திங்கள், 4 மே, 2020

தண்ணீர் செல்லும் பாடம்.



ஹாஜ்ஜா A. யாஸ்மின் ஆலிமா - இளையான்குடி.

أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
நீங்கள் குடிக்கின்ற நீரைப் பார்த்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்குகிறீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால் அதைக் கைப்புள்ளதாக (உவர்ப்பானதாக) ஆக்கியிருப்போம். (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா..?
அல்குர்ஆன் 56:68:69,70.



படைப்பினங்கள் உணர்த்தும் பாடம்

குடிக்கும் நீரை மட்டுமல்ல! விரிவிலா வானையும், விரிப்பான புவியையும் வியப்பூட்டும் உயிரினங்களையும், நாட்டப்பட்ட மலைகளையும்.. எனத் தன் படைப்பினங்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப் படிப்பினைப் பெற்றுக் கொள்ளும்படி வல்ல அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் உத்தரவிட்டுள்ளான்

சாய்வில் அல்லாஹ் விதித்த பாதையில் சற்றும் பிசகாமல், விநாடிக்கு 30 கிமீ. வேகத்தில் சூரியனைச் சுற்றிக் கொண்டு, அதே வேளையில் தனக்குத் தானே மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் அனைத்தையும் சுமந்து கொண்டு, இடைவிடாது சுழன்று. இவ்விரு இயக்கங்களையும் நேர்த்தியாய் நிகழ்த்தி, மனிதர உலகில் வாழ்ந்து கொண்டே மறுமை வாழ்வின் வெற்றிக்கான சேகரங்களை ஈமான் நிலை மாறாது சேகரிக்க உன்னால் ஏன் இயலாது? என நம்மைப் பார்த்து பூமி உருண்டை கேட்பது போல உள்ளதே

ஆம்! அதனால் தான் அருள்மறை குர்ஆனில் பல இடங்களில் நவீன விஞ்ஞானம் நாணுமளவு படைப்புகளின் இரகசியங்களைத் துல்லியமாக எடுத்துக் கூறி

 إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ
திடனாக இதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் பல இருக்கின்றன."அல்குர்ஆன் 3:190) என்று அல்லாஹ் உணர்த்துகிறான்

புதிய கதவு திறந்தது

கண்மணி நாயகம் 2 அவர்களை இறுதி நபியாக்கிப் பிரபஞ்சத்தின் திறக்கப்படாத இரகசியப் பக்கங்களைத் திறக்கும் அறிவுத் திறவுகோலை அவர்களுக்குப் பின்வரும் உம்மத்தினரின் கையில் கொடுக்க இறைவன் நாடிவிட்டான். வேறுபாடின்றி'அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடை' என்று குர்ஆனில் கூறப்பட்ட அன்பு நபி முஹம்மது ஸல் அவர்களின் 'நூரே முஹம்மதியா' இப்பாரில் அவர்களின் பிறப்பின் மூலம் பட்டொளி வீசத் தொடங்கிய பிறகே மனித குலத்தின் சிந்தனை பட்டை தீட்டப்பட்டது.

உலகில் மனிதப் பிறப்பின் தொடக்கம் முதல் அருமை நபி ஸல் அவர்களின் காலம் வரையும், அவர்களுக்குப் பின் இன்று வரையுள்ள உலகின் விஞ்ஞான வளர்ச்சியையும் உற்று நோக்கினால் இது எளிதில் விளங்கும். மனிதனுக்கு நீதி போதனை கூற வேண்டிய இறைவேதத்தில் கோள்களின் இயக்கம், சந்திரனின் நிலைகள், கிரகப் பாதைகள், கடலின் தடுப்பு. கருவியல் என அல்லாஹ் விவரித்த தன் நோக்கமென்ன? குர்ஆனும், அதன் விளக்கமாய் வாழ்ந்த பொன்னபி நாயகம் அவர்களின் சொல்லும், செயலும் அத்தனையும் விஞ்ஞானமெனில், இன்றைய நவீன ஆய்வுகள் அவற்றை மெய்ப்பிக்கும் பரிசோதனைகளாகவே உள்ளன.

தண்ணீரைப் பார்த்த பெரியோரின் பொன்மொழிகள் அருந்தும் தண்ணீரைப் பார்க்கச் சொல்லி குர்ஆனில் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அருமை நபி அவர்களின் அற்புத வழிமுறையான சுன்னத்திலும் தண்ணீரை அருந்தும் முன் ஒரு முறை அதைப் பார்க்க வேண்டுமென சொல்லப்பட்டுள்ளது. அடிபணிந்த அடியார்களின் அருட்பார்வைகளைக் காண்போமா..?

துன்யாவின் கொடும் பிடி

அருமைத் தோழர் அபூபக்ர் ரலி அவர்களிடம் ஒரு முறை 'தேன் கலந்த தண்ணீர்' அவர்கள் அருந்துவதற்காக கொண்டுவரப்பட்டது. அதனைக் கையில் வாங்கிப் பார்த்த அப்புனிதரின் கண்களில் கண்ணீர்! அழுது கொண்டே அவர்கள் கூறினார்கள். "நான் ஒரு முறை நபி அவர்களின் சமூகத்தில் ஆஜராகியிருந்தேன், அப்போது நபி ஸல் அவர்கள் தம் இரு கரங்களால் ஏதோ ஒரு பொருளை விலக்குவதைக் கண்டேன் ஆனால் எப்பொருளும் என் கண்களுக்குத் தென்படாததால் நான், "நாயகம் !தாங்கள் எதனை உங்களை விட்டு தூரம் விலக்குகிறீர்கள்? என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள், "துன்யா எனக்கு முன் வந்தது. நான் அதனை என்னை விட்டும் தூரம் விலக்கி விட்டேன். அதற்குப் பிறகு மறுபடியும் துன்யா எனக்கு முன்னால் பிரசன்னமாகி, "நீங்கள் என்னை விட்டு தப்பித்துக் கொண்டாலும் எனக்கு ஏதும் வருத்தமில்லை. ஏனெனில்) உங்களுக்குப் பிறகு வருபவர்கள் பட்ட பிரச்ச னை விட்டும் தப்ப முடியாது என்று கூறியது" என்று பதிலளித்தார்கள். அப்படிப்பட்ட துன்யாவில் நான் சிக்கிக் கொள்வேனோ! என்று அச்சப்படுகிறேன்.' என்று கூறித் தேன் கலந்த நீரை அருந்த மறுத்து விட்டார்கள். அருமைத் தோழர் அபுபக்ர் ரலி அவர்கள் தண்ணீரைப் பார்த்த அந்தப் பார்வை துன்யாவின் பயங்கர பிடியையே மனித குலத்திற்கு உணர்த்தி விட்டது

நடுங்க வைக்கும் நரகின் காட்சி

ஒரு பெரியார் குடிப்பதற்காகக் குவளையில் தண்ணீரைக் கையில் வாங்கிப் பார்த்த போது கைகள் நடுங்கி குவளையே கீழே விழுந்துவிட்டது. "என்ன ஆயிற்று"..? என அவரிடம் வினவப்பட்ட போது அவர். "நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து. "தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்" எனக் கேட்பார்கள்

وَنَادَىٰ أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ ۚ قَالُوا إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا عَلَى الْكَافِرِينَ   (திருக்குர்ஆன் 7:50)

என்ற திருவசனத்தில் நரகவாசிகள் தண்ணீர் கேட்டுக் கெஞ்சும் அக்காட்சி என் நினைவுக்கு வந்து விட்டது. அதனால் என்னையறியாது நான் நடுங்கிவிட்டேன் என்று கூறினார்கள். பார்த்தீர்களா? இப்பெரியாரின் தண்ணீர் பார்வை நரக பயத்தால் கண்ணீராகிப் போனதை

மெஞ்ஞான எல்லை

ஒரு ஞானி மஃரிபத்தின் எல்லையை அடையும் நோக்கோடு கடும் முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு சமயம் அவருக்குத் தாகம் அதிகமானது. காட்டில் தண்ணீரைத் தேடினார். அவரைப் போன்றே சிறு ஆட்டுக் குட்டியும் தாகத்தோடு தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. முடிவில் சிறிய நீர்க்குட்டை தொலைவில் தென்பட்டு விட்டது. ஆவலுடன் ஆடு குதித்தோடியது. அது நீர் அருந்தட்டும் என்று ஞானியும் தாமதித்துப் பிறகு சென்றார்

அந்நீர்க் குட்டையைக் கண்டார். கண்ட மாத்திரத்தில் கண் கலங்கி, "யா அல்லாஹ் நீர் வேட்கையோடு தேடி வந்த ஆடு நீரைக் கண்டவுடன் குட்டையையே கலக்கி விட்டதே! நீரும் கலங்கி விட்டதே! நானும் என் மஃரிபத்தின் எல்லையைத் தேடி தவிக்கிறேன். ஒரு வேளை அதை உன்னருளால் நான் அடையும் வேளையில் இது போலவே என் நோக்கம், தேட்டம் கலங்கி விடுமோ! அப்படிக் கலங்கி விடுமெனில் நான் உன்னைத் தேடிக் கொண்டே இருக்கிறேன் யாஅல்லாஹ் எனக்கு என் இலக்கைக் காட்டி விடாதே! என்று பிரார்த்தித்தார். இந்த ஞானியின் தண்ணீர்ப் பார்வை மெஞ்ஞானிகளுக்கு இறுதி வரை இருக்கவேண்டிய மன உறுதியையே உணர்த்திவிட்டது

விஞ்ஞானப் பார்வையில் விரியும் உண்மைகள்

நாம் அறிவியல் யுகத்தின் ஆன்மிக மலர்களாகிச் சற்றே விஞ்ஞானப் பார்வையில் தண்ணீரைக் காண்போம். தண்ணீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H,O, இதுவே அல்லாஹ்வின் வல்லமையை, அவனுடைய ஆற்றலைப் பறைசாற்றும் மந்திரமோ என எண்ணத் தோன்றுகிறது. எங்காவது பஞ்சும் நெருப்பும் சேர்ந்து தண்ணீராகுமா..?

எரிகின்ற ஹைட்ரஜனும், எரியத் தேவையான ஆக்சிஜனும் சேர்ந்து தண்ணீரானது அதிசயமல்லவா! அல்லாஹ்வின் படைப்பாற்றலை இது பறைசாற்றுகிறதல்லவா..! இதை உணர்ந்ததால் தான் இப்ராஹிம் நபி (அலை) அல்லாஹ்வின் வல்லமையை நம்பி நெருப்புக் குண்டத்திற்குள் உறுதியுடன் நுழைந்தார்களோ! உலக அழிவு நாளின் போது இந்தப் பிணைப்பு வல்ல அல்லாஹ்வின் ஆணையால் பிரிவதால் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி கடல்கள் தீப்பற்றி எரியத் தொடங்கிடுமோ

உப்பிட்டுக் கடலில் பாதுகாத்து, ஆவியாக்கி, மேகத்திற்கு உயரச் செய்து பூமியை உயிர்ப்பித்து உயிரினங்களை வாழ்விக்கத் தூய மழையாக்கிப் பொழியச் செய்தது வல்ல அல்லாஹ்வின் கருணையல்லவா! மண்ணுக்கு அடியில் எத்தனையோ ஆண்டுகள் இருந்தாலும் தண்ணீர் கெட்டுப் போவதில்லை. ஆனால் வெளியே எடுக்கப்பட்டு சில நாட்கள் சென்று விட்டால் அது கெட்டு விடுகிறதே மண்ணுக்கு அடியிலுள்ள நீராற்றில் சிறிதும் கெடாது தண்ணீரைப் பாதுகாத்த வல்ல அல்லாஹ்வின் கருணையை நாம் உணர வேண்டாமா

தூய்மை செய்த தண்ணீர் (Mineral Water) என்று தண்ணீரின் இயற்கைச்
சத்துக்களைக் கொலை செய்து பாட்டில்களில் அடைத்து உலகமெங்கும் தண்ணீர் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறதே! அனைத்திற்கும் ஆதாரமான மழை நீரைக் கிருபையாக உலகிற்கு அளிக்கும் அல்லாஹ்வின் தாராளத் தன்மை தண்ணீரில் தெரியவில்லையா

கற்றுக் கொடுக்க தண்ணீர் தயார்! சோதனை செய்ய நீங்கள் தயாரா..?

பொதுவாகத் திரவப் பொருட்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான பண்புகளைக் கற்றுக் கொடுத்த அல்லாஹ் உயிர்களின் நலனுக்காக தண்ணீருக்கு மட்டும் சிறப்பான ஒரு பண்பைக் கற்றுத் தந்திருக்கிறான். ஒரு சிறு பரிசோதனை செய்து பாருங்களேன்

இரண்டு குவளைகளில் ஒன்றில் தண்ணீரும், மற்றொன்றில் தேங்காய் எண்னயையும் எடுத்துக் கொள்ளுங்கள் இவ்விரண்டிலிருந்து 2-3 தேக்கரண்டி அளவு அள்ளித் தனித்தனியாக வெவ்வேறு பாத்திரங்களில் ஊற்றி ஃபிரிட்ஜ் ஃபிரீஸரில் Freezer) வைத்து உறைய வைக்கவும், உறைந்ததும் உறைந்த தேங்காய் எண்ணெய்க் கட்டியைத் தேங்காய் எண்ணெயிலும், பனிக்கட்டியைத் தண்ணீரிலும் போடுங்கள் ஓர் ஆச்சர்யத்தைக் காண்பீர்கள், உறைந்த எண்ணெய்க் கட்டி எண்ணெயின் அடிப்பாகம் சென்று விடும். ஆனால் பனிக்கட்டியோ தண்ணீரில் மிதக்கும்

இது சிறுபிள்ளையும் அறிந்தது தானே.! என்ன புதுமை! என எண்ணாதீர்கள் சற்றே பொறுங்கள். உறைந்த தண்ணீர்க் கட்டி தண்ணீரில் மிதக்கையில் ஏன் உறைந்த எண்ணெய்க் கட்டி மட்டும் மூழ்கிவிட்டது? எல்லாத் திரவங்களும் குளிர்ந்து உறையும் போது அதன் அடர்த்தி அதிகமாகவே செய்யும். அதனால் தான் தன் இனமான திரவத்திலும் கூட மூழ்கி அடியில் சென்று விடுகிறது.

ஆனால் தண்ணீருக்கு மட்டும் ஒரு தனித் தன்மை! குளிரத் தொடங்கியவுடன் அதுவும் அடர்த்தியாகி குளிர் நீர் அடிப்புறம் தான் செல்கிறது. ஆனால் எதுவரை 4.C, வெப்பநிலை வரை! அதற்குக் கீழ் குளிர ஆரம்பித்தவுடன் சட்டென சத்தியத்திற்குக் கட்டுப்பட்டாற்போல் அடர்த்தி குறைந்து மேலேறத் தொடங்கி விடுகிறது 0°C. குறைந்தவுடன் உறைந்த பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கத் தொடங்கிவிடுகிறது.

இந்த தன்மையை மட்டும் தண்ணீருக்கு அல்லாஹ் தந்திராவிடில் குளிர்ப் பிரதேசங்களில் (உம்: துருவப் பகுதிகள்) உள்ள கடல்களில் அங்கு நிலவும் கடுங்குளிரால் உறையும் கடல் நீர் மற்ற திரவங்களைப்போல் அடர்த்தி மிகுந்து கடலடியில் படியத் தொடங்கினால் அதில் வாழும் மீனினங்கள், உயிரினங்கள் அனைத்தும் அழுத்தப்பட்டு மடிந்து போய் விடும். உணவிற்காக அவற்றை நம்பி வாழும் மனிதர்களும், விலங்குகளும் பசியுடன் திண்டாட வேண்டியிருக்கும். அவ்வாறின்றி தண்ணீரின் சிறப்புப் பண்பால் உறையும் நீர்ப்பாளங்கள் கடலின் மேற்பகுதிக்கு வந்துவிடுவதால் அடிப்பகுதி உயிரினங்கள் வாழ ஏதுவாக இருக்கும். சுப்ஹானல்லாஹ் எவ்வளவு மகத்தான வல்லமை.

தண்ணீர் உணர்த்தும் பாடம்

வெப்பமானி ஏதுமின்றி (நம் உடல் வெப்பத்தை அளக்க நமக்குத் 'தெர்மோ மீட்டர் தேவைப்படுகிறது) 4°C, வெப்பநிலை வந்தவுடன் இறைக் கட்டளையை நினைவில் கொண்டு சட்டென்று சொல்லி வைத்தாற் போல் அடர்த்தி குறைந்து மேலேறத் துவங்கும் தண்ணீரின் இறையச்சம் நமக்குப் பாடமல்லவா..?

குடிக்கும் முன் நீரை ஒரு முறை பார்த்து விட்டு அருந்துங்கள்! என்ற கண்மணி நாயகம் இ அவர்களின் கட்டளையிலும், இதிலிருந்தாவது இந்த சமூகம் படிப்பினை பெற்று அல்லாஹ்வின் வல்லமையையும், தாராளத் தன்மையையும், கருணையையும் உணர்ந்து நேர்வழி அடையாதா? என்ற ஏக்கமும் தெரிகிறதல்லவா..?

இப்போது கட்டுரையின் தொடக்கத்திலுள்ள திருமறை வசனத்தை மறுமுறை படித்துப் பாருங்கள்! நன்றி செலுத்துகிறீர்களில்லை என்று அல்லாஹ் குறைபட்டுக் கொள்ளும் காரணம் புரிகிறதல்லவா..?

பிஸ்மில்லாஹ் கூறித் தண்ணீரைக் கண்ணால் பார்த்து, அமர்ந்து, மும்மூன்று மிடிராக, அதிலே மூச்சு விடாது குடித்து முடித்த பிறகு, அல்ஹம்து லில்லாஹில்லதி ஸகானீ அத்பன் ஃபுராதன் பிரஹ்மதிஹி வலம் யஜ்அல்ஹு மில்ஹன் உஜாஜன் பிதுனுபினா) "யா அல்லாஹ்! எங்கள் பாவங்களின் காரணமாக இத்தண்ணீரை உப்பாகவோ, கரிப்பாகவோ ஆக்காமல் மதுரமான மெல்லிய தண்ணீராக ஆக்கிப் புகட்டிய உனக்கே எல்லாப் புகழும்" என்று புகழ்ந்து நன்றி கூற ஆவல் வருகிறதன்றோ! தண்ணீரை உற்று நோக்குங்கள்! அதில் நல்லடியார் தெரிகின்றாரா! நம் முகங்களைக் கூறவில்லை! தண்ணீரே ஒரு நல்லடியாரல்லவா! அல்ஹம்துலில்லாஹ்.

2011 மே மாத மனாருல் ஹுதா மாத இதழிலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக