திங்கள், 28 நவம்பர், 2022

சோறு வரும் வழி..

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ


நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு சோறு வரும் வழி என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

உணவும் தண்ணீரும் அல்லாஹ்வின் அருள்கொடைகளில் ஒன்று. ஆனால் அந்த அருட்கொடைகளின் அருமை தெரியாமல் எவ்வளவோ உணவுகளையும் தண்ணீரையும் இன்று நாம் வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.

அதுமட்டுமல்ல இது பற்றி நாளை மறுமையில் அல்லாஹ் நம்மிடம் விசாரிப்பான் என்பதை கூட உணராமல் நம் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றோம்.

 அல்லாஹ்வின் நல்லடியார்களே....

இன்று உலக அளவில் எவ்வளவோ உணவுகள் அனுதினமும் வீணடிக்கப்படுகின்றது சாக்கடைகளிலும் குப்பை தொட்டிகளிலும் எத்தனையோ டன் உணவு கொட்டப்படுகின்றது.

உணவை வீணாக்காதீர்கள் என்று நாம் சொன்னால் சில பேர் தான் புத்திசாலியாக பேசுகிறோம் என்று நினைப்பில் வீணான உணவை கொட்டக் கூடாதா.....? என்று கேட்பார்கள்

ஆனால் கேள்வி என்னவென்றால் உணவு ஏன் வீணாக்குகிறோம் என்பதுதான் இங்கு கேள்வியாக இருக்கிறது என்றாவது ஒருநாள் வீணானால் பரவாயில்லை ஆனால் இன்று அன்றாடம் உணவு கொட்டுவது  உணவின் மீது மனிதனுக்கு இருக்கக்கூடிய அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.

 

இன்னும் சிலர் எங்களிடம் பணம் இருக்கிறது அதனால் நாங்கள் செலவு செய்கிறோம் இது எங்க பணத்துல வாங்கின உணவு இதை நாங்கள் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்வோம் என்பதாக ஆணவத்தோடு பேசுகிறார்கள்.

 

ஆனால் அல்லாஹ்வின் நல்லடியார்களே அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்

وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ

நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண் விரயம் மட்டும் செய்யாதீர்கள் ஏனென்றால் வீண்வணையை செய்பவரை அல்லாஹ் நேசிப்பது மாட்டான் என்பதாக திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

 

உலக அளவில் அக்டோபர் 16ஆம் தேதி தேசிய உணவு தினம்  என்பதாக கொண்டாடப்படுகிறது.

 

ஒரு பக்கம் மக்கள் உணவை வீணடிக்கிறார்கள் என்று சொன்னால் மற்றொரு பக்கம் உணவு கிடைக்காமல் எத்தனையோ மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.

 

உலக அளவில் நூறு கோடி மக்கள் பசியால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதாக ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது இது மட்டுமல்ல வருடம் தோறும் 280 மில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது என்பதாக ஐநா உணவு அமைப்பு ஒரு அறிக்கையில் சொல்கின்றது.

 

நாம் வீணாக்கும் ஒவ்வொரு பிடி உணவும் ஏதோ ஒரு ஏழைக்குரிய உணவு என்பதை மறக்கக்கூடாது.

 

ஒரு ஒரு பிடி உணவு நம் வாய்க்கு வருவதற்கு முன்னதாக அதற்கு பின்னால் எவ்வளவு பெரிய வேலை இருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்ப்பது கிடையாது.

 

இன்று ஒவ்வொரு வேலையும் வயிறார நாம் உண்ணக்கூடிய உணவு சோறு.

 

அந்த சோறு அரிசியிலிருந்து உருவாகிறது அந்த அரிசி நமது வாய்க்கு வருவதற்கு முன்னதாக அதற்கு பின்னால் எவ்வளவு வேலைகள் இருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

 

அல்லாஹ்வின் நல்லடியார்களே ஒரு பிடி உணவு நம் வாய்க்கு வர வேண்டும் என்றால்.. முதலில்

01. வயல் காட்டைச் சீர்செய்ய வேண்டும்.

02. ஏர் பிடிக்க வேண்டும்.

03. உழவு ஓட்ட வேண்டும்.

04. பரம்படிக்க வேண்டும்.

05. விதை நெல் சேகரிக்க வேண்டும்.

06. விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

07. விதைகளை நீரில் ஊற வைக்க வேண்டும்.

08. நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.

09. நாற்றாக வளர்க்க வேண்டும்.

10. நாற்று எடுக்க வேண்டும்.

11. முடிச்சு கட்ட வேண்டும்.

12. வயல் நிலத்தில் முடிச்சு வீச வேண்டும்.

13. நடவு நட வேண்டும்.

14. களையெடுக்க வேண்டும்.

15. உரமிட வேண்டும்.

16. எலியிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

17. பூச்சியிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

18. நீர் தட்டுப்பாடு இன்றி பார்க்க வேண்டும்.

19. கதிர் முற்ற வேண்டும்.

20. கதிர் அறுக்க வேண்டும்.

21. கட்டு கட்ட வேண்டும்.

22. கட்டு சுமந்து வர வேண்டும்

23. களத்துமேட்டில் சேர்க்க வேண்டும்.

24. கதிர் அடிக்க வேண்டும்.

25. பயிர் தூற்ற வேண்டும்.

26. பதறுபிரிக்க வேண்டும்.

27. மூட்டை கட்ட வேண்டும்.

28. நெல் ஊறவைக்க வேண்டும்.

29. அந்த நெல்லை அவிக்க வேண்டும்.

30. அவித்த நெல்லை களத்தில் காயவைக்க வேண்டும்.

31. காயும் நெல்லை மழையிலிருந்து பாதுகாக்க வேண்டும்,

32. நெல்லை குத்த வேண்டும்.

33. நொய்யின்றி அரிசியாக்க வேண்டும்.

34. அரிசியை தனியாக பிரிக்க வேண்டும்.

35. பிரித்த அரிசியை மூட்டையில் பிடிக்க வேண்டும்.

36. அதை விற்பனை செய்ய வேண்டும்.

37. எடை போட்டு வாங்க வேண்டும்.

38. அரிசி ஊறவைத்தல்

39. அரிசி கழுவுதல்

40. கல் நீக்குதல்

41. அரிசியை உலையிடல்

42. சோறு வடித்தல்

43. சோறு சூடு தணிய வைத்தல்

44. சோறு இலையில் இடல்

இத்தனை தடைகளைத் தாண்டி வந்த சோற்றை நாம் முழுவதும் உண்ணாமல் வீணாக்குவது வெறும் பாவம் என்பதை விட உலகமகா பாவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

உண்ணும் முன் உணர வேண்டும். அந்த உணவு நம் இலைக்கு வந்த பாதையையும்,* அதன்பின்னுள்ள அல்லாஹ்வின் அருளையும் உழவனின் உழைப்பையும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறி அதை வீணாக்கமல் உண்டு ஏழை எளியோர்களுக்கும் உதவி அல்லாஹ்வின் அன்பையும் நல்லருளையும் பெற்ற நல்லோர்களில் ஒருவராக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாத்தைக் கூறி விடை பெறுகிறேன்.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


1 கருத்து: