மெளலவி S.A. ஜகரிய்யா ஹஸீன், மேலப்பாளைம்
கணவரிடம் கண்ணியமாக நடந்து கொள்வது நமது சமுதாயத்தின்
தலை சிறந்த நற்குணங்களில் ஒன்றாகும். இந்த நற்குணம் அறியாமைக் காலத்தில் கூட நடைமுறையில்
இருந்து வந்தது. இஸ்லாம் அதைச் சீராக்கி செம்மைப்படுத்தி மெருகூட்டியது. இன்றும்
அரேபிய முஸ்லிம்கள் மத்தியில் இந்த நற்குணம் வாழையடி வாழையாக தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
திருமணத்தின் போது
தாய்மார்கள் தங்கள் பெண்மக்களின் திருமணத்தின் போது
நல்ல அறிவுரைகளைக் கூறி வழியனுப்பி வைப்பார்கள். அந்த அறிவுரைகளில் கணவனைப் பேணுவதின்
ஒழுக்கங்கள் தெளிவாகவே இருக்கும்.
அந்த அறிவுரைகள் சமுதாயத்தை சீர்திருத்துகின்ற
பிரச்சாரங்களாக இன்று விளங்குகின்றன. அப்படிப்பட்ட ஒழுக்க நல்லுரைகளில் ஹிஜ்ரி 2-ஆம் நூற்றாண்டில்
கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய அப்துல் மலிக் இப்னு உமைர் அல் குரைஷி
(ரஹ்' அறிவிக்கின்ற ஓர் அறிவிப்பை இங்கே நாம் தருகிறோம்
முத்தான பத்து அறிவுரைகள்
அவ்ஃப் இப்னு முஹல்லிம் ஷைபானி என்ற பிரசித்தி பெற்ற
ஓர் அரபுத் தலைவர் தம் மகள் உம்மு இயாஸ் என்பவரை ஹாரிஸ் இப்னு அம்ர் என்பவருக்கு மணமுடித்துக்
கொடுத்தார். உம்மு இயாஸ் அலங்கரிக்கப்பட்டு கணவரின் வீட்டிற்கு வழியனுப்பப்பட்ட
போது, அந்தப் பெண்ணின் தாய், உமாமா பின்த்
ஹாரிஸ் வந்தார்
இலக்கிய நயத்துடன் பேசுகின்ற அறிவும், சீரிய
சிந்தனையும் பெற்ற அவர் தம் மகளுக்கு அப்போது வழங்கிய அறிவுரை வரலாற்றில்
பொன்னெழுத்துக்களான பொறிக்கப்பட வேண்டியவை. இதோ.. அவரின் அறிவுரை
என் அருமை மகளே ஒழுக்கத்தில் சிறந்தவருக்கும், கண்ணியமான
பரம்பரையைச் சேர்ந்தவருக்கும் அறிவுரை தேவையில்லை என்றால், அது உனக்கும்
தேவையில்லை தான். இருப்பினும் அறிவுரை என்பது, மறதி
உள்ளவர்களுக்கு ஒரு நினைவூட்டல், அறிவுள்ளவர்களுக்கு ஓர் உதவி
என் அருமை மகளே! தந்தையின் செல்வம், அன்பு, நெருக்கம் ஒரு
பெண்ணுக்கு போதுமானது என்றால் அவை உனக்கும் போதுமானது தான். இருப்பினும் பெண், ஆணுக்காக
படைக்கப்பட்டவள், ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்பட்டவன்
என் அருமை மகளே! எந்தச் சூழ்நிலையில் நீ இது வரை
வளர்ந்து வந்தாயோ அந்தச் சூழ்நிலையிலிருந்து இனி நீ பிரியப் போகிறாய். எந்தக்
கூட்டிற்குள் நீ வளர்ந்தாயோ, அந்தக் கூட்டை விட்டு வெளியேறி, இதுவரை அறியாத
ஒரு கூட்டிற்கு செல்லப் போகிறாய்! அந்த நண்பன் உன்மீது உரிமை பெற்றிருப்பதால் அவன்
உனக்கு அரசனாக ஆகிறான். நீ அவனுக்கு அடிமையாக இருந்தால், அவனும்
உனக்கு அடிமையாக மாறி விடுவான். நான் உனக்கு 10 நற்பண்புகளைச் சொல்கிறேன்.
அவற்றை நன்றாக நினைவில் பதித்துக் கொள்.
1. உன் கணவனுடன் போதுமென்ற தன்மையோடு நீ பழகிக் கொள்!
போது மென்ற தன்மையில் தான் மனதிற்கு அமைதி இருக்கிறது
2. கணவரின் சொல்லைச் செவிதாழ்த்திக் கேட்டு, கட்டுப்பட்டு
நடந்து கொள் அதில் தான் அல்லாஹ்வின் திருப்தி இருக்கின்றது
3. உன் கணவரின் மூக்கு எதை நுகர்கிறது என்பதைத்
தெரிந்து கொள்! நல்ல நறுமணத்தையேத் தவிர வேறு எதையும் அவர் உன்னிடம் நுகர்ந்து விட
வேண்டாம்
4. உன் கணவரின் கண் எதைப் பார்க்கிறது என்பதைக்
கவனித்துக் கொள் அருவருப்பான எதையும் உன்னிடத்தில் அவர் பார்த்து விட வேண்டாம்.
சுர்மா இட்டுக்கொள்: அது கண்களுக்கு கவர்ச்சி தரும். குளித்துச் சுத்தமாக இரு!
தண்ணீரும் நறுமணமாகும்
5. கணவர் உணவு உண்ணுகின்ற நேரங்களை நன்கு அறிந்து
வைத்துக் கொள். பசி கொளுந்து விட்டு எரியும் நெருப்பாகும்
6. அவர் தூங்குகின்ற பொழுது அமைதி காத்துக்கொள்
தூக்கத்தைக் கெடுப்பது எரிச்சலூட்டக்கூடிய செயல்.
7. கணவனின் உறவினர்
மற்றும் குடும்பத்தினரைப் பேணிக் கொள்! அதன் மூலம் தான் குடும்பத்தை அழகிய
முறையில் நிர்வகிக்க முடியும்
8. கணவரின் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்! அதன்
மூலம் குடும்பத்தை அழகிய முறையில் சீர்படுத்த முடியும்
9. கணவரின் இரகசியத்தை பகிரங்கப்படுத்தாதே! அதனால்
அவரின் வஞ்சகத்திற்கு ஆளாக நேரிடும்.
10. கணவரின் கட்டளைகளுக்கு மாறு செய்யாதே! அதனால்
அவரைக் கோப மூட்டியவளாக ஆகிவிடுவாய்
என்னருமே மகளே
கணவர் துயரத்தில் இருக்கின்ற போது நீ
மகிழ்ந்திருப்பதைத் தவிர்த்துக் கொள். இது ஒழுக்கக் குறைவாகும். கணவர் மகிழ்ச்சியுற்று
இருக்கின்றபோது நீ கவலையில் இருப்பதையும் தவிர்த்துக் கொள் அது உங்கள் இருவரது
மகிழ்ச்சியையும் கெடுக்கும். எந்த அளவிற்கும் கணவரைக் கண்ணியப்படுத்தி மதிக்க
முடியுமோ அந்த அளவிற்கு மதித்து வாழ்ந்து கொள்! அவரும் அதே அளவிற்கு உன்னை கண்ணியபடுத்துவார்
மேலும் எந்த அளவிற்கு அவருக்கு கீழ்ப்படிந்தவளாகவும், கட்டுப்பட்டவளாகவும்
இருக்க முடியுமோ, அந்த அளவிற்கு ஓற்றுமையுடன் வாழ்ந்து கொள்வீர்கள் அவர்
உன்னை விட்டுப் பிரியமாட்டார். உன்னுடன் வாழ்வதையும் சேர்ந்திருப்பதையுமே
விரும்புவார்
என்னருமை மகளே! நீ விரும்பியதை உன் கணவரிடம் அடைய
வேண்டுமென்றால், உன் விருப்பத்தை விட அவர் விருப்பத்திற்கே அதிக
முக்கியத்துவம் கொடு. உன் மகிழ்ச்சியை விட அவர் மகிழ்ச்சிக்கே அதிக முன்னுரிமை
கொடு! அது உனக்கு விருப்பமாகவோ, வெறுப்பாகவோ இருந்தாலும் சரி! அல்லாஹ் உனக்கு நன்மையே
நாடட்டும்! அல்லாஹ் உன்னைப் பாதுகாக்கட்டும்
தன் தாயின் இந்த உயர்ந்த அறிவுரைகளுக்கு இணங்க
அப்பெண்மணி வாழ்ந்ததால், கணவரிடம் கண்ணியம் அடைந்தார். அவர்களுக்குப் பிறந்த
குழந்தைகள் பிற்காலத்தில் அரபுலகத்தின் பிரசித்தி பெற்ற அரசர்களாக இருந்தார்கள் வரலாறு
கூறுகிறது. (ஜம்ஹரத்து குதபில் அரபு
பெண்களே! இதுபோன்று நீங்களும் வாழ்ந்து உங்கள்
குழந்தைகளையும் போன்று வாழக்கூடிய பெண்களாக உபதேசித்து உருவாக்கி வந்தால் நம்
இஸ்லாமிய சமுதாயம் பெண்ணினத் திற்கே முன் மாதிரியாக விளங்கும்! சுபிட்ச வாழ்விற்கு
வழிகாட்டும் குடும்பப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்! சிந்தித்து செயல்படுவோமாக.
MANARUL HUDA JUMADHAL OOLA- 1432 APRIL - 2011.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக