சனி, 16 ஜூலை, 2011

நிதானமின்மை - பிழையான அணுகுமுறை இஸ்லாம் விரும்பாதவை!

இஸ்லாம் எவ்வாறு சாந்தி, சமாதானமானதோ அவ்வாறே அதன் சகல சட்டங்களும், கோட்பாடுகளும் சாந்தமானவைகளாகும். குறிப்பாக இஸ்லாம் கடினப்போக்கையும் தீவிரவாதத்தையும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இன்று பொதுவாகவே சகல மட்டங்களிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளின் பின்னணி நிதானமின்மையும் அதனைத் தீர்ப்பதில் கடைப்பிடிக்கும் பிழையான அணுகுமுறைகளுமாகும்.
எனவே எதிலும் மென்மையான போக்கைக் கடைப் பிடிப்பதானது இஸ்லாம் எமக்கு சொல்லித்தரும் அரிய உபதேசமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ‘மிருதுவான தன்மையைப் பற்றிப்பிடியுங்கள். கடினப் போக்கையும் தீய வார்த்தைகளையும் உங்களுக்கு எச்சரிக்கின்றேன். மிருதுவான தன்மை எந்தக் காரியத்தில் இருப்பினும் அதனை அல்லாஹ் அழகுபடுத்திப் பூரணப்படுத்துவான். எந்தக் காரியத்தில் இல்லாது போகுமோ அதனை அல்லாஹ் குறையானதாக ஆக்குவான் (நூல்: முஸ்லிம்)
பிறிதொரு முஸ்லிமின் அறிவிப்பிலே யார் மிருதுவை இழக்கின்றாரோ சகல நலவுகளையும் அவர் இழந்துவிட்டார் என்றும் வந்துள்ளது.
எமது குடும்பம், தொழில், பிள்ளை வளர்ப்பு, நிர்வாகம் ஆகிய அனைத்திலேயும் இந்த உபதேசத்தை செயல்படுத்துவோமேயானால் எப்பிரச்சினையும் எதிர்நோக்காது. மட்டுமின்றி எப்பிரச்சினையையும் சாதிப்பதற்கும் ஏதுவாகும்.
கல்நெஞ்சம் படைத்த அரேபியர்களிடத்தில் புனித தஃவாப் பணியை மேற்கொள்ளவும் அவர்களை இஸ்லாமிய சட்டங்களை சிரமேற்று செய்யவும் பழக்குவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் காணப்பட்ட மிருதுவான பண்புகளே காரணம் என்பதை அல்- குர்ஆன் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது. (நபியே) நீங்கள் அல்லாஹ்வின் அருளின் காரணமாக அவர்களுடன் மிருதுவாக நடக்கின்aர்.
(மாறாக) கடுப்பான சொல் பேசுபவராகவும் கடின இதயமானவராகவும் இருந்திருப்பீரேயானால் உங்களை விட்டும் களைந்து சென்றிருப்பார்கள். எனவே அவர்களை மன்னித்து அவர்களுக்காக மன்னிப்பும் கோருவீராக (அல்குர்ஆன்- ஆலுஇம்ரான்: 159)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய பண்பே அந்த அரேபியர்களை அன்னாரின் சொல்லுக்குள் கட்டுண்டு வரச் செய்தது என்றால் மிகையாகாது. ஒரு ஹதீஸிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹுதஆலா மிருதுவானவன். அவன் மிருதுவையே விரும்புகிறான். இன்னும் கடினமான தன்மைக்குக் கொடுக்காத (நன்மை, சக்தி முதலிய) வைகளை மிருதுவான தன்மைக்குக் கொடுத்து வைத்துள்ளான்.
அதனை வேறு எத்தன்மைகளுக்கும் அவன் கொடுக்கமாட்டான் (முஸ்லிம்). மிருதுவாகப் பேசி இரண்டு வார்த்தைகளால் திருத்த முடியுமான எமது குழந்தைகள், பணியாட்கள் முதலியவர்களைத் திருத்துவதற்காக நாம் இரும்புக் கரங்களைப் பயன்படுத்தும்போது பிரச்சினைகள் மேலும் பூதாகரமாக மாறுவதை இன்றுநாம் காண்கிறோம். சில்லறை விடயங்களை முகம் கொடுப்பதில் ஏற்படும் குடும்ப வாழ்க்கைப் பிரச்சினைகள் காழிக்கோர்ட்டுவரை செல்கின்றதை அவதானிக்கலாம்.
ஏககாலத்தில் பல மனைவியர்களுடன் எவ்வளவு அற்புதமாக நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்? தவிர சக்களத்திப் பிரச்சினைகளை எவ்வளவு சுமுகமாக முகம் கொடுத்துள்ளார்கள்? என்பதனை வரலாற்று நூல்களில் சாதாரணமாகக் காணலாம். அதுமட்டுமின்றி மனைவியர்களுடன் மிக சிறப்பாக நடந்துகொள்கிறேன் என்பதனையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். உங்களில் சிறந்தவர் உங்களில் யார் மனைவியர்களிடம் சிறந்தவராக இருக்கின்றாரோ அவராகும், நான் உங்கள் அனைவரைக்காட்டிலும் மனைவிமாருடன் சிறந்தவனாக நடப்பவனாகும்.
அவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பணியாட்களுடன் மிகப் பண்பாகவும் அன்பாகவும் நடப்பவர்களாக இருந்துள்ளார்கள். பத்து வருடங்கள் அன்னாருக்குப் பணிவிடை புரிந்த ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே கூறுகிறார்கள். ''நான் செய்த ஒரு காரியத்தை விமர்சித்து ஏன் இப்படி செய்தாய்? என்றோ செய்யாத ஒன்றிற்காக ஏன் செய்யவில்லை என்றோ ஒருபோதும் கேட்டதில்லை.'' ஆனால் இன்று பணியாட்கள் சிறு தவறுகள்விடும்போது அடிப்பதும் வேலையை விட்டும் நிறுத்துவதும் சாதாரணமாக உள்ளது.
தவறுகளை நிதானமாக, மரியாதையான முறையில் சுட்டிக்காட்டப்படும்போது தவறு செய்தவரும் திருந்தும் மனநிலையைப் பெறுவார். சில தவறுகள் முறைதவறி சுட்டிக்காட்டப்படும்போது குற்றவாளிக்கு அத்தவறின் மீதுள்ள பயமும் வெட்கமும் எடுபட்டு பகிரங்கமாக அதனை செய்ய முனைவார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் தொழுகையில் ஒரு மனிதர் தும்மவே முஆவியா இப்னுல்ஹகம் (ரளியல்லாஹு அன்ஹு) என்பவர் யர்ஹமுகல்லாஹ்என்று கூறினார்.
ஏனைய ஸஹபாக்கள் இவரை (தொழுகையில் பேசுகிறாரே என்று) முறைத்துப்பார்த்தனர். மீண்டும் ஹஸ்ரத் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு உங்களுக்கு என்ன நேர்ந்தது, என்னை இப்படிப் பார்க்கின்aர்கள் என்று பேசவாரம்பிக்கவே தோழர்கள் தமது கைகளை தொடையில் அடித்து மெளனமாக இருக்கும்படி சைகையினை செய்தார்கள். தொழுது முடித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் பக்கம் திரும்பினார்கள்.
என்னை அதற்றவோ அடிக்கவோ ஏசவோ இல்லை. அவரைவிட கற்பிப்பதில் அழகிய முறையை கையாள்பவராக அதற்கு முன்போ பின்போ வேறு யாரையும் நான் காணவில்லை. என்னிடம் தொழுகையில் பேச்சுக்கள் பேசுவது பொருத்தமில்லாததாகும். ஏனெனில் தொழுகை என்பது இறை புகழ்ச்சியும் அவனின் தக்பீரும், திருவசனங்கள் ஓதுவதுமேயாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள். (முஸ்லிம், அபூதாவூத்)
பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒரு கிராமப்புறத்து அரபி பள்ளிவாசலுக்குள் சிறு நீர் கழிக்கவே அவரை ஸஹபாக்கள் அதற்றினர். உடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (கழித்து முடியட்டும்) விட்டுவிடுங்கள். ஒரு நீர் வாளியை ஊற்றி விடுங்கள். நீங்கள் (காரியங்களை) இலகுபடுத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளார்களேயன்றி சிரமப்படுத்தவல்ல என்று பகர்ந்தார்கள். (புகாரி)
மன்னிக்கும் மனப்பான்மையுடன் பிறர் உணர்வுகளை மதித்து செயற்படும்போது இவ்வழகிய பண்பு எமக்குள் கலந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக