தராவீஹ் பயான் பிறை – 7
தலைப்பு : “பாவத்திலிருந்து பரிசுத்தத்துக்கு”
ஹிஜ்ரி 1447.
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد
قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 7:23)
التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ
“பாவத்திலிருந்து தவ்பா செய்தவன், பாவமே செய்யாதவன் போன்றவன்.”
இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட சூரா அஃராஃப் அந்த சூராவில் வருகின்ற மேற்சொன்ன வசனம்….
நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி)’ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்’ என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:35)
ஆதம் அலைஹிஸ்ஸலாம் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் இருவருக்கும் மணம் செய்து வைத்து சுவர்க்கத்தில் உள்ள ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ண வேண்டாம் என்று கட்டளையிட்டான். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவ்விதமே செய்வதாக உறுதி கூறினார்கள்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வழிகெடுக்க நினைத்த இப்லீஸ் உள்ளே நுழைந்த அவன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் கண்டு குறிப்பிட்ட அந்த கனியை உண்டால்தான் அழியாதிருக்க இயலும் என்றும், இல்லையேல் அழிந்து விடுவீர்கள் என்றும் கூறினான். ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்லீஸின் பேச்சை நம்பி ஆதம் நபியை அம்மரத்தின் கனியை உண்ணுமாறு தூண்டினார்கள். அதன்படி இருவரும் அதனைப் பறித்து உண்டனர். அது கோதுமைச் செடி என்று பெரும்பான்மையினரின் கருத்தாக இருக்கிறது.
அதனை உண்ட அடுத்தகணம் இருவரும் நாண உணர்வு பெற்றனர். தங்கள் நிலையை எண்ணி மிகவும் வருத்தமுற்றனர். இறைவனிடம்,
பாவமன்னிப்பு கேட்டார்கள் அல்லாஹ் அவர்களை பூமிக்கு இறக்கினான்.
ஹழ்ரத் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஜித்தாவில் இறக்கினான். இலங்கையில் உள்ள சரந்தீபின் மலை உச்சியில் 100 ஆண்டுகாலம் தம் பாவம் நினைத்து அழுதார்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அல்லாஹ்விடம், ஆதம் நபி அவர்கள் இறுதியில்
.فَتَلَقّٰى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ ۚ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
“ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்றார்; அவற்றால் அவர் தவ்பா செய்தார்; அல்லாஹ் அவரை மன்னித்தான்…” அல்குர்ஆன்
அந்த சில வார்த்தைகள் எது ?
பெரும்பாலான முஃபஸ்ஸிரீன்கள் (தஃப்ஸீர் அறிஞர்கள்) கூறுவதாவது:
அது சூரா அஃராஃப் 23-ல் வரும் மேற்சொன்ன இந்த துஆ தான்.
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்கள்: தன் தவறை ஒப்புக்கொண்டார்கள் காரணம் கூறவில்லை ஷைத்தானை குற்றம் சொல்லவில்லை உடனே அல்லாஹ்வை நாடினார்கள்.
பாவத்தை ஒப்புக்கொள்ளுதல் (اعتراف الذنب)
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ட பிறகு, சாக்குப்போக்குகள் சொல்லாமல் "எங்கள் மீது நாங்களே அநியாயம் செய்தோம்" என்று முதலில் தங்களின் அந்த சிறு தவறை ஒப்புக்கொண்டார்கள். இதுதான் ஒரு உண்மையான அடியாரின் பண்பு. ஷைத்தான் தவறு செய்த போது கர்வம் கொண்டு அதை நியாயப்படுத்தினான், ஆனால் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பணிவை தேர்ந்தெடுத்தார்கள்.
அல்லாஹ்வின் கருணையை நாடுதல்
மனிதன் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி அவனது அருளை (ரஹ்மத்) நாடினால் மட்டுமே அந்த இழப்பிலிருந்து மீள முடியும் என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது.
மன்னிப்பு (Maghfirah): செய்த பாவத்தின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு பெறுவது.
அருள் (Rahmah): இழந்த நன்மைகளையும் அந்தஸ்தையும் மீண்டும் பெறுவது.
நஷ்டவாளி என்பதன் பொருள்
"நிச்சயமாக நாங்கள் இழப்பாளர்களில் ஆவோம்" என்பதன் மூலம், அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காவிட்டால் இம்மையிலும் மறுமையிலும் ஒரு மனிதனுக்கு எஞ்சப்போவது நஷ்டம் மட்டுமே என்பது தெளிவாகிறது. சுவனத்தை இழப்பதும், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாவதும் தான் மிகப்பெரிய நஷ்டம்.
இப்லீஸ் (ஷைத்தான்) தான் செய்த தவறுக்கு அல்லாஹ்வையே குற்றம் சாட்டினான் ("நீ என்னை வழிகெடுத்ததால்..." என்று கூறினான்). கர்வத்தினால் மன்னிப்பு கேட்க மறுத்து சாபத்திற்கு உள்ளானான்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தவறு நேர்ந்தவுடன் அதைத் தன் மீதே சுமத்திக்கொண்டு, பணிவுடன் மன்னிப்புக் கேட்டார்கள். இதன் மூலம் மனித இனத்திற்கு "தவ்பா" (பாவமன்னிப்பு) எனும் அருட்கொடை கிடைத்தது.
மனிதன் தவறு செய்வது இயல்பு, ஆனால் அந்தத் தவறை உணர்ந்து திருந்துவதே அவனைச் சிறந்தவனாக்குகிறது.
யூனுஸ் (அலை) மற்றும் மீன் வயிற்றில்
யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நைனூவா (Nineveh) நகர மக்களுக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். மக்கள் தங்கள் போதனையை ஏற்க மறுத்ததால், அல்லாஹ்வின் கட்டளை வருவதற்கு முன்பே கோபத்துடன் ஊரை விட்டு வெளியேறினார்கள்.
அவர்கள் ஒரு கப்பலில் பயணம் செய்தபோது, கடுமையான புயல் ஏற்பட்டது. சீட்டு குலுக்கிப் போட்டதில் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் வந்ததால், அவர்கள் கடலில் குதித்தார்கள். அப்போது ஒரு பெரிய மீன் அவர்களை விழுங்கியது.
மன்னிப்பு வேண்டிய விதம்: அந்த இருண்ட மீன் வயிற்றுக்குள் இருந்தபோது, அவர்கள் தங்களின் அவசர முடிவை உணர்ந்து அல்லாஹ்வை நோக்கி அழுதார்கள்:
"லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மின் ழாலிமீன்"
(பொருள்: "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; நீ தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன்.") (சூரா அல்-அன்பியா: 87)
அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, மீனை அவர்களைக் கரையில் உமிழச் செய்தான். பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் மக்களிடம் சென்று நற்பணி ஆற்றினார்கள்.
மூஸா (அலை) அவர்களின் மன்னிப்பு
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்தில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு கிப்தியரை (எகிப்தியர்) தாக்க முற்பட்டபோது அவர் இறந்துவிட்டார். இது தற்செயலாக நடந்திருந்தாலும், மூஸா (அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உடனே வருந்தினார்கள்.
قَالَ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَفْسِىْ فَاغْفِرْ لِىْ فَغَفَرَ لَهٗ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 28:16)
அல்லாஹ் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் மன்னித்தான் அவர்களை உயர்ந்த அந்தஸ்தினை அல்லாஹ் வழங்கினான். அல்லாஹ் அவர்களை கலிமுல்லாவாக அவர்களோடு அதிகமாக பேசக்கூடியவனாக ஆக்கினான்.
தாவூத் (அலை) அவர்களின் தீர்ப்பு
தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு மன்னராகவும், இறைத்தூதராகவும் இருந்தார்கள். அவர்கள் தனது வழிபாட்டு அறையில் (மிஹ்ராப்) இறைவனை வணங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென இருவர் சுவரை ஏறி குதித்து உள்ளே வந்தார்கள். பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி அவர்கள் உள்ளே வந்ததைக் கண்டு தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திடுக்கிட்டார்கள்.
வந்தவர்கள் சொன்னார்கள்: "அஞ்சாதீர்கள்! நாங்கள் இருவரும் வழக்காடுபவர்கள். எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநியாயம் செய்துள்ளார். நீங்கள் எங்களுக்குள் உண்மையான தீர்ப்பை வழங்குங்கள்."
அவர்களில் ஒருவர் தனது வழக்கை இப்படிச் சொன்னார்:
"நிச்சயமாக இவன் என் சகோதரன்; இவனிடம் தொண்ணூற்று ஒன்பது (99) பெண் ஆடுகள் உள்ளன. என்னிடம் ஒரே ஒரு பெண் ஆடு தான் இருக்கிறது. அப்படியிருந்தும் அவன் 'அதையும் என்னிடமே ஒப்படைத்து விடு' என்று கூறி, பேச்சில் என்னை வென்றுவிட்டான் (என்னை வற்புறுத்துகிறான்)."
மறுதரப்பினரிடம் விளக்கம் கேட்காமலேயே, தாவூத் (அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உடனடியாகத் தீர்ப்பு வழங்கினார்கள்:
"உன்னுடைய ஆட்டைத் தன் ஆடுகளுடன் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டதன் மூலம் நிச்சயமாக இவன் உனக்கு அநியாயம் செய்துவிட்டான். நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் ஒருவருக்கொருவர் அநியாயம் தான் செய்கிறார்கள்; ஈமான் கொண்டு நற்செயல்கள் செய்பவர்களைத் தவிர!" என்று கூறினார்கள்.
தீர்ப்புச் சொல்லி முடித்த அடுத்த கணமே, தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒரு பொறி தட்டியது.
ஒரு நீதிபதியாக இருக்கும்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது அடிப்படை விதி.
ஆனால், இவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தது அல்லாஹ் தான் என்பதும், இது தனக்கு வைக்கப்பட்ட ஒரு சோதனை என்பதும் அவர்களுக்குப் புரிந்தது.
உண்மையில் வந்தவர்கள் மனித உருவில் வந்த வானவர்கள் (மலக்குகள்) என்றும், தாவூத் (அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கவே அல்லாஹ் அவர்களை அனுப்பி வைத்தான்.
தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த அந்தச் சிறிய பிழையை உணர்ந்த உடனே: ஸஜ்தாவில் விழுந்தார்கள்: தன் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடி சிரம் பணிந்தார்கள். தான் அவசரப்பட்டுவிட்டதை எண்ணி இறைவனிடம் மீண்டார்கள்.
அதற்கு அல்லாஹ் பதில் கூறினான்:
فَغَفَرْنَا لَهٗ ذٰ لِكَ وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ
"ஆகவே, நாம் அவருக்கு அந்தப் பிழையை மன்னித்தோம்; நிச்சயமாக அவருக்கு நம்மிடம் நெருக்கமான அந்தஸ்தும், அழகிய இருப்பிடமும் உண்டு." (38:25)
தவறு என்று தெரிந்த அடுத்த நொடியே கர்வத்தைக் கைவிட்டு ஸஜ்தாவில் விழுவதுதான் உண்மையான விசுவாசிகளின் பண்பு.
எவ்வளவு பெரிய பதவியில் (மன்னராக) இருந்தாலும், இறைவனின் சட்டத்திற்குத் தான் கட்டுப்பட்டவர் என்பதைத் தாவூத் (அலை) உணர்த்தினார்கள்.
மக்கா வெற்றியின் போது ஒரு 'தவ்பா'
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். அபூ ஜஹ்லின் மகன் இக்ரிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரியாக இருந்தார். மக்கா வெற்றியின் போது பயந்து தப்பி ஓடினார். ஆனால் அவரது மனைவி உம்மு ஹகீம் ரலியல்லாஹு அன்ஹா இஸ்லாத்தை ஏற்று, இக்ரிமாவுக்குப் பாதுகாப்புப் பெற்றுத் தந்தார்.
கடலில் பயணம் செய்யும்போது ஒரு பெரும் புயல் வீசியது. அப்போது கப்பலில் இருந்தவர்கள், "இப்போது சிலைகளை அழைத்துப் பயன் இல்லை, அல்லாஹ்வை மட்டும் அழையுங்கள்" என்றனர். அப்போது இக்ரிமா சிந்தித்தார்: "கடலில் அல்லாஹ் ஒருவனே காப்பாற்ற முடியும் என்றால், தரையிலும் அவன் ஒருவனே காப்பாற்ற முடியும்."
அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தன் கடந்த காலத் தவறுகளை எண்ணி வருந்தினார். பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரை இன்முகத்தோடு வரவேற்று, அவரது கடந்த காலப் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று கூறினார்கள்.
இக்ரிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வரும் செய்தி தெரிந்ததும், நபியவர்கள் தன் தோழர்களிடம் சொன்னார்கள்: "அபூ ஜஹ்லின் மகன் இக்ரிமா உங்களிடம் விசுவாசியாக வருகிறார். அவரைப் பார்த்தவுடன் அவர் தந்தையை (அபூ ஜஹ்லை) ஏசாதீர்கள். ஏனெனில், இறந்தவரை ஏசுவது உயிருடன் இருப்பவரை நோவினை செய்யும்." தன் தந்தையே இஸ்லாத்தின் முதல் எதிரியாக இருந்தும், இக்ரிமாவின் மனதைக் காயப்படுத்தக் கூடாது என்ற நபியவர்களின் பண்பு இங்குக் கவனிக்கத்தக்கது.
நபியவர்களைச் சந்தித்தபோது இக்ரிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! நான் இதுவரை உங்களுக்கு எதிராகப் புரிந்த போர்கள் மற்றும் உங்களை எதிர்த்துப் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிக்க நீங்கள் துஆ செய்யுங்கள்." நபியவர்கள் உடனே அவருக்காக துஆ செய்தார்கள்.
இஸ்லாத்தை ஏற்ற பிறகு இக்ரிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு எதிராக எவ்வளவு செலவு செய்தேனோ, அதைப் போல இருமடங்கு அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வேன்; உங்களுக்கு எதிராக எவ்வளவு போரிட்டேனோ, அதைப் போல இருமடங்கு இஸ்லாத்திற்காகப் போரிடுவேன்" என்று சபதம் செய்தார்.
அவர்கள் சொன்னது போலவே, எர்முக் போரில் மிக வீரமாகப் போரிட்டு வீர மரணம் (ஷஹாதத்) எய்தினார்கள். போர்க்களத்தில் அவர் குர்ஆனைத் தன் முகத்தில் வைத்துக்கொண்டு, "இது எனது இறைவனின் வேதம்! இது எனது இறைவனின் வேதம்!" என்று கூறி அழுவார். நூல் : அல் இஸாபா
ஹபீப் இப்னு அஜமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி
ஹபீப் அல்-அஜமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தொடக்கத்தில் மிகவும் கடின இதயமுள்ள வட்டித் தொழில் செய்பவராக இருந்தார். ஒருமுறை அவர் வட்டி வசூலிக்க ஒரு ஏழைப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார். அந்தப் பெண்ணிடம் கொடுக்கப் பணம் இல்லை. ஆனால் ஹபீப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அவரை மிகவும் துன்புறுத்தினார். அந்தப் பெண் இறைவனிடம் கையேந்தி அழுதார்.
அதே சமயம், அவர் வீட்டிற்குத் திரும்பிய போது ஒரு சமைத்த உணவைச் சாப்பிட முயன்றார்கள். அப்போது அந்த உணவு இரத்தமாக மாறியதை அவர் கண்டார் (சில அறிவிப்புகளில் இது அவரது உள்ளத்தில் ஏற்பட்ட காட்சியாகச் சொல்லப்படுகிறது). இது அவரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தான் செய்யும் தொழில் எவ்வளவு அசுத்தமானது என்பதை அவர் உணரத் தொடங்கினார்.
மனம் மாறிய ஹபீப், அன்றைய காலத்தின் மிகப்பெரிய அறிஞரான ஹஸன் அல்-பஸரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சபைக்குச் சென்றார். அங்கு அவர் அழுது புலம்பி தன் பாவங்களை ஒப்புக்கொண்டார். அன்று முதல் அவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தானம் செய்தார். எவ்வளவு என்றால், தன்னிடம் இருந்த ஆடையைத் தவிர அனைத்தையும் கொடுத்துவிட்டு, ஒரு பழைய கம்பளியை உடுத்திக் கொண்டு பஸராவின் ஆற்றோரம் ஒரு குடிசையில் அமர்ந்து இறைவணக்கத்தில் மூழ்கினார். நூல்: ரிஸாலத்துல் குஷைரிய்யா
தான் செய்த பாவம் நினைத்து வருந்தி இறைவனிடத்தில் கையேந்தி துஆ செய்யும் போது அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிப்பதோடு இம்மை மற்றும் மறுமையின் உயர்ந்த வாழ்வை அல்லாஹ் நமக்கு தருவான்.
ஃபுளைல் இப்னு இயாள் (ரஹ்)
(திருடராக இருந்து இமாமாக)
ஃபுளைல் இப்னு இயாள் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தொடக்கத்தில் 'அபிவர்து' மற்றும் 'ஸரகஸ்' ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு வழிப்பறித் திருடனாக இருந்தார்கள். அவருடைய பலம் மற்றும் வீரத்தைக் கண்டு வணிகக் குழுக்கள் (காஃபிலாக்கள்) அந்த வழியாகச் செல்லவே அஞ்சுவார்கள். "ஃபுளைல் வருகிறார்!" என்றாலே மக்கள் நடுங்குவார்கள்.
ஒருமுறை ஃபுளைல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு, அவளது வீட்டின் சுவரை ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்றார்கள்.
அப்போதுதான் அந்த வீட்டின் உள்ளே ஒரு முதியவர் அல்லது ஒரு அடியார் குர்ஆனின் இந்த வசனத்தை ஓதிக்கொண்டிருந்தார்:
أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ...
"ஈமான் கொண்டவர்களின் இதயங்கள் அல்லாஹ்வின் நினைவிற்காக உருக வேண்டிய நேரம் இன்னும் வரவில்லையா?" (சூரா அல்-ஹதீத்: 16)
இந்த வசனம் ஒரு அம்பைப் போல அவரது இதயத்தைத் தைத்தது. அந்தச் சுவற்றின் மீதே நின்றவாறு அவர் கதறினார்: "ஆம் என் இறைவா! அந்த நேரம் வந்துவிட்டது! இப்போதே வந்துவிட்டது!"
அங்கிருந்து திரும்பிய ஃபுளைல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு பாழடைந்த இடத்தில் தஞ்சம் புகுந்தார்கள். அங்கு ஒரு வணிகக் குழு தங்கியிருந்தது. அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்: "இப்போது நாம் கிளம்ப வேண்டாம், ஃபுளைல் வழியில் எங்காவது பதுங்கியிருப்பார், நம்மைச் சூறையாடி விடுவார்."
இதைக் கேட்ட ஃபுளைல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் விக்கித்துப் போனார்கள்.
"யா அல்லாஹ்! மக்கள் என்னைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள், நானோ உனக்கு எதிராகப் பாவங்கள் செய்து கொண்டிருக்கிறேன். இவர்களின் அச்சத்தைப் போக்க நான் இதோ திருந்துவதையே எனது தவ்பாவாக ஆக்குகிறேன்" என்று உறுதி பூண்டார்கள்.
அதன்பிறகு அவர்கள் மக்காவிற்குச் சென்று புனித கஃபாவின் அருகிலேயே குடியேறினார்கள். ஹதீஸ் கலை மற்றும் ஆன்மீகத்தில் பெரும் அறிஞரானார்கள்.
பிற்காலத்தில் உலகின் மாபெரும் அறிஞர்களான இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மற்றும் இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் போன்றவர்கள் இவர்களிடம் பாடம் பயின்றுள்ளார்கள்.
நூல்: ஸியரு அஃலாமின் நுபலா
இன்று நாம் ஒரு தவறு செய்துவிட்டால், அதை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போல ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, ஷைத்தானைப் போல நியாயப்படுத்துகிறோம்.
"சூழல் அப்படி", "அவன் தான் என்னைத் தூண்டினான்" என்று பிறர் மீது பழி போடுகிறோம்.
வெளிப்படையான வாழ்க்கை ஸஹாபாக்கள் உள்ளத்தால் இறைவனைத் தேடினார்கள். நாம் இன்று சமூக ஊடகங்களிலும், பிறர் மெச்சும் புகழிலும் இன்பத்தைத் தேடுகிறோம். நம்முடைய "தவ்பா" (பாவமன்னிப்பு) கூட உதட்டளவில் மட்டுமே இருக்கிறது.
துன்யாவின் (உலகத்தின்) அற்ப லாபங்களுக்காக மறுமையின் நிரந்தர இன்பத்தைத் தியாகம் செய்கிறோம்.
ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவர்கள் குதிரைகளுக்காகத் தொழுகை தாமதமானதற்கே வருந்தினார்கள். நாமோ எத்தனையோ கடமைகளை அலட்சியமாக விடுகிறோம்.
இந்த ஆயத் நமக்கு கற்று தரும் பாடம் அது தான்
"யா அல்லாஹ்! நான் தவறு செய்துவிட்டேன்." இந்த ஒரு வரி நம் இதயத்தில் வேரூன்றிவிட்டால், கர்வம் அழிந்துவிடும். நம் தவறுகளை மறைக்காமல் இறைவனிடம் கொட்டித் தீர்க்கும் பண்பை வளர்க்க வேண்டும்.
ஃபுளைல் இப்னு இயாள் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு வசனத்தைக் கேட்டுத் தன் வாழ்வையே மாற்றியது போல, குர்ஆன் வசனங்கள் நம் காதுகளில் விழும்போது அது நம் செயலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வெறும் ஓதுவதோடு நிற்காமல், அதன்படி வாழ வேண்டும்.
"இன்றே... இப்பொழுதே... ஒரு நிமிடம் தனிமையில் அமர்ந்து, 'ரப்பனா ழலம்னா...' என்ற வசனத்தை அதன் பொருளை உணர்ந்து ஓதி, நம் கடந்த காலத் தவறுகளுக்காகக் கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கேட்பதுதான் நாம் மாற வேண்டியதற்கான முதல் புள்ளி."
வாழ்க்கை என்பது மிகக் குறுகியது. நாம் இழந்தது "சுவனத்தை" மட்டும் அல்ல, நம் "நேரத்தை". அந்த நேரத்தை மீண்டும் இறைவனிடம் திரும்புவதன் மூலம் ஈடுகட்டலாம்.
இந்த மாற்றத்தை நம் வாழ்வில் கொண்டு வர, தினமும் ஓத வேண்டும்.
யா அல்லாஹ்! ஆதம் (அலை) அவர்கள் தன் தவறை ஒப்புக்கொண்டு உன்னிடம் மீண்டது போல, எங்களையும் உன்பால் மீளச் செய்வாயாக.
யா அல்லாஹ்! எங்களுடைய அறியாமையாலும், பலவீனத்தாலும் நாங்கள் செய்த சிறு பாவங்கள், பெரும் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக.
யா அல்லாஹ்! சஹாபாக்களுக்குக் கொடுத்தது போன்ற உறுதியான ஈமானையும், உன்னைப் பற்றிய அச்சத்தையும் எங்கள் இதயங்களில் நிரப்புவாயாக.
யா அல்லாஹ்! எங்களை நஷ்டவாளிகளாக ஆக்கிவிடாதே! உனது அருளைக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு வெற்றியைத் தருவாயாக.
யா அல்லாஹ்! எங்கள் வாழ்வை உன் விருப்பப்படி அமைத்து, இறுதியில் உன்னைச் சந்திக்கும் போது "மலர்ந்த முகத்தோடு" சந்திக்கும் பாக்கியத்தைத் தருவாயாக. ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக