திங்கள், 30 மே, 2011

எது சந்தோஷம்....?




அவன் மாபெரும் செல்வந்தன், சந்தோஷம் தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பார்த்தான். சந்தோஷம் தான் கிடைக்கவில்லை.



மது, மங்கையர், போதைப்பொருள் என்று எல்லாவற்றின் பின்னும் அலைந்து பார்த்தான்.



மனம் மகிழ்ச்சியடையவில்லை. துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும் என்று யாரோ சொல்ல அதையும் அவன் முயற்சி செய்துபார்க்க முடிவெடுத்தான். தனது வீட்டில் இருந்த தங்கம், வைரம், வைடூரியம் என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டுபோய் ஒரு ஞானியின் காலடியில் வைத்துவிட்டு, ",இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்களிடம் கொடுத்து விட்டேன், இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை. நான் நாடிவந்திருப்பது அமைதியையும், மன சந்தோஷத்தையும் மட்டுமே, என்று ஞானியிடம் சரணடைந்தான்.



அந்த ஞானியோ அந்த செல்வந்தன் கூறியதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். கண்ணைக் கூச வைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும், வைரக் கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.



செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சி, "அடடா, இருந்திருந்தும் ஒரு போலி ஞானியிடம் போய் நமது செல்வத்தை ஏமாந்து கோட்டைவிட்டு விட்டுவிட்டோமே என்ற துக்கம் ஆத்திரமாக மாற அந்தச் செல்வந்தன் யோகியைத் துரத்த ஆரம்பித்தான்.



ஞானியின் ஓட்டத்திற்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க இயலவில்லை. சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி கடைசியில் தாம் புறப்பட்ட அதே மரத்தடிக்கே வந்து நின்றார்.



மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக் கொண்டு வந்த செல்வந்தனிடம் ஞானி, "என்ன பயந்துவிட்டாயா, இந்தா உன் செல்வம், நீயே வைத்துக் கொள்", என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.



கைபோன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்துவிட்டதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத மகிழ்ச்சி. அப்போது அந்த ஞானி செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார் "இங்கே வருவதற்கு முன்னால் கூட இந்த தங்கமும் வைரமும் உன்னிடத்தில் தான் இருந்தது, ஆனால் அப்போது சந்தோஷம் உன்னிடத்தில் இல்லை, இப்போது உன்னிடம் இருப்பது அதே தங்கமும் வைரமும் தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது!’’



இதில் இருந்து புலப்படும் உண்மை ஒன்றுதான்.



சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை, மனதில் தான் இருக்கிறது. இந்த உண்மை செல்வத்தை மூட்டை கட்டிக் கொண்டு திரிந்த செல்வந்தரைப் போலவே நம்மில் பலருக்கும் கூடத்தெரிவதில்லை. 



சந்தோஷம் என்பது...

o மனத்தை ஒருவன் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவன் அடையும் சந்தோஷம் இருக்கிறது.



o உண்மையான சந்தோஷம் என்பது நம்முள்ளே இருக்கும் ஒரு தன்மையால், வாழ்வைப் பற்றிய ஒரு சிந்தனையால் ஏற்படுகிறது. திருப்திக்கான வழிமுறைகள் நம்மிடையே இல்லாவிட்டால், பொருளாதார வெற்றிகள் முதல் எவ்வளவு வெற்றிகள் இருந்தாலும் அது நம்மை மகிழ்விக்காது.

o நல்லவைகள் எதையாவது செய்வது, நல்லவைகள் எதையாவது நேசிப்பது, நல்லவைகள் எதையாவது நம்புவது இவைதான் வாழ்வில் சந்தோஷத்திற்கான அடிப்படைத் தேவைகள்.



o எவ்வளவு முறை தோல்வி பெற்றாலும் நீங்கள் வெற்றி பெறப் பிறந்தவர்கள். ஒரு காரியத்தை நன்கு செய்ததே அதன் வெகுமதிதான்.

o சந்தோஷம் என்பது பெரும்பாலும் கடும் உழைப்பால் ஏற்படுகிறது. வெறும் சிந்தனை, உணர்வு அல்லது உணர்ச்சியை அப்படியே சந்தோஷமாக அனுபவித்துவிடலாம் என்று கற்பனை செய்வது சிலர் செய்யும் தவறாகும். அழகை அருந்தமுடியுமா! சந்தோஷத்தை போராடிப் பெற வேண்டும். அது, மனிதர் வேலை செய்வதை விரும்புகிறது.



o தன்னிடம் இல்லாததற்காக வருந்தாமல், தன்னிடம் இருப்பதற்காக சந்தோஷமாக இருப்பவனே புத்திசாலியான மனிதன்.



o ஒவ்வொரு தலைமுறையும் பழமை தனக்குத் தந்த புதையலை சந்தோஷமாக அனுபவிக்கிறது. பிறகு புதிய சொத்துக்களை அப்புதையலில் சேர்த்துப் பெரிதாக்கி எதிர்காலத் தலைமுறைக்கு வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக