நீண்ட நாள் வாழவேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும். ஒரு குழந்தை பிறந்தவுடன் அதிக ஆயுளுடன் வாழ்ந்திடப் பிரார்த்திப்பதும், திருமணத் தம்பதிகளை வாழ்த்தும் போதும் 'சகல சுகங்களுடன் பல்லாண்டுகள் வாழ்க' என்று வாழ்த்துவதும் வழமையில் உள்ளது.
திடீர் மரணம் ஏற்பட்டால் வருந்துகிற அதே நேரம் முதுமை கண்டவர் இறந்து விட்டால், நிறை வாழ்வு கண்டுவிட்டு, மனிதர் நிம்மதியாய்ச் சென்று விட்டார் என்றே சமூகம் பேசுகிறது. அதிக நாட்கள் வாழ்வது மட்டும் வெற்றியல்ல. அவ்வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமைவதே முழு வெற்றியாகும்.
"சிறந்த மனிதர் யார்?” என்று முஹம்மது அவர்களிடம் வினவப்பட்டபோது. "நீண்ட காலம் வாழ்ந்து நற்செயல் புரிந்தவரே மனிதரில் சிறந்தவராவார்" என்று கூறினார்கள். வினா தொடர்ந்தது. "தீய மனிதர் யார்?" தீய செயல் புரிந்து அதிக காலம் வாழ்பவரே தீய மனிதர் என்று நபி அவர்கள் பதில் வழங்கினார்கள்.
சீசன் காலம்
வியாபாரிகளுக்கு பண்டிகை, திருவிழாக்கள் சீசன் காலமாக அமைகின்றன. விவசாயிகளுக்கு நாற்று பாவுகின்ற மழை காலம் சீசன் காலமாகத் திகழ்கின்றது. ஆனால் முஸ்லிமுக்கு வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் சீசன் காலம் தான்.
"மரணம் வரும் முன் உங்கள் வாழ்வைப் பொக்கிஷமாய்க் கருதிக் கொள்ளுங்கள்" என்பது நபிமொழி.
தன்னை மறந்த மனிதன்
வயது கூடக் கூட தன்னை சார்ந்துள்ளவர்களைப் பற்றிய கவலை மனிதனுக்கு அதிகமாக வருகிறது. பிள்ளைகளுக்கு இன்னும் நிறைய சொத்து சேர்க்க வேண்டி யுள்ளதே.. வயது போய்க் கொண்டேயுள்ளதே. என்று பரிதவிப்பார். இவ்வாறு மற்றவர்களைப் பற்றிய கவலையில் பலர் தங்களை மறந்துவிடுவார்கள். குடும்பத்துக்காக என்ன சேமித்தாய் என்று கவலைப்பட்டு தொழுகையை மறந்த மானிடனே.. உனக்காக என்ன சேமித்தாய்? என்றால் பதில் ஏமாற்றம் தான்.
மண்ணுலகைக் கடந்தால் மண்ணறை மண்ணறையைக் கடந்தால் மஹ்ஷர் பெருவெளி மஹ்ஷரைக் கடந்தால் சுவனம் அல்லது நரகம்
இந்தப் பெரும் பயணத்திற்கான ஆயத்தகளம் தான் உலக வாழ்வாகும்.
இத்தனை வருடங்கள் வாழ்ந்தும் ஏன் நல்லுணர்வு பெறவில்லை என்ற வினா வை மறுமையில் சந்திக்க நேரிடும்.
اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ
"நல்லுணர்வு பெறக் கூடியவன் நல்லுணர்வு பெறுவதற்கான போதுமான வாழ்நாளை உங்களுக்கு நாம் வழங்கவில்லையா? (அல்குர்ஆன் 35-37) என்று நரகவாசிகளை நோக்கி விசாரிக்கப்படும் என்பது குர்ஆன் கூற்றாகும்.
வயது அதிகமாகும் போது உழைப்பு. சம்பாத்தியத்திறன். சமூகத்தைப் புரிந்து கொள்ளுதல், பொருளாதார ஞானம் போன்ற பலவற்றில் நிபுணத்துவம் கூடுகிறது. ஆனால் தீன், மறுமை, கேள்வி கணக்கு இவற்றில் மட்டும் அப்பாவியாக இருந்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? கியாமத் நாளில் அறுபது வயதுக்காரர்கள் எங்கே? என்று அறிவிப்பு கேட்கும்" என்று திருநபி அவர்கள் கூறினார்கள்.
(இப்னுகதீர்)
காரணம் 60-வயது வரை வாழ்ந்தும் மறுமைக்காக சுதாரித்துக் கொண்டார்களா அல்லது கோட்டைவிட்டு விட்டார்களா? என்பதை வெளிப்படுத்தத்தான்.
உலக ஓட்டத்தில் தன் சுயத்தை இழந்து. உலகே கதியென மாறி, தவணை முடிகிறபோது தடுமாறி நிற்கும் அவலம் வந்துவிடக் கூடாது.
அலெக்ஸாண்டரின் ஆசை
மாவீரன் அலெக்ஸாண்டரைப் பற்றி ஒரு செய்தி சொல்லப்படுவதுண்டு. எனது வெற்றிக்கு முன் இந்த உலகம் ரொம்ப சிறியது என்று மார்தட்டிய அலெக்ஸாண்டர் தனது மரணத் தருவாயில் சொன்னார். "நான் இறந்து, என்னைச் சவப் பெட்டியில் சுமந்து செல்லும்போது எனது இரு கரங்களையும் தொங்க விட்டவாறு தூக்கிச் செல்லுங்கள்" என்று. உடனிருந்தவர்கள் காரணம் கேட்க, "தான் படை திரட்டி வெல்ல இந்த பூமிப் பந்து போதாது என்று கூறிய மன்னன் அலெக்ஸாண்டர் கூட இறந்த பிறகு வெறும் கையோடு தான் உலகை விட்டுச் செல்கிறான் என்று மற்ற
மனிதர்கள் விளங்கிக் கொள்ளட்டும்" என்றார்.
நாலு கால் கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம்
நாலுபேர் தூக்கையிலே நிரந்தரத் தூக்கம்.
என்பது போல இருந்த காலத்தையெல்லாம் வீணாய்க்கழித்து விட்டு, ரூஹ் அடங்கும் போது முட்டி மோதுவதில் எந்த பயனுமில்லை.
அமெரிக்க மருத்துவரின் மாற்றம்
அமெரிக்காவில் பிரபலமான முஸ்லிம் மருத்துவர் இருந்தார். முன் அனுமதி மின்றி அவரைப் பார்க்கவே முடியாது. அந்த அளவு பரபரப்பானவர் இந்திய தப்லீக் குழு ஒன்று அவரைச் சந்திக்க விழைந்தது. முன் அனுமதி இல்லாமல் மருத்துவரைச் சந்திக்க முடியாது என்று அவரைச் சார்ந்தவர்கள் சொல்ல, ஜமாஅத் அமீர் கனிவு டன் கூறினார். "இன்ஷா அல்லாஹ் முன் அனுமதி பெற்றுச் சந்திக்க முயற்சிக் கிறோம். ஆனால் உயிரைக் கைப்பற்ற வானவர் வரும்போது முன் அனுமதி கேட்க மாட்டார்கள்"
இந்த ஒரு வாசகம் மருத்துவரைப் புரட்டிப்போட்டது. அவர் தெளிவடைந்து விட்டார், மறுமைக்குத் தயாராக நாட்டம் கொண்டார். மூச்சு நின்றவுடன் அமலுக் கான வாசல் அடைபட்டுவிடும். தொழுகை, நோன்பு போன்ற எந்த வழிபாடு களுக்கும் வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தார்.
மறுமையின் சொத்து
ஒரு மண்ணறை அருகே நடந்து சென்ற நபி அவர்கள் தோழர்களிடம். "இங்கு அடக்கம் செய்யப்பட்டவர் யார் தெரியுமா?" என்று விசாரித்தார்கள். 'இன்ன மனிதர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளார்' என்று தோழர்கள் கூற 'நீங்கள் சேர்த்து வைத்துள்ள சொத்து சுகங்களை விட இரண்டு ரக்அத் தொழுவது இந்த மனிதருக்கு மேலானது' என்று நபி அவர்கள் கூறினார்கள். (நூல்: தப்ரானீ)
மரணித்த பிறகு அமல்கள் தான் பேசும். தங்கம், வெள்ளி நாணயங்களுக்கு மதிப்பில்லை. நாம் பெரிதாய்க் கருதி சேமித்து வைத்துள்ள செல்வத்தை விட இரண்டு ரக்அத் தொழுகையே மரணித்த பின்பு பெரிய செல்வமாகும்.
அல்லாஹ் வழங்கிய ஆயுளை அவனுக்கு உவப்பான வழியில் பயன்படுத்துவதே அறிவுடைமை ஆகும். எவருக்கேனும் அல்லாஹ் நன்மையை நாடினால்
அவரைப் பயன்படுத்திக் கொள்வான்" என்று நபி அவர்கள் கூறியபோது. இறைத்தூதரே! பயன்படுத்துதல் என்றால் என்ன.? என்று தோழர்கள் விளக்கம் கேட்டார்கள்.
அந்த மனிதர் மரணிக்கும் முன்பாகவே நல் அமல்கள் செய்வதற்கு அல்லாஹ்
உதவி செய்வான் என்று நபி அவர்கள் விடை தந்தார்கள்.
உலக வாழ்வு என்பது சொர்க்கத்து வெற்றியின் பந்தயக் களம் ஆகும்.
வயது என்ற மணித்துளிகளை மண்ணாக்கிடாமல் மறுமையின் மகரந்தமாக்கு வதே மனித அறிவின் அடையாளமாகும்.
கா.அஹ்மத் அலி பாகவீ,
உத்தமபாளையம், தேனி மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக