ஞாயிறு, 5 ஜூன், 2011

எச்சில்! Abu safiyah










இன்று இஸ்லாமிய சமுதாயம் மாற்றாரின் பல்வேறு பழக்கத்திலிருந்து ஆட்கொள்ளப்பட்டு, சீறிய வாழ்விலிருந்து திசை திருப்பப்பட்டு வியாபித்துக் காணப்படும் பல்வேறு குற்றங்களுக்கு காரணமாயிருப்பது நாம் அறிந்த ஒன்று. அவைகளில் ஒன்று எச்சில் பற்றிய தவறான பழக்கமாகும்.

தாகித்த ஒருவர் தண்ணீர் கேட்டால், கொடுக்கும்போதே தூக்கிக் குடிஎன உபதேசிக்கிறார்கள். ஒருவர் சாப்பிட்டு மீதமுள்ள பொருளை மற்றவர்கள் சாப்பிட மறுக்கிறார்கள். காரணம் கேட்டால் எச்சில்பட்ட பொருள் என்று வியாக்கியானம் செய்து வெறுத்து ஒதுக்குகிறார்கள்.

ஆனால் யாருக்கோ பிறந்து எங்கேயோ வளர்ந்த ஒருவர் கணவனாகவோ மனைவியாகவோ மாறியதும் அவர் எச்சிலை பாக்கியமாக கருதுகிறார்கள். கணவன் சாப்பிட்டு வைத்த உணவை சாப்பிடுவதும் பழக்கத்திலிருப்பதை நாம் இன்றும் கண்டு வருகிறோம். யாரோ ஒருவராக இருந்த ஒரு முஸ்லிம் இன்று கணவராக மாறினார். அவரின் எச்சிலுக்கு மதிப்பு வழங்கும் பெண்கள் மற்ற முஸ்லீம் பெண்களின் எச்சிலை அசுத்தமாகக் கருதுவது ஏன்? நம் நாட்டு ஆண்களின் மனோபாவமும் இதுபோலத்தான்! ஆனால், எச்சில் அசுத்தம் இல்லை என்பதை பின் வரும் நபிமொழி உறுதி செய்கிறது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குடிபானம் கொடுக்கப்பட்டது. அப்போது அவர்களின் வலப்புறம் ஒரு சிறுவரும், இடப்புறம் சில பெரியோர்களும் இருந்தனர். அப்பானத்தை அருந்திய நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதமுள்ள பானத்தை தனது இடப்புறமுள்ள பெரியோர்களுக்கு கொடுக்க நாடினார்கள். எனவே (எந்த செயலாக இருந்தாலும் வலப்புறத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற பழக்கம் இருந்ததால்) வலப்புறத்திலிருந்த சிறுவரிடம் இதை பெரியோர்களுக்கு கொடுக்க அனுமதிக்கின்றாயா?’ என்று கேட்டார்கள். அச்சிறுவரோ, ‘இல்லை! அல்லாஹ்மிது ஆணையாக, உங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பை நான் நழுவ விடமாட்டேன்!என்று கூறியதும் அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பானத்தை அவர் கையிலேயே கொடுத்துவிட்டார்கள். (அறிவிப்பாளர்: ஸஃலுப்னு ஸஃது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)

இந்த நபிமொழியில் கூறப்பட்டுள்ள சிறுவர் ஹளரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு என விரிவுரை நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

எச்சில் அசுத்தமாக இருந்திருந்தால் மதிநுட்பம் நிறைந்த ரயீஸுல் முஃபஸ்ஸிரீன் (விரிவுரையாளர்களின் தலைவர்) என்று போற்றப்படும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரியவர்களுக்கு அதை வழங்க மறுத்திருக்க மாட்டார்கள். அதுபோன்று எச்சில் அசுத்தமாக இருந்தால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன் எச்சில்பட்ட பானத்தை அருந்த மற்றவர்களுக்கு கொடுத்திருக்க மாட்டார்கள்.

எச்சில் ஒர் நிவாரணம்

ஒரு முஃமினின் எச்சில் (நோய்களை அகற்றும்) நிவாரணமாகும்.'' (அல் ஹதீஸ்)

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அன்பு நண்பர் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் தவ்ர் குகையில் தங்கியிருந்தபோது அக்குகையின் பொந்துகளில் இருந்த பாம்பு ஒன்று அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தீண்டிவிடுகிறது. வேதனை தாங்க முடியாமல் அவர்கள் கண்களிலிருந்து கண்ணீர், அவர்கள் மடியில் உறங்கிக் கொண்டிருந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது விழ விழித்தெழுந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது நண்பரை பாம்பு தீண்டிவிட்டது என்பதை அறிந்ததும் தனது எச்சிலைத் தொட்டு பாம்பு தீண்டிய இடத்தில் தடவினார்கள். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு விஷம் நீங்கி நிவாரணம் ஏற்பட்டது என்பது மிகவும் பிரபலமான வரலாறு.

சுமார் பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம் இல்லத் திருமணமோ அல்லது வேறு விசேஷ காரியங்களோ நடக்கும்போது விருந்து என்றாலே ஸஹானில் தான் சாப்பாடே! மூன்று அல்லது நான்கு பேருக்கு ஒரு ஸஹான் என்று கூடி சாப்பிடும் பழக்கத்தில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எச்சிலைப்பற்றி எவ்விதமான அசூஸையும் இல்லாமல் மக்கள் வாழ்ந்த காலமாக இருந்தது. சமுதாயமும் குறிப்பாக அந்தந்த மஹல்லாவாசிகளாவது ஒற்றுமையாக இருந்தார்கள். சகோதர பாசத்துடன் வாழ்ந்தார்கள். பிரிந்திருந்த எத்தனையோ பேரை இந்த ஸஹான் தட்டு சேர்த்து வத்திருக்கிறது என்பதை எவரேனு மறுக்கத்தான் முடியுமா?

எப்போது ஸஹானுக்கு மூட்டை கட்டிவிட்டு தட்டைகொண்டு வந்தார்களோ அப்போதே ஏற்றத்தாழ்வற்ற ஒற்றுமையான வாழ்வுக்கு சாவுமணி அடித்துவிட்டார்கள். எச்சிலைப்பற்றிய மாற்றார்களின் தவறான பழக்கம் முஸ்லீம்களுக்குள்ளும்; புகுந்துவிட்டது.

அடுத்து மிக முக்கியமாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்; 'உணவருந்திவட்டு உங்கள் விரல்களை நீங்களோ அல்லது மற்றவர்களோ சூப்பாத வரை அவ்விடத்தைவிட்டு எழுந்து செல்லாதீர்கள்.' (எழுந்து செல்லாதீர்கள் எனும்போது இது உத்தரவல்லவா!) இந்த இடத்தில் நமது விரலை நாம் சூப்புவதில் எந்த தொந்தரவும் இல்லைதான். (அதைக்கூட நம்மில் எத்தனைப்பேர் செய்கின்றனர்?! குறைந்தபட்சம் இந்த சுன்னத்தையாவது இனி, ஹயாத்தாக்குவோமே!) அதே சமயம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்களோ அல்லது மற்றவர்களோஎன்றுரைக்க காரணம் என்ன? ஒருவர் உண்டபிறகு அவரது எச்சில் விரல்களை வேறு ஒருவர் சூப்புவதா? விபரம் புரியாதவர்களுக்கு இது விநோதமாகத்தான் தெரியும். ஆனால் அனைத்திற்கும் முன்மாதிரியாக ஏக இறைவனால் அனுப்பி வைக்கப்பட் இறைத்தூர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல் அல்லவா அது! இந்த சுன்னத்தை பின்பற்றும் குடும்பத்தில் சண்டை சச்சரவா... ! மூச்! ஷைத்தான் ஒரே ஓட்டம் ஓடிவிட மாட்டானா என்ன!

முஸ்லீம்கள் அனைவரும் சகோதரர்களே! இந்த நினைப்பை எந்த நிலையிலும் மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ''விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவன் உண்மையான முஃமினாக மாட்டான்'' என்றுரைத்தார்கள். அந்த அளவுக்கு வேறுபாடற்ற வாழ்க்கையை வாழ வலியுறுத்தின்னார்கள். ஆனால் நம்மில் சிலரோ பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருக்கும் டம்ளரில்தண்ணீர் அருந்தும்போதுகூட தூக்கி அருந்துவது அன்றாடம் காணும் காட்சியாக இருக்கிறது. டம்ளரில்எச்சில் படாமல் குடிப்பது மாற்று சகோதர்களின் பழக்கம் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால் அதனால் என்னென்ன நஷ்டங்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

'சீப்பிக் குடிக்காதே' என்று சிலர் கத்துவார்கள்.

சீப்பிக் குடிப்பதிலுள்ள சுகத்தைப் பற்றி அவர்களுக்கென்ன தெரியும்?

தூக்கி சாப்பிடுகிறவர்கள் காருக்கு பெட்ரோல் ஊற்றகிற மாதிரி தொடதொடவென்னு திரவத்தை ஊற்றிக் கொள்கிறார்கள். 'சீப்பி சாப்பிடுவதிலுள்ள சுகத்தை அனுபவிக்காத சூடுகெட்ட மானிடரே கேளுங்கள்...' என்று செய்யுள்கூட இயற்றலாம்.

காப்பி சூடாக வருகிறது. அண்ணாந்து சாப்பிடுகிறவர்கள் சட்டென்று அதைத் தூக்கிவிட மாட்டார்கள். கையில் டம்ளரைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பார்கள். கை விரல் பொறுக்கக் கூடிய சூடாக டம்ளர் இருந்தால்தான் அதைத் தூக்குவார்கள். சுடச் சுட ஊற்றிக் கொண்டால் வாய் வெந்துவிடும்.

ஆனால் சீப்பிச் சாப்பிடுகிறவர்களுக்கு டம்ளரின் சூட்டைப் பற்றியோ உள்ளே இருக்கும் திரவத்தின் சூடு பற்றியோ கவலையில்லை. கவ்விச் சாப்பிடும்போது முதல் ஸ்பரிசம் உதடுகளுக்குள் கிடைக்கிறது.

தூக்கிச் சாப்பிடுபவர்கள் தங்கள் உதடுகளுக்கு வேலை கொடுப்பதில்லை. சீப்பி சாப்பிடும்போது உதடுகள் வழியே காப்பி வாய்க்குள்ளே செல்கிறது. காப்பியில் ஏதாவது தூசி தும்பு இருந்தாலோ, பிளாஸ்டிக் பால் கவரின் கத்திரிக்கப்பட்ட முனை இருந்தாலோ உதடு வடிகட்டி விடும். உதடுகள் சூட்டை வரவேற்று அதிகப்படியான சூட்டை, ஸ்டெபிலைஸ் செய்கிறது. உதடுகள் சிறந்த ஸ்டெபிலைஸர்கள். உதடு வழியே உள்ளே செல்லும் காப்பி குபுகுபுக்கென்று நேரே உணவுக் குழாயில் பாய்வதில்லை. வாய்க்குள் சிறிது தங்கி அங்குள்ள ருசி மொட்டுகளினை தனது வாசனையையும் சுவையையும் கமகம என்று பரப்பிச் சில வினாடிகள் கழித்து தொண்டை மண்டலப் பிரவேசம் செய்கிறது.

மிதமான சூடாதலால் தொண்டைக் குழாயில் வழி நெடுக காப்பிக்கு இனிய வரவேற்பு. தூக்கி சாப்பிடும் முறையில் சுடச்சுட ஊற்றிக் கொள்ளும்போது தொண்டை மண்டலம் சூட்டுக்குப் பயந்து திரவத்தைச் சட்டென்று அகப்பையில் விழும்படி அனுமதித்து விடுகிறது. காப்பி குடிப்பதற்கு முன்பே, தயாரிப்பின் போதே, ஏன் அரைப்பட்ட மறு வினாடியே, அரைபட்ட நிலையிலேயே வாசனை பரப்பி மகிழ வைக்கிறது. 'சாப்பிடும் போதும் நறுமணம் - சாப்பிட்ட பின்னும் கூட வாயில் கமகமவென்ற காப்பி மணம் கமழும். எச்சில் படாமல் குடிக்க வேண்டும் என்று அண்ணாந்து குடிப்பவர்களுக்கு இத்தகைய இன்பம் குறைவு. காப்பியின் யுடிலிடி மதிப்பை தூக்கி சாப்பிடுகிறவர்கள் குறைந்து விடுகிறார்கள்.

தூக்கி அருந்துபவர்கள் வேறு வகையிலும் நஷ்டப் படுகிறார்கள். காப்பியில் சர்க்கரை குறைவாக இருக்கிறது என்பதை வாயில் வைத்ததுமே சீப்பி சொல்லி விடுவான். சில துளிகள்தான் சர்க்கரை குறைவு என்ற அதிருப்தியுடன் வாயில் போயிருக்கும். ஆனால் தூக்கிக்கோ கபகபவென்ற கால் டம்ளர் உள்ளே போன பிறகுதான், 'சர்க்கரை வேண்டும்' என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

சீப்பிச் சாப்பிடும்போது வாய்க்குள் போகும், காப்பி பற்களையும் ஈகளையும் ஈரப்படுத்தி, ஒளிந்து கொண்டிருக்கும் நோய்க் கிருமிகளை ஒழித்துக் கட்டி விடும். ஆகவே எச்சிலைப்பற்றி கவலைப்படாமல் எல்லாரும் ருசித்து ரசித்து காப்பியை 'சீப்பி' குடிப்பிடிப்பததே நல்லது' ஆகவே எச்சிலை அசுத்தமாக எண்ணாமல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவோமாக.
Posted by: Abu safiyah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக