ஒரு நாளைக்கு ஐந்து வேளைத் தொழுகை, ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, தான தருமங்கள் செய்வது, ஆயுளில் ஒரு தடவை ஹஜ் செய்வது, ஆகியவற்றுடன் மட்டும் ஒரு முஸ்லிமுடைய நற்செயல் முடிந்து விடக்கூடியவை அல்ல
அதையும் தாண்டி மக்களுக்கு நன்மை செய்வதிலும், அவர்களுக்கு பயன்தரும் வகையில் நடப்பதிலும் தான் ஒரு முஸ்லிம் பரிபூரணம் அடைகின்றான்
மக்களுக்கு பயனளிப்பதின் வாயிலாக இஸ்லாம் பரிபூரணம் பெறுகிறது. இதுகுறித்து இறைவன் பேசுவதை பார்ப்போம்:
நம்பிக்கை கொண்டோரே! குனியுங்கள், சிரசை தாழ்த்துங்கள், மேலும் உங்கள் இறைவனை வணங்குங்கள், நன்மையைச் செய்யுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்'. (திருக்குர்ஆன் 22:77)
இந்த வசனத்தில் தொழுகை, வணக்கம், நன்மை புரிவது ஆகிய மூன்று அம்சங்கள் இடம் பெறுகிறது. இங்கே நன்மை புரிவது என்பது மக்களுடன் சம்பந்தப்பட்டது. மற்ற இரண்டும் இறைவனுடன் சம்பந்தப்பட்டது ஆகும்.
நன்மை புரிவது என்றால்,உறவுகளுடன் சேர்ந்து வாழ்வது மற்றும் நற்குணங்களுடன் வாழ்வது ஆகும்' என இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் பயன் என்பது வெற்றி ஆகும் இந்த வெற்றி என்பது சாதாரணமானது அல்ல, சொர்க்கமே கிடைக்கும் என்பதுதான் உண்மையான வெற்றி எனவும் அவர் விளக்கம் தருகிறார்.
ஒரு முஸ்லிம் தமது நற்குணங்களின் வாயிலாகவும், தமது நற்சேவையின் வழியாகவும் மக்களுக்கு பயன்தரும் வகையில் நல்லதை செய்யும் போது அவர் சிறந்த மனிதராகவும், வெற்றி வாகை சூடியவராகவும் போற்றப்படுகிறார்.
'இறைவனுக்கு சில அடியார்கள் உண்டு அவர்கள் மக்களுக்கு பயன்கள் அளிப்பதற்காக அவர்களுக்கு இறைவன் தமது அருட்கொடைகளை பிரத்யேகமாக வழங்குகிறான். அவர்கள் மக்களுக்கு பயன்தரும் காலமெல்லாம் இறைவன் அவர்களுக்கு தமது அருட்கொடைகளை நீட்டித்து கொடுக்கிறான். அவர்கள் பயன்தர மறுத்தால், அவர்களிடமிருந்து இறைவன் தமது அருட்கொடைகளை நிறுத்திவிட்டு மற்றவர்களுக்கு அவைகளை மாற்றிக் கொடுக்கிறான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர். இப்னு உமர் (ரலி) நூல் தப்ரானீ)
எனவே மற்றவர்களுக்கு உதவும் வகையில் நாம் அனைவரும் சமூக பணி செய்வோம்.
எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் உங்களுக்கும் சலாம் கூறி விடைபெறுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பழைய குறிப்புகள் பார்க்க 👇 கிளிக் செய்யவும்.
மக்தப் மதரஸா மேடை நிகழ்ச்சிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக