திங்கள், 30 மே, 2011

இல்லங்களை இறைநம்பிக்கைக் கொண்டு அலங்கரியுங்கள்




இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வை நினைவு கூறக் கூடிய இல்லங்கள் தான் விரும்பத்தகுந்த இல்லங்கள், அல்லாஹ்வை நினைவு கூறப்படாத இல்லங்கள், (இருளடைந்த) மண்ணறைக்குச் சமமானது.''

அனைத்து வழிகளிலும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இல்லங்களை இறைவனது விருப்பத்திற்குரிய இல்லங்களாக, அவனை நினைவுகூறக்கூடிய இடங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.

உள்ளத்தாலும், சொல்லாலும், தொழுகைகளின் மூலமாகவும் (விரும்பிச் செய்யக் கூடிய சுன்னத் மற்றும் நபிலான வணக்கங்கள்), திருமறையை ஓதுவதன் மூலமாகவும், இன்னும் இஸ்லாத்தைப் பற்றி கலந்தாலோசனை செய்யக் கூடிய தளமாகவும் அல்லது இன்னும் பல் வகையான இஸ்லாமிய நூல்களைப் புரட்டி வாசிக்கக் கூடிய தளமாகவும் அது திகழ வேண்டும்.

இன்றைக்கு நம்மில் எத்தனை இல்லங்கள் மண்ணறைக்குச் சமமாக இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஏனென்றால், மேற்கண்ட நபிமொழியில் குறிப்பிட்டுள்ளவாறு அங்கே இறைவனை நினைவு கூறப்படுவதில்லை. இறைவனை நினைவு கூறப்பட வேண்டிய இஸ்லாமிய இல்லங்களில் மனித மனங்களில் அசிங்கமான அருவருக்கத்தக்க உணர்வுகளைத் தூண்டக் கூடிய சினிமாப் பாடல்களும், இன்னும் இஸ்லாமிய சமூக கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைப்பதற்காகப் புறப்பட்டு வீறு கொண்டு நடைபோடுகின்ற தொலைக்காட்சித் தொடர்களும் ஆக்கிரமித்திருப்பதோடு, அங்கே வீணாண பேச்சுக்களும், ஒருவர் மற்றவரைப் பற்றிப் புறம் பேசுவதும், கேளி பேசிச் சிரிப்பதும், இன்னும் கேளிக் கூத்துக்களும் தானே அங்கே நடந்து கொண்டிருக்கின்றன?

இதுவா இஸ்லாமிய இல்லம், இல்லை.. இல்லவே.. எங்கெல்லாம் ஷைத்தானிற்கு விருப்பத்திற்குரிய செயல்பாடுகள் நடைபெறுகின்றனவோ அங்கே ஷைத்தான்கள் தான் குடியிருக்க முடியும், அது மண்ணறையேயன்றி வேறென்னவாக இருக்க முடியும் என்பதை சகோதர, சகோதரிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்னும் மஹ்ரம்கள் திருமணம் முடிக்கத் தகுந்த உறவு முறை உள்ளவர்கள், இஸ்லாமிய வரையறைகளைப் பேணாது தாங்கள் விரும்பிய வீட்டிற்குள் ஹிஜாப் முறையைப் பேணாது அணுசரிக்காது நுழைவதும், தங்களது மறைக்க வேண்டிய பாகங்களை காட்டிக் கொள்வதும், இன்னும் இது போன்ற இஸ்லாம் தடுத்திருக்கின்றவைகளைச் செய்வதுமான இல்லமாக நம்முடைய இல்லங்கள் இருக்கலாமா?

இத்தகைய வீடுகளில் மலக்குகள் எவ்வாறு நுழைவார்கள்?

என்னருமைச் சகோதரர்களே..,

உங்களது இல்லங்களை இனியாவது அல்லாஹ்வை நினைவு கூறக் கூடிய இல்லங்களாக மாற்றி அமைக்க முயற்சி செய்யுங்கள், அல்லாஹ் உங்கள் மீது அருட்கொடைகளைப் பொழிவான்.

இல்லங்களில் தொழுகைக்கான கிப்லா-வை அமையுங்கள்

அதாவது உங்களது இல்லங்களை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றக் கூடிய தளமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:

''ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்; ''நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (ஃகிப்லாவாக) ஆக்கிக் அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!'' என்று வஹீ அறிவித்தோம்.'' (10:87)

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ''அவர்கள் தங்கள் இல்லங்களை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றக் கூடிய இல்லங்களாக மாற்றிக் கொள்ளும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டார்கள் (அதாவது பள்ளிவாசல்களாக).''

இப்னு கதீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ் மிக அறிந்தவன் - அன்றைய நாளில் பிர்அவ்னிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்ததன் காரணமாக (வீடுகளை தொழுகைகளை நிறைவேற்றக் கூடிய தளமாக மாற்றி அமைக்க கட்டளை பிறப்பிக்கப்பட்டிக்கலாம்). இன்னும் அதிகமதிகம் தொழுகைகளில் ஈடுபடும்படியும் கட்டளை பிறப்பிக்கப்பட்டார்கள்.

இதனை அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் : நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (2:153)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழியின் அடிப்படையில், ''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துன்பங்களை அல்லது அசம்பாவிதங்களைச் சந்திக்கும் பொழுது, அப்பொழுது தொழுது கொள்ளுவார்கள்.''

மேற்கண்ட வசனங்களும், நபிமொழிகளும் இல்லங்களில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை நமக்கு விளக்குகின்றன, குறிப்பாக முஸ்லிம்கள் இறைநிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள இயலாது என்ற சூழ்நிலை நிலவும் பொழுதும், முஸ்லிம்கள் பலவீனர்களாக இருக்கும் நிலையிலும் வீட்டில் தொழுது கொள்ள வேண்டும். இதற்கு மர்யம் (அலை) அவர்கள் வீட்டில் தனக்கென ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து (மிஹ்ராப்), அதனை தன்னுடைய வணக்கத் தளமாக மாற்றியமைத்துக் கொண்ட நிகழ்வினை அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு நமக்குச் சுட்டிக் காட்டுகின்றான் :

''ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார்.'' (3:37)

நபித்தோழர்கள் தங்களது இல்லங்களில் தொழுகையை நிறைவேற்றுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள் - கடமையான தொழுகைகளைத் தவிர்த்து (ஆண்களைப் பொறுத்தவரை இதனை கூட்டாகவே நிறைவேற்ற வேண்டியது கட்டாயமாகும்) - என்பதை கீழ்க்கண்ட சம்பவத்தின் மூலம் நாம் தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

மஹ்மூத் இப்னு அல் ரபீஈ அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழர் கூறுவதாவது, உத்பா இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு - இவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவரும், அன்ஸாரிகளில் ஒருவரும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமாவார்.

இவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''நான் என்னுடைய பார்வையை இழந்து விட்டேன், நானே என்னுடைய மக்களுக்கு தொழுகையை (இமாமாக) முன்னின்று நடத்துகின்றேன். மழை பெய்யும் பொழுது, எனக்கும் அவர்களுக்குமிடையே உள்ள ஓடையில் தண்ணீர் நிரம்பி ஓடுகின்றது, (அப்பொழுது) பள்ளிவாசலை அடைந்து அவர்களுக்குத் தொழ வைக்க இயலவில்லை. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே..! என்னுடைய வீட்டிற்கு நீங்கள் வந்து அங்கு தொழ வேண்டும் என்பதை விரும்புகின்றேன், அதன் மூலம் (நீங்கள் நின்று தொழுத) அந்த இடத்தை நான் தொழக் கூடிய இடமாக ஆக்கிக் கொள்வேன்.''

(அதற்கு) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இறைவன் நாடினால், அவ்வாறு நான் செய்வேன்'' என்று கூறினார்கள். உத்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: ''மறுநாள் காலையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் (என்னுடைய இல்லத்திற்கு) வந்தார்கள்.

என்னுடைய வீட்டில் நுழைவதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி கோரினார்கள், நான் அனுமதி வழங்கினேன். வீட்டில் நுழைந்து அவர்கள் உட்காரவில்லை, ''உங்களது வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

எனது வீட்டின் ஒரு மூலையை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த இடத்தில் நின்று தக்பீர் (அல்லாஹுஅக்பர்) கூறினார்கள், அவர்களுக்குப் பின்னால் நாங்கள் நின்றோம், இரண்டு ரக்அத் தொழுதார்கள், பின்பு தொழுகையின் இறுதியில் ஸலாம் கூறினார்கள். (புகாரீ, அல் ஃபத்ஹ், 1-519)

வீட்டிலுள்ளோருக்கு ஆன்மீகப் பயிற்சி

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் இரவுத் தொழுகையை நிறைவேற்றக் கூடியவர்களாக இருந்தார்கள், இன்னும் அவர்கள் தொழ ஆரம்பிக்கும் பொழுது, ஓ..! ஆயிஷாவே எழுந்து வித்ருத் தொழுங்கள் என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம், முஸ்லிம் பி ஷர்ஹ் அல் நவவி, 6-23).

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : இரவில் எழுந்து தொழக் கூடியவனுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக, அவன் எழுந்து (விட்ட பின்) அவனது மனைவியையும் எழுப்பி, இன்னும் அவள் (எழுந்திருக்க) மறுத்து விடுவாளென்றால் அவளது முகத்தில் தண்ணீரைத் தெளிக்கட்டும்.''. (அஹ்மத், அபூதாவூத், ஸஹீஹ் அல் ஜாமிஃ, 3488).

இன்னும் வீட்டிலுள்ளோரை தானம் தர்மம் செய்யத் தூண்டுவது அவர்களது இறைநம்பிக்கையை அதிகரிக்கும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகம் ஆர்வமூட்டியிருக்கின்றார்கள், அவர்கள், ஓ பெண்களே..! தான தர்மம் வழங்குங்கள், நரகத்தில் உள்ளவர்களில் நீங்கள் தான் அதிகமாக இருக்கின்றீர்கள் என்பதைப் பார்த்திருக்கின்றேன். (புகாரீ, அல் ஃபத்ஹ், 1-405)

ஒன்று செய்யுங்கள்.., உங்களது வீட்டில் ஏழை எளியவர்களுக்கென தான தர்மம் வழங்குவதெற்கென ஒரு உண்டியலைத் தயார் செய்து கொள்ளுங்கள். வீட்டிலுள்ளோருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் கிடைக்கக் கூடிய தொகையில் ஒரு பகுதியை அதில் சிறிதளவை போட்டு வரும்படி ஆர்வமூட்டுங்கள். இன்னும் அதில் நீங்கள் போட்டிருப்பவைகள் யாவும் ஏழைகளுக்குச் சொந்தமானது என தீர்மானம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால், அந்த உண்டியல் ஒவ்வொரு முஸ்லிமின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஏழையின் பாத்திரமாகும், (ஏழைக்குச் சொந்தமானதாகும்).

இன்னும் வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படக் கூடிய அய்யாமுல் ஃபீழ் நாட்களில், அதாவது பிறை 13, 14, 15 ஆகிய நாட்களில், திங்கள், வியாழன் ஆகிய நாட்களில், ஆஷுரா (முஹர்ரம் 9 மற்றும் 10) அரஃபா நாள் நோன்பு மற்றும் முஹர்ரம், ஷஃபான் மாதங்களில் முடிந்தளவு அதிக நாட்களை சுன்னத்தான மற்றும் நபிலான நோன்புகளை நோற்பதற்கு உங்களது வீட்டினரை ஆர்வப்படுத்துங்கள்.

வீட்டில் திக்ர் மற்றும் துஆக்களை ஓத ஆர்வமூட்டுதல்

வீட்டில் நுழையும் பொழுது ஓத வேண்டிய துஆ : முஸ்லிம் ல் ஸஹீஹ் என்ற தரத்தில் பதிவாகி இருக்கின்றதொரு நபிமொழியில், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள் : உங்களில் ஒருவர் வீட்டில் நுழையும் பொழுது அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நுழையட்டும், உண்ணும் பொழுதும் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு உண்ணட்டும், (அப்பொழுது) ஷைத்தான் கூறுவான் : 'இந்த இடத்தில் நீ தங்குவதற்கு இடமில்லை, உண்பதற்கும் எதுவுமில்லை.' வீட்டில் நுழையும் பொழுது அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நுழையவில்லையென்றால், (ஷைத்தான்) கூறுவான், 'நீ தங்குவதற்கு இடம் கிடைத்து விட்டது'. உண்ணும் பொழுதும் அல்லாஹ்வின் பெயரைக் கூறவில்லையென்றால் (ஷைத்தான்) கூறுவான், 'நீ தங்குவதற்கு இடமும் கிடைத்து விட்டது, உண்பதற்கும் உணவு கிடைத்து விட்டது.'' (இமாம் அஹ்மத், அல் முஸ்னத் 3-346, முஸ்லிம் 3-1599).

அபூதாவூத் தனது சுனனில் பதிவு செய்திருக்கின்றதொரு நபிமொழியில், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தன்னுடைய இல்லத்தை விட்டு வெளியேறும் பொழுது இவ்வாறு கூறிக் கொள்ளட்டும்'பிஸ்மில்லாஹி, தவக்கல்து அல்லல்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்(அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (ஆரம்பிக்கின்றேன்), என்னுடை அலுவல்களை அவனிடமே ஒப்படைத்து விட்டேன், அல்லாஹ்வின் உதவியையன்றி வேறு உதவி இல்லை, அவனுடைய சக்தியன்றி வேறு சக்தி இல்லை), அவ்வாறு கூறக் கூடியவனுக்கு, அது பாதுகாப்பை வழங்கக் கூடியதாகவும், வழிகாட்டக் கூடியதாகவும், தேவையின் பொருட்டு பாதுகாப்பு வழங்கக்க கூடியதாகவும் இருக்கும். ஷைத்தான் அவனை விட்டும் தூரமாகவே இருப்பான், இந்த ஷைத்தானிடம் இன்னொரு ஷைத்தான் வந்து, ''வழிகாட்டப்பட்ட, (அருட்கொடைகளை) பெற்றுக் கொண்ட, மற்றும் பாதுகாக்கப்பட்டவனிடம் உனக்கு என்ன வேலை இருக்கின்றது? என்று கூறுவான்.'' (அபூதாவூத், மற்றும் திர்மிதீ, ஸஹீஹ் அல் ஜாமிஃ, எண்.499).

மிஸ்வாக் (பற்குச்சி கொண்டு பல்துலக்குதல்)

இமாம் முஸ்லிம் தனது ஸஹீஹ் முஸ்லிம் ல் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் அறிவிக்கப்பட்டதொரு நபிமொழியில் கூறுவதாவது : இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டில் நுழைந்து விட்டால், முதல் வேலையாக அவர்கள் மிஸ்வாக் கொண்டு தனது பல்லைத் தேய்த்துக் கொள்வார்கள். (முஸ்லிம், கிதாப் அத் தஹாரா, பாகம் 15, ஹதீஸ் எண்.44).

தினந்தோறும் சூரா அல் பகரா ஓதப்படும் வீட்டில் இருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுவான். இது குறித்து ஏராளமான நபிமொழிகள் இருக்கின்றன, அவையாவன :

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''உங்களது வீடுகளை மண்ணறையாக்கிக் கொள்ளாதீர்கள். சூரா அல் பகரா ஓதப்படும் வீட்டில் இருந்து ஷைத்தான் விரண்டோடி விடுகின்றான். (முஸ்லிம், 1-539)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களது வீடுகளில் சூரா ''அல் பகரா''வை ஓதுங்கள், சூரா ''அல் பகரா'' ஓதப்படும் வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான். (அல் ஹாகிம் - முஸ்தத்ரக் 1-561: ஸஹீஹ் அல் ஜாமிஇ, 1170)

இன்னும் சூரா ''அல் பகரா'' வின் கடைசி இரண்டு ஆயத்துக்களை ஓதி வருவதன் சிறப்புக்கள் குறித்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ''அல்லாஹ் இந்த வானம் மற்றும் பூமி ஆகியவற்றைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் ஒன்றை எழுதினான், அவனது அர்ஷுக்கு அருகில் அதனை வைத்திருந்தான், இன்னும் அதிலிருந்து இரண்டு வசனங்களை எடுத்து சூரா அல் பகராவினை நிறைவு செய்தான். அதனை மூன்று இரவுகள் தொடர்ந்து ஓதி வந்தால், அந்த வீட்டினை ஷைத்தான் நெருங்க மாட்டான். (இமாம் அஹ்மத் அல் முஸ்னத், 4-274, மற்றும் பலர். ஸஹீஹ் அல் ஜாமிஇ, 1799).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக