செவ்வாய், 18 டிசம்பர், 2018

தண்ணீர் பற்றிய கேள்வி : பதில்கள்.


கேள்வி : எந்தெந்த நீரினால் ஒளுவும் குளிப்பும் நிறைவேறும்..?

பதில் : மழை நீர், கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர், கடல் நீர், ஓடும் தண்ணீர் இவற்றில் ஒளுவும் குளிப்பும் நிறைவேறும்.


கேள்வி : தண்ணீரின் சுவை, மணம், நிறம் இவைகள் மாறியிருந்தால் அந்நீரைக் கொண்டு ஒளுவையோ, குளிப்பையோ நிறைவேற்றிக் கொள்ளலாமா...?

பதில் : தண்ணீரில் தூய்மையான பொருள்கள் அதாவது மண், சவர்க்காரம், குங்குமப்பூ போன்றவைகள் விழுந்து அதன் காரணமாக தண்ணீர் மாறியிருந்தால் அந்நீரால் ஒளு குளிப்பு போன்றவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

கேள்வி : ஓடும் நீரில் அசுத்தமான ஒரு பொருள் விழுந்திருந்தால் அந்நீர் பயன்படுத்த தகுதியானதா...?

பதில் : ஓடும் நீரின் தன்மைகளான சுவை, மணம், நிறம், இவற்றில் எது ஒன்றும் கெடாதிருப்பின் அந்நீர் பயன்படுத்துவதற்குரியதேயாகும். அவ்வாறின்றி மணம், சுவை, நிறம் முதலியவற்றில் ஏதாவதொன்று மாறுபட்டிருந்தால் பயன்படுத்தக்கூடாது.


                    கிணற்றின் சட்டம்.

கேள்வி : கிணற்றில் புறா, பூனைப் போன்றவை விழுந்து ஊதிப் போகமலும், வெடிக்காமலும் இருந்தால் அதன் சட்டம் என்ன...?

பதில் : அக்கிணற்றிலிருந்து நாற்பது வாளி நீர் முதல்  அறுபது வாளிகள் வரையும் இறைக்க வேண்டும்.

கேள்வி : எலி, சிட்டுக்குருவி போன்றவை விழுந்து ஊதாமல், வெடிக்காமல் கிடக்குமாயின் அதன் சட்டம் என்ன...?

பதில் : அக்கிணற்றிலிருந்து இருபது முதல் முப்பது வாளிகள் வரை நீர் இறைத்து விட்டால் அது துப்பரவு ஆகிவிடும்.

கேள்வி : கிணற்றிலோ, ஹவ்ளுகளிலோ ஈ, கொசு, மீன், நண்டு, தவளைப் போன்றவைகள் விழுந்து செத்துக் கிடந்தால் அந்நீரானது சுத்தமானதா...?

பதில் : எந்த ஓர் உயிரினத்தின் உடலில் இரத்தம் ஓடாமல் இருக்குமோ அத்தகைய ஓர் உயிர் கிணற்றிலோ, ஹவ்ளுகளிலோ விழுந்துச் செத்திருந்தாலும், அல்லது அவற்றுள் செத்தே கிடந்தாலும் அவைகள் துப்பரவானவைகளேயாகும்.

கேள்வி : ஒரு கிணற்றில் எலி போன்ற ஓர் உயிர் அல்லது ஏதாவது நஜீஸ்கள் விழுந்துச் செத்துக் கிடந்தாலோ,வீங்கி வெடித்துச் சிதறி இருந்ததை அறியாமல் ஒருவர் அந்நீரில் குளித்திருந்தால், ஒளுச்செய்து தொழுதிருந்தால் அவரின் நிலை என்ன...?

பதில் : அக்கிணற்றில் நஜீஸ் விழுந்ததுமே அந்த நீர் அசுத்தமாகிவிட்டது. எனவே அந்த அசுத்தம் விழுந்த நேரம் எதுவென்று தெரிந்தால், அந்நீரில் ஒளுவோ, குளிப்போ நிறைவேற்றியவர் அந்நேரத்திலிருந்து அவர் தொழுத எல்லா தொழுகைகளையும் அவர் மீண்டும் தொழ வேண்டும். அது விழுந்து செத்த நேரம் தெரியாவிட்டால், அவ்வுயிர் பிராணி வெடிக்காமலும், ஊதிப்போகமலும் இருந்தால் அத்தண்ணீரில் ஒளுவையும், குளிப்பையும் நிறைவேற்றியவர் ஓர் இரவு, ஒரு பகல் தொழுத தொழுகையை திரும்ப தொழ வேண்டும். அல்லது அவ்வுயிர் பிராணி ஊதி வெடித்துச் செத்திருந்தால் அத்தணீரில் ஒழுவையும், குளிப்பையும் நிறைவேற்றியவர் மூன்று இரவு, பகல் தொழுத தொழுகைகளைத் திரும்ப தொழ வேண்டும்.

கேள்வி : கோழி, பூனை அல்லது அவை அளவுள்ள உயிர்பிராணிகள் கிணற்றில் விழுந்து இறந்துவிட்டால் அதன் சட்டமென்ன...?

பதில் : கேள்வி யில் உள்ள உயிர்பிராணிகள் விழுந்து இறந்து விட்டால் நாற்பது வாளிகளுக்கு குறையாமல் அக்கிணற்று நீரை இறைத்து விட வேண்டும். அறுபது வாளிகள் வரை இறைப்பது முஸ்தஹ்ப்பு என்னு  விரும்பத்தக்கதாகும்.

கேள்வி : பத்துமுழ நீளம், பத்துமுழ அகலம் கொண்டதாக இல்லாத கிணறு, நீர்த்தொட்டிகள் முதலியவற்றில் உள்ள நீரில் அசுத்தங்கள் விழுந்தாலோ, மனிதன், நாய், எலி போன்றவை விழுந்து இறந்துபோனாலோ அந்நீரின் சட்டம் என்ன...?

பதில் : கிணறு, நீர் நிலைகளில் மனிதன் விழுந்து இறந்து போனாலும், ஆடு, நாய் போன்றவைகள் விழுந்து செத்துக் கிடந்தாலும், ( பன்றி விழுந்தாலே இச்சட்டம் பொருந்தும், இவை சாக வேண்டியதில்லை)  நீரில் விழுந்து ஊதி வெடித்து இறந்திருந்தாலும், சிறிய உயிரினமாக இருந்தாலும், கிணற்று நீர் முழுவதையும் இறைத்திட வேண்டும். நீர் முழுவதையும் இறைத்திட முடியாது என்றால் கிணற்றில் தண்ணீர் எடுக்கப் பயன்படும் வாளியில் நடுத்தரமான வாளியில் 200 வாளி நீர் இறைத்து கீழே ஊற்றிவிட வேண்டும். நீர் முழுவதையும் இறைத்து விடுவது முஸ்தஹ்பாகும். 200 குறையாதிருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக