திங்கள், 2 மார்ச், 2026

உலகமே எதிர்த்தாலும் அல்லாஹ் போதும்!"

 

‌தராவீஹ் பயான் பிறை – 13


தலைப்பு : “ உலகமே எதிர்த்தாலும் அல்லாஹ் போதும்!"

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


قَالَتْ اِنِّىْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا‏

அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.(அல்குர்ஆன் : 19:18)


இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஸூரா மர்யம் அத்தியாயத்தில் பல தகவல்களை அல்லாஹ் கூறுகின்றான் அதில் முக்கியமானது மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றி கூறுகின்றான்….


இன்று நாம் வாழும் உலகம் அச்சம் நிறைந்ததாக இருக்கிறது. 

வெளியில் சென்றால் விபத்து பயம், வீட்டில் இருந்தால் நோய் பயம், வியாபாரத்தில் நஷ்டம் வரும் என்ற பயம், எதிரிகளால் ஆபத்து வரும் என்ற பயம். இப்படிப் பயங்களால் சூழப்பட்ட ஒரு மனிதன், தன்னைத் தற்காத்துக் கொள்ள யாரிடம் செல்ல வேண்டும்? 


யாருடைய பாதுகாப்பைத் தேட வேண்டும்?


இதோ! புனித குர்ஆன் நமக்கு ஒரு உன்னதமான பெண்ணை முன்னுதாரணமாகக் காட்டுகிறது. அவர் தான் மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்.


ஒரு தனிமையான இடத்தில், ஒரு பெண் தனியாக இருக்கும்போது, திடீரென ஒரு அந்நிய ஆடவர் அங்கே தோன்றினால் அந்தப் பெண்ணின் நிலை என்னவாகும்? அவர் அலறி இருப்பார் அல்லது பயந்து ஓடி இருப்பார். ஆனால், மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அங்கே காட்டிய அந்தத் துணிச்சல், அந்த ஈமானிய உறுதி... அதுதான் இன்று நம் ஒவ்வொருவருக்கும் தேவை."


"அன்புச் சகோதரர்களே! மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து 'யார் நீ?' என்று கேட்கவில்லை. 'இங்கே ஏன் வந்தாய்?' என்று சண்டையிடவில்லை. அவர் சொன்ன முதல் வார்த்தை: 'அஊது பி-ரஹ்மான்' (நான் ரஹ்மானிடம் உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்).

இதில் எவ்வளவு பெரிய ரகசியம் ஒளிந்திருக்கிறது தெரியுமா?

அவர்கள் 'அல்லாஹ்விடம்' என்று சொல்லாமல் ஏன் 'ரஹ்மானிடம்' என்று சொன்னார்கள்? ஏன் தெரியுமா?

அந்த எதிரி எவ்வளவு கொடியவனாக இருந்தாலும், 'ரஹ்மான்' என்ற பெயரைக் கேட்டால் அவனது உள்ளத்தில் இருக்கும் ஈரத்தன்மை அவனைக் கட்டிப்போடும் என்று மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நம்பினார்கள்.


அஊது' (أَعُوذُ) என்றால் "நான் தஞ்சம் புகுகிறேன்" அல்லது "பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று பொருள்.

ஒரு பலவீனமான அடியான், அனைத்து ஆற்றலும் கொண்ட இறைவனிடம் தனது பாதுகாப்பை ஒப்படைப்பதே இதன் சாரம்சம்.


மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு அந்நிய மனிதரைக் கண்டபோது, தனது பலத்தை நம்பாமல் 'ரஹ்மானின்' பாதுகாப்பை நம்பினார்கள்.


எந்தெந்த நேரங்களில் பாதுகாப்புத் தேட வேண்டும்?


நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டிய முக்கிய சந்தர்ப்பங்கள்:


ஷைத்தானின் ஊசலாட்டம்: குர்ஆன் ஓதத் தொடங்கும்போதும், கோபம் வரும்போதும் "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" என்று சொல்ல வேண்டும்.


தீய பார்வைகள் (அய்ன்): பொறாமை மற்றும் கண்ணேறிலிருந்து தப்பிக்க ஸூரா ஃபலக் மற்றும் ஸூரா நாஸ் ஓத வேண்டும்.


ஆபத்தான சூழல்கள்: மர்யம் (அலை) அவர்கள் அந்நிய ஆடவரைக் கண்டபோது பாதுகாப்புத் தேடியது போல, நமக்கு அச்சம் ஏற்படும்போது அல்லாஹ்வை அழைக்க வேண்டும்.


மறுமையின் வேதனை: நரக நெருப்பிலிருந்தும், கப்ருடைய வேதனையிலிருந்தும் பாதுகாப்புத் தேட நபியவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.


வரலாற்றில் இரண்டு பெரும் ஆளுமைகள் இக்கட்டான பாலியல் ரீதியான சோதனைகளைச் சந்தித்தபோது அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடினார்கள்:


1). யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் : யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸுலைகாவிடமிருந்து பாதுகாப்புத் தேடியது

எகிப்து நாட்டு அழகி ஸுலைகா, கதவுகளைத் தாழிட்டுவிட்டு யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைத் தீமைக்கு அழைத்தபோது, வாலிப வயதில் இருந்த யூசுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் சொன்ன வார்த்தை:


"மஆதல்லாஹ்!" (அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்!)


2) மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்: மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு ஒரு அந்நிய ஆடவரால் சோதனை வந்தபோது "அஊது பிர் ரஹ்மான்" என்றார்கள். யூசுப் (அலை) அவர்களுக்கு ஒரு பெண்ணால் சோதனை வந்தபோது "மஆதல்லாஹ்" என்றார்கள். இருவருமே தங்களின் தூய்மையைக் காக்க 'அல்லாஹ்வின் பாதுகாப்பை' மட்டுமே கேடயமாகப் பயன்படுத்தினார்கள். அல்லாஹ் அவர்களைக் கண்ணியப்படுத்தினான்.


நாமும் ஆபத்துகள் வரும் போது உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும். அல்லாஹ் கண்டிப்பாக நமக்கும் அந்த பாதுகாப்பை தருவான்.


மூஸா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து பாதுகாப்புத் தேடியது


ஃபிர்அவ்ன் போன்ற ஒரு கொடிய சர்வாதிகாரி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கொல்லத் திட்டமிட்டபோது, அவர்கள் பயந்து ஓடவில்லை. மக்கள் முன்னிலையில் உறுதியாகச் சொன்னார்கள் 

:وَقَالَ مُوْسٰٓى اِنِّىْ عُذْتُ بِرَبِّىْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ‏


மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்: “கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.” (அல்குர்ஆன் : 40:27)


ஒரு மனிதன் அல்லாஹ்விடம் உண்மையாகப் பாதுகாப்புத் தேடினால், கடலையே பிளந்தாவது அல்லாஹ் அவனைக் காப்பான் என்பதற்கு மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வரலாறு சான்று.


மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தாய் ஹன்னா அவர்கள் செய்த துஆ :-


மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அந்நிய ஆடவரைக் கண்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. மர்யம் (அலை) அவர்கள் பிறந்தபோதே, அவர்களின் தாயார் (ஹன்னா) அல்லாஹ்விடம் ஒரு துஆச் செய்தார்கள்:

 وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏


"இறைவா! இதோ இவரையும், இவருடைய சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன் (உயீதுஹா பிக)." (குர்ஆன் 3:36).


 தாயின் அந்தப் பாதுகாப்புத் தேடும் துஆவின் பலனால்தான், மர்யம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வாலிப வயதில் ஒரு சோதனை வந்தபோது தானாகவே "ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்" என்று கூறும் நிலைக்கு உயர்ந்தார்கள்.



லபீத் இப்னு அஃஸம் என்ற தீயவன்


மதீனாவில் லபீத் இப்னு அஃஸம் என்ற யூதன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சூனியம் செய்தபோது, அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் ஸூரா ஃபலக் மற்றும் ஸூரா நாஸ் ஆகிய அத்தியாயங்களை இறக்கினான்.

 * இந்த இரண்டு அத்தியாயங்களுமே "அஊது" (நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்றுதான் தொடங்கும்.

 * கண்ணேறு, பொறாமை, சூனியம் போன்ற கண்ணுக்குத் தெரியாத தீங்குகளிலிருந்து தப்பிக்க அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேட வேண்டும் என்பதற்கு இது ஒரு வரலாற்றுப் தகவல்..


"மர்யம் (அலை) அவர்கள் ஒரு மனித உருவில் வந்த வானவரைக் கண்டு அஞ்சி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள். ஆனால் இன்று நாம், ஷைத்தான் நம்மைத் தீமையின் பக்கம் அழைக்கும்போது அல்லாஹ்வை நினைக்கிறோமா? மர்யம் (அலை) அவர்களுக்கு பாதுகாப்பு அளித்த அதே ரஹ்மான் தான் இன்றும் நமக்கும் இருக்கிறான். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: உண்மையான உள்ளத்தோடு 'யா அல்லாஹ்! உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று தஞ்சம் புகுவதுதான்."


நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்வில் ஒரு தடவை 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை பயணத்தில் இருந்தபோது, ஒரு மரத்தடியில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிரி ஒருவன் (கவ்ரத் இப்னுல் ஹாரிஸ்) நபியவர்களின் வாளை எடுத்து உருவிக்கொண்டு, "முஹம்மதே! இப்போது உம்மை என்னிடமிருந்து யார் காப்பாற்றுவார்?" என்று கேட்டான்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதற்றப்படாமல், ஒரு வார்த்தை சொன்னார்கள்: "அல்லாஹ்!"

அந்த வார்த்தையின் வலிமையால் எதிரியின் கைகள் நடுங்கி வாள் கீழே விழுந்தது. உடனே நபியவர்கள் அந்த வாளை எடுத்து, "இப்போது உன்னை என்னிடமிருந்து யார் காப்பாற்றுவார்?" என்று கேட்டார்கள்.


உண்மையான பாதுகாப்புத் தேடுதல் என்பது நாவினால் சொல்வது மட்டுமல்ல, அது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வர வேண்டும். அல்லாஹ்வை அழைத்தால் எத்தகைய ஆயுதம் ஏந்திய எதிரியும் பலவீனமாகிவிடுவான்.


ஜின்களிடமிருந்து பாதுகாப்புத் தேடிய வரலாறு


இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் (ஜாஹிலிய்யா), அரபுகள் ஏதேனும் ஒரு பள்ளத்தாக்கில் இரவு தங்க நேரிட்டால், "இந்தத் தாழ்வாரத்தின் தலைவனிடம் (ஜின்களின் தலைவனிடம்) நான் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறுவார்கள். ஆனால் இஸ்லாம் வந்த பிறகு அல்லாஹ் இதைத் தடுத்தான்.

அல்லாஹ் கூறினான்:

وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ يَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا ۙ‏


"மனிதர்களில் சில ஆடவர்கள் ஜின்களில் சில ஆடவர்களிடம் பாதுகாப்புத் தேடிக்கொண்டிருந்தனர்; அதனால் அவை (ஜின்கள்) இவர்களுக்குப் பயத்தையும் கர்வத்தையும் அதிகமாக்கிவிட்டன." (ஸூரா ஜின் : 6)


மனிதன் படைப்பினங்களிடம் பாதுகாப்புத் தேடக் கூடாது, படைத்தவனிடம் மட்டுமே தேட வேண்டும் . அதன் பின்னர் ஸஹாபாக்கள் அல்லாஹ் தவிற வேறு யாரிடமும் பாதுகாப்பு தேடியது இல்லை.


அனஸ் இப்னு மாலிக் (ரலி) - ஹஜ்ஜாஜ் பின் யூசுப் சம்பவம்


கொடிய ஆட்சியாளரான ஹஜ்ஜாஜ் பின் யூசுப், அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைத் தண்டிப்பதாக மிரட்டினான். அதற்கு அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள், "நிச்சயமாக உன்னால் முடியாது, ஏனென்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடும் ஒரு துஆவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அதை ஓதுபவரை யாராலும் நெருங்க முடியாது" என்றார்கள்.


அவர்கள் ஓதிய துஆ: 


"بِسْمِ اللهِ عَلَى دِينِي وَنَفْسِي، بِسْمِ اللهِ عَلَى أَهْلِي وَمَالِي، بِسْمِ اللهِ عَلَى كُلِّ شَيْءٍ أَعْطَانِيهِ رَبِّي، اللهُ اللهُ رَبِّي لا أُشْرِكُ بِهِ شَيْئًا، اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، وَأَعَزُّ وَأَجَلُّ وَأَعْظَمُ مِمَّا أَخَافُ وَأَحْذَرُ، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلا إِلَهَ غَيْرُكَ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ كُلِّ شَيْطَانٍ مَرِيدٍ، وَمِنْ شَرِّ كُلِّ جَبَّارٍ عَنِيدٍ، فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللهُ لا إِلَهَ إِلا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ.


என் மார்க்கத்தின் மீதும், என் உயிரின் மீதும் அல்லாஹ்வின் பெயர் கொண்டு (பாதுகாப்புத் தேடுகிறேன்).என் குடும்பத்தின் மீதும், என் செல்வத்தின் மீதும் அல்லாஹ்வின் பெயர் கொண்டு...என் இறைவன் எனக்கு வழங்கிய ஒவ்வொன்றின் மீதும் அல்லாஹ்வின் பெயர் கொண்டு...அல்லாஹ்வே என் இறைவன்! அவனுக்கு நான் எதையும் இணையாக்க மாட்டேன்.அல்லாஹ் மிகப்பெரியவன்! அல்லாஹ் மிகப்பெரியவன்! அல்லாஹ் மிகப்பெரியவன்!

நான் எதைக் கண்டு அஞ்சுகிறேனோ, எதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கிறேனோ, அதைவிட அவன் (அல்லாஹ்) மிக மேலானவன், கண்ணியமானவன், மகத்தானவன்.

உனது பாதுகாப்பு வலிமையானது, உனது புகழ் மகத்தானது, உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

இறைவா! என் ஆத்மாவின் தீங்கிலிருந்து, வம்பு செய்யும் ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், பிடிவாதம் காட்டும் ஒவ்வொரு அக்கிரமக்கார (அதிகாரி) இடமிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(நபியே!) அவர்கள் உம்மைப் புறக்கணித்துச் சென்றால், "அல்லாஹ் எனக்குப் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவனையே நான் சார்ந்திருக்கிறேன்; அவன் மகத்தான அர்ஷின் (சிம்மாசனத்தின்) அதிபதி" என்று நீர் கூறுவீராக.


இதைக் கேட்ட ஹஜ்ஜாஜ் பின் யூசுப், "அவரை விட்டுவிடுங்கள், நான் அவரைப் பார்த்தபோது என் தலைக்கு மேலே ஒரு பெரிய பாம்பு சீறுவது போலத் தெரிந்தது" என்று கூறி அஞ்சி பின்வாங்கினான்.

காலித் (ரலி) அவர்களின் மனநிலை

காலித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் போர்க்களத்தில் ஆயிரக்கணக்கான எதிரிகளைத் ஒற்றை ஆளாக எதிர்கொண்டவர். ஆனால், சில இரவுகளில் அவருக்குக் கடுமையான மனப்பதற்றமும் , தூக்கமின்மையும் ஏற்பட்டது. தூக்கத்தில் திடுக்கிட்டு எழுவதும், இனம் புரியாத அச்சமும் அவர்களை வாட்டியது.

இது குறித்து அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முறையிட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! நான் இரவில் படுக்கிறேன், எனக்குத் தூக்கம் வரவில்லை. ஏதோ ஒன்று என்னை அச்சுறுத்துவது போல உணர்கிறேன்."

ஒரு மாவீரரின் அச்சத்தைப் போக்க நபி (ஸல்) அவர்கள் அவருக்கு ஒரு வலிமையான 'பாதுகாப்பு அரணை' (துஆவை) கற்றுத்தந்தார்கள். அந்தத் துஆ இதுதான்:

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

 "அல்லாஹ்வின் முழுமையான சொற்களைக் கொண்டு, அவனது கோபத்திலிருந்தும், அவனது தண்டனையிலிருந்தும், அவனது அடியார்களின் தீங்கிலிருந்தும், ஷைத்தான்களின் ஊசலாட்டத்திலிருந்தும், அவை என்னிடம் நெருங்குவதிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்." (திர்மிதி, அஹ்மத்).

காலித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இந்தத் துஆவை ஓதத் தொடங்கிய பிறகு, "நான் சிங்கம் நிறைந்த காட்டில் தனியாகப் படுத்திருந்தாலும் எனக்குப் பயம் ஏற்படாது" என்று கூறும் அளவுக்கு மன உறுதியைப் பெற்றார்கள்.


சபினா (ரலி) - சிங்கத்திடம் பாதுகாப்புத் தேடியது

நபியவர்களின் விடுதலை செய்யப்பட்ட அடிமையான சபினா (ரலி) அவர்கள் ஒருமுறை பயணத்தில் வழிதவறி ஒரு காட்டுக்குள் சென்றுவிட்டார். அங்கே ஒரு பெரிய சிங்கம் அவர் முன்னால் வந்து நின்றது.


அவர் சிங்கத்தைப் பார்த்துப் பயப்படவில்லை. மாறாக, "யா அபுல் ஹாரிஸ்! (சிங்கத்தின் பெயர்) நான் அல்லாஹ்வின் தூதரின் பணியாளி சபினா!" என்று கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்.


 அந்தச் சிங்கம் அவருக்குத் தீங்கு செய்யவில்லை; மாறாக அவருக்கு வழி காட்டி, காட்டின் எல்லை வரை பாதுகாப்புடன் கொண்டு வந்துவிட்டது.


யார் அல்லாஹ்வைச் சார்ந்து இருக்கிறாரோ, அவருக்குக் காட்டு விலங்குகள் கூடக் கட்டுப்படும் நூல்: அல்-பிதாயா வந்-நிஹாயா (Al-Bidayah wan-Nihayah) - பாகம் 6 & தப்ரானி (Al-Tabarani).


இப்ராஹீம் இப்னு அத்ஹம் (ரஹ்) - சிங்கமும் இறைநேசரும்


பெரிய இறைநேசரான இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் காட்டில் இறைவனை வணங்கி கொண்டிருந்தபோது, ஒரு பசியுள்ள சிங்கம் அவர்களை நோக்கி வந்தது. அவர்கள் ஓடி ஒளியவில்லை. "யா அல்லாஹ்! படைப்பினங்களின் தீங்கிலிருந்து உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று அமைதியாகக் கூறித் தொழுது கொண்டிருந்தார்.


 சிங்கம் அவர் அருகில் வந்து, அவரது கால்களை நக்கிவிட்டு, அவருக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் அமைதியாகச் சென்றது.

 இறைநேசர்கள் விலங்குகளைக் கண்டும் அல்லாஹ்விடமே தஞ்சம் புகுவார்கள்.

நூல்: தத்கிரதுல் அவ்லியா (Tadhkirat al-Awliya) - ஃபரிதுத்தீன் அத்தார்.


ஜுனைத் அல்-பக்தாதி (ரஹ்) - ஷைத்தானின் சவால்


பக்தாத்தின் தலைசிறந்த இறைநேசரான ஜுனைத் அல்-பக்தாதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒருமுறை ஷைத்தானை நேருக்கு நேர் கண்டார்கள். ஷைத்தான் அவர்களிடம், "உம்மை நான் பலமுறை வழிகெடுக்க முயன்றேன், ஆனால் முடியவில்லை" என்றான்.


 ஜுனைத் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் பெருமைப்படவில்லை. மாறாக, "நான் உன்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறி தலைகுனிந்தார்கள்.அவர்கள் 'அஊது' என்று சொன்ன மாத்திரத்தில் ஷைத்தான் புகையாக மறைந்து போனான்.

நூல்: ரிஸாலா அல்-குஷைரிய்யா (Al-Risala al-Qushayriyya) - இமாம் குஷைரி.


இறைநேசர்கள் எப்போதும் தங்களின் வணக்க வழிபாடுகளை நம்பமாட்டார்கள்; மாறாக அல்லாஹ்வின் பாதுகாப்பையே எப்போதும் நம்புவார்கள்.


மர்யம் (அலை) அவர்கள் ஒரு பெண்ணாக இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள்; அல்லாஹ் அவருக்கு ஒரு நபியை மகனாகத் தந்தான்.


காலித் இப்னு வலீத் (ரலி) ஒரு வீரராக இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்; அல்லாஹ் அவருக்கு மன அமைதியைத் தந்தான்.


இறைநேசர்கள் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள்; அல்லாஹ் அவர்களை உலகத்திற்கே வழிகாட்டியாக மாற்றினான்.

நாமும் அல்லாஹ்வை முழுமையாக நம்பி அவனிடமே பாதுகாவல் தேடுவோம்.


யா அல்லாஹ்! மர்யம் (அலை) அவர்கள் ஒரு இக்கட்டான சூழலில் உன்னிடம் பாதுகாப்புத் தேடியபோது, அவர்களுக்கு நீ எப்படிப் பாதுகாப்பு அளித்தாயோ, அதுபோல எங்கள் ஒவ்வொருவருக்கும் எல்லா நிலைகளிலும் பாதுகாப்பை வழங்குவாயாக!


யா ரஹ்மானே! விரட்டப்பட்ட ஷைத்தானின் ஊசலாட்டங்களை விட்டும், மனித மற்றும் ஜின் இன ஷைத்தான்களின் சூழ்ச்சிகளை விட்டும் எங்களையும், எங்கள் சந்ததியினரையும் பாதுகாப்பாயாக!


யா மலிகல் முல்க்! அனஸ் (ரலி) அவர்களுக்கு நீ பாதுகாப்புக் கவசமாக இருந்தது போல, அநீதி இழைக்கும் அக்கிரமக்காரர்களின் தீங்கிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!


யா ஸலாமு! காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களுக்கு நீ வழங்கிய அந்த மன அமைதியை எங்களுக்கும் வழங்குவாயாக! தூக்கமின்மை, கவலை, மன அழுத்தம் மற்றும் இனம் புரியாத பயங்களிலிருந்து எங்களை விடுவிப்பாயாக!


யா ஹஃபீளு! எங்களின் மார்க்கத்தையும், எங்களின் உயிரையும், எங்களின் குடும்பத்தையும், எங்களின் செல்வத்தையும் உன்னிடமே ஒப்படைக்கிறோம். நீயே மிகச் சிறந்த பாதுகாவலன்! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


1 கருத்து: