கை தட்டி ஆரவாரித்தல் என்பது இன்று உலகலாவிய ரீதியில் அனைத்து மனித சமூகங்களுக்கிடையிலும் ஒரு பழக்கப்பட்ட வழக்கமான செயலாக இருப்பதை அவதானிக்காதவர்கள் இருக்க முடியாது. சுருக்கமாகச் சொல்லப் புகுமிடத்து நாமும் கூட சில சமயங்களில் நம்மையறியாமலேயே இந்தச் செயலைச் செய்கிறோம்.
இன்று மேடைகளில் உரையாற்றுபவர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் என்று சமூகத்தில் எந்தவொரு கோணத்தைப் பார்த்தாலும் அவர்கள் தம் வெற்றிக்காக மற்றவர்கள் கைதட்டி ஆரவாரித்து உற்சாகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆசிரியர்கள் தமது மாணவர்கள் மத்தியில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்காக மற்ற மாணவர்களைக் கைதட்டும் படி கேட்டுக் கொள்கிறார்கள். இந்த வழிகாட்டலால், சின்னஞ்சிறுசுகள் பள்ளிக்கூடங்களிலே பெற்ற பரிசுகளுக்காக கைதட்டலை எதிர்பார்க்கிறார்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எந்தவொரு சிறிய விடயமானாலும் அந்த விடயம் சம்பந்தமாக அழகிய வழிகாட்டல் இல்லாமலில்லை.
என்னடா இது? கை தட்டுதலுக்கும் முன்மாதிரியுண்டா? என்று கேட்கும் மனித மனங்கள், இவையெல்லாம் சின்னச் சின்ன விடயங்கள் தானே! இவர்களுக்கு வேறு வேலையில்லை! எழுதித் தள்ளுகிறார்கள்! என்ற எண்ணவோட்டங்கள் வாசகர்களின் உள்ளங்களிலே ஓடுவது தெரிகிறது.
நன்மைகளை ஏவுவதும், தீமைகளைத் தடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்பதால் ஒவ்வொருவரும் தனக்கு இயன்ற வழியில் அவற்றைச் செய்து தான் ஆக வேண்டும். அது தான் நம்மைப் படைத்துப் போஷித்து இரட்சிக்கும் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்தும். சின்னச் சின்ன விடயங்கள் என்று ஒழுங்கீனங்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஆகவே, சிலர் சொல்வதுபோல இஸ்லாத்தில் சின்னச் சின்ன விடயங்கள் என்றொன்றில்லை.
அல்லாஹ் தன் திருமறை அல்-குர்ஆனிலே இந்தச் செயலைக் குறிப்பிட்டுக் காட்டி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்:
''மேலும், (அல்லாஹ்வின்) இல்லத்தில் அவர்களின் தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறு (எதுவுமாக) இருக்கவில்லை,; ''ஆகவே நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (இன்றையத்தினம்) வேதனையைச் சுவையுங்கள்,"" (என்று மறுமையில் கூறப்படும்)." (அல்குர்ஆன் 8:35)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகளை அறிவித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை நிராகரிப்பாளர்கள் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் செய்தியை மக்கள் தெளிவாக அறிந்து கொள்வதைத் தடுக்கும் நோக்குடன் சீட்டியடிப்பதையும் கை தட்டுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள். சீட்டியடித்துக் கை தட்டுவதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களை அவமானப் படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் கட்டளையும் அவனுடைய மார்க்கமும் மக்களுக்குப் போய்ச் சேர்வதைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்வதற்கு அன்று அவர்கள் தயாராகவே இருந்தார்கள்.
அன்று கஃபாவில் கூடி இப்படிப்பட்ட இழிசெயல்களைச் செய்த நிராகரிப்பாளரைப் பார்த்துத்தான் அல்லாஹ் மேற்கூறிய வசனத்தை இறக்கியுள்ளான். இந்த வசனத்தின் எச்சரிக்கை அன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே பொருந்தும். இந்தச் செயலை முஸ்லிம்களாகிய நாமும் செய்வதன் மூலம் அந்த இஸ்லாமிய விரோதிகளை நாங்கள் பின்பற்றுகிறோம் என்பதை எவராலும் மறுக்க முடியுமா?
எந்தப் பேச்சாளராக இருந்தாலும் அவரின் பேச்சைப் பாராட்டுகிறோம் என்ற நோக்கில் கைதட்டும் பார்வையாளர்களைப் பார்க்கிறோம். அந்தக் கைதட்டலுக்கிடையே, பேச்சின் ஒரு பகுதி, மக்களைச் சென்றடையாமல் போவதையும் அவதானிக்கிறோம். இதன் காரணமாக ஒரு தலைவர் சொல்லக்கூடிய ஒரு சொல், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அபார வளர்ச்சி பெற்றுள்ள ஊடகத் துறையின் மூலம் உலகமெல்லாம் பரப்பப்படுகிறது. பாரதூரமான விளைவுகளுக்கு அவை வழிவகுத்து விடுவதும் உண்டு.
அன்று சீரழிந்து போயிருந்த மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஒரு அழகிய முன்மாதிரியாக அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட அந்த மாமனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களைப் புண்படுத்துவதற்காக நிராகரிப்பாளர்கள் கையாண்ட இந்தக் கைதட்டலை முஸ்லிம்களாகிய நாம் தவிர்ந்து கொள்வதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
சின்னஞ் சிறிய செயல்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு அண்மைக்கால சரித்திரத்திலிருந்தே நாம் படிப்பினை பெறலாம்.
பாலஸ்தீனத்தின் சிறுவர்கள் தொடங்கிய சின்னஞ் சிறிய வேலையொன்றுதான் சிறுசிறு கற்களை இஸ்ரவேலியப் படையினர் மீது விட்டெறிந்தமை. அந்தச் சின்னஞ்சிறிய வேலை, 'இன்திஃபாதா" என்ற அறிமுகத்துடன் பாலஸ்தீன விடுதலை எழுச்சிக்குப் புத்துயிரளித்தது. ஊடகங்களின் உள்பக்கங்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிட்ட பாலஸ்தீனப் போராட்டம் மீண்டும் முன்பக்கச் செய்தியானது.
தொலைக்காட்சிச் செய்திகளில் ஒவ்வொரு செய்திக்கான நேரத்திலும் முதல் செய்தியானது. சிறுசிறு கற்களை வீசியெறியும் சிறுவர்களின் வீரமான பங்களிப்புகள்தான் சின்னத்திரைகளிலே காட்டப்பட்டன.
உலகளாவிய ரீதியில், பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்படும் மனித இனமே வெட்கித் தலைகுனியும் அளவிற்கு செய்யப்பட்ட அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்திகளாகக் கொண்டு செல்லப்பட்டன. உலகமாந்தர் மத்தியில் அநியாயங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதைப் பார்த்தோம். உலகெலாம் இந்த அநியாயங்களுக்காக முஸ்லிம்கள் மட்டுமல்ல முஸ்லிமல்லாதார் கூட குரல் எழுப்ப அது ஒரு காரணியாயிற்று.
இனி, மனித சமுதாயத்திற்கே அருட்கொடையாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவு படுத்துவதற்காகவே நிராகரிப்பாளர்களால் கையாளப்பட்ட இந்தக் கைதட்டலை நாம் நிறுத்தித்தான் ஆக வேண்டும். அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடும் நாம் அவன் விரும்பாத எந்தச் செயலாக இருந்தாலும், சிறியதாக நமக்குத் தோன்றினாலும், அதை விடுவதுதான் நாம் அவனைப் பரிபூரணமாக அவனுக்கே உண்டான பண்புகளோடு ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி.
ஆகவே, சின்னச் சின்ன விடயங்கள் என்று எதையுமே எடை போடுவதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சிறியதோ பெரியதோ எதுவாயிருந்தாலும் அனைத்திற்கும் அல்-குர்ஆனிலிருந்தும் அல்-ஹதீஸிலிருந்தும் மட்டுமே வழிகாட்டல்கள் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக ஒரு முஸ்லிம் உணர்ந்து விசுவாசித்துச் செயல் படவேண்டும். அப்படிச் செயல்படுவது, நிச்சயமாக, சாபத்திற்கு உள்ளானவர்களுக்கான நரக நெருப்பிலிருந்து விடுதலை பெற அது ஒரு காரணியாக அமையும்.
வஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில்ஆலமீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக