வாழ்ந்த காரணத்தினால் அவர்களது வாழ்க்கையே ஒரு பாடப் புத்தகமாகத் திகழ்ந்ததே, அவர்களைக் கல்விக் கடலாகப் பரிணமிக்கச் செய்தது.
இன்னும் இறைவனின் தூய ஞான ஒளியானது அன்னைக்கு நேரடியாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலமாகக் கிடைத்ததும், இன்னும் அவர்களுக்காக இறைவன் பல முறை பதில் தந்திருக்கின்றான், தனது திருவசனங்களை அன்னையின் காரணத்தால் அருள் செய்திருக்கின்றான் என்பதிலிருந்து, உலகத்துப் பெண்களில் அன்னையவர்கள் ஒலிக் கீற்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதில் மிகையில்லை.
கலீபாக்களின் ஆட்சிக் காலத்தில் அன்னையவர்களின் மார்க்க தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) ஏற்றுக் கொள்ளப்பட்டன. சொத்துப் பங்கீடு விசயத்தில் அன்னையவர்கள் மிகச் சிறந்த கல்வி ஞானத்தைப் பெற்றிருந்த காரணத்தினால், மக்கள் அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அன்னையை அணுகக் கூடியவர்களாக இருந்தார்கள். சொத்துப் பங்கீடு விசயத்தில் மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு அன்னையவர்கள் மிக எளிதாக, அதனை தீர்த்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறுதிக் கணமும், அன்னையும்..,
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கிருந்த மார்க்க விசய ஞானம், இன்னும் சிறப்பான குணநலன்கள் ஆகியவற்றின் காரணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னையவர்கள் மீது அலாதியான அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்கள். ஒரு சமயம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உடல் நலமற்றிருந்தார்கள், அன்னையவர்களும் உடல் நலமற்றிருந்தார்கள்.
அப்பொழுது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ஆயிஷாவே! எனக்கு முன்பாக நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று சொன்னால், நானே உங்களைக் குளிப்பாட்டுவேன், நானே உங்களுக்கு கஃபன் இடுவேன், இன்னும் நானே உங்களை மண்ணறைக்குள் இறக்கி வைப்பேன் இன்னும் உங்களுக்காக நான் பிரார்த்தனையும் செய்வேன் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அன்னையவர்கள், எனது மரணத்தை நீங்கள் கொண்டாடுவீர்கள் போலிருக்கின்றதே! என்று வேடிக்கையாகக் கேட்டு விட்டு, உங்களுக்கு முன் நான் மரணித்து விட்டால், நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வீட்டிற்கு ஒரு புது மனைவியைக் கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னையைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள், உடல் நலம் தேறாமலேயே தன்னைப் படைத்தவனிடம் சென்று சேர்ந்தார்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்..!
என்னுடைய முறையின் பொழுது எனது வீட்டில் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதுவும் எனது மடியில் வைத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தது கண்டு நான் பெருமைப்படுகின்றேன், அதனைப் பாக்கியமாகவும் கருதுகின்றேன் என்று அன்னையவர்கள் பெருமையோடு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அன்னையவர்களின் சகோதரர் அப்துர் ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்த இறுதிக் கணங்களில் அன்னையவர்களின் இல்லத்தில் நுழைகின்றார்கள். நுழைந்தவரின் கையில் பல் துலக்கக் கூடிய மிஸ்வாக் குச்சி இருக்கின்றது. அந்த மிஸ்வாக் குச்சியை ஆசையுடன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்க்கின்றார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்தை அறிந்து கொண்ட அன்னையவர்கள், உங்களுக்காக மிஸ்வாக்கைக் கொண்டு பல் துலக்க ஆசையாக இருக்கின்றதா? எனக் கேட்க, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சைகையால் சம்மதம் தெரிவிக்க, அன்னையவர்கள் தனது சகோதரரிடமிருந்து மிஸ்வாக்கைப் பெற்றுக் கொண்டார்கள். அந்த மிஸ்வாக் கடினமாக இருந்த காரணத்தால் அன்னையவர்கள் தனது பற்களால் கடித்து, அந்த மிஸ்வாக்கை மிருதுவாக்கி, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பற்களை துலக்கி சுத்தப்படுத்தி விடுகின்றார்கள். அருகில் இருந்த பாத்திரத்தில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது கைகளை நனைத்து அடிக்கடி தனது முகத்தில் தடவிக் கொண்டே..,
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, மரணம் அதிக வேதனையுடையதாக இருக்கின்றது.
பின் தனது விரல்களை உயரே சுட்டிக் காட்டியவர்களாக, மிகச் சிறந்த நண்பரை நோக்கி (நான் விரைகின்றேன்) என்று கூறினார்கள்.
அது கணமே, உடல் என்னும் கூட்டுக்குள் சிறையிருந்த உயிர், வல்லோனை நோக்கி விரைந்தது.
கனவு நிறைவேறுதல்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறப்பதற்கு முன் அன்னையவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அந்தக் கனவில் மூன்று நிலவுகள் அன்னையின் இல்லத்தில் இறங்குவதாகக் கண்டார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்த பொழுது, அன்னையவர்களின் இல்லத்தில் தான் அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்னும்;, அன்னையவர்கள் கண்ட கனவில் தோன்றிய மூன்று நிலவுகளில், ஒரு நிலவு அவர்களது இல்லத்தை ஒளியூட்டிக் கொண்டிருப்பதன் மூலம் அவர்கள் கண்ட கனவின் ஒரு பகுதி நிறைவடைந்து விட்டது என்று அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்தக் கனவின் விளக்கத்தைக் கூறினார்கள். பின்னர் அன்னையவர்களின் தந்தையாரான அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்த பொழுது, தனது ஆருயிர்த் தோழர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதுடன், அன்னையவர்களின் கனவு நிறைவேறியது.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யார் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார்களோ, இன்னும் அவர்களது அதிக விருப்பத்திற்கு உரியவராக இருந்தார்களோ, அந்த அன்னையவர்களின் இல்லத்திலேயே அவர்களது உயிரும் பிரிந்தது என்று இமாம் தகபி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆம்! இதன் மூலம் தனது விருப்பத்திற்குரிய மனைவியான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களதும், இன்னும் தனது விருப்பத்திற்குரிய இடமுமான அன்னையவர்களின் இல்லத்திலேயே இறந்தார்கள், அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அன்னையவர்கள் ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு, சொர்க்கச் சோலைகளை நாடிச் சென்று விட்டார்கள். தனது 66 ம் வயதில் ரமளான் மாதம் 17 ஆம் நாள் மரணமடைந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மதீனாவில் ஜன்னத்துல் பக்கீ என்ற நல்லடக்க பூமியில் அன்னையவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னையவர்களுக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்துல்லா பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் அப்துல்லா பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் அன்னையின் உடலை மண்ணறைக்குள் வைத்தனர்.
''(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்)''. (89:27-30)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக