திங்கள், 11 ஜூலை, 2011

தேவை முதியோர் பாதுகாப்பு!





முதியோர்களின் ஆதரவற்ற நிலையைக் கருத்தில்கொண்டும், உழைக்க முடியாத காலங்களில் முதியோர் அனைவரும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து மாதாந்திர உதவித்தொகையை வழங்கி வருகின்றன.
தொடக்கத்தில் மத்திய அரசு ரூ. 200-ம், மாநில அரசு ரூ. 100-ம் என மொத்தம் ரூ. 300 வழங்கப்பட்டு வந்தது. கடந்த திமுக ஆட்சியில் இந்தத் தொகை ரூ. 500-ஆக உயர்த்தப்பட்டது. மாநிலம் முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
ஆனால், புதிதாகப் பொறுப்பேற்ற அதிமுக அரசு மாதம் ரூ. 500-ஆக இருந்த உதவித் தொகையை ரூ. 1,000-ஆக உயர்த்தி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்த மற்ற திட்டங்களுக்கான வரவேற்புப் பற்றி உடனடியாகத் தெரியாவிட்டாலும், முதியோர் உதவித்தொகை உயர்த்தப்பட்டதற்கு கூடுதல் வரவேற்புக் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.
தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பல கஷ்டங்களுக்கு இடையே நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர்களின் எண்ணிக்கையே இதற்கு உதாரணம்.
முதியோருக்குப் பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, வாரிசுகளால் கைவிடப்படும் முதியோருக்கு இந்தத் திட்டம் ஒரு மறுவாழ்வை ஏற்படுத்தும் என்பதே உண்மை.
மாவட்டத்துக்கு 50,000 என்ற அடிப்படையில் ஏறத்தாழ தமிழகம் முழுவதும் 15 லட்சம் பேர் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது வருவாய்த் துறையினரின் தகவல்.
ரூ. 500 உதவித் தொகை பெற்று வந்தவர்களில் சித்த மருத்துவர்கள் தவிர, 7 பிரிவின் கீழ் உள்ள பயனாளிகளுக்குக் கடந்த மாதம் முதல் ரூ. 1,000 உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பயனாளிகளின் வயது 65-ல் இருந்து 60-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித் தொகை கிடைப்பது சாத்தியமா? இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன என்பது குறித்து விசாரித்தால் சில கசப்பான தகவல்களே கிடைக்கின்றன. அரசின் விதிமுறைப்படி பார்த்தால் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களில் குறைந்த பட்ச விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர் வருவாய்த் துறையினர்.
இதுமட்டுமல்ல, இப்போது உதவித்தொகை பெற்று வருபவர்களும் சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று வருவாய்த் துறையினர் மறைமுகமாகக் கூறுகின்றனர்.
குறிப்பாக, ரூ. 5,000-க்குள் சொத்து மதிப்பு, விண்ணப்பதாரரின் பெயரில் எந்தச் சொத்தும் இருக்கக் கூடாது, விண்ணப்பதாரரின் மகன் அல்லது மகள் மூலம் எந்தவித உதவியும் கிடைக்கக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் உள்ளன.
இந்த நிபந்தனைகளை அதிகாரிகள் முறையாகக் கடைப்பிடித்தால் பெரும்பாலானோரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அரசின் நிபந்தனைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டால் மட்டுமே, விண்ணப்பித்தவர்களில் தேவையானோருக்கு உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆட்சியில் கட்சியினருக்கும், கட்சியினர் பரிந்துரைத்தவர்களுக்கும் விதிமுறைகளை மீறி முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டதாகப் புகார் உள்ளது. அப்படி இருக்கையில், வறுமைக்கோட்டுக்கு கீழ் என்ற நிலையில் இருப்பவர்களில் உதவித்தொகை கிடைக்காமல் ஒதுக்கப்படுவோர், தங்கள் பகுதியில் தகுதியில்லாமல் உதவித்தொகை பெற்று வருவோரைப் பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்து வாக்குவாதம் செய்ய வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொண்டால் இப்போது உதவித்தொகை பெறுவோரில் பெரும்பாலானோருக்கு சிக்கல் வரும்.
மேலும், மாதந்தோறும் ரூ. 1,000 என்பது கீழ்நிலையில் உள்ள முதியோருக்குப் பெரிய பொக்கிஷம் என்றே கூறலாம். இதனால்தான், இயற்கை உபாதைகளைகூட தாங்கிக் கொண்டு பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர்.
பல கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு விண்ணப்பித்தவர்களுக்கு "விதிமுறை' என்பதை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டால் அவர்களது கோபம் அரசின் மீதே திரும்பும்.
இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க "60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உதவித்தொகை' என அறிவித்து விடுவதே சிறந்தது. ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள், பல ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆகியோரை இந்தத் திட்டத்தில் இருந்து தவிர்த்து விடலாம். இப்படிச் செய்தால் அரசின் மீது எந்தவிதக் களங்கமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
முதியோர் உதவித்தொகை விஷயத்தில், அரசு "லாவகமாக'ச் செயல்பட்டால் மட்டுமே தங்கள் மீது வர இருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக