கலிங்கப்போர். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மாவீரனான அசோகன் மனமாற்றம் அடைந்து அகிம்சைக்கு மாறிய கதை.
ஆனால் கலிங்கப் போருக்கு முந்தைய அசோகனையும் நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் தேவலை.
மவுரிய வம்சத்தை நிறுவியவர் சந்திரகுப்தர். அவருடைய மகன் பிந்துசாரன். பிந்துசாரனின் எண்ணற்ற மனைவியர்களில் ஒருவர் சுபத்ராங்கி. சம்பா என்கிற நகரத்தைச் சேர்ந்த ஒரு பிராமணரின் மகள். இவரை கைப்பிடித்தால் அரசனுக்கு ஜோதிட அடிப்படையில் உயர்வு கிடைக்குமென்று ஜோதிடர்கள் கதைவிட, பிந்துசாரரின் மனைவியானார் சுபத்ராங்கி. பேரரசருக்கும், அரசிக்கும் அப்போது ஏதோ மனத்தாங்கல் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தனக்கு மகன் பிறந்த பிறகு ‘நான் இப்போது வருத்தமில்லாமல் இருக்கிறேன்’ என்று பொருள் வரும்படியான பெயரை மகனுக்கு சூட்டியிருக்க மாட்டார். அசோகரின் பெயருக்கு இப்படியொரு கதை சொல்லப்படுகிறது.
அசோகருக்கு முன்பே பிந்துசாரருக்கு நிறைய மனைவிகள் மூலமாக ஏராளமான மகன்களும், மகள்களும் உண்டு. தனக்கும், தன்னுடைய அம்மாவுக்கும் பேரரசில் போதிய முக்கியத்துவம் இல்லையென்று நினைத்தாரோ, என்னவோ தெரியவில்லை. அரச குடும்பத்துப் பண்புகளை மீறி முரடராகவே வளர்ந்தார் அசோகர். மற்ற இளவரசர்கள் பட்டாடை அணிந்து பளிச்சென்று இருக்க எப்போதுமே அசோகர் மட்டும் கடுமையான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வியர்வை வழிய, கடைமட்ட போர் வீரன் மாதிரி திரிவார். ஒரு முறை அரசர் பரிவாரங்களோடு வேட்டைக்குச் சென்ற போது, இளவரசரான அசோகரும் கூட சென்றிருந்தார். காட்டில் திடீரென்று சிங்கத்தின் கொடூரமான உறுமல். வேட்டைக்குச் சென்றவர்கள் ஒரு கணம் விக்கித்துப் போனார்கள். வாளையும், வேலையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு சுற்றிலும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அசோகரை திடீரென்று காணவில்லை. அவரிடம் வாள் கூட இல்லை. இளவரசரை காணோமென்று பயங்கர பரபரப்பு.
மீண்டும் சிங்கத்தின் உறுமல் கேட்டது. ஆனால் இம்முறை சற்று பலகீனமாக. சத்தம் வந்த திசைக்கு எல்லோரும் ஓடிச் சென்று பார்த்த போது, மரணமடைந்து விட்ட சிங்கத்தின் மீது கம்பீரமாக நின்றிருந்தார் அசோகர். அவரது கையில் சிங்கத்தின் ரத்தம் சொட்டச் சொட்ட வெறும் மரக்கட்டைதான் இருந்தது. கட்டையால் அடித்தும், குத்தியும் மட்டுமே சிங்கத்தோடு தீரமாக போரிட்டு வென்றிருந்தார் இளவரசர். மரணத்துக்கு சற்றும் அஞ்சாத தன்னுடைய மகனை பேரரசை விரிவாக்கும் போர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார் பிந்துசாரர். அவந்தி மாகாணத்தில் அரசுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியை அடக்க அசோகர் விரைந்தார். சற்றும் மனச்சாட்சியற்ற இராணுவ இயந்திரமாக போர்க்களத்தில் அவர் செயல்பட்டார். எதிரிகளுக்கு மரணத்தைத் தவிர வேறெதையும் அளித்திட அசோகருக்கு மனமில்லை. மவுரிய பேரரசுக்கு டேக்கா கொடுத்துக் கொண்டிருந்த பல சிற்றரசர்களை வாள் முனையில் சந்தித்தார். வீரத்துக்குப் பரிசாக உஜ்ஜயினியின் ஆளுனராக அசோகர் நியமிக்கப்பட்டார்.
பிந்துசாரரின் மறைவுக்குப் பிறகு பதவியேற்க பல மூத்தவர்கள் இருந்தாலும் அசோகர் அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் பேரரசர் ஆனார். குறிப்பாக அப்பாவின் அமைச்சரவையில் இருந்த ரதகுப்தாவின் ஆதரவு அவருக்கு அமோகமாக இருந்தது. பதிலுக்கு ரதகுப்தா அசோகரின் அமைச்சரவையில் முதலமைச்சர் ஆனார். இயல்பிலேயே மூர்க்கத்தனமும் சந்தேகக் குணமும் கொண்டவராக ஆரம்பகால பேரரசர் அசோகரை வரலாறு பதிவு செய்கிறது. அரசவையில் இருந்தவர்களுக்கு விசுவாச சோதனை வைப்பாராம். அதில் தோற்பவர்களுக்கு மரணம் தான் கதி. நூற்றுக்கணக்கானவர்கள் இம்மாதிரி கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள்.
ஆனாலும் அசோகரின் ‘அந்தப்புரம்’ அமோகமாகதான் இருந்திருக்கிறது. ஐநூறு மனைவியராவது இருந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அடாவடியாக அரசி ஆக்கப்பட்டவர்கள். முரட்டுத் தோலும், சிடுசிடு முகமுமாக இருந்த அசோகரை பல அரசிகள் விரும்பவில்லை. இல்லறத்துக்கு முரண்டு பிடித்த பல அரசிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அசோகரின் அரசாங்கத்தில் ‘டார்ச்சர் முகாம்’கள் இருந்ததாகவும், தண்டனைக்கு உள்ளானவர்கள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளானதாகவும் தெரிகிறது. இதனாலேயே மன்னருக்கு ‘சண்டா அசோகா’ என்கிற பட்டத்தை பயத்தோடு மக்கள் சூட்டியிருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்த எட்டே ஆண்டுகளில் மவுரியப் பேரரசை பரப்பளவில் பன்மடங்கு விரிவுப்படுத்தினார். ஆனால் எட்டாண்டுகளாக போர் நடந்தும் கலிங்கத்தை மட்டுமே அவரால் வெல்ல முடியவில்லை. நேரடியாக அசோகர் படைகளுக்கு தலைமை தாங்கி களமிறங்கியதும் நிலைமை வெகுவேகமாக மாறியது. வெற்றியை உரித்தாக்கிக் கொள்ள மவுரியர்கள் இழந்தது அதிகம். போர் முனையில் ஒரு லட்சம் வீரர்கள் உயிரிழந்தார்கள். ஒன்றரை லட்சம் பேர் அங்கஹீனமானார்கள். கலிங்கமே மவுரியப்படையில் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. மூர்க்கத்தனமான முரடரும், கொடூர மனம் படைத்தவருமான அசோகருக்கே அந்த கோரம் சகிக்கவில்லை.
“நான் என்ன தான் செய்திருக்கிறேன்? அப்பாவி குழந்தைகளையும், பெண்களையும் கொல்வதை வெற்றி என்றா சொல்லமுடியும்? பலர் கணவர்களை இழந்திருக்கிறார்கள். அப்பாவை இழந்திருக்கிறார்கள். குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். பெற்றோர் அற்ற அனாதைக் குழந்தைகள் ஏராளம். காக்கைகளுக்கும், கழுகுகளுக்கும் இரையாகவா மனிதர்கள் பிறந்தார்கள்?” என்று புலம்பினார். இந்த குற்றவுணர்ச்சியே அவர் பவுத்தத்தை தழுவ காரணமானது.
அதுவரை கொடூரமானவராகவும், கொலை பாவங்களுக்கு அஞ்சாதவருமாக பார்க்கப்பட்ட மாமன்னர் அசோகர் அகிம்சை வழிக்கு மாறிய பிறகு உலகப்புகழ் பெற்றார். புத்தருக்கு ஞானம் கிடைத்த கயாவுக்கு சென்றார். மகாபோதி ஆலயத்தை நிறுவினார். தன்னுடைய மகனையும், மகளையும் பவுத்தத்தை பரப்ப வெளிநாடுகளுக்கு அனுப்பினார்.
ஒரே ஒரு மாற்றம் போதும். வரலாறே மாற்றி எழுதப்பட்டு விடும்.
நன்றி : முகநூல்
Eppati iruntha ni ippati?ore our marram take!
பதிலளிநீக்கு