வியாழன், 13 டிசம்பர், 2018

முத்தான மூன்று உபதேசங்கள்.


      ஆடியோ உரை  : மௌலானா, மௌலவி, அல்ஹாபிழ், அல்ஹாஜ்.
                                                      S.Sஅஹ்மது பாஜில் பாகவி
                 [தலைமை இமாம் மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூர் மலேசியா.]

நபித்தோழர் அபூதர் கிஃபாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். எனக்கு எனது நேசர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மூன்று உபதேசங்கள் செய்தார்கள்.

1.) தலைமைக்குக் கட்டுப்படு.  தலைமை சொல் கேள். அந்த சொல் மூக்கு அறுபட்ட ஒரு அடிமையின் சொல்லாக இருந்தாலும் சரியே.

2.) சால்னா செய்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து. பின்பு உன் அண்டைவீட்டாருக்கு அதிலிருந்து கொடுத்துவிடு.

3.) தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விடு.
நூல் : முஸ்லிம்.

1.) முதலாவது உபதேசம்:

தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பது.

தலைமை என்றால் உனக்கு மேல் பொறுப்பில் உள்ளவர் என்று பொருள். எனவே உனக்கு மேலுள்ள ஆட்சித்தலைவர், குடும்பத் தலைவர், நீ சார்ந்த அமைப்பின் தலைவர், பணி செய்யும் நிறுவனத்தின் தலைவர், இப்படி எல்லாத் தலைமைக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

அல்லாஹுத்தஆலா குர்ஆனில் கூறுகிறான்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّـهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّـهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّـهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

                                                             ( அத்தியாயம்-4 வசனம் 59.)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தலைமையின் சொல் கேட்டு நடப்பது ஒரு முஸ்லிமின் மீது கட்டாயக் கடமை. பாவம் செய்ய உத்தரவிடப்பட்டாலே தவிர. அப்போது யார் சொல்லையும் கேட்டு நடக்க வேண்டியதில்லை" எனக் கூறினார்கள்.

                               ( நூல் : புகாரி 7144 )

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். உலர்ந்த திராட்சை போன்ற சிறு தலை உடைய ஒரு அபிசீனிய கருப்பு நிற அடிமை உங்கள் மீது தலைவராக ஆக்கப்பட்டாலும் நீங்கள் அவருக்கு செவிமடுங்கள்.

                                   ( நூல் : புகாரி 7142 )

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
தலைமைக்குக் கட்டுப்படாமல் மரணித்தால் அறியாமைக் காலத்து (ஈமான்-நம்பிக்கை இல்லாத) மரணம் சம்பவிக்கும் என்று கூறினார்கள்.

                                  ( நூல் : முஸ்லிம் 1477 )

ஆக, நாம் நம் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். என்பது முதல் உபதேசமாகும்.

2 ) இரண்டாவது உபதேசம்:

வீட்டில் சால்னா சமைத்தால் அதைக் கொஞ்சமாக சமைக்காமல் தண்ணீர் அதிகம் சேர்த்து அண்டை வீட்டாருக்கும் கொடுத்துவிட வேண்டும் இதன்மூலம் பரஸ்பரம் அன்பு உதவி ஒத்தாசைகளை பரிமாறிக் கொள்வதோடு அவர்களின் பசியைப் போக்கவும் இது உதவும் மேலும் அவர்களின் ஏக்கப்பார்வை ஏக்கப் பெருமூச்சு விழாமல் நம்மைப் பாதுகாக்கும்.

நம் வீட்டு சால்னா தாளிக்கும் வாசனை பக்கத்து வீட்டினரின் மூக்கைத் துளைத்து, அது அவர்களுக்கு (குறிப்பாக சிறுவர்களுக்கு) கிடைக்காமல் போனால்... அவர்களின் நிறைவேறாத அந்த ஆசை அந்த உணவை உண்பவருக்கு பல விதமான பாதிப்புகளை உண்டாக்கலாம். முஸ்லிம்கள் சேர்ந்து வாழும் ஊர்களில் இந்த நபிமொழி நடைமுறையில் இருந்தது.

எங்களது வீட்டில் கறியோ, மீனோ சமைத்தால் எனது தாயார் முதலில் அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடுத்த வீட்டுக்கு கொடுத்து அனுப்புவார்கள். நானே சிறுவயதில் இப்படிப் பலமுறை கொண்டு போய் கொடுத்து இருக்கிறேன். அதுபோல அங்கிருந்தும் எங்களுக்கு வரும். சில சமயம் உரிமையோடு கேட்டும் வருவார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்காக பருப்பு கறி பரிமாற்றம் அடிக்கடி நடக்கும். இது பரஸ்பரம் பாசத்தையும் நேசத்தையும் அதிகரிக்கும் செயலாக இருக்கிறது. இப்படிப்பட்ட இந்த அழகான நபிமொழி இன்று நடைமுறை பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டது.

இன்று இவ்வாறு கொடுப்பதற்கும் யோசிக்கிறார்கள், அதை வாங்குவதற்கும் தயங்குகிறார்கள். இப்படி வாங்குவதை கௌரவக் குறைச்சலாகவும், சந்தேகத்திற்குரியதாகவும் இப்போது கருதுகிறார்கள். புதுப்புது குடியேற்றங்கள் அதிகமாக நிகழும் நகர்ப்புற வீடமைப்பில் எல்லோரும் தனித்தனி தீவுகளாக வாழ்ந்து வருவதால்  இப்படி வாங்கிச் சாப்பிடுவதில் பல சந்தேகங்கள் பரப்பிவிடப்பட்டுள்ளது.

முன்புள்ள வாழ்க்கையில் விசாலமும் பரக்கத்தும் அபிவிருத்தியும் நிறைந்து இருந்தது. இப்போது எல்லாமே சுருங்கிவிட்டது. அல்லாஹ் உணவை ஊசிப் போக வைத்தது, பணக்காரர்கள் ஏழைகளுக்கு கொடுக்காமல் அதை சேமித்து வைத்து விடக்கூடாது என்பதற்காக வேண்டியதுதான்...என முன் வேதம் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாக வஹ்பு என்ற ஒரு அறிஞர் குறிப்பிடுகிறார்.

கி.மு 13 ல், பனூ இஸ்ரவேலர்களுடைய காலத்தில்தான் உணவு கெட்டுப் போக ஆரம்பித்தது. அதற்கு முன்னால் உணவு எத்தனை நாட்கள் ஆனாலும் அது கெட்டுப் போகாமல், துர்வாடை வராமல் இருந்தது.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்ரவேலர்கள் இல்லையெனில் இறைச்சி கெட்டுப் போய் இருக்காது என்று கூறினார்கள்.

                      (நூல் புகாரி 3330. முஸ்லிம் 1470.)

அல்லாஹ் அவர்களுக்கு "மன்னு-ஸல்வா" என்ற விசேஷ உணவை இறக்கி வைத்த போது அதை நாளைக்கு என்று எடுத்து வைக்கக் கூடாது என்று அவர்களுக்கு ஆணையிட்டிருந்தான். ஆனால் அவர்கள் அவநம்பிக்கை கொண்டு அதை சேமித்து வைத்தார்கள். அதற்கு தண்டனையாகத்தான் அன்று முதல் உணவு ஊசிப் போக போக ஆரம்பித்தது. வாழ்வாதாரங்களும் வசதிகளும் பெருகிவிட்ட இந்த நவீன காலத்தில் இதயம் மட்டும் சுருங்கிவிட்டது எனவே தான் இப்போதெல்லாம் சாப்பிட்டபின் மிச்சமிருப்பதை குளிர்சாதனப்பெட்டியில்  (ஃப்ரிட்ஜில்) வைத்து எத்தனை நாட்கள்  ஆனாலும் எடுத்து சூடாக்கி சூடாக்கி சாப்பிடுகிறார்களே தவிர,  அதை இல்லாதோருக்குக் கொடுப்பதில்லை .

அண்டை வீட்டாருக்கும் சேர்த்து சமைத்து, அவனையும் கவனி என்று சொன்னார்கள் அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புவாரோ அவர் அவரது அண்டைவீட்டாருக்கு உதவட்டும்."

                            (நூல் முஸ்லிம் 48.)

"அல்லாஹ்விடத்தில் சிறந்தவன் அவனது அண்டைவீட்டாரிடத்தில் சிறந்தவனே."

                                      (நூல் அபூதாவூத் 1586)

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"ஹழ்ரத் ஜிப்ரயீல்  (அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்கள்  அண்டைவீட்டாருக்கான உரிமையை என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தார்கள். எங்கே சொத்தில் பங்கு கொடுக்கச் சொல்வார்களோ என்று கருதுமளவுக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள்."

                   ( நூல் : புகாரி 6016. முஸ்லிம் : 2,624. )

சால்னா சமைக்கும் போது தண்ணீரை அதிகம் சேர்த்து அண்டை வீட்டாருக்கும் கொடுத்துவிட வேண்டும் என்று சொல்வதின் நோக்கம்... அண்டை வீட்டாருக்கு உதவுவதே இங்கே நோக்கமாகும்.

3) மூன்றாவது உபதேசம்:

தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விடவேண்டும்.

 ۚ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا

 ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பட்டுள்ளது. (4:103).

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். (107:4.5)

மேற்கூறிய வசனங்களில்  தாமதமாக தொழுபவர்களை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்று நபிமொழியில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

                                 (நூல் பஸ்ஸார் : 392)

அல்லாஹ்வுக்குப் பிரியமான தொழுகை எனும் கடமையை உரிய நேரத்தில் தொழுது அவனது பேரருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

عبد الله بن سلام رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم أول مقدمه المدينة مهاجراً يقول: «أيها الناس أفشوا السلام، وأطعموا الطعام، وصلوا الأرحام، وصلوا بالليل والناس نيام، تدخلوا الجنة بسلام» (متفق عليه).


ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் யூத மதத்தின் அறிஞராக இருந்து இஸ்லாத்தைத் தழுவியவர். தான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் நடந்த ஒரு நிகழ்வை அறிவிக்கின்றார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திரு மதினா நகர் வந்து சேர்ந்த பொழுது அவர்களைக் காண நான் வந்தேன். நபியவர்களின் திருமுகத்தை நான் தெளிவாக பார்த்த பொழுது, அந்த முகம் பொய் முகம் அல்ல என விளங்கிக் கொண்டேன்.
அவர்கள் வந்ததும் பேசிய முதல் பேச்சு:

" மக்களே ஸலாமைப் பரப்புங்கள், ஏழைகளுக்கு உணவளியுங்கள், உறவினர்களை சேர்த்துக் கொள்ளுங்கள், மக்களெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கையில் இரவில் எழுந்து தொழுங்கள், ஒரு பாதிப்பும் இல்லாமல் நிம்மதியான முறையில் பத்திரமாக சொர்க்கம் செல்வீர்கள். " என்றார்கள்.

                             (நூல் : திர்மிதி 2452 )

அல்லாஹ்வின் தூதர் புனித மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தபோது அங்குள்ள மக்கள்,ஆண்கள், பெண்கள்,சிறுவர், சிறுமியர் எல்லோரும் சேர்ந்து நபிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இந்த வரவேற்பை ஏற்று ஏற்புரை நிகழ்த்திய போதுதான் மேற்கண்டவாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பேசினார்கள்.

இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கன்னிப் பேச்சு.

திரு மதினாவிற்கு வந்தது மட்டுமல்ல இந்த உலகத்திற்கு தான் வந்தது நபியாக அனுப்பப்பட்டது ஏன்? எதற்கு? என்பதையும் இந்தப்பேச்சு தெளிவுபடுத்துகிறது.

அவர்கள் சொன்ன முதல் விஷயம் ஸலாமைப் பரப்புங்கள். சாந்தி சமாதானத்தை பரப்புங்கள். இஸ்லாமிய மார்க்கத்தை பரப்புங்கள். நான் இவ்வுலகிற்கு வந்தது, அச்சத்தைப் போக்கி அமைதியை நிலைநாட்டுவதற்குதான் என்பதை தனது முதல் பேச்சில் தெளிவுபடுத்தினார்கள்.

அரபு நாட்டில் அந்தக் காலத்தில் யாருக்கு யாரால் எப்பொழுது எந்த தீங்கு விளையுமோ என்ற பயம் இருந்தது. ஒருவர் எதிரில் வந்தால் இவரால் நமக்கு என்ன ஆபத்து ஏற்படுமோ தெரியவில்லையே என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான், என்னால் உனக்கு எந்தத் துன்பமும் நேராது என்ற உத்திரவாதத்தை "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறுவதன் மூலம் தெரிவித்து விடுங்கள் அவரும் என்னாலும் உனக்கு எந்த ஆபத்தும் வராது என்ற பதில் வாக்குமூலத்தை "வஅலைக்கும் ஸலாம்" என்று கூறுவதின் வழியாக தெரிவித்து விடட்டும். என இஸ்லாம் கற்பித்தது.

பல இன மக்கள் வசித்து வந்த மதினாவிற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அங்கு முதன்முதலாக   பேசிய இந்தப்பேச்சு... என்னால்- நான் கொண்டுவந்த இந்த மார்க்கத்தால், என்னை ஏற்றுக் கொள்ளாத மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நான் கொண்டு வந்துள்ள இஸ்லாமிய மார்க்கம் எல்லா இன மக்களுக்கும் சாந்தி சமாதானத்தை நல்கும் சத்திய இஸ்லாம் ஆகும் என நம்பிக்கையூட்டுவதாக அமைந்திருந்தது.

இந்த உலகில் யாரும் சண்டை சச்சரவு  செய்யாமல் சமாதானமாக இருக்க வேண்டும் என்றால் இஸ்லாமிய மார்க்கத்தை உலகின் எல்லா பகுதியிலும் பரப்ப வேண்டும் மக்கள் ஒருவருக்கொருவர்  சந்திக்கும் போது தங்களுக்கு இடையில் ஸலாம் சொல்வதை அதிகப்படுத்த வேண்டும். அறிமுகமானவர்- அறிமுகமில்லாதவர் பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடு பாராமல் அதிகமாக ஸலாம் சொல்ல வேண்டும்.

இந்த முகமன் வார்த்தையை, பகலிலும்-இரவிலும் மங்கலமான-அமங்கலமான எல்லா இடத்திலும், எல்லா காலகட்டத்திலும் செல்லலாம்.

ஒருவன் காலையில் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான்.  வேதனையோடும் வலியோடும் சோகமாக சோர்ந்திருக்கும் அவனிடம் Good Morning (உனக்கு நல்ல காலை) என்று கூற முடியுமா...? அவனை நலம் விசாரிக்கச் சென்றால் Good Evening  (நல்ல மாலை) என்று கூற முடியுமா...? மரணம் சம்பவித்த ஒரு வீட்டிற்கு சென்று நல்ல காலை என்றோ நல்ல மாலை என்றோ கூற முடியுமா...?

ஆனால் எல்லா இடத்திலும் அஸ்ஸலாமு அலைக்கும் உனக்கு சுகம் உண்டாகட்டும் உனது மனம் சாந்தி அடையட்டும் உனக்கு சமாதானம் கிடைக்கட்டும் எனக்கூறி வாழ்த்தலாம். ஸலாம் என்பது அர்த்தம் நிறைந்த சொல்.

எல்லாவகையான வியாதி- வேதனை- இடையூறு-துன்பம்- சிக்கல்-கஷ்டம்-நஷ்டம் இந்த உலகிலும் மறு உலகிலும் உனக்கு ஏற்படுவதை விட்டு பாதுகாப்பும் சுகமும் கிடைக்க வாழ்த்தும் ஒரு அதிஅற்புதமான மந்திரச்சொல்தான் இந்த  ஸலாம் எனும் வார்த்தை.

அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வது எல்லாவிதமான அசுகத்தை விட்டும் அல்லாஹ் உனக்கு குணம் அளிப்பானாக என்று வாழ்த்துவதாகவும் இருக்கிறது. சொர்க்கத்திற்கு "தாருஸ்ஸலாம்" (சாந்தியும் சமாதானமும் அளிக்கும் வீடு) என்று பெயர். அல்லாஹ் தாருஸ்ஸலாம் சொர்க்கத்திற்கு வருமாறு அழைக்கிறான்.

وَاللَّـهُ يَدْعُو إِلَىٰ دَارِ السَّلَامِ وَيَهْدِي مَن يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ

மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
                                              ( 10:25 ).

அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் கூறுவது உனக்கு சொர்க்கம் கிடைக்கட்டும் என்று வாழ்த்துவதாகும்.

அஸ்ஸலாமு என்பது அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்றாகும்.

அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவது உனக்கு அல்லாஹ்வே கிடைக்கட்டும் என்று வாழ்த்துவதாகவும். இதைவிட பெரிய வாழ்த்து வேறு என்னவாக இருக்க முடியும்..?

உலகில் நடைமுறையில் இருக்கிற முகமன் சொற்களில் இந்த ஸலாத்தை போல அர்த்தமுள்ள கருத்துச்செரிவுள்ள வேறு முகமன் எதுவும் உண்டா..?

எல்லா வகையிலும் சிறந்த, இந்த இஸ்லாமிய முகமனை அதிகமதிகம் சொல்லி ஸலாமைப் பரப்புங்கள்

நம் எல்லோருக்கும் ஸலாம் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.


எழுத்தாக்கம்  :   A. முஹம்மது ஹதீஸ் மஸ்லஹி.
                       A.காதிர் மீரான் மஸ்லஹி.


( தொடர்புக்கு  :       9003609448  :     99521299706 )

                                    ஆக்கம் NO : 6.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக