தராவீஹ் பயான் பிறை – 1
ஹிஜ்ரி 1447.
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد
ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் : 2:2)
அல்ஹம்துலில்லாஹ் புனிதமான ரமலான் மாதம் நமக்கு கிடைத்திருக்கிறது. இரண்டு மாதமாக இறைவனிடத்திலே நாம் கேட்டுக் கொண்டே இருந்தோம் அல்லாஹும்ம பல்லிங்னா ரமலான் யா அல்லாஹ் எங்களை ரமலான் மாதத்தை அடைய செய்வாயாக என்று கேட்டுக் கொண்டிருந்தோம் அந்த துஆவை ஏற்று இந்த புனிதமான மாதத்தை நம் எல்லோரையும் அடையச் செய்து இருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ்…
இந்த மாதம் முழுவதும் நோன்புகள் நோற்பதற்கும் பரிபூரணமான உடல் ஆஃபியத்தோடு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் அவனை நின்று வணங்கவும் புனித லைலத்துல் கத்ர் இரவை அடையவும் அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக. ஆமீன்
இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட திருக்குர்ஆனின் இரண்டாம் ஸூராவினுடைய இரண்டாம் வசனம்
. ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ
வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும், எதன் மீதும், யார் மீதும், சந்தேகம் கொள்ளாமல் இருக்க வேண்டும். என்பது இந்த வசனம் எடுத்துரைக்கும் மிக அற்புதமான தகவலாகும்.
மனித வாழ்வில் சந்தேகம் தலை தூக்கும் ஒவ்வொரு இடத்திலேயும் மனிதன் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை இழக்கிறான்.
கணவன் மனைவியின் மீது, மனைவி கணவனின் மீது, பெற்றவர்கள் பிள்ளைகளின் மீது, சந்தேகம் கொள்வதினால் அழகான குடும்ப வாழ்க்கை சிதைந்து விடுகிறது.
ஆசிரியர்கள் மாணவர்களின் மீது சந்தேகம் கொண்டதின் காரணமாக மாணவனுக்கு கிடைக்க வேண்டிய பயனுள்ள கல்வி சிதைந்து விடுகிறது.
முஸ்லிம்கள் குர்ஆனின் மீது, அல்லாஹ்வின் மீது, நபியின் மீது மலக்குமார்களின் மீது. மறுமை நாள் சம்பந்தப்பட்டவைகளின் மீது சந்தேகம் கொண்டாலே அவனது ஈமானே சிதைந்து விடுகிறது.
இப்படியாக எந்த விஷயத்தின் மீதும் சந்தேகம் கொள்ளாமல் நம்பிக்கையோடு இவ்வுலக வாழ்வில் வாழ வேண்டும் என்பதை மிக சிறப்பாக இந்த வசனம் நமக்கு பாடம் போதிக்கிறது.
சந்தேகம் கொள்ளுதல் குறித்து
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில்:-
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ، وَلاَ تَحَسَّسُوا، وَلاَ تَجَسَّسُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَدَابَرُوا، وَلاَ تَبَاغَضُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا
"(பிறர் மீது) தீய எண்ணம் கொள்வதையும் (அடிப்படையற்ற) சந்தேகம் கொள்வதையும் விட்டு விலகி இருங்கள். ஏனெனில் (அத்தகைய) சந்தேகம் என்பது பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். பிறரின் இரகசியங்களை (அல்லது குறைகளை) ஆராயாதீர்கள்; உளவு பார்க்காதீர்கள்; ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; ஒருவரையொருவர் புறக்கணிக்காதீர்கள் (உறவைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள்); ஒருவரையொருவர் வெறுக்காதீர்கள்; மேலும் அல்லாஹ்வின் அடியார்களே! (அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபடி) சகோதரர்களாக இருங்கள்!" நூல்: புகாரி
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ وَأَهْوَى النُّعْمَانُ بِإِصْبَعَيْهِ إِلَى أُذْنَيْهِ إِنَّ الْحَلَالَ بَيْنٌ، وَالْحَرَامَ بَيِّنٌ، وبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ فَقَدِ اسْتَبْرَأَ لِدِينِهِ، وعِرْضِهِ، ومَنْ وقَعَ فِي الشُّبُهَاتِ وقَعَ فِي الْحَرَامِ ، كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى، يُوشِكُ أَنْ يَقَعَ فِيهِ، أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حمى، أَلَا وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ، أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، ألا وَهِيَ الْقَلْبُ مُتَّفَقٌ عَلَيْهِ.
அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது. தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலானோர் அறியமாட்டார்கள். எனவே யார் சந்தேகத்திற்கு இடமானவற்றை தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர். (அனுமதிக்கப்படாதவற்றில் தலையிடுகிறார்) என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவரகள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி)
உஸாமா பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் வாழ்வில்
உஸாமா பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஜுஹைனா' குலத்தைச் சேர்ந்த 'அல்-ஹுரகா' எனும் இடத்திற்கு எங்களை அனுப்பினார்கள். நாங்கள் அதிகாலையில் அக்கூட்டத்தாரை அடைந்து (தாக்கி) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அவர்களில் ஒருவரை (துரத்திப்) பிடித்தோம். நாங்கள் அவரைச் சூழ்ந்து கொண்டபோது, அவர் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறினார். உடனே அந்த அன்சாரி அவரை (தாக்காமல்) விட்டுவிட்டார். ஆனால் நான் எனது ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்றுவிட்டேன்.
நாங்கள் (மதீனா) திரும்பிய போது, இச்செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எட்டியது. அவர்கள் என்னிடம், 'உஸாமா! லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவர் கூறிய பிறகும் அவரை நீ கொன்றுவிட்டாயா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வின் தூதரே! அவர் (தமது உயிரைக் காத்துக்கொள்ள) தற்காப்புக்காகவே அவ்வாறு கூறினார்' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவர் கூறிய பிறகும் அவரை நீ கொன்றுவிட்டாயா?' என்று கேட்டார்கள். அவர்கள் அதை என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்; எந்த அளவிற்கென்றால், 'அந்நாளுக்கு முன்பு நான் இஸ்லாத்தை ஏற்றிருக்கவே கூடாதா' என்று நான் ஆசைப்படும் அளவிற்கு (நான் வருந்தினேன்)."நூல்:முஸ்லிம்
ஒருவரது செயலின் உள்நோக்கத்தை (Intention) நாம் சந்தேகப்படக் கூடாது. வெளிப்படையான உண்மையை மட்டுமே நாம் ஏற்க வேண்டும்.
ஒரு பெண்ணின் வழக்கு
ஒருமுறை ஒரு பெண்மணி ஒரு குற்றத்திற்காக நபிகளாரிடம் அழைத்து வரப்பட்டார். மக்கள் அந்தப் பெண்ணின் கடந்த காலத்தைப் பற்றியும், அவரது நடத்தையைப் பற்றியும் சந்தேகங்களை எழுப்பினர். அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆதாரமில்லாத சந்தேகங்களை வளர்ப்பதை விட, ஒருவரின் குறைகளை மறைப்பதும் அவருக்கு நல்வழி காட்டுவதுமே சிறந்தது என்று போதித்தார்கள். "யார் ஒரு இறைநம்பிக்கையாளரின் குறையை இவ்வுலகில் மறைக்கிறாரோ, அவரது குறையை மறுமை நாளில் அல்லாஹ் மறைப்பான்" என்று கூறினார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் 'காமிய்யா' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தொடர்பான சட்ட அமலாக்கத்தின் பின்னணியில் விவரிக்கப்படும் ஒரு பாடமாகும். நேரடியாக அந்தப் பெண்மணியின் கடந்த காலத்தைப் பற்றி மக்கள் பேசியபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய அணுகுமுறை மிக முக்கியமானது.
அந்தப் பெண்மணி தானாக முன்வந்து தன்னிடம் ஒரு தவறு (விபச்சாரம்) நடந்துவிட்டதாக நபிகளாரிடம் ஒப்புக்கொண்டார். பொதுவாக இது போன்ற நேரங்களில், மக்கள் அந்தப் பெண்ணின் குலம், அவரின் முந்தைய வாழ்க்கை மற்றும் அவர் யாருடன் பழகினார் என்பது போன்ற தேவையற்ற சந்தேகங்களையும், துருவித் துருவி ஆராயும் (Spying) போக்கையும் காட்டினர்.
மக்கள் அந்தப் பெண்ணைப் பற்றிப் பேசத் தொடங்கியபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைக் தடுத்தார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்மணிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, ஒருவர் அந்தப் பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசினார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக அவர் (அந்தப் பெண்) அத்தகைய ஒரு தவ்பாவை (மன்னிப்பை) தேடினார், அந்த மன்னிப்பை ஒரு கிராமமே செய்திருந்தாலும் அது அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும்." நூல்: முஸ்லிம்
இதன் மூலம், ஒருவரின் கடந்த காலத்தைப் பற்றிச் சந்தேகப்படுவதோ அல்லது துருவி ஆராய்வதோ கூடாது என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்த்தினார்கள்.
ஜுரைஜ் எனும் இறைநேசரின் வரலாறு:
இது முந்தைய காலத்துச் சமுதாயத்தில் நடந்த ஒரு சம்பவம், இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பாடமாகத் தனது தோழர்களுக்குக் கூறினார்கள்: ஜுரைஜ் என்பவர் ஒரு மடாலயத்தில் இறைவணக்கத்தில் ஈடுபட்டிருந்தார். ஒரு பெண் அவர் மீது தவறான அவதூறு (சந்தேகம்) கிளப்பினார். அந்த ஊர் மக்கள் எந்த விசாரணையும் இன்றி, அவர் மீது கொண்ட சந்தேகத்தினால் அவரது மடாலயத்தை இடித்துத் தள்ளினர்.பின்னர், அந்தப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தை "இவர் (ஜுரைஜ்) குற்றமற்றவர்" என்று இறை அருளால் பேசிய பிறகு தான் மக்கள் தங்கள் தவறை உணர்ந்தனர்.
ஒரு நல்லவரைப் பற்றிச் சமூகம் கொள்ளும் தவறான சந்தேகம், எவ்வளவு பெரிய அநீதிக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு இது ஒரு சான்று.
உள்ளங்களில் தவறான எண்ணம்
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஸபிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்த போது அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுந்தேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் என்னுடன் எழுந்து வந்தார்கள். உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வீட்டுவாசலுக்கு அருகில் பள்ளிவாசலின் தலைவாயிலை நான் அடைந்த போது அன்சாரிகளில் (மதீனாவாசிகள்) இருவர் எம்மைக் கடந்து சென்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவ்விருவரும் முகமன் (சலாம்) கூறினார்கள். அப்போது அவ்விருவரிடமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'சற்று நில்லுங்கள், இவர் (என் மனைவி) ஸபிய்யா பின்த் ஹுயை ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தான்' என்றார்கள். அவ்விருவரும் ஆச்சரியத்துடன், 'அல்லாஹ் தூய்மையானவன் (ஸுப்ஹானல்லாஹ்), அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா சந்தேகிப்போம்!' என்றனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஊடுருவி இருக்கின்றான். உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் விதைத்து விடுவானோ என நான் அஞ்சினேன்' என்றார்கள். நூல்: புகாரி
எனது அருமை மனைவியிடம் தான் நான் உரையாடிக் கொண்டிருக்கின்றேன் என்பதை அவ்விரு தோழர்களையும் அழைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னிலை விளக்கம் கொடுக்காமல் இருந்திருந்தால் நிலைமை என்னவாயிருக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தேவையற்ற பின்விளைவுகள், புரளிகள், மனவேதனைகள் ஏற்பட்டிருக்கும். அவ்விருவரில் யாரேனும் ஒருவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதோ ஒரு பெண்மணியுடன் பேசிக்கொண்டிருக்கின்றார் என்று எவரேனும் ஒருவரிடம் சொன்னால் கூட போதும், அவ்வளவுதான்... பின்னர் அச்செய்திக்குக் கால் முளைத்து கை முளைத்து ஊதிப் பெரிதாக்கப்பட்டு, தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும். ஆகவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முளையிலேயே அதனைக் கிள்ளி எறிந்தார்கள்.
இவைகளை தாண்டி நம் மீது கடமையாக ஆக்கப்பட்ட வணக்க வழிபாடுகளின் மீதும், அதற்கு கிடைக்கும் கூலிகளின் மீதும், சந்தேகம் கொள்ளாமல் உறுதியான நல்ல எண்ணத்தோடு அமல்களை செய்யும் பொழுது தான் நன்மைகள் பரிபூரணமாகவும் நிரப்பமாகவும் நாளை மறுமை நாளில் நமக்கு கிடைக்கப்பெறும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்:-
من صام رمضان ايمانا و احتسابا غفر له ما تقدم من ذنبه
யார் ரமலான் காலத்தில் ஈமானோடும், நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும், அமல்கள் செய்கின்றார்களோ, நோன்பு நோற்கின்றார்களோ, அவர்களின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகிறது.
என்ற ஹதீஸில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது நம்முடைய அமல்களின் மீது நாம் சந்தேகப்படுவது கூடாது. பிறை விஷயத்தில், தராவீஹ் எட்டு ரக்ஆத்தா? இருபது ரக்ஆத்தா? எனும் விஷயத்தில், ஜகாத் வருடா வருடம் கொடுக்கணுமா? ஆயுளுக்கு ஒரு தடவையா? என சந்தேகத்தை அமல்களின் மீது உருவாக்கிக் கொண்டு செயல்படுவது நல்ல மூஃமின்களுக்கு அழகல்ல என்பதை நாம் நம்முடைய சிந்தனையில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்.
எவரேனுமொருவர் ஒரு செய்தியைக் கூறினால் அதனை உடனே நம்பிவிடக்கூடாது. அதன் உண்மைத்தன்மையை தீர விசாரித்தறிய வேண்டும்.
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَةٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَدِمِينَ
'முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள் அல் குர்ஆன் 49:6)
இவ்வசனத்தின் மூலமாக முஸ்லிம்களுக்கு ஓர் அடிப்படை வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடிய, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி உங்களுக்குக் கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் அச்செய்தியைக் கொண்டு வருபவன் எப்படிப்பட்டவன் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். அவன் கொடுத்த செய்திக்கு ஏற்ப செயல்படுவதற்கு முன் உண்மை நிலவரம் என்ன என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்பதே அந்த அடிப்படையாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் சந்தேக பார்வைகளை விட்டும் பாதுகாப்பானாக பிறர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதை விட்டும் நம்மை பாதுகாப்பானாக புனிதமான இந்த மாதத்தில் இபாதத் செய்யும் நசீபையும் அதற்கான உடல் ஆஃபியத்தையும் தந்தருள்வானாக ஆமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக