சனி, 16 ஜூலை, 2011

எக்காளக் குதிரைக்கு எப்போது கடிவாளம்?




பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் அண்மையில் வெளிவந்து மனதைப் பாதித்த செய்தி ஒன்று. தன் குழந்தையை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கத் துடித்த பஞ்சாலைத் தொழிலாளியின் மனைவி, கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தீக்குளித்து இறந்தார் என்பது.
 தெரிந்தவர்களிடமும், உறவினர்களிடமும் கெஞ்சிக்கூத்தாடிக் கடன் வாங்கியும் பள்ளி கேட்ட (கொள்ளைக்) கட்டணத்தில் பாதிகூட தேறாத நிலையில் அந்த ஏழைத்தாய் தன் இயலாமையால் தீக்கு தன்னையே இரையாக்கிக் கொண்டாராம். தன் மழலையின் கையில் கல்வி என்ற தீபத்தைத் தர இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தன்னையே தீப்பந்தமாக்கிய அந்தத் தாய், ஒரு கணம் யோசித்திருந்தால் இத் துயர நிலையை மாற்றியிருக்க முடியும்.
 தங்களால் பெற இயலாத நல்ல ஆங்கில அறிவையும், தரமான அறிவார்ந்த கல்வியையும் தங்கள் பிள்ளைகளுக்கு எப்பாடு பட்டாகிலும் தர வேண்டும் என அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினர் நினைக்கின்றனர். அதற்காகவே அவர்கள் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.
 எப்போதுமே பிரமாண்டங்களைப் பார்த்தே வாய் பிளப்போரின் பலவீனங்களை தனியார் பள்ளிகளும் சரியாகப் பயன்படுத்தி, காரியம் சாதித்துக் கொள்கின்றன.
 இதுபோன்ற பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்திருக்கிறோம் என்பதே மகிழ்ச்சியும், கர்வமும், கெüரவமும் கலந்ததாகத் தெரிகிறது அடித்தட்டு, நடுத்தர பெற்றோருக்கு. விளைவு, அப் பள்ளிகளின் வசூல் திருவிழா அமோகமாக ஆரம்பமாகிவிடுகிறது. கல்லா கட்டும் பேராசை களை கட்டத் தொடங்கிவிடுகிறது.
 வசதி படைத்தோருக்கு தனியார் பள்ளிகள் கேட்கும் கட்டணங்கள் ஒரு பொருட்டல்ல. ஆனால் ஏழை, நடுத்தரப் பெற்றோருக்கு முதலில் கனவாக இருந்து கைகூடுவதுபோலத் தெரியும் அது பின்னர் கானல் நீராகிவிடுகிறது.
 விளைவு, பள்ளிகள் கேட்கும் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் கடன் வாங்கி விழி பிதுங்கித் தவிப்பதும், பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு மன உளைச்சலுக்கு உள்ளாவதுமான சம்பவங்கள். அதன் உச்சக்கட்டம்தான், இன்னுயிர் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கேள்வியில் தன்னுயிர் மாய்த்துக் கொள்ளும் பெற்றோர் துயரம். இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 தனியார் பள்ளிகளின் துணிச்சலான கட்டணக் கேட்புக்கு முக்கிய காரணம் செல்வந்தர்களும், அரசு ஊழியர்களுமே. இவர்களில் அரசு ஊழியர்கள் அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் தனியார்மயத்தை முழுமூச்சுடன் எதிர்த்து ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளனர் என்பது எத்தகைய நகைப்புக்கிடமான முரண்பாடு!
 தனியார் பள்ளிகளில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் கல்வி, ஒழுக்கம், தனித்திறன் போன்றவற்றில் முதலிடம் பெறுவார்கள் என்பது அவர்கள் பதிலாக இருக்கும்.
 அண்மைக்காலமாக பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளே அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். மாநில அளவிலான இடங்களையும் பெறுகின்றனர். அதிக எண்ணிக்கையிலும் தேர்ச்சிபெறுகின்றனர். பல்வேறு தனித்திறன் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறுகின்றனர். ஆக, கல்வி, ஒழுக்கம், தனித்திறன் என எந்தவகையில் எடுத்துக் கொண்டாலும் தனியார் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளிகள் இளைத்ததாகத் தெரியவில்லை.
 ஆனாலும், அரசுப் பள்ளி என்றதும் முகச் சுழிப்புடனும், ஏளனத்துடனும் பார்ப்போரே அதிகம் உள்ளனர். காரணம் தனியார் பள்ளிகள் செய்துவரும் பல்வேறு "பில்ட்அப்'கள். நம்மிடமிருந்தே அதிக பணம் வசூலித்து அண்ணாந்து பார்க்கும் வகையில் கட்டடங்களைக் கட்டி, அதிக மதிப்பெண்களில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி என விளம்பரங்களையும் காட்டி தங்கள் லாபத்தை பல மடங்கு பெருக்கிக் கொள்கின்றன என்றால், தனியார் பள்ளிகளின் தனித்திறன்களை என்ன சொல்வது?
 பெற்றோரின் வேதனை புரிந்தோ, வேறு வழியின்றியோ இப்போதும் குறைந்த கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் சில இருக்கவே செய்கின்றன. ஆனால் பெரும்பான்மையானவை அதிகக் கட்டணம்தான் வசூலிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய பள்ளிகள் வெளியிடும் விளம்பரங்களில் தாங்கள் கல்விச் சேவை ஆற்றிவருவதாகக் குறிப்பிடுகின்றன. பெறுவதோ கொள்ளைக் கட்டணம், பெருமையோ சேவை ஆற்றுவதாக-இதுவும் புதுவகை கேலிக்கூத்துதான்.
 தணியாத பேராசையால் பெற்றோரைக் குப்புறத் தள்ளி குழியும் பறிப்பதுடன், எக்காளமிட்டுத் திரியும் "தனியார் பள்ளிகள்' என்ற குதிரைக்கு "நிர்ணயிக்கப்பட்ட நியாயமான கட்டணம்' என்ற உரிய கடிவாளத்தை அரசு உடனடியாகப் போட வேண்டும்.
 பெற்றோரும் தனியார் பள்ளிகளின் மீதே நம்பிக்கை வைத்து அவற்றை மட்டுமே நாடும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். அவர்கள் அரசுப் பள்ளிகளின் மீதும், தங்கள் குழந்தைகளின் கல்வி அறிவின் மீதும் நூறு சதவிகித நம்பிக்கை வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக