வியாழன், 16 ஜூன், 2011

அமெரிக்காவின் இன்னொரு முகம்! கலீல் பாகவீ






உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைச் சேர்ந்த நான், இரண்டாவது பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கு வந்திருப்பது இதுதான் முதல் முறை. தாராள அகலத்தில் சாலைகள், குப்பைகள் இல்லாத மிகச் சுத்தமான தெருக்கள், ஜொலிக்கும் தெரு விளக்குகள், பறந்து செல்லும் கார்கள் என எல்லாமே என்னை வாயடைக்கச் செய்தன. சிகாகோவின் ஓ'ஹாரே விமான நிலையத்திலிருந்து நான் தங்கியிருக்கும் இடம் வரையிலான 10 மைல் சாலைப் பயணத்தில், ஏதாவது ஓர் அப்பாவியாவது சாலையில் நடந்து செல்வார் என்று தேடித் தேடி தோற்றுத்தான் போக வேண்டியிருந்தது. எல்லாம் ஒரு கனவு மாதிரித் தோன்றியது.

இங்குள்ள சாலைகளைப் பார்த்து அரசையோ ஒப்பந்தக்காரரையோ சபிக்க வேண்டியதில்லை. எல்லாம் முகம் பார்க்கும் அளவுக்குப் பளிச்சென்று இருக்கின்றன. ஒரு குடிசையோ, ஒண்டுக் குடித்தனமோ என் கண்களுக்குத் தென்படவேயில்லை.

கிராமப்புறங்களுக்குக்கூட மிகத் தரமான சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. நகரத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமங்களிலும் உண்டு. இது கிராமம், இது நகரம் என்று பிரித்தறிவது கூடச் சிரமம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இங்கு எல்லோரிடமும் கார் இருக்கிறது. கார் வைத்துக் கொள்ளும் அளவுக்கு அனைவரும் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்களே என்று நான் நினைத்துக் கொண்டேன். நடந்து போவோரைக் காண்பதே அரிது. உண்மையில் இங்குள்ள சாலைகளில் நடந்து போவதற்கென தனிப் பாதையே கிடையாது.

கொஞ்சம் விசாரித்துப் பார்த்தபோது, 2007-ம் ஆண்டுக் கணக்குப்படி அமெரிக்காவில் 25.44 கோடி பயணிகளுக்கு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. அப்படியென்றால், அமெரிக்காவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் கார் வைத்திருக்க வேண்டும். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள்கள்கூட வைத்திருக்கலாம்.

இதை என்னால் நம்பவே முடியவில்லை. நாம் பார்த்த நகரம் தவிர, மற்ற பகுதிகள் வேறு மாதிரி இருக்கலாமோ என்கிற சிந்தனைகூட என் மனதில் ஓடியது. ஆனால், அது தவறு என்று பின்னர் தெரிந்தது. வாஷிங்டன் டி.சி, நியூயார்க் போன்ற பெரிய நகரங்களுக்கும் போஸ்டன், மிச்சிகன் சிட்டி, நியூ ஜெர்சி, பால்திமோர் போன்ற சிறிய நகரங்களுக்கும் சென்றபோது, முன்பு கண்ட காட்சிகளையே கண்டேன். எல்லாம் வளமையான ஜொலிக்கும் நகரங்கள்தான்.

பத்துப் பதினைந்து ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்களிடம் கேட்டால் வேறு ஏதேனும் விவரங்கள் தெரியவரும் என்கிற எண்ணத்தில் பலரிடம் விசாரித்தேன். அவர்களும் இதையேதான் சொன்னார்கள். எல்லா நகரங்களும் இப்படித்தான் இருக்குமென்றார்கள். ஏழை நாடுகளில் உள்ள எந்தவொரு மூன்றாந்தரமான நிலைமையும் அமெரிக்காவில் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று எனக்குத் தோன்றியது.

நாட்டின் வளத்துக்கு ஏற்றபடி மக்களும் நவநாகரிகப் பழக்கவழக்கங்களுடன் வசதியான வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனது முதல் பார்வையிலேயே மற்ற நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வித்தியாசத்தைக் கண்டுகொள்ள முடிந்தது. இந்தியாவைக் காட்டிலும் மூன்று மடங்கு நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களே வாழ்கிறார்கள் என்பதும் ஆச்சரியமளித்தது.

அண்மையில் வெளியான பத்திரிகைச் செய்தியின்படி, அமெரிக்காவில் உள்ள 39 சதவீதம் வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. தேசிய செல்லப் பிராணிகள் வளர்ப்போர் அமைப்பினர் நடத்திய கணக்கெடுப்பில், 4.56 கோடி அமெரிக்க வீடுகளில் சுமார் 7.75 கோடி நாய்கள் வளர்க்கப்படுவதாகத் தெரியவந்திருக்கிறது. அதாவது, சில வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்கள்கூட வளர்க்கப்படுகின்றன.

நாய்களைத் தவிர வேறு சில செல்லப் பிராணிகளையும் அமெரிக்கர்கள் வளர்க்கின்றனர். பறவைகள் (1.5 கோடி), பூனைகள் (9.36 கோடி), குதிரைகள் (1.33 கோடி) போன்றவையும் அமெரிக்கர்களின் செல்லப் பிராணிகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

பொருளாதார மந்தநிலையாலோ, கதவடைப்புகளாலோ, வேலை இழப்புகளாலோ இந்தச்  செல்லப்பிராணிகள் வளர்ப்பு மட்டும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சொல்லப்போனால், கடந்த சில ஆண்டுகளில் செல்லப் பிராணி வளர்ப்பு 5% அதிகரித்திருக்கிறது.

2009-ம் ஆண்டுக் கணக்குப்படி செல்லப் பிராணிகளுக்காக அமெரிக்கர்கள் செலவு செய்த தொகை மட்டுமே கிட்டத்தட்ட | 2 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. உலக வங்கியின் ஆவணங்களின்படி, அந்த ஆண்டில் உலகில் 114 நாடுகளின் மொத்த வருவாயே இதைவிடக் குறைவுதான்.

அமெரிக்கர்கள் வளர்க்கும் நாய்களுக்குக் கிடைக்கும் சொகுசையும், அன்பையும் ஏழைநாடுகளில் உள்ள மனிதர்கள் கனவில்கூட அனுபவிக்க முடியாது. இதெல்லாம் என்ன பிரமாதம்.

நாய்களுக்கென்ற பிரத்யேகமாக ஹோட்டல்களே இயங்குகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அங்குள்ள அறைகளில் ஒரு நாள் தங்குவதற்கு | 4,500-க்கு மேல் செலவாகும். இதுதவிர, நாய்களுக்கென தனி காப்பகங்களும், மசாஜ் கிளப்களும் கூட இருக்கின்றன. இதிலிருந்து அமெரிக்காவில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.

இந்த நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு சுமார் | 640 லட்சம் கோடியாகும். நடப்பு ஆண்டில் பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை மட்டும் சுமார் | 31 லட்சம் கோடிகள். உலகின் ஒட்டுமொத்த ராணுவச் செலவில் இது 44 சதவீதமாகும். உலகின் 189 நாடுகளின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே, ராணுவத்துக்காக அமெரிக்கா செய்யும் செலவை விடக் குறைவானது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா ஒரு பணக்கார நாடு என்று நாம் முடிவுக்கு வருவதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டியிருக்கிறது?

ஆனால், இத்தனை பணக்கார நாடு, பொறுப்பான நாடாக இருக்கிறதா என்கிற கேள்வி நம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. உலகில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் ஏழைகளாகப் பசியால் வாடிக் கொண்டிருக்கும்போது, ராணுவத்துக்கும் நாய்களுக்கும் பல ஆயிரம் கோடிகளைச் செலவும் செய்யும் ஒரு நாட்டை பொறுப்பான நாடு என்று எப்படி ஏற்றுக்கொள்வது?

மக்கள் எப்படிப்பட்ட சொகுசான வாழ்க்கையைத் தேடுகிறார்கள் என்பதற்குத்தான் இங்கு நாய்களை உதாரணமாகக் காட்ட வேண்டியதாயிற்று. மற்றபடி நாய்களை நாம் வெறுக்க வேண்டும் என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது.

உலகின் மற்ற நாடுகளை விடுங்கள். மிக உன்னிப்பாகப் பார்த்தால், ஜொலிக்கும் அமெரிக்காவுக்குள்ளேயே ஏழ்மை இருக்கத்தான் செய்கிறது. முதலில் நாம் பார்த்த கணக்குக்கு நேர் எதிரான, ஆச்சரியப்படத்தக்க வகையிலான இன்னொரு புள்ளிவிவரம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

செல்வத்தில் கொழிக்கும் அமெரிக்காவிலேயே 5 கோடி பேர் ஏழைகளாம். 1.67 கோடி குழந்தைகளுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிலும் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களில் 25 சதவீதம் பேர் ஏழைகளாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. ஏழ்மையிலும் இனப்பாகுபாடு உள்ளது என்பது தனிக்கதை.

இதேபோல, துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோருக்கு வீடில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்நாட்டு வீட்டு வசதிவாரியம் கடந்த 2008-ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில் சுமார் ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் வீடில்லாதவர்கள் எனத் தெரியவந்தது.

இவற்றிற்கெல்லாம் மேலாக, வேலையில்லாத் திண்டாட்டம் அமெரிக்காவை ஆட்டிப் படைக்கிறது. கிட்டத்தட்ட 9.5 % அமெரிக்கர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இப்போதைக்கு இந்த நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை. நிறையப் பேருக்கு வேலையில்லையென்றால், வருமானம் இல்லாத ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகம் என்பதுதானே பொருள்.

எனது முதல் பார்வையில் நான் கவனிக்காமல்விட்ட இன்னொரு விஷயம் அமெரிக்காவின் சுற்றுச்சூழல் சீர்கேடு. சுமார் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் "உயிரை அச்சுறுத்தும்' அளவுக்கு காற்று மாசுபாடு நிறைந்த பகுதிகளில் வாழ்வதாக அமெரிக்க நுரையீரல் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் பத்தியில் நாம் பார்த்த கார்களின் அணிவகுப்பு காற்றை விஷமாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சமதர்ம சமூகம் பற்றி நாளுக்கு நாள் பேசிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் பளிச்சென்ற சாலைகளுக்கும், பகட்டான வாழ்வுக்கும், சுத்தமான சூழலுக்கும், ஜொலிக்கும் நகரங்களுக்கும் பின்னணியில் இருப்பது வறுமையும், சுற்றுச்சூழல் சீர்கேடும், இயற்கை வளங்களின் விரயமும்தான். வறுமையை விரட்டுவதற்கு அமெரிக்கா யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. ராணுவச் செலவைக் குறைத்துக் கொள்வதுடன் வீணாகப் போகும் வளத்தை முறைப்படுவத்துவதுமே போதுமானது.

- பிஎஸ்எம் ராவ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக