திங்கள், 11 ஜூலை, 2011

இது ஓர் இலவச எச்சரிக்கை!




தமிழக மக்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். மக்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து ஆட்சியாளர்களுக்கும் ஆனந்தம்தான். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாமோ இல்லையோ வோட்டுகளை அள்ளலாம் என எண்ணிக் கொண்டு இலவசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சிதான் மாறியுள்ளதே தவிர, காட்சி ஒன்றும் மாறவில்லை.
 ஆமாம், அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் பை நிறைய அரிசியை பெற்றுச் செல்கின்றனர். பட்டப்படிப்பை முடித்துவிட்டால் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு அரை பவுன் தங்கமும், கல்யாணச் செலவுக்கு ரூ.50 ஆயிரமும் என கை நிறைய கிடைத்து விடுகிறது.
 அடுத்து, செப்டம்பரில் இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் என தாய் வீட்டுச் சீதனம்போல வரிசையில் வரப் போகிறது. கர்ப்பிணிகளுக்கு ரூ. 12 ஆயிரமும் கிடைக்கப் போகிறது.
 எல்லாமே தாய்க்குலத்துக்குத்தானா என எண்ண வேண்டாம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் வருகிறது இலவச லேப்-டாப். வயல்காடுதான் வாழ்வு என்று இருப்பவர்களுக்கு ஆடு, மாடு, கோழி வரப்போகிறது. பிறகென்ன, மக்களுக்குக் கொண்டாட்டம்தானே!
 அது சரி, இப்போது மக்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், இப்படி இலவசங்ளை வாரி வழங்கும் ஆட்சியாளர்களுக்கு எதிர்காலத்தில் பெரும் திண்டாட்டம் என்பதுதான் கடந்தகாலத் தேர்தல் அறிவித்துள்ள பாடம். அந்தப் பாடத்தை இந்த ஆட்சியாளர்கள் படித்தது போலத் தெரியவில்லை.
 கடந்த ஆட்சியிலும் பெண்ணின் திருமணத்துக்கு நிதி கொடுத்தார்கள். கர்ப்பமடைந்த பின்பு ஊட்டச்சத்துக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தார்கள். இரண்டு குழந்தைகளும் பெண்ணாகப் பிறந்துவிட்டால் அதற்கும் வைப்புத் தொகை அளித்தார்கள். குடும்பத்தைக் கட்டிக் காக்க ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்தார்கள். சமைக்க இலவச சிலிண்டரும், எரிவாயும் கொடுத்தார்கள். பொது அறிவைப் பெருக்க இலவச டி.வி. கொடுத்தார்கள். இப்படி என்னென்னவோ கொடுத்தார்கள்.
 இறுதியில் வோட்டைக் கேட்டு பணமும் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் இலவசமாகப் பெற்றுக் கொண்டவர்கள், பணத்தைக் கொடுத்து கேட்ட வோட்டை மட்டும் கொடுக்காமல் "டிமிக்கி' கொடுத்து விட்டார்கள்.
 அண்மையில் தனியார் கல்லூரி, மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், இந்தப் பாடம்தான் பளிச்சிடுகிறது. அதிமுக ஆட்சியின் (இலவச) திட்டங்களுக்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர் மக்கள். ஆனால், அதேவேளையில் மக்களின் அடிப்படைப் பிரச்னைகளான மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு இந்தத் திட்டங்கள் எதுவும் மாற்றாக அமையாது என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
 கடந்த ஆட்சியில் மக்களை வாட்டி வதைத்த அந்த மூன்று முக்கிய பிரச்னைகளும் இன்றும் நீடிக்கின்றன. தீர்வு இல்லை. புதிய ஆட்சியால் அந்த மூன்று முக்கிய பிரச்னைகளுக்கும் உடனடியாகத் தீர்வுகாண முடியாதுதான். அது மின்சாரத் தட்டுப்பாட்டுக்கும், வேலைவாய்ப்பின்மைக்கும் பொருந்துமே தவிர, விலைவாசி உயர்வுக்குப் பொருந்தும் எனக் கூற முடியாது.
 மின் உற்பத்தியும், வேலைவாய்ப்பும் நீண்டகாலத் திட்டங்கள் என்பதை மக்கள் அறிவர். ஆனாலும் தீர்வுக்கான திட்டங்கள் தேவை.
 மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அவரவர் விருப்பம்போல விலை வைத்து விற்பனை செய்கின்றனர். உற்பத்தி குறைவு, தட்டுப்பாடு போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், அவையெல்லாம் உண்மைதானா அல்லது பேராசைக்காரர்கள் பதுக்கிவைத்துக் கொண்டும், ஊக பேரத்தாலும் செயற்கையாக விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்களா என்பது சாமானிய மக்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது. எத்தனை இலவசங்கள் கொடுத்தாலும் சாமானியனை அன்றாடம் பாதிக்கும் இந்த விலைவாசிப் பிரச்னைக்கு எப்போதுதான் தீர்வு?
 அரசின் இலவசத் திட்டங்களுக்கு அமுதசுரபியாக இருக்கும் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை அதிகரித்துள்ளது, சமச்சீர் கல்வி அமல் ரத்து போன்றவற்றால் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
 இலவசங்களை இரண்டு கைகளாலும் பெற்றுக்கொள்ளும் மக்கள், தங்களைப் பாதிக்கும் பிரச்னைகளில் எவ்வித சமாதானமும் செய்து கொள்வதில்லை என்பதுதான் இந்தக் கருத்துக் கணிப்பு சொல்லும் பாடம்.
 ஆக மொத்தத்தில் இலவசங்களைக் கொடுக்கும்போது முகம் மலர பெற்றுக்கொள்ளும் "திருவாளர் பொதுஜனம்' தனது காரியங்களில் கணக்காகத்தான் இருக்கிறார் என்பது தெளிவு.
 எத்தனை இலவசங்களைக் கொடுத்தாலும், 2016-ல் மக்களிடம் செல்லும்போது அவை எடுபடாது. இன்று மக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும். அதுமட்டுமன்றி, இன்னும் 5 ஆண்டுகள் கழித்து மக்கள் எதிர்கொள்ளும் புதிய பிரச்னைகளுக்கும் தீர்வுக்கான திட்டத்துடன் மக்களிடம் சென்றால்தான் வோட்டுப் போட்டு மாலை சூடுவார்கள் அல்லது வேட்டு வைத்து விரட்டி விடுவார்கள் என்பதுதான் 2011 கற்றுத்தந்த பாடம் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இது ஓர் இலவச எச்சரிக்கை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக