வியாழன், 19 பிப்ரவரி, 2026

ஆயத்துல் குர்ஸி.

 


தராவீஹ் பயான் பிறை – 2


தலைப்பு :ஆயத்துல் குர்ஸி 

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன் : 2:255)


புனிதமான ரமலான் மாதத்தின் இரண்டாவது தராவீஹ் தொழுதகையை முடித்து நாமெல்லாம் அமர்ந்திருக்கிறோம் இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட திருவசனத்தில் ஒன்று ஆயத்துல் குர்ஸி ஆகும்.


ஆயத்துல் குர்ஸி என்பது திருக்குர்ஆனில் உள்ள மிகப் பெருமைமிக்க ஆயத்துகளில் ஒன்றாகும். இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “குர்ஆனின் தலைமை ஆயத்து” என்று புகழ்ந்துள்ளார்கள்.


அல்லாஹ்வின் ஒருமை, அவனின் நிரந்தர வாழ்வு, அனைத்தையும் அறிந்திருக்கும் தன்மை தெளிவாக கூறப்படுகிறது.


இரவில் படுத்து உறங்கும் முன் ஓதுபவரை அல்லாஹ் பாதுகாக்கிறான்; ஷைத்தான் அருகில் வரமாட்டான்.


வீட்டில் ஓதினால் தீய எண்ணங்கள், தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.


ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்குப் பின் ஓதுபவரை சொர்க்கத்தில் நுழைய மரணம் மட்டுமே தடையாகும்.


ஆயத்துல் குர்ஸி ஓதினால் ஈமானை வலுப்படுத்தும்

மன அமைதி, நம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.


அல்லாஹ்வின் கண்காணிப்பு கிடைக்கும் அவன் தூங்குவதும் சோர்வடைவதும் இல்லை; அனைத்தையும் காத்துக் கண்காணிப்பவன்.


அல்லாஹ்வின் மிக மகத்துவமிக்க திருநாமம் (இஸ்முல் அஃஸம்) இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ளதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதை ஓதி துஆச் செய்யும்போது அந்தப் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.


இந்த ஒரே வசனத்தில் அல்லாஹ்வின் வல்லமை, அவனது அறிவு, அவன் ஒருபோதும் உறங்குவதில்லை என்பது போன்ற 10 முக்கிய பண்புகள் விளக்கப்பட்டுள்ளன. இது இறைவனின் பேராற்றலை மனிதனுக்கு உணர்த்துகிறது.


ஆயத்துல் குர்ஸி சம்பந்தமான ஹதீஸ்கள் 


عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة وفيها أية هي سيدة أي القرآن هي آية الكرسي رواه الترمذي ۳۱۱۹


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு வஸ்துவிற்கும் ஒரு உயர்வு இருக்கிறது குர்ஆனுடைய உயர்வு ஸூரா பகரா ஆகும் பகரா ஸூராவிலே ஒரு ஆயத் உள்ளது அதுதான் குர்ஆனுடைய எல்லா ஆயத்துகளுக்கும் தலைமையானதாகும் அதுதான் ஆயத்துல் குர்ஸி . நூல் திர்மிதி



உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை பார்த்து அபுல் முன்திரே குர்ஆனுடைய வசனங்களில் எது மிகவும் மாண்புமிக்கது மகத்தானது என்று நீ அறிவாயா ? என்று கேட்டபோது அதற்கு உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு (சஹாபாக்களுக்கு உரித்தான பணிவான பாணியில்) அல்லாஹ்வும் அவனது ரசூலும் மிக அறிந்தவர்கள் என்றார்கள் மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதே வினாவை தொடுத்த போது உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆயத்துல் குர்ஸி என்றார்கள் அப்போது உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் என் நெஞ்சில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செல்லமாய் அடித்தார்கள் பிறகு சொன்னார்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக அபுல் முன்திரே அல்லாஹ் உங்களுக்கு கல்வியை இலகுவாக வழங்கட்டும். நூல் முஸ்லிம்


ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் கடமையான தொழுகைக்குப் பின்னால் யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அடுத்த நேரத் தொழுகை வரை அவர் அல்லாஹ்வின் பொறுப்பிலே (பாதுகாப்பிலே) இருப்பார். (நூல் தப்ரானீ)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :- என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக இந்த ஆயத்துல் குர்ஸி ஆயத்திற்கு ஒரு நாவும் இரண்டு உதடுகளும் இருக்கிறது அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் அர்ஷை சுமக்கும் போது ஓதுவார்கள். நூல் முஸ்னத் அஹ்மத்


இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் இந்த வசனத்தை ஓதினால், அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாப்பாளர் (வானவர்) நியமிக்கப்படுகிறார். காலை வரை ஷைத்தான் அவரை நெருங்க முடியாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்:: புகாரி


அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

ரமலான் மாதத்தின் ஜகாத் (பொருட்களைப்) பாதுகாக்கும் பொறுப்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது ஒருவன் என்னிடம் வந்து, அந்த உணவுப் பொருட்களிலிருந்து அள்ளி எடுக்கலானான். நான் அவனைப் பிடித்து, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! உன்னை நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்" என்று கூறினேன். அதற்கு அவன், "நான் தேவையுடையவன்; எனக்குக் குடும்பச் சுமையும் கடும் வறுமையும் இருக்கிறது" என்று சொன்னான். (எனவே) அவனை நான் விட்டுவிட்டேன்.


விடிந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அபூ ஹுரைரா! நேற்றிரவு உமது கைதி என்ன செய்தான்?" என்று கேட்டார்கள். நான், "இறைத்தூதர் அவர்களே! அவன் தனது வறுமையையும் குடும்பச் சுமையையும் முறையிட்டான். எனவே, அவன் மீது இரக்கப்பட்டு அவனை (போக) விட்டுவிட்டேன்" என்றேன். அதற்கு நபியவர்கள், "அறிந்து கொள்! அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான்; மீண்டும் வருவான்" என்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அவன் மீண்டும் வருவான்" என்று சொன்னதால் அவன் மீண்டும் வருவான் என்று நான் உறுதியாக நம்பி, அவனுக்காகக் காத்திருந்தேன். (அவ்வாறே) அவன் வந்து உணவை அள்ளத் தொடங்கினான். அவனை நான் பிடித்து, "உன்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்" என்று கூறினேன். அதற்கு அவன், "என்னை விட்டுவிடுங்கள்; நான் தேவையுடையவன்; எனக்குக் குடும்பச் சுமை இருக்கிறது. இனி வரமாட்டேன்" என்றான். அவன் மீது இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்.


விடிந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், "அபூ ஹுரைரா! உமது கைதி என்ன செய்தான்?" என்று கேட்டார்கள். நான், "இறைத்தூதர் அவர்களே! அவன் தனது தேவையையும் குடும்பச் சுமையையும் முறையிட்டான். எனவே, அவன் மீது இரக்கப்பட்டு அவனை (போக) விட்டுவிட்டேன்" என்றேன். அதற்கு நபியவர்கள், "அறிந்து கொள்! அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான்; மீண்டும் வருவான்" என்றார்கள்.


மூன்றாம் முறையும் அவனுக்காகக் காத்திருந்தேன். அவன் வந்து உணவை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, "உன்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன். நீ வருவதில்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் மீண்டும் வருவது இது மூன்றாவது முறை" என்றேன். அதற்கு அவன், "என்னை விட்டுவிடுங்கள். அல்லாஹ் உனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளை உமக்குக் கற்றுத் தருகிறேன்" என்றான். "அவை என்ன?" என்று கேட்டேன். அவன், "நீர் படுக்கைக்குச் செல்லும்போது 'ஆயத்துல் குர்ஸீ'யை, அதாவது **{அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்}** என்ற இறைவசனத்தை அதன் இறுதிவரை ஓதுவீராக! (அவ்வாறு ஓதினால்) அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவலர் உம்மோடு இருந்துகொண்டே இருப்பார். விடியும் வரை ஷைத்தான் உம்மை நெருங்கமாட்டான்" என்று சொன்னான். எனவே அவனை நான் விட்டுவிட்டேன்.


விடிந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், "நேற்றிரவு உமது கைதி என்ன செய்தான்?" என்று கேட்டார்கள். "இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக்கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்" என்றேன். "அவை என்ன?" என்று கேட்டார்கள். "நான் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அதாவது **{அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்}** என்று ஓதுமாறு கூறினான். மேலும், '(அவ்வாறு ஓதினால்) அல்லாஹ்விடமிருந்து ஒரு பாதுகாவலர் உம்மோடு இருந்துகொண்டே இருப்பார்; விடியும் வரை ஷைத்தான் உம்மை நெருங்கமாட்டான்' என்றும் என்னிடம் சொன்னான்" என்று கூறினேன்.


(நபித்தோழர்கள்) நன்மையானவற்றைச் செய்வதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அறிந்து கொள்! அவன் பெரும் பொய்யனாக இருந்தும் உன்னிடம் உண்மையைச் சொல்லியுள்ளான். அபூ ஹுரைரா! மூன்று இரவுகளாக நீ யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய் என்று உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். அதற்கு நபியவர்கள், "அவன்தான் ஷைத்தான்" என்றார்கள். நூல்:புகாரி : 2311



மல்யுத்த சவால்


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ஒரு முறை மனிதர்களில் ஒருவர் ஒரு ஜின்னைச் சந்தித்தார். அந்த ஜின் அந்த மனிதரைப் பார்த்து, "என்னோடு மல்யுத்தம் செய்ய உமக்குத் தைரியம் இருக்கிறதா? நீர் என்னை வீழ்த்திவிட்டால், உமக்கு ஒரு மகத்துவமிக்க வசனத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீர் உமது வீட்டிற்குள் நுழையும்போது ஓதினால், ஷைத்தான் அங்கிருந்து ஓடிவிடுவான்; மீண்டும் அங்கு நுழைய மாட்டான்" என்று சவால் விட்டது.


அந்த மனிதர் சவாலை ஏற்றுக்கொண்டார். இருவருக்கும் இடையே மல்யுத்தம் நடந்தது. அந்த மனிதர் ஜின்னைத் தூக்கி வீசி வெற்றி பெற்றார். தோற்றுப்போன அந்த ஜின் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டது. அதன் கைகள் நாயின் முன் கால்களைப் போல மெலிந்து காணப்பட்டதாக அந்த மனிதர் விவரித்தார். தோற்ற ஜின் சொன்னபடி, "ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள்" என்று அந்த மகத்துவமிக்க வசனத்தைக் கற்றுக்கொடுத்தது.

 இந்தச் சம்பவத்தை இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் விவரித்தபோது, அங்கிருந்தவர்கள் "அந்த மனிதர் யார்? உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "உமரைத் தவிர வேறு யாரால் ஜின்னை வீழ்த்த முடியும்?" என்று பதிலளித்தார்கள். நூல் :தப்ரானி , தாரமி 


பேரீச்சம்பழப் பையும் மர்மமான திருடனும்


உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னிடம் இருந்த பேரீச்சம்பழங்களை ஒரு பையில் சேமித்து வைத்திருந்தார்கள். அந்தப் பையில் இருந்து பழங்கள் தினமும் குறைந்து கொண்டே வருவதை அவர்கள் கவனித்தார்கள். ஒருநாள் இரவு, திருடன் யார் என்பதைக் கண்டுபிடிக்க அவர்கள் மறைந்திருந்து கவனித்தார்கள்.

அப்போது, பருவமடைந்த ஒரு இளைஞனைப் போன்ற உருவம் கொண்ட ஒரு விசித்திரமான படைப்பு அங்கே வந்தது.

ஜின்னுடனான உரையாடல்

உபை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த உருவத்தைக் கண்டதும், அதற்கு ஸலாம் சொன்னார்கள். அந்த உருவமும் ஸலாமிற்குப் பதில் சொன்னது. பின்வருமாறு உரையாடல் தொடர்ந்தது:

 * உபை ரலியல்லாஹு அன்ஹு: "நீ யார்? ஜின்னா அல்லது மனிதனா?"

 * உருவம்: "நான் ஒரு ஜின்."

 * உபை ரலியல்லாஹு அன்ஹு:"உன் கையை என்னிடம் காட்டு."

அந்த ஜின் தன் கையைக் காட்டியது. அதன் கை நாயின் முன்னங்காலைப் போலவும், அதன் உரோமங்கள் நாயின் உரோமங்களைப் போலவும் இருந்தன.

 * உபை ரலியல்லாஹு அன்ஹு: "ஜின்களின் உருவம் இப்படித்தான் இருக்குமா?"

 * ஜின்: "ஜின்களில் என்னை விட பலசாலி யாருமில்லை என்பது ஜின்களுக்குத் தெரியும்."

 * உபை ரலியல்லாஹு அன்ஹு: "நீ ஏன் திருடினாய்?"

 * ஜின்: "நீர் தர்மம் (ஸதகா) செய்யக்கூடியவர் என்று எங்களுக்குத் தெரியும். உமது உணவில் எங்களுக்கும் ஒரு பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வந்தேன்."

பாதுகாப்பிற்கான வழி

உபை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த ஜின்னிடம், "உங்களிடமிருந்து (ஜின்களின் தீங்கிலிருந்து) எங்களைப் பாதுகாக்கும் அரண் எது?" என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த ஜின்:

 "அல்பகரா அத்தியாயத்தில் உள்ள 'அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்...' (ஆயத்துல் குர்ஸி) என்ற வசனம் தான். யார் அதை காலையில் ஓதுகிறாரோ அவர் மாலை வரை எங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார். யார் மாலையில் ஓதுகிறாரோ அவர் காலை வரை எங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார்" என்று கூறியது.


மறுநாள் காலை, உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நடந்த அனைத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் விவரித்தார்கள். அனைத்தையும் கேட்ட நபியவர்கள்: "அந்த அசுத்தமானவன் (ஜின்) உண்மையைச் சொல்லிவிட்டான்" என்று கூறினார்கள். (நூல்: நஸயீ, தபரானி).


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் யார் ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப் பின்னால் ஆயத்துல் குர்ஸியை ஓதி வருகிறாரோ அவர் சுவனம் செல்வதற்கு மரணம் ஒன்றே தடையாக இருக்கிறது. நூல் தப்ரானீ


எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை போல சிறப்பான இந்த ஆயத்துல் குர்ஸியை அதிகமாக நாம் ஓதுவோம் குறிப்பாக ஃபர்ளான ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும் ஓதுவோம் அந்த வழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்வோம். இரவு உறங்குவதற்கு முன்பாக இதை ஓதி விட்டு நாம் உறங்குவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் விதமான ஷைத்தானின் தீங்குகளை விட்டும் அல்லாஹ் நம்மையும் நம் குடும்பத்தை சமூக மக்களையும் பாதுகாப்பானாக.

புனித ரமலான் மாதத்தில் உடல் ஆரோக்கியத்துடன் அனைத்து நோன்புகளையும் நோற்று அவனை நின்று வணங்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்.


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ரமலான்.2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக