(படம். ஹுதைபியா மஸ்ஜித்.)
தராவீஹ் பயான் பிறை – 21
தலைப்பு : “தெளிவான வெற்றி”
ஹிஜ்ரி 1447.
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد
اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا ۙ
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்(அல்குர்ஆன் : 48:1)
لِّيَـغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَ مَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.(அல்குர்ஆன் : 48:2)
وَّ يَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِيْزًا
மேலும், அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்). (அல்குர்ஆன் : 48:3)
நபி (ஸல்) அவர்கள் கண்ட அந்தச் சிறப்பான கனவு மற்றும் அதன் பின்னணியில் உள்ள விளக்கங்கள் இதோ:
இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஸூரத்துல் ஃபத்ஹ் அத்தியாயத்தில் முக்கியமான வசனங்களில் மேற்சொன்ன வசனங்களில் அல்லாஹ் நமக்கு கூறுவது :- பின்னர் நிகழவிருந்த மக்கா வெற்றியை முன்கூட்டியே அறிவித்ததாகும். நபி ﷺ அவர்கள் மற்றும் முஸ்லிம்கள் பல வருடங்கள் துன்பம் அனுபவித்தார்கள். அதன் முடிவாக மக்கா முழுவதும் இஸ்லாம் வெற்றி பெற்றது. “நாம் உமக்கு தெளிவான வெற்றியை அளித்தோம்.” இது குறித்து இந்த வசனம் பேசுகின்றது.
வரலாற்று தகவல்….
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கனவு
ஹிஜ்ரி 6-ம் ஆண்டு துல் கஃதா மாதத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் ஒரு கனவு கண்டார்கள்.
தாங்களும் தங்களது தோழர்களும் எவ்வித அச்சமுமின்றி மக்காவிற்குள் நுழைகிறார்கள். அனைவரும் கஃபாவைச் சுற்றி 'தவாஃப்' செய்கிறார்கள்.
உம்ராவின் ஒரு பகுதியாகச் சிலர் தலைமுடியைச் இறக்குகிறார்கள், சிலர் கத்தரிக்கிறார்கள்.
புனித கஃபாவின் சாவியைத் தங்கள் கையில் வைத்திருக்கிறார்கள்.
நபிமார்களின் கனவு என்பது வெறும் கற்பனை அல்ல, அது 'வஹீ' (இறைச்செய்தி) ஆகும். இந்தக் கனவைப் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு உறுதிப்படுத்துகிறான்:
"நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு அவர் கண்ட கனவை உண்மையாகவே மெய்ப்பித்துவிட்டான். அல்லாஹ் நாடினால், நீங்கள் அச்சமற்றவர்களாகவும், உங்கள் தலைமுடிகளைச் மழித்தவர்களாவும், கத்தரித்தவர்களாகவும் நிச்சயமாக மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள்." (அல்குர்ஆன் 48:27)
இந்தக் கனவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களிடம் கூறியபோது, அவர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். ஏனெனில், ஹிஜ்ரத் செய்து 6 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தங்களின் சொந்த ஊரான மக்காவிற்கும் புனித கஃபாவுக்கும் செல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் 1400 தோழர்கள் புறப்பட்டார்கள்.
அவர்கள் போருக்காகச் செல்லவில்லை என்பதை உணர்த்த, தங்களின் ஆயுதங்களை உறையிலிட்டு, பலிப்பிராணிகளுடன் 'இஹ்ராம்' அணிந்து சென்றார்கள்.
முஸ்லிம்கள் மக்காவிற்கு வருவதை அறிந்த குறைஷிகள், அவர்களை உள்ளே விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். 'காலித் பின் வலீத்' தலைமையில் ஒரு படையை அனுப்பி வழிமறித்தனர். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போரைத் தவிர்க்க விரும்பி, வேறு பாதையில் சென்று மக்காவிற்கு அருகிலுள்ள 'ஹுதைபிய்யா' என்ற இடத்தில் தங்கியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் உம்ரா செய்ய மட்டுமே வந்துள்ளோம் என்பதை விளக்க 'உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு' அவர்களைத் தூதராக மக்காவிற்கு அனுப்பினார்கள். ஆனால், அவர் திரும்பி வரத் தாமதமானதால், அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரவியது.
உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து, "மரணமே வந்தாலும் போர்க்களத்தை விட்டு ஓடமாட்டோம், பழி தீர்க்காமல் திரும்ப மாட்டோம்" என்று தோழர்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். இதைப் பற்றி குர்ஆன் (48:18) வசனம் "அல்லாஹ் அந்த முஃமின்களைப் பொருந்தி (திருப்தி அடைந்து) கொண்டான்" என்று கூறுகிறது.
உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உயிருடன் திரும்பினார்கள். பின்னர் குறைஷிகளின் சார்பாக 'சுஹைல் பின் அம்ரு' பேச்சுவார்த்தைக்கு வந்தார். நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது:
இந்த ஒப்பந்தம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், குறைஷிகளின் சார்பாக வந்த சுஹைல் பின் அம்ரு என்பவருக்கும் இடையே கையெழுத்தானது.
உடன்படிக்கையின் நிபந்தனை விளக்கம்
1. 10 ஆண்டு போர் நிறுத்தம் இரு தரப்பினருக்கும் இடையே அடுத்த 10 ஆண்டுகளுக்குப் போர் கிடையாது. மக்கள் எவ்வித அச்சமுமின்றி ஒருவரையொருவர் சந்திக்கலாம்.
2.இந்த ஆண்டு உம்ரா கிடையாது முஸ்லிம்கள் இந்த ஆண்டு (ஹிஜ்ரி 6) உம்ரா செய்யாமல் மதீனா திரும்ப வேண்டும்.
3. அடுத்த ஆண்டு உம்ரா அனுமதி அடுத்த ஆண்டு (ஹிஜ்ரி 7) முஸ்லிம்கள் மக்காவிற்கு வரலாம். ஆனால் 3 நாட்கள் மட்டுமே தங்க அனுமதி.
4. ஆயுதக் கட்டுப்பாடு முஸ்லிம்கள் வரும்போது உறைக்குள் இருக்கும் வாட்களைத் தவிர வேறு எவ்விதப் போர்க் கருவிகளையும் கொண்டு வரக்கூடாது.
5. அகதிகள் திரும்புதல் மக்காவிலிருந்து யாராவது (குறைஷிகளின் அனுமதியின்றி) முஸ்லிமாகி மதீனாவுக்கு வந்தால், அவரை மீண்டும் மக்காவிடமே ஒப்படைக்க வேண்டும்.
6. மதீனாவிலிருந்து வருபவர்கள் மதீனாவிலிருந்து யாராவது மதம் மாறி மக்காவிற்குத் திரும்பி வந்தால், அவரை குறைஷிகள் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை.
7. கூட்டணி உரிமை அரபுக் கோத்திரங்களில் யார் வேண்டுமானாலும் முஸ்லிம்களுடன் அல்லது குறைஷிகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
8. உள்நாட்டு பாதுகாப்பு இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் திருட்டு, மோசடி அல்லது துரோகம் செய்யக்கூடாது.
உடன்படிக்கையின் போது நடந்த முக்கியமான ஒரு நிகழ்வு
ஒப்பந்தம் எழுதப்படும்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என்று எழுதச் சொன்னார்கள்.
ஆனால் சுஹைல் பின் அம்ரு, "ரஹ்மான் என்றால் யார் என்று எங்களுக்குத் தெரியாது, 'பிஸ்மிக்கல்லாஹும்ம' (உன் பெயரால் இறைவா) என்று எழுதுங்கள்" என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்.
அதேபோல், "அல்லாஹ்வின் தூதர் முஹம்மது" என்று எழுதியபோது, "உங்களை இறைத்தூதர் என்று நாங்கள் ஏற்றிருந்தால் ஏன் உங்களைத் தடுக்கிறோம்? 'அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்று எழுதுங்கள்" என்றார் சுஹைல்.
தோழர்கள் கோபமடைந்த நிலையிலும், அமைதிக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைத் தன் கையாலேயே அழித்துவிட்டு அவ்வாறே எழுதச் சொன்னார்கள்.
இந்த நிபந்தனைகள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பாகத் தெரிந்ததால், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உள்ளிட்ட பல தோழர்கள் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்தார்கள். ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அமைதியாக உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டார்கள்.
உடன்படிக்கையின் நிபந்தனைகள் முஸ்லிம்களுக்குப் பாதகமாக இருப்பதாகத் தோன்றியதால், தோழர்கள் மிகுந்த கவலையிலும் அதிர்ச்சியிலும் இருந்தார்கள். குறிப்பாக, உம்ரா செய்யாமல் இந்த ஆண்டு திரும்ப வேண்டும் என்ற நிபந்தனை அவர்களைப் பெரிதும் பாதித்தது.
உடன்படிக்கை முடிந்ததும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களை நோக்கி: "எழுந்து செல்லுங்கள், உங்கள் பலிப்பிராணிகளை அறுத்து, தலைமுடியைச் சிரைத்துக் கொள்ளுங்கள்" என்று கட்டளையிட்டார்கள்.
ஆனால், தோழர்கள் யாரும் எழுந்திருக்கவில்லை. அவர்கள் தங்கள் கவலையினால் ஒருவிதத் திகைப்பில் இருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை இக்கட்டளையை விடுத்தும், ஒருவரும் நகரவில்லை. (தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை; மாறாக, அல்லாஹ்விடமிருந்து இந்த உடன்படிக்கையை ரத்து செய்து ஏதேனும் 'வஹீ' வருமா என்ற எதிர்பார்ப்பில் அப்படியே அமர்ந்திருந்தார்கள்).
தோழர்கள் யாரும் எழுந்து வராததைக் கண்டு கவலையுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தனது மனைவி அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா தங்கியிருந்த கூடாரத்திற்குச் சென்று நடந்ததைக் கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு புத்திசாலித்தனமான ஆலோசனையை வழங்கினார்கள்:
"அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யாரிடமும் பேச வேண்டாம். வெளியே சென்று, உங்கள் பலிப்பிராணியை அறுத்து, உங்கள் சவரத் தொழிலாளியை அழைத்துத் தலைமுடியைச் இறக்கிக் கொள்ளுங்கள். உங்களைக் கண்டால் அவர்களும் அதையே செய்வார்கள்" என்று கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே வந்து, யாரிடமும் பேசாமல் தங்கள் ஒட்டகத்தை அறுத்து பலியிட்டார்கள். பின்னர் தலைமுடியைச் இறக்கிக் கொண்டார்கள். இதைப் பார்த்த தோழர்கள், இனி வஹீ (இறைச்செய்தி) மூலம் மாற்றம் வராது என்பதைப் புரிந்து கொண்டனர்.
உடனே அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு எழுந்து, தங்கள் பலிப்பிராணிகளை அறுத்து, ஒருவருக்கொருவர் தலைமுடியைச் சிரைக்கத் தொடங்கினரனார்கள்.
இதன் பிறகு மதீனா திரும்பும் வழியில் தான் "நிச்சயமாக நாம் உமக்கு ஒரு தெளிவான வெற்றியைத் தந்துவிட்டோம்" (48:1) என்ற வசனம் இறங்கியது. புறக்கண்ணுக்கு இது தோல்வியாகத் தெரிந்தாலும், அதுவே மிகப்பெரிய வெற்றியாக மாறியது.
அதுவரை 'கிளர்ச்சியாளர்கள்' என்று கருதப்பட்ட முஸ்லிம்களை, ஒரு சமமான சக்தியாக குறைஷிகள் அங்கீகரித்தனர்.
போர் நின்றதால், முஸ்லிம்கள் மக்களுடன் கலந்து பேசி இஸ்லாத்தைப் பரப்ப முடிந்தது. இந்த 2 ஆண்டுகளில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கை, கடந்த 19 ஆண்டுகளில் ஏற்றவர்களை விட அதிகமாக இருந்தது.
இந்த அமைதி ஒப்பந்தம் தான் 2 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வித இரத்தச் சிதறலுமின்றி மக்கா வெற்றி கொள்ளப்படக் காரணமாக அமைந்தது.
நம்முடைய திட்டங்களை விட அல்லாஹ்வின் திட்டம் மிகச் சிறந்தது. சோதனையான நேரங்களில் காட்டும் நிதானமே மகத்தான வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
இதனால் தோழர்களுக்குக் கனவு பொய்யாகிவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் இந்தக் கனவை மெய்ப்பிப்பான், ஆனால் அது 'இந்த ஆண்டே' நடக்கும் என்று நான் சொல்லவில்லை" என்று விளக்கமளித்தார்கள்.
உம்ரதுல் களா (ஹிஜ்ரி 7): அடுத்த ஆண்டு, ஹுதைபிய்யா உடன்படிக்கையின்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களுடன் சென்று முறையாக உம்ரா செய்தார்கள்.
கனவில் கண்டது போலவே தலைமுடியைச் இறக்கினார்கள்.
மக்கா வெற்றி (ஹிஜ்ரி 8): அதன் பிறகு எவ்விதப் போருமின்றி மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது, அந்தக் கனவு முழுமையாக உண்மையானது.
புறக்கண்ணால் பார்க்கும்போது தோல்வியாகவும், முஸ்லிம்களுக்குப் பாதிப்பாகவும் தெரிந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையை அல்லாஹ் "தெளிவான வெற்றி" (ஃபதஹும் முபீன்) என்று குறிப்பிட்டதற்கான காரணங்கள் இது தான்:-
எதிரிகளால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரம்
அதுவரை முஸ்லிம்களை வெறும் 'கிளர்ச்சியாளர்கள்' என்றும், ஒடுக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கருதிய மக்கா குறைஷிகள், முதன்முறையாக ஒரு மேசையில் அமர்ந்து முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்தனர். இது மதீனாவை ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசாக மக்காவினர் அங்கீகரித்ததைக் குறிக்கிறது.
போர் நின்றதால் ஏற்பட்ட மனமாற்றம்
முஸ்லிம்களுக்கும் மக்காவினருக்கும் இடையே இருந்த போர்ச் சூழல் விலகியதால், இரு தரப்பு மக்களும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம்களின் நற்பண்புகளையும், இஸ்லாத்தின் போதனைகளையும் மக்காவினர் அருகிலிருந்து கவனித்தனர்.
ஒப்பந்தம் நடந்தபோது இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது.
மாபெரும் வீரர்கள் இஸ்லாத்தில் இணைதல்
போர் நிறுத்தக் காலத்தில் ஏற்பட்ட அமைதியான சூழல், குறைஷிகளின் மிகச்சிறந்த போர் தளபதிகளான காலித் இப்னு வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) மற்றும் அம்ரு இப்னுல் ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோர் இஸ்லாத்தை ஏற்க வழிவகுத்தது. இவர்களின் வருகை முஸ்லிம் படையை உலகளாவிய வலிமை கொண்டதாக மாற்றியது.
மக்கா வெற்றிக்கு அடிக்கல்
இந்த உடன்படிக்கை இல்லையென்றால் மக்கா வெற்றி இவ்வளவு எளிதாகச் சாத்தியப்பட்டிருக்காது. ஒப்பந்தத்தை குறைஷிகள் மீறியபோது, நபி (ஸல்) அவர்கள் 10,000 வீரர்களுடன் சென்று மக்காவை எவ்வித இரத்தச் சிதறலுமின்றி வெற்றி கொண்டார்கள். ஹுதைபிய்யாவில் காட்டிய பொறுமைதான் மக்கா வெற்றியின் திறவுகோலாக அமைந்தது.
நாம் எதை நஷ்டம் என்று நினைக்கிறோமோ, அதில் அல்லாஹ் மகா வெற்றியை வைத்திருப்பான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததால், தற்காலிகப் பின்னடைவு நிரந்தர வெற்றியாக மாறியது.
இந்த வரலாற்றுச் சம்பவம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், அல்லாஹ்வின் முடிவுகள் எப்போதும் நம்முடைய குறுகிய கால நலனை விட நீண்ட கால வெற்றியை நோக்கியே இருக்கும்.
இந்த நிகழ்வில் நாம் பெறவேண்டிய ஐந்து வகையான பாடங்கள்.
1️⃣ பொறுமை வெற்றியை தரும்.
الصبر مفتاح الفرج
பொறுமை தான் வெற்றியின் திறவுகோல்.
"ஹுதைபிய்யாவில் ஒப்பந்தம் எழுதப்பட்டபோது, எதிரிகள் "பிஸ்மில்லாஹ்" மற்றும் "அல்லாஹ்வின் தூதர்" என்ற வார்த்தைகளை எழுத விடாமல் தடுத்தனர். தோழர்கள் உணர்ச்சிவசப்பட்டுப் போர் செய்யத் தயாராக இருந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அந்தத் தற்காலிக அவமானத்தைப் பொறுத்துக் கொண்டார்கள்.
அந்தப் பொறுமை, ஒரு மாபெரும் இரத்தச் சிதறலைத் தவிர்த்து, பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயங்களை வெல்லக் காரணமாக அமைந்தது.
பொறுமை என்பது சும்மா இருப்பதை விட, "அல்லாஹ் என் அறிவை விட மேலானவற்றைத் திட்டமிடுபவன்" என்ற நம்பிக்கையில் உறுதியாக இருப்பதாகும்.
ஹுதைபிய்யாவில் தோழர்கள் தங்களை 'தோற்றவர்கள்' போல உணர்ந்தனர். ஆனால், அவர்களின் அந்தப் பொறுமைக்காக அல்லாஹ் 'தெளிவான வெற்றி' என்ற பதக்கத்தைச் சூட்டினான்.
உங்கள் வாழ்வில் ஒரு கதவு மூடப்படும்போது பொறுமை காத்தால், அல்லாஹ் அதைவிடச் சிறந்த பல கதவுகளைத் திறப்பான் என்பதற்கு இதுவே சான்று.
எதிரிகளை நண்பர்களாக்கும் வலிமை
"நன்மையால் தீமையைத் தடுத்துக் கொள்வீராக! எவருக்கும் உமக்கும் பகைமை இருக்கிறதோ அவர் உற்ற நண்பராகி விடுவார். பொறுமை உடையவர்களைத் தவிர வேறு யாரும் இதை அடைய மாட்டார்கள்." (41:34-35)
ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின் போது காட்டிய பொறுமைதான், பிற்காலத்தில் பெரும் தளபதிகளான காலித் இப்னு வலீத் (ரலி) போன்றவர்களை இஸ்லாத்தின் பக்கம் இழுத்தது.
நிதானமே வெற்றிக்கான பாதை
அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும். பொறுமை என்பது 'நிதானமாகச் சிந்திக்கும்' ஆற்றலைத் தருகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிதானமாக ஒப்பந்தத்தைச் செய்ததால், முஸ்லிம்களுக்கு எதிராக இருந்த அனைத்துத் தடைகளும் மெல்ல மெல்ல விலகின.
"நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்." (2:153)
"பொறுமை என்பது சோதனையின் முதல் கட்டத்தில் காட்டுவதாகும்."
பொறுமை என்பது பலவீனம் அல்ல; அது ஒரு மனிதனின் மிக உயர்ந்த மன உறுதி (Will power).
வெற்றி என்பது எப்போதும் வாளாலும் பலத்தாலும் கிடைப்பதில்லை; பல நேரங்களில் அது நிதானத்தாலும் பொறுமையாலும் மட்டுமே சாத்தியப்படும். ஹுதைபிய்யா சம்பவம் நமக்குக் கற்றுத் தரும் பாடம் இதுதான்: "இன்று நீங்கள் காட்டும் பொறுமை, நாளை உங்கள் வாழ்வின் மாபெரும் வெற்றிக்கு வித்தாக அமையும்."
2️⃣ அல்லாஹ்வின் திட்டம் சிறந்தது
நம் அறிவு குறுகியது; அல்லாஹ்வின் அறிவு விசாலமானது
மனிதர்களாகிய நாம் ஒரு காரியத்தின் 'உடனடி' லாப நஷ்டங்களை மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ் அதன் 'முடிவை' (End result) பார்க்கிறான்.
ஹுதைபிய்யாவில் தோழர்கள் அந்த ஆண்டு உம்ரா செய்ய முடியவில்லையே என்று வருந்தினார்கள். ஆனால் அல்லாஹ்வுக்குத் தெரியும், அந்த ஆண்டு உம்ரா செய்வதை விட, அங்கு ஏற்படும் அமைதி ஒப்பந்தம் பல ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணையக் காரணமாக அமையும் என்று.
நமது வாழ்வில் ஒரு கதவு மூடப்படும்போது நாம் சோர்ந்து போகிறோம். ஆனால் அல்லாஹ் ஒரு கதவை மூடினால், அதை விடச் சிறந்த வேறொரு கதவைத் திறக்கிறான்.
ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில், "மக்காவிலிருந்து வருபவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும்" என்ற நிபந்தனை முஸ்லிம்களுக்குப் பாதிப்பாகத் தெரிந்தது.
ஆனால், திருப்பி அனுப்பப்பட்ட அபூ ஜந்தல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் அபூ பஸீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் போன்ற தோழர்கள் மக்காவிற்கு வெளியே ஒரு தனி சக்தியாக உருவாகி, குறைஷிகளின் வர்த்தகப் பாதையை முடக்கினார்கள். இறுதியில் குறைஷிகளே அந்த நிபந்தனையை நீக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கெஞ்சும் நிலை ஏற்பட்டது.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
"நிச்சயமாக ஒவ்வொரு கஷ்டத்துடனும் ஒரு எளிமை இருக்கிறது." (94:5-6)
கஷ்டம் வரும்போதே அதற்கான தீர்வையும் அல்லாஹ் திட்டமிட்டு விடுகிறான். ஹுதைபிய்யாவின் 'கஷ்டமான' நிபந்தனைகள் தான் 'மக்கா வெற்றி' என்ற எளிமையான பாதைக்கு அடித்தளமிட்டது.
எதிரிகள் முஸ்லிம்களை அழிக்கத் திட்டம் தீட்டினார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களின் திட்டங்களைக்கொண்டே இஸ்லாத்தை வளர்க்கத் திட்டமிட்டான்.
குறைஷிகள் முஸ்லிம்களை மக்காவிற்குள் விடாமல் தடுத்து முடக்க நினைத்தனர். ஆனால் அதே தடையால் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம், முஸ்லிம்களின் தூது செய்தியை ரோம் மற்றும் பாரசீக மன்னர்களுக்குக் கொண்டு செல்ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் போதிய கால அவகாசத்தைக் கொடுத்தது.
அல்லாஹ்வின் திட்டம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், நாம் அவனது கட்டளைக்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குத் தலைவணங்கியதால் தான் வெற்றி கிடைத்தது.
நிச்சயமற்ற தன்மை (Uncertainty) எதிர்காலத்தைப் பற்றிய கவலை நமக்கு வேண்டாம். ஏனெனில் நம்மைப் படைத்தவன் நமக்காக மிகச்சிறந்த ஒன்றை ஏற்கனவே எழுதிவிட்டான்.
திருப்தி (ரிளா) அல்லாஹ்வின் முடிவின் மீது நாம் கொள்ளும் திருப்தியே நம் மனதிற்கு அமைதியைத் தரும்.
3️⃣ தோல்வி போல தெரிந்தாலும் அது வெற்றி
நாம் நினைக்கும் தோல்வி அல்லாஹ்வின் பார்வையில் வெற்றி ஆகலாம்.
வாழ்வில் சில நிகழ்வுகள் நடக்கும்போது அவை நமக்கு பெரும் பின்னடைவாகவோ அல்லது தோல்வியாகவோ தோன்றும். ஆனால், அந்த நிகழ்வுகளின் முடிவில் ஒளிந்திருக்கும் நன்மைகளை அல்லாஹ் மட்டுமே அறிவான். இதற்கு இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கையை விடச் சிறந்த உதாரணம் எதுவுமில்லை.
மனிதப் பார்வையும் அல்லாஹ்வின் பார்வையும்
மனிதர்களாகிய நாம் ஒரு காரியத்தின் உடனடி விளைவை (Short-term result) மட்டுமே பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ் அதன் நீண்டகால நற்பலன்களை (Long-term benefits) பார்க்கிறான்.
ஹுதைபிய்யாவில் முஸ்லிம்கள் உம்ரா செய்ய முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இது பார்ப்பதற்கு தோல்வி போலத் தெரிந்தது.
ஆனால், இந்தத் தற்காலிகத் தடையால்தான் அரபு தீபகற்பத்தில் அமைதி நிலவியது. போர் அச்சம் நீங்கியதால், மக்கள் நிதானமாக இஸ்லாத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர்.
ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் முஸ்லிம்களை ஒடுக்குவது போல இருந்தன.
"மக்காவிலிருந்து தப்பி வரும் முஸ்லிம்களைத் திருப்பி அனுப்ப வேண்டும்" என்ற நிபந்தனை பெரும் பலவீனமாகத் தெரிந்தது.
ஆனால், திருப்பி அனுப்பப்பட்ட தோழர்கள் (அபூ பஸீர் ரலி போன்றோர்) மக்காவிற்கு வெளியே ஒரு தனிப் படையை உருவாக்கி குறைஷிகளின் பொருளாதாரத்தை முடக்கினர். இறுதியில், குறைஷிகளே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "தயவுசெய்து அவர்களை மதீனாவிலேயே சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சும் நிலை உருவானது. பலவீனம் என்று நினைத்தது மாபெரும் பலமாக மாறியது.
எந்த இடத்திலிருந்து முஸ்லிம்கள் தடுத்துத் திருப்பி அனுப்பப்பட்டார்களோ, அதே இடம்தான் இரண்டு ஆண்டுகள் கழித்து மக்காவை வெற்றி கொள்ள நுழைவு வாயிலாக அமைந்தது.
ஹுதைபிய்யாவில் காட்டிய பொறுமைதான், மக்கா குறைஷிகளின் கர்வத்தை உடைத்தது. எவ்வித இரத்தச் சிதறலுமின்றி 10,000 வீரர்களுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தபோதுதான், "அன்று அல்லாஹ் சொன்ன அந்தத் தெளிவான வெற்றி இதுதான்" என்பதைத் தோழர்கள் உணர்ந்தார்கள்.
ஒரு அம்பைச் செலுத்த வேண்டுமென்றால், அதை முதலில் பின்னோக்கி இழுக்க வேண்டும். அதுபோலவே, உங்கள் வாழ்வில் ஏற்படும் பின்னடைவுகள் உங்களை உயரத்தில் செலுத்துவதற்காக அல்லாஹ் செய்யும் ஏற்பாடாகும்.
உங்களால் ஒரு முடிவை மாற்ற முடியாதபோது, அல்லாஹ்வின் திட்டத்தில் நம்பிக்கை வையுங்கள்.
அல்லாஹ் ஒருபோதும் தன் அடியார்களுக்குக் கெடுதியை நாடுவதில்லை. ஒரு கதவை அவன் அடைக்கிறான் என்றால், அவன் நமக்காக மிகச்சிறந்த ஒரு மாளிகையையே தயார் செய்து வைத்திருக்கிறான் என்று பொருள்.
"உங்களுக்கு ஒரு காரியம் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அதில் உங்களுக்கு நலம் இருக்கலாம்." (அல்குர்ஆன் 2:216)
4️⃣ சமாதானம் பெரிய வெற்றி
இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை நமக்குக் கற்றுத்தரும் மிக முக்கியமான பாடம் "சமாதானம் என்பது பலவீனம் அல்ல, அதுவே மிகப்பெரிய வெற்றி" என்பதாகும்.
போர் என்பது அழிவைத் தரும், ஆனால் சமாதானம் ஆக்கபூர்வமான மாற்றத்தைத் தரும். ஹுதைபிய்யாவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாள் ஏந்திப் போர் செய்யத் துணிந்திருந்தால், இரு தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் சமாதானத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதால், எவ்வித இரத்தச் சிதறலுமின்றி இஸ்லாம் மக்களின் இதயங்களைச் சென்றடைந்தது.
போர் நடக்கும் காலத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வெறுப்பும், அச்சமுமே இருக்கும். ஆனால் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு:
மக்கள் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
முஸ்லிம்களின் நற்பண்புகளையும், நேர்மையையும் எதிரிகள் நேரடியாகக் கண்டனர்.
இதனால் இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதல்கள் நீங்கி, மக்கள் தாமாகவே முன்வந்து இஸ்லாத்தை ஏற்றனர்.
சமாதானம் என்பது எதிரியின் கர்வத்தை அன்பால் உடைப்பதாகும். விட்டுக்கொடுத்தல் பண்பு, மக்கா குறைஷிகளின் கடுமையான இதயங்களைக் கூட மென்மையாக்கத் தொடங்கியது.
இஸ்லாத்தின் மிகக் கொடிய எதிரிகளாக இருந்தவர்கள் கூட, இந்தச் சமாதானக் காலத்தில்தான் இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.
சமாதானத்திற்காகத் தன் உரிமையை விட்டுக்கொடுப்பவர் பலவீனமானவர் அல்ல; அவர் அல்லாஹ்வின் பார்வையில் உயர்ந்தவர்.
ஆயுதங்கள் செய்ய முடியாததை அமைதி செய்யும்.
ஒரு சமூகத்தின் அல்லது ஒரு தனிமனிதனின் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. தேவையற்ற சண்டைகளைத் தவிர்த்து, சமாதானத்தை முன்வைப்பதே உண்மையான இஸ்லாமிய வழிமுறை.
"உங்களுக்கு ஒரு காரியம் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அதில் உங்களுக்கு நலம் இருக்கலாம்." (அல்குர்ஆன் 2:216)
5️⃣ நபி ﷺ அவர்களின் வழி
நபி ﷺ அவர்கள் பொறுமை ஞானம் அமைதி இதன் மூலம் உலகத்தை மாற்றினார்கள்.
நபி ﷺ அவர்கள் காட்டிய வழி என்பது வெறும் போதனைகள் மட்டுமல்ல, அது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வெற்றி பெறுவதற்கான ஒரு முழுமையான வழிகாட்டியாகும்.
ஹுதைபிய்யா சம்பவத்தின் மூலம் நபி ﷺ அவர்கள் நமக்குக் கற்றுத்தந்த சில முக்கிய வழிமுறைகள் (ஸுன்னத்துகள்) இதோ:
1. தலைமைத்துவத்திற்கு கீழ்ப்படிதல் (Obedience)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ﷺ அவர்கள் காட்டிய வழியில் முதன்மையானது தலைமைக்குக் கட்டுப்படுவது. ஹுதைபிய்யாவில் உடன்படிக்கையின் நிபந்தனைகள் கடினமாக இருந்தபோதும், நபி ﷺ அவர்களின் கட்டளைக்குத் தோழர்கள் இறுதியில் முழுமையாகக் கீழ்ப்படிந்தனர். இதுவே அந்த சமூகத்தின் ஒற்றுமைக்கும் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
2. அமைதிக்கும் சமாதானத்திற்கும் முன்னுரிமை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ﷺ அவர்கள் எப்போதும் போரைத் தவிர்க்கவே விரும்பினார்கள். "எதிரிகளைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்; ஆனால் போர் வந்துவிட்டால் பின்வாங்காதீர்கள்" என்பது அவர்களின் வழி.
பிடிவாதம் விட்டு விட்டு சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடம் கொடுப்பது.
3. பெண்களின் கருத்துக்கு மதிப்பளித்தல்
தோழர்கள் கவலையில் இருந்தபோது, அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் ஆலோசனையை ஏற்று நபி ﷺ அவர்கள் செயல்பட்டார்கள். இது குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் அறிவுத்திறனுக்கும், ஆலோசனைக்கும் நபி ﷺ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
4. நிதானமும் தூரநோக்குப் பார்வையும்
உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது நபி ﷺ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியல்ல.
உமர் ரலியல்லாஹு அன்ஹு போன்ற தோழர்கள் ஆவேசப்பட்டபோது, நபி ﷺ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிதானத்தைக் கடைப்பிடித்தார்கள்.
தற்போதைய அவமானத்தை விட, வருங்கால வெற்றியை நோக்கியே அவர்களின் திட்டங்கள் அமைந்தன.
5. அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை (தவக்குல்)
எல்லா வழிகளும் அடைக்கப்பட்டதாகத் தெரிந்தபோதும், "நிச்சயமாக அல்லாஹ் என்னைக் கைவிடமாட்டான்" என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார்கள். இதுதான் ஒரு முஃமினின் உண்மையான வழி.
நபி ﷺ அவர்களின் வழி காட்டல் என்பது வெறும் ஏட்டிலுள்ள வரிகள் அல்ல; அது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு தரும் நடைமுறை வழிமுறை. ஹுதைபிய்யாவில் அவர்கள் காட்டிய பொறுமை, சமாதானம் மற்றும் விட்டுக்கொடுத்தல் ஆகிய பண்புகளை நாம் கடைப்பிடித்தால், தோல்வி போலத் தெரியும் நம் வாழ்வின் சோதனைகளும் மாபெரும் வெற்றியாக மாறும்.
"நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது." (அல்குர்ஆன் 33:21)
இன்று நாம் சிந்தித்த ஹுதைபிய்யா வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்: "வெற்றி என்பது எப்போதும் நாம் நினைத்த வழியில் வருவதில்லை; அது அல்லாஹ் நாடிய வழியில் மட்டுமே வரும்."
புறக்கண்ணுக்குத் தோல்வியாகத் தெரிந்த ஒரு ஒப்பந்தத்தை அல்லாஹ் 'தெளிவான வெற்றி' என்று அறிவித்ததற்குக் காரணம், அதில் இருந்த சமாதானம், பொறுமை மற்றும் நபி ﷺ அவர்களின் தீர்க்கதரிசனமான வழிமுறை ஆகும்.
நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் நாம் விரும்பியது கிடைக்காமல் போகலாம், அல்லது சில கதவுகள் அடைக்கப்படலாம். அப்போது நாம் ஹுதைபிய்யா சம்பவத்தை நினைவுகூர வேண்டும்.
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فَتْحًا مُبِينًا
"யா அல்லாஹ்! நபி ﷺ அவர்களுக்கு வழங்கிய அந்தத் தெளிவான வெற்றியைப் போல, எங்களுடைய மார்க்க மற்றும் உலக விஷயங்களிலும் எங்களுக்குத் தெளிவான வெற்றியைத் தந்தருள்வாயாக!"
யா அல்லாஹ்! எங்களுடைய கஷ்டங்களை நீக்கி, அதன் மூலம் எங்களுக்குப் பேரருளைத் தந்தருள்வாயாக!
"எங்கள் அறிவுக்கு எட்டாத உனது மேலான திட்டங்களை ஏற்றுக்கொண்டு, அதன் மீது திருப்தி கொள்ளும் மனப்பக்குவத்தை (ரிளா) எங்களுக்குத் தந்தருள்வாயாக!"
யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்களில் அமைதியையும் (ஸகீனா), ஈமானில் உறுதியையும் (இஸ்திகாமத்) தந்தருள்வாயாக!
"ஹுதைபிய்யா மரத்தடியில் வாக்குறுதி அளித்த தோழர்களை நீ பொருந்திக் கொண்டதைப் போல, உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அடியார்களாக எங்களை ஆக்கி, உனது பொருத்தத்தைப் பெறச் செய்வாயாக!”ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக