ஞாயிறு, 5 ஜூன், 2011

அல்லாஹ்வே நடத்திய அற்புதத் திருமணம்!




திருமணம் என்பது ஆதி காலம் முதலே நடைபெறுகின்ற ஒரு தொடர் நிகழ்ச்சி. அதற்கு பெண் வீட்டார், மணமகன் வீட்டார் ஆகிய இரு குடும்பத்தினரும் கலந்த பேசி உடன்பாடு ஏற்படுவது ஏற்படுவது வழக்கம். ஆனால், அல்லாஹ்வே வலீயாக இருந்து நடத்திய திருமணம் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்றது.



தம்முடைய தந்தையின் சகோதரி உஸைமா என்பாரின் மகள் ஸைனப் (Zainab) ரளியல்லாஹு அன்ஹா அவர்களை, அதாவது தமது சொந்த மாமிமகளை, முதன் முதலாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வளர்ப்பு மகனான ஸைதுப்னு ஹாரிஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நிகாஹ் செய்து வைத்தார்கள்.



ஆம்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மண முடித்துக் கொள்ளுமாறு ஸைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னாள் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா முதலில் மறுத்து விடுகிறார்கள்.



உடன் பின் வரும் இறை வசனம் இறங்கியது;



''அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.'' (அல்குர்ஆன் 33:36) 

இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஸைதைத் திருமணம் செய்ய சம்மதித்தார்கள். (இப்னு ஜரீர், இப்னு கஸீர்)



மிகவும் உயர்ந்த குலம் என்று பெருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணை தமது மாமி மகளை ஒரு அடிமைக்குத் திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும்.

ஆனால், சிறிது காலம்தான் வாழ்ந்தார்கள்;. மணவேற்றுமையால் வாழ இயலவில்லை. ஸைது (Zaid) ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்வம்மையாருக்கு தலாக் என்னும் திருமண முறிவு சொல்லிய பின், அம்மையாரின் இத்தா காலம் முடிந்தவுடன் ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு துல்கஃதா மாதம், ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை தான் திருமணம் செய்து கொள்வதாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூதுவரை அனுப்பினார்கள்.



தூதுவர் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் செய்தியைக் கூறியபோது அதற்கு அவர்கள், ‘நான் என் ரப்பிடம் (என்னை படைத்தவனிடம்) ஆலோசனை செய்யாமல் பதில் கூறமாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். பின்னர் உளூ செய்து, தொழுகைக்காக தக்பீர் கட்டிவிட்டார்கள்.



அவர்களின் உள்ள உறுதியினால் அல்லாஹு தஆலாவே ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாகக் கூறி திருக்குர்ஆனில் ஒரு வசனத்தையும் இறக்கி வைத்துவிட்டான்.



ஆம்! அந்த திருவசனம் இதுதான்: எனவே, ஸைது, அப்பெண்ணிடமிருந்து தலாக்கை நிறைவேற்றிக் கொண்டபோது, நாம் அவரை உமக்கு திருமணம் செய்து கொடுத்தோம் (அல்குர்ஆன்: 33:37)



ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நிகாஹ் செய்து வைத்தது பற்றிய ஆயத்து இறங்கிய நற்செய்தியை ஒருவர் அவரிடம் அறிவித்தபோது, செய்தியைக் கொண்டுவந்த அம்மனிதருக்கு தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழட்டி, அன்பளிப்பு செய்துவிட்டு, உடனே ஸஜ்தாவில் வீழ்ந்து நன்றி தெரிவிக்கும் முகமாக இரண்டு மாதம் நோன்பு இருப்பதாக நேர்ச்சை செய்து கொண்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மற்றுமுள்ள எல்லா மனைவியருடைய திருமணங்களும் அவர்களின் உறவினர்களால் நடத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஹளரத் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமணம் மட்டும் வானத்தில் அல்லாஹ்வினால் நடத்தி வைக்கப்பட்டது. இது உலகத்தில் எவருக்கும் கிடைக்காத தனிப்பெரும் சங்கையாகும். இந்த மகத்தான சிறப்பு ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு எப்படி கிடைத்தது? அசைக்க முடியாத இறை நம்பிக்கையால்தான்.



அல்லாஹ் மகிழ்வுற்றான். ஹளரத் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் மகிழ்வுற்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மகிழ்ச்சியல் இருந்தார்கள். அதற்காக மற்ற எந்த திருமணத்திற்கும் நடந்திராத மிகப்பெரிய வலிமா விருந்தை நடத்தினார்கள்.நான் என் ரப்பிடத்தில் கேட்டுச் சொல்கிறேன் என்று அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தியதால் அல்லாஹ் மிகவும் மகிழ்வுற்று தானே திருமணத்தை நடத்தி வைத்தான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண் கேட்டு தூதுவரை அனுப்பியபோது, தானாகவே பதில் கூறாமல், ஒரு நபியை திருமணம் செய்கிற மனப்பக்குவம் தனக்கு இருக்கிறதா என்று தன் ரப்பிடம் ஆலோசனை பெற்று அதன் பின் மறுமணத்திற்கு ஒப்புக் கொண்டார்கள்.



அல்லாஹ்விடமிருந்து நற்செய்தி வந்ததை அறிந்தவுடன் இரண்டு மாதங்கள் நோன்பு பிடிப்பதாக அவர்கள் நேர்ச்சை செய்து கொண்டதன் மூலம் அவர்கள் எந்த அளவுக்கு இந்த திமணத்தை ஆவலோடு எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள் என்பதும், அவ்வாறு ஆவலோடு இருந்தபோதும் அல்லாஹ்விடமிருந்து பதில் வரவேண்டும் என்று அவர்கள் காத்திருந்ததும் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹ்வின் மீது அவர்களுக்கிருந்த அசைக்க முடியாத இறைநம்பிக்கை வெளிப்படுத்துகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்த போது  ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடைய வயது முப்பத்தி ஐந்து (பார்க்க அல் இஸாபா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக