தராவீஹ் பயான் பிறை – 6
தலைப்பு : “ரீல்ஸ் வாழ்க்கையா? ரியல் வாழ்க்கையா?”
ஹிஜ்ரி 1447.
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد
وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ اَفَلَا تَعْقِلُوْنَ
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் : 6:32)
كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ
“இந்த உலகத்தில் நீ ஒரு அந்நியன் அல்லது ஒரு பயணி போல இரு.”
நூல்: புகாரி
ஐந்தாம் நாள் நோன்புகள் நிறைவு செய்து ஆறாவது தராவீஹ் தொழுகையை முடித்துவிட்டு அமர்ந்து இருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்…
அல்லாஹ் எல்லோருடைய நோன்புகளையும் நாம் நின்று வணங்கிய தொழுகையும் ஏற்றுக் கொள்வானாக மீதமுள்ள நாட்களில் பரிபூரணமாக நோன்புகள் நோற்று அவனை நின்று வணங்கும் தவ்ஃபீக்கை நம் எல்லோருக்கும் தந்தருள் புரிவானாக. ஆமீன்.
இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட சூரா அன்ஆம் அந்த சூராவில் வருகின்ற மேற்சொன்ன வசனம்….
1. "உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை"
இங்கு "வீண் மற்றும் விளையாட்டு" என்பது உலகமே தேவையில்லை என்று பொருளல்ல. மாறாக, அதன் நிலையற்ற தன்மையை அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான்.
“لَعِبٌ” — விளையாட்டு ஒரு விளையாட்டு தொடங்கி சிறிது நேரத்தில் முடிந்துவிடுவது போல, உலக வாழ்வின் மகிழ்ச்சியும் மிகக் குறுகிய காலமே நீடிக்கும்.
அல்லாஹ் 'லஇபுன்' (விளையாட்டு) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான். ஒரு கால்பந்து போட்டியோ அல்லது கிரிக்கெட் போட்டியோ நடக்கும்போது, அந்த 90 நிமிடங்களும் வீரர்கள் உலகத்தையே மறந்து அதில் மூழ்கியிருப்பார்கள். ஆனால் ஆட்டம் முடிந்ததும் மைதானத்தை விட்டு வெளியேறத்தான் வேண்டும்.
நாமும் அப்படித்தான். இங்கே நாம் கட்டிய வீடுகள், சம்பாதித்த பதவிகள், சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் ஆட்டம் முடியும் வரைதான். மரணம் என்ற விஸில் சத்தம் கேட்டவுடன், நாம் மைதானத்தை விட்டு வெறும் கையோடு வெளியேற வேண்டும்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுகை
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவாக இருந்தபோது, பாரசீகம் (Persia) மற்றும் ரோம் (Rome) ஆகிய பேரரசுகள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தன. அங்கிருந்த தங்கம், வைரம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் மதீனாவுக்கு வந்தபோது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அழுதார்கள்.
மக்கள் ஆச்சரியப்பட்டு கேட்டபோது,
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்" இந்தச் செல்வம் எந்தச் சமுதாயத்திற்கு வருகிறதோ, அவர்களுக்குள் பொறாமையும் பகையும் வந்துவிடுமே என்று அஞ்சுகிறேன்" என்றார்கள். அவர்கள் அந்த ஆடம்பரங்களை விளையாட்டாகக் கருதினார்கள், மறுமையையே இலக்காகக் கொண்டார்கள்.
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்களின் மரணம்
ஜெருசலேமை மீட்டெடுத்த மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மரணிக்கும் தருவாயில் ஒரு முக்கியமான கட்டளையிட்டார்.
அவர் தனது தளபதியிடம் ஒரு துணியை ஈட்டியின் நுனியில் கட்டி, அதை மக்களிடையே தூக்கிக் காண்பித்து இவ்வாறு சொல்லச் சொன்னார்:
"கிழக்கையும் மேற்கையும் ஆண்ட மாமன்னர் ஸலாஹுத்தீன், தான் இறக்கும்போது தன்னுடன் எடுத்துச் செல்வது இந்த ஒரு துண்டு கஃபன் ஆடையை தவிர வேறொன்றுமில்லை!"
அவரிடம் கபனிடுவதற்குத் தேவையான பணம் கூட இருக்கவில்லை; அத்தனையும் தர்மம் செய்திருந்தார்கள். உலக வாழ்வின் 'விளையாட்டு' முடிந்துவிட்டது என்பதை அவர்கள் உலகுக்கு உணர்த்திய விதம் இது.
“لَهْوٌ” — கவனத்தைத் திருப்பும் வேடிக்கை : ஒருவரை முக்கியமான காரியத்திலிருந்து திசைதிருப்பும் விஷயமே 'லஹ்வு' எனப்படும். மறுமை என்ற நிரந்தர வாழ்வை மறக்கச் செய்து, மனிதனை இந்த உலக மோகத்தில் மூழ்கடிப்பதால் இது வீண் எனப்படுகிறது.
ஒரு மாணவன் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருக்கும்போது, பக்கத்து வீட்டில் பாட்டுச் சத்தம் கேட்டால் அவன் படிப்பை விட்டுவிட்டு அங்கே கவனம் செலுத்துவதுதான் 'லஹ்வு'. மறுமை என்ற மாபெரும் தேர்வுக்குத் தயாராக வேண்டிய நம்மை, இந்த உலகத்தின் ஆடம்பரங்களும், தேவையில்லாத போட்டிகளும் திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றன. "மக்களே! இந்த உலகம் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்." என்பதுதான் இந்த வசனம் நமக்குச் சொல்லும் எச்சரிக்கை.
இன்று தொழுகை நடக்கிறது, ஆனால் இளைஞனின் விரல்கள் கேமிங் கன்ட்ரோலரில் (Gaming Controller) இருக்கின்றன.
பெற்றோர் அழைக்கிறார்கள், ஆனால் காதுகளில் ஹெட்செட் (Headset) இருப்பதால் அந்த சத்தம் கேட்பதில்லை.
மறுமைக்காகத் தயாராக வேண்டிய நேரத்தில், ரீல்ஸ் (Reels) மற்றும் தேவையற்ற வீடியோக்களில் மூழ்கி இருப்பதுதான் இந்த வசனம் எச்சரிக்கும் 'வீண் வேடிக்கை'.
இப்னு மஸ்ஊத் (ரலி) கண்ட நபிகளாரின் எளிமை
ஒருமுறை இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்கச் சென்றபோது, அவர்கள் ஒரு பாயில் படுத்து எழுந்திருந்தார்கள். அந்தப் பாயின் தழும்புகள் அவர்களின் உடலில் பதிந்திருந்தன.
வருத்தமடைந்த இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு ஒரு மென்மையான மெத்தை வாங்கித் தரட்டுமா?" என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன பதில் இந்த வசனத்திற்கு மிகச்சிறந்த விளக்கம்:
"எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன சம்பந்தம்? நான் ஒரு வழிப்போக்கனைப் போன்றவன். ஒரு மரத்தின் நிழலில் சிறிது நேரம் தங்கிவிட்டு, பிறகு அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்பவனைப் போன்றவன் நான்." (நூல்: திர்மிதி)
2. "பயபக்தியுடையவர்களுக்கு மறுமை வீடே மேலானது"
உலக இன்பங்கள் கறைபடிந்தவை, குறைபாடுகள் உடையவை மற்றும் முடிவுக்கு வரக்கூடியவை. ஆனால்:
மறுமை (The Hereafter): இது எவ்விதக் கவலையோ, நோயோ, சலிப்போ இல்லாத நிரந்தரமான வாழ்வு.
தக்வா (பயபக்தி): இந்த மேலான நிலையை அனைவரும் அடைய முடியாது. அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, விலக்கப்பட்டவற்றிலிருந்து விலகி வாழும் 'முத்தக்யீன்களுக்கு' மட்டுமே அந்தச் சிறப்பு உண்டு.
ஹாரூன் அர்-ரஷீத் மற்றும் பஹ்லூல் (ரஹ்)
அப்பாஸிய கலீபா ஹாரூன் அர்-ரஷீத் அவர்கள் ஒருமுறை பஹ்லூல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் அறிவுரை கேட்டார்கள். பஹ்லூல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு மண்ணறை ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள்.
அவர்கள் கலீபாவிடம் கேட்டார்கள்: "மன்னா! இந்தச் மண்ணறையில் உள்ள மன்னர்களின் கபுர்களுக்கும் (கல்லறை), ஏழைகளின் கபுர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா? அங்கேயும் இங்கேயும் எலும்புகள் தானே கிடக்கின்றன?"
பிறகு சொன்னார்: "உலகம் என்பது ஒரு பாலத்தைப் போன்றது. கடந்து செல்லுங்கள், ஆனால் அங்கே வீடு கட்டாதீர்கள்." கலீபா அழுதார்கள்.
நூல் : பிதாயா வந்நிஹாயா
எவ்வளவு பெரிய பேரரசை ஆண்டாலும், இறுதியில் ஒரு (சிறு குழி ) கப்ர் தான் நமக்கானது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
அன்னை ஆசியா (அலை) அவர்களின் முன்மாதிரி
இந்த வசனத்திற்கு மிகச்சிறந்த உதாரணம் ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்.
அவர்கள் ஒரு நாட்டின் மகாராணி. உலகில் ஒரு பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை சொகுசுகளும், நகைகளும், அதிகாரமும் அவர்களுக்கு இருந்தது. ஆனால், அவர்கள் அந்த அரண்மனை வாழ்க்கையை ஒரு 'வீண் விளையாட்டு' என்று உணர்ந்தார்கள்.
அவர்கள் கேட்ட துஆ: "யா அல்லாஹ்! சொர்க்கத்தில் உன்னிடத்தில் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக!" *
உலக இன்பங்களை விட மறுமை வீடே மேலானது என்பதை ஒரு பெண்ணாக அவர்கள் நிரூபித்தார்கள்.
உம்மு உமாரா (ரலி) - போர்க்களத்தின் சிங்கம்
நுஸைபா பின்த் கஅப் ரலியல்லாஹு அன்ஹா என்று அழைக்கப்படும் இவர்கள், ஒரு சாதாரண இல்லத்தரசியாக மட்டும் இருக்கவில்லை.
உஹுதுப் போரின் ஒரு கட்டத்தில் முஸ்லிம்கள் சிதறி ஓடியபோது, தன் கணவன் மற்றும் இரு மகன்களுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பாதுகாக்க கேடயமாக நின்றார்கள்.
அவர்களின் உடலில் 12-க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டன.
ஒரு பெண் நினைத்திருந்தால் "எனக்கு ஏன் இந்த வம்பு? நான் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம்" என்று நினைத்திருக்கலாம்.
ஆனால், அவர்கள் இந்த உலக வாழ்வின் வலியை ஒரு 'தற்காலிக விளையாட்டாக' கருதினார்கள். நபிகளாரிடம் அவர்கள் கேட்ட ஒரே கோரிக்கை: "யா ரசூலுல்லாஹ்! சொர்க்கத்தில் உங்களோடு இருக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும். எனக்காக துஆ செய்யுங்கள்" என்பதுதான். நூல்:அல் இஸாபா
3. "நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?"
அறிவுடைய எவரும் தற்காலிகமான ஒரு பொருளுக்காக நிரந்தரமான ஒன்றை இழக்க மாட்டார்கள். ஒரு வழிப்போக்கன் மரத்தடியில் ஓய்வெடுப்பது போன்றதுதான் இந்த உலகம் என்பதைப் புரிந்து கொள்ள நம்முடைய அறிவை (புத்தியை) பயன்படுத்துமாறு அல்லாஹ் நம்மைத் தூண்டுகிறான்.
" (அஃபலா தஃகிலூன்?)இங்கே அல்லாஹ் 'அறிவு' (புத்தி) உடையவர்களை அழைக்கிறான்.ஒரு ரூபாயைக் கொடுத்துவிட்டு ஒரு கோடி ரூபாயைப் பெறுபவன் புத்திசாலி. அற்பமான உலக இன்பங்களைக் கொடுத்துவிட்டு, ஈடாக அல்லாஹ்வின் பொருத்தத்தையும் சொர்க்கத்தையும் பெறுபவனே உண்மையான அறிவாளி.
லெவல்' (Level) தேடும் ஓட்டம் இன்று ஒரு இளைஞன் ஒரு வீடியோ கேமில் அடுத்தடுத்த நிலைகளுக்கு (Levels) செல்ல மணிக்கணக்காக, ஏன் நாட்கணக்காகக் கண்விழித்துப் போராடுகிறான். அந்த விளையாட்டில் அவன் ஒரு 'ராஜாவாக' அல்லது 'வீரனாக' இருக்கலாம். ஆனால் ஆட்டத்தை முடித்து மொபைலைத் திரையை அணைத்தவுடன், அவனிடம் மிஞ்சுவது என்ன?
யதார்த்தம் என்ன கண்கள் சோர்வு, உடலின் பலவீனம் மற்றும் இழந்த விலைமதிப்பற்ற நேரம்.
அல்லாஹ் கேட்கிறான்: "நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?" நிஜ வாழ்க்கையின் தரத்தை (Level) உயர்த்த வேண்டிய இளமைக் காலம், ஒரு மெய்நிகர் (Virtual) திரையில் முடிந்து போகலாமா?
விளையாட்டு மைதானமும் கபரும்
நாம் விளையாடும் மைதானம் எவ்வளவு அழகாக இருந்தாலும், மாலை மறைந்து இருள் சூழும் போது நாம் வீட்டிற்குச் சென்றே ஆக வேண்டும். அதுபோலத்தான் இந்த உலகமும்.
இன்று பல இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போதே மரணத்தைத் தழுவுகிறார்கள்.
சிந்தியுங்கள்: மலக்குல் மவ்த் (உயிரைப் பறிக்கும் வானவர்) வரும்போது நம் கையில் தஸ்பீஹ் இருக்குமா அல்லது கேமிங் மொபைல் இருக்குமா?
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மற்றும் சிறுவர்கள்
ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு பாதையைக் கடந்து சென்றபோது, சில இளைஞர்கள் ஒரு பறவையை கட்டி வைத்து அதை இலக்காகக் கொண்டு அம்பெறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த விளையாட்டு அவர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது.
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதைக் கண்டதும் கோபமடைந்தார்கள். அந்த விளையாட்டைத் தடுத்துவிட்டுச் சொன்னார்கள்:
"உயிருள்ள ஒரு பொருளை விளையாட்டாக (இலக்காக) ஆக்கிக் கொள்பவனை அல்லாஹ் சபிக்கிறான்!" (நூல்:புகாரி)
இன்று இளைஞர்கள் வீடியோ கேம்களில் மற்றவர்களைக் கொல்வது போன்ற வன்முறை விளையாட்டுகளில் (Virtual Violence) மூழ்கிக் கிடக்கிறார்கள். நிஜமான உணர்வுகளையும், பிற உயிர்களின் வலியையும் மறக்கச் செய்யும் எந்த விளையாட்டும் 'லஹ்வு' (வீண்) என்பதை இது உணர்த்துகிறது.
இன்றைய ஆன்லைன் விளையாட்டுகள் (Free Fire, PUBG போன்றவை) வெறும் நேரத்தை மட்டும் வீணாக்குவதில்லை; அவை மனிதனைச் சிந்திக்க விடாமல் அடிமையாக்குகின்றன.
"விளையாட்டு என்பது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியாக இருக்கலாமே தவிர, வாழ்க்கையே விளையாட்டாக மாறிவிடக்கூடாது.”
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் அறிவுரை
இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒருமுறை விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் சொன்னார்கள்:
"உன் ஆன்மாவை நீ நல்ல விஷயங்களில் ஈடுபடுத்தவில்லை என்றால், அது உன்னை வீணான விஷயங்களில் ஈடுபடுத்திவிடும்."
அதாவது, ஒரு இளைஞன் பயனுள்ள கல்வியிலோ அல்லது உழைப்பிலோ தன் நேரத்தைச் செலவிடாவிட்டால், ஷைத்தான் அவனைத் தானாகவே விளையாட்டிலும் வீணான காரியங்களிலும் மூழ்கடித்துவிடுவான்.
ரீல்ஸின் மிகப்பெரிய ஆபத்தே அதன் 'அடிமைத்தனம்' (Addiction).
"ஒரே ஒரு ரீல்ஸ் மட்டும் பார்த்துவிட்டு போனை வைத்துவிடுவேன்" என்று ஆரம்பிக்கும் ஒரு இளைஞன், 2 மணிநேரம் கழிந்த பின்பே உணர்வான்.
யதார்த்தம்: அந்த 2 மணிநேரத்தில் அவன் குறைந்தது 100 ரீல்ஸ்களைப் பார்த்திருப்பான். ஆனால், அதில் ஒன்றாவது அவனது கல்விக்கோ, பொருளாதாரத்திற்கோ அல்லது மறுமைக்கோ பயனுள்ளதாக இருந்ததா? என்றால் இல்லை.
மறுமையின் கேள்வி: "காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்" (அல்-அஸ்ர்). இந்த நஷ்டத்தில் 'ரீல்ஸில் இழந்த நேரமும்' அடங்கும்.
ரீல்ஸ் என்பது வெறும் நேரத்தை மட்டும் வீணாக்குவதில்லை; அது பல பாவங்களுக்கு நுழைவாயிலாக இருக்கிறது:
ஹராமான இசையோடு கூடிய வீடியோக்கள்.
அந்நியப் பெண்கள்/ஆண்கள்: பார்வையைப் பேண முடியாமல் போதல்.
மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலக் காட்டும் 'எடிட்' செய்யப்பட்ட ரீல்ஸைப் பார்த்து, நம் நிஜ வாழ்க்கையை வெறுத்தல்.
பிறர் கவனத்தை ஈர்க்க ஹராமான முறையில் ரீல்ஸ் எடுப்பது.
4. நாம் செய்ய வேண்டியது என்ன?
இந்த உலகம் கெட்டது என்று இஸ்லாம் சொல்லவில்லை. ஆனால், இந்த உலகத்தையே கதி என்று கிடப்பதுதான் தவறு.
உலகத்தை உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள் (சம்பாத்தியம், உறவுகள்).
ஆனால் அதை உங்கள் இதயத்திற்குள் அனுமதித்து விடாதீர்கள்.
இதயம் எப்போதும் அல்லாஹ்வையும் மறுமையையும் நோக்கியே இருக்க வேண்டும்.
ஒரு சிறுவன் கடல் மணலில் வீடு கட்டுகிறான்.அவன் அதைப் பெரிய அரண்மனை போல நினைக்கிறான். ஆனால் ஒரு அலை வந்தால் என்ன ஆகும்?
அதே போலத்தான் : பணம்,அழகு,பதவி,புகழ்,எல்லாமே ஒரு நாள்… முடிந்து விடும்.
தக்வா' (இறை அச்சம்) மற்றும் மரண நினைவு
"நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் உயிர் பிரிந்தால் என் நிலை என்ன?" என்ற கேள்வியை அடிக்கடி உங்களிடம் கேளுங்கள்.
"யா அல்லாஹ்! என் நேரத்தை நீ பரக்கத் செய். வீணான மற்றும் ஹராமான காரியங்களில் இருந்து என் உள்ளத்தை நீ திருப்பி விடு" என்று ஒவ்வொரு தொழுகையிலும் கேளுங்கள்.
நபி ﷺ கூறினார்கள்:
كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ
“உலகத்தில் ஒரு அந்நியன் அல்லது ஒரு பயணி போல இரு.” நூல்: புகாரி
ஒரு பயணி என்ன செய்வான்?
அவன் நிரந்தர வீடு கட்ட மாட்டான். அவன் அதிக பாரம் சுமக்க மாட்டான்
அவன் இலக்கை மறக்க மாட்டான்.
நம்முடைய இலக்கு — ஆகிரத்.
الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ
“உலகம் முஃமினுக்கு சிறைகாஃபிர்களுக்கு சொர்க்கம்.”நூல்: முஸ்லிம்
ஏன் சிறை? ஏனெனில் முஃமின் எல்லாவற்றையும் செய்ய மாட்டான்.
ஹராம் ஆனதை விட்டு விடுவான். அவனுக்கு கட்டுப்பாடு உள்ளது.
அல்லாஹ்வுக்கு பயப்படுவான்.
எனவே இந்த உலகத்தின் வீண் விளையாட்டில் நாம் மாட்டிக் கொண்டு ரில்ஸ் மோகத்தில் சிக்கிக் கொண்டு இருக்காமல் அல்லாஹ்வின் நினைவோடு இறை சிந்தனையோடு மரண பயத்தோடு நாம் எப்போதும் இருப்போம்.
யா அல்லாஹ்! எங்களுடைய நேரத்தை வீணான காரியங்களில் இருந்தும், மறுமைக்குப் பயன் தராத 'ரீல்ஸ்' மற்றும் பொழுதுபோக்குகளில் இருந்தும் பாதுகாப்பாயாக.
யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்களில் இந்த உலகத்தின் மீதான அதீத மோகத்தை நீக்கி, நிலையான மறுமை வாழ்வின் மீதான ஆசையை ஏற்படுத்துவாயாக.
யா அல்லாஹ்! "உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமே தவிர வேறில்லை" என்ற உனது திருவசனத்தின் ஆழமான உண்மையை எங்கள் இதயங்களில் பதியச் செய்வாயாக.
யா அல்லாஹ்! எங்கள் இளமையையும், ஓய்வு நேரத்தையும் உனக்குப் பிடித்தமான நற்செயல்களில் செலவிட எங்களுக்குத் தௌஃபீக் செய்வாயாக.
யா அல்லாஹ்! ஷைத்தானின் ஊசலாட்டங்களில் இருந்தும், எங்களை அடிமைப்படுத்தும் டிஜிட்டல் திரைகளில் இருந்தும் எங்களைக் காப்பாற்றி, உன்னை நோக்கிய பயணத்தில் எங்களை உறுதிப்படுத்துவாயாக.
யா அல்லாஹ்! எங்களுக்கு நேரத்திலும், அறிவிலும், உடல் நலத்திலும் பெரும் 'பரக்கத்' செய்வாயாக. மரணிக்கும் தருவாயில் உனது பொருத்தத்தைப் பெற்ற நிலையில் எங்களை மரணிக்கச் செய்வாயாக."
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக