திங்கள், 9 பிப்ரவரி, 2026

உன்னுடைய எதிரியைத் தெரிந்து கொள்.

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.


நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.



எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக. நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.


எனது பெயர் ................................................


நான் இங்கு ஷைத்தானின் பழக்கவழக்கங்களைப் பற்றி பேச வந்துள்ளேன்.


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே….


 

ஷைத்தானை பற்றி அல்லாஹ் கூறுகிறான்:



35:6➚ اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا ؕ اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِؕ


 ''ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.'' (அல்குர்ஆன் 35:6)


மனிதர்களை நான் எப்படி எல்லாம் கெடுப்பேன் என்பதாக அல்லாஹ்விடம் சைத்தான் எப்படி சொன்னான் என்றால் குர்ஆனில் வருகிறது 


ثُمَّ لَاٰتِیَنَّهُمْ مِّنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَیْمَانِهِمْ وَعَنْ شَمَآىِٕلِهِمْ ؕ وَلَا تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِیْنَ ۟


"பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் ஷைத்தான் கூறினான்). (அல்குர்ஆன் 7:16,17)


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே….


சைத்தானின் உடைய பழக்கவழக்கங்கள் எப்படி இருக்கும் என்றால்

அவன் தன் இடது கையால் சாப்பிடுவான்.


ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.

  

நீங்கள் சாப்பிடும் போது வலது கையால் சாப்பிடுங்கள் குடிக்கும் போது வலது கையால் குடியுங்கள். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் சாப்பிடுவான். குடிப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 


(அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3764)


இடது கையால் சாப்பிடுவதும் குடிப்பது அடுத்தவர்களுக்கு கொடுப்பது என வலது கையை விட்டுவிட்டு இடது கையை செய்வது என்பது சைத்தானினுடைய பழக்க வழக்கங்களில் ஒன்று என்பது இந்த ஹதீஸின் மூலமாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.


இப்படிப்பட்ட பழக்கம் நம்மிடம் இருந்தால் அதை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். 


அல்லாஹ்வின் நல்லடியார்களே 


இது மட்டுமல்ல ஷைத்தான் மனிதர்களை தொழ விடமாட்டான்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப் பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1144)


அதாவது மனிதன் தொழக்கூடாது என்பதற்காக வேண்டி இப்படி செய்வான் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் கூறியிருக்கிறார்கள். 


சில நேரங்களில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கின்றபொழுது பாங்கு சத்தத்தை கேட்டு விட்டால் பாங்கு சொல்லி விட்டார்கள் நான் தொழுதுட்டு வரேன் என்று சொல்லும்போது ஆமா இவ்வளவு நாள் தொழுது நீ என்னத்த கண்ட பேசாம உட்காருடா என்று சொல்லக்கூடிய வார்த்தை என்பது அது சைத்தானுடைய வார்த்தை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


அதுமட்டுமல்ல சில நேரங்களில் சைத்தான் இப்படியும் செய்வான்.  


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்கல் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான். 

(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3289)


ஒரு மனிதன் கொட்டாவி விடுகின்ற பொழுது அதை பார்க்கின்ற மற்ற மனிதர்களுக்கும் கொட்டாவி வந்துவிடுகிறது அதிகம் எப்போது மனிதன் விடுகிறானோ அப்போது அவனுக்கு சோம்பல் உணர்வு மிகைத்து விடுகிறது சரி பிறகு பார்த்துக்கலாம் பிறகு பண்ணிக்கலாம் என்று செய்ய வேண்டிய காரியத்தை அவன் தள்ளிப் போடுகின்றான் ஒரு நன்மையான விஷயம் நடந்து கொண்டிருக்கின்ற பொழுது ஒரு மனிதன் வாய்ப்பிலிருந்து ஆ என்று சத்தமாக கொட்டாவி விட்டான் என்றால் அந்த நன்மையான அமல்களில் மற்ற மனிதர்களுக்கும் ஒரு சலிப்பு சடைவு என்பது ஏற்படுகிறது இதன் காரணமாக நல்ல அமல்கள் உற்சாகமாக முன்னேற்றமான செயல்கள் நடைபெறக்கூடிய பேச்சுவார்த்தை நடைபெறக்கூடிய இடங்களில் சைத்தானுடைய முதல் முயற்சி என்னவென்றால் அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு சோம்பலை ஏற்படுத்துவான் அதன் காரணமாக அந்த நல்ல அமல் சீக்கிரமே முடிந்து விடுகிறது. 


இதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படி சொன்னார்கள் உங்களுக்கு கொட்டாவி வந்தால் அதை உங்களது இடது கையால் மறைத்து நீங்கள் கொட்டாவி விடுங்கள் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கூறினார்கள்.


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே….


 அதுபோல ஷைத்தானின் தங்குமிடங்கள் லாட்ஜ் மற்றும் ஹோட்டல் எதுவென்றால் எப்போது ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும் போது சலாம் சொல்லாமல் நுழைகிறானோ அந்த வீடுதான் சைத்தானுடைய தங்குமிடம்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:. ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூறாவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது'' என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறா விட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்'' என்று சொல்கிறான். 


(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4106)


எப்போதெல்லாம் நாம் சலாம் சொல்லாமல் வீட்டிற்கு நுழைகிறோமோ அப்போது நான் தனியாக நுழைவதில்லை நம்மோடு சைத்தானும் இபிலீஷும் உள்ளே நுழைகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே….


ஷைத்தானின் திறவுகோல் எதுவென்றால் அதாவது சில நேரங்களில் நாம் பேசும்போது நான் மட்டும் இப்படி செய்திருந்தால் அப்படி ஆகி இருக்கும் அப்படி செய்திருந்தால் இப்படி ஆகி இருக்கும் என்பதாக நாம் பேசுவது தான் சைத்தானின் உடைய திறவுகோலாகும்.

  

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!'' என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்'' என்று சொல். ஏனெனில், (இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே' என்பதைச் சுட்டும்) லவ்' எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழிவகுக்கும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5178)


  ஷைத்தான் எப்போது அழுகிறான் என்றால் 


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே "அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவ னுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம் பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்'' என்று கூறியபடி விலகிச்செல்கிறான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 133)


 ஷைத்தான் எப்போது ஓடுவான் என்றால்…

 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்) அழைக்கப்படும்போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக்கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக்கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல் முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல் முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, "இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்'' என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 608)


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே….


சைத்தான் பழக்கவழக்கங்களில் ஒன்று மக்களுக்கு மத்தியில் பிளவு ஏற்படுத்துவதாகும்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், அவர்களிடையே பிளவை உருவாக்குவ(தில் வெற்றி கண்டு விட்ட)ன். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5417)


சைத்தான் எப்போது சந்தோசப்படுவான் என்றால்….

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ; அரேபிய தீபகற்பத்தில் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், நீங்கள் லேசாக கருதக்கூடிய அமல்கள் மூலமாக சந்தோஷப்படுகிறான். (நூல்: அஹ்மத்)


அதாவது எப்போதெல்லாம் நாம் ஒரு அமல் செய்வதை லேசாக கருதுகிறோமோ ஒரு சதக்கா தானே…..சுன்னத்து தொழுகை தானே…. இது நபில் தொழுகை தானே என்பதாக அல்லாஹ்வுக்கு நாம் செய்ய வேண்டிய அமல்களை லேசாக நாம் கருதும்போது சைத்தான் மிகவும் சந்தோஷப்படுவான். 


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே….


சைத்தான் மனிதர்களின் மீது எப்போது தன் மந்திர முடிச்சு போடுவான் என்றால்….


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு' என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து)விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1142)


சைத்தான் மனிதர்களுடைய உள்ளத்தில் அவனது ஈமானை கெடுக்கும் விதமாக எப்படி எல்லாம் கேள்விகளை உருவாக்குவான் என்றால்…..


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்கல் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, "இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?'' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், "உன் இறைவனைப் படைத்தவர் யார்?'' என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிருந்து) விலகிக்கொள்ளட்டும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3276)


இப்படிப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெற நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எந்த வழியை காட்டித் தந்திருக்கிறார்கள் என்று சொன்னால்

  

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சூரத்துல் பகரா ஓதப்டுகிற வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகின்றான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: லா இலாஹ இல்லல் லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல் ஷய்இன் கதீர் - என்று ஒருநாள் நூறு முறை சொல்கிறவருக்கு, பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் கிடைக்கும். மேலும் நூறு நன்மைகள் எழுதப்படும். (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும் அந்த நால் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது இருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3293)


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே இறுதியாக ஒரே ஒரு விஷயத்தில் கூறி என் உரையை நான் நிறைவு செய்கிறேன். 


சைத்தான் தன்னை மேல் உலகத்திலிருந்து தூக்கி எறிவதற்கு முன்னால் அல்லாஹ்வைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னான் அந்த வார்த்தையை நாம் சற்று சிந்திக்க வேண்டும்.


அவன் என்ன சொன்னான் தெரியுமா அதை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.


قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاُزَیِّنَنَّ لَهُمْ فِی الْاَرْضِ وَلَاُغْوِیَنَّهُمْ اَجْمَعِیْنَ


"என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்று கூறினான். (அல்குர்ஆன் 15:39,40)


எனவே இப்படிப்பட்ட சைத்தானின் உடைய சூழ்ச்சியை விட்டும் அவனது தீங்கை விட்டும் வல்லுநல்லா நம் அனைவர்களின் பாதுகாப்பானாக 


 ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்க கூடிய பாக்கியத்தை நமக்கும் நமது குடும்பத்தினர்களுக்கும் நமது சந்ததியினர்களுக்கும் நிறைவாக தந்தருள் புரிவானாக 


எனக்கு இங்க பேச வாய்ப்பளித்த ஹஜ்ரத் அவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஜமாத் அவர்களுக்கும் எனது நன்றிகளந்த சலாத்தை கூறி விடைபெறுகின்றேன் 


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 


பழைய குறிப்புகள் வாசிக்க கிளிக் செய்யவும். 


மக்தப் மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக