செவ்வாய், 12 ஜூன், 2018

மனது செம்மையானால்...





وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ

பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா...!

இன்பம் துன்பம் இரண்டும் மனித வாழ்க்கையில் இன்றியமையாத அனுபவங்கள். ஆனால் எல்லா மனிதர்களும் இன்பத்தையே விரும்புகிறார்கள், துன்பத்தை வெறுக்கிறார்கள். துன்பம் தோன்றாமலிருக்க வழி தேடுகிறாரகள். அனைத்துக்கும் வழிகாட்டும் அருள்மறை, அதற்கும் வழிகாட்டுகிறது. அந்த வழியையே மேற்காணும் வசனம் சுட்டிக் காட்டுகிறது.


பேருந்தில் பயணம் துவங்கும் ஒருவன் மூன்று மணி நேரத்தில் இந்த பேருந்து குறிப்பிட்ட இடத்தை அடையும் அடைய வேண்டும். அப்போது தாம் நினைத்த காரியத்தை முடிக்க இயலும் என்று திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்கிறான். சிறிது தூரத்தை கடந்ததும் அவன் பரபரப்படைய ஆரம்பிக்கின்றான். ஓட்டுனர் அவசியமின்றி வாகனத்தை நிறுத்துவதும், கால்நடைகள் பேருந்தின் குறுக்கே வருவதும், ஏறி இரங்கும் பயணிகள் நேரத்தை கடத்துவதையும் பார்க்க பார்க்க அவனுக்கு கோபம் கோபமாக வருகிறது.


இத்தகைய நிகழ்வுகளால் பேருந்தை குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை எங்கே அடையாமல் போய்விடுமோ...?  என்பது தான் அவனுடைய கோபத்திற்கான காரணம். மொத்தத்தில் அவனது அந்த பிரயாணம் எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்ற காரணங்களால் அமைதியின்றி கழிகிறது.
அவனைப் போன்ற மற்றொரு பயணியின் நிலை வேறு விதமாக இருந்தது. இந்த பேருந்து மூன்று மணிநேரத்தில் போய் அடைய வேண்டும். இந்த பேருந்து என்ன அல்லாஹ்வா....?  குறித்ததை குறித்த நேரத்தில் செய்து முடிக்க...!   சாதாரண கருவி தானே...! அல்லாஹ் நாடிய நேரத்தில் தானே போய்ச் சேரும். நமக்கு அவசரம் தான், குறித்த நேரத்தில் போனால் தான் நல்லது, அதை விட தாமதமாகப்போனால் நாம் என்ன இறங்கியா ஓடிட முடியும் என்ற வகையில் அவன் சிந்தனை சென்றது. இறைவன் நாட்டப்படிதான் எதுவும் நடக்கும் என்ற உண்மை அவன் மனதில் நிறைந்திருந்ததால் அவனது கண்களை தூக்கம் ஆட்கொண்டது பயணம் இனிதாக கழிந்தது.


இந்த உருவகக்கதையைப் போன்றது தான் வாழ்க்கை பயணமும், இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கும். இன்பமும் வரலாம், துன்பமும் வரலாம். துன்பம் வந்தால் அதற்காக உலகத்தை விட்டு ஓடிடவா முடியும். தாங்கிக் கொள்ளவேண்டியதுதான் என்று உறுதி பூண்டு இறைவன் மீது பொறுப்பு சாட்டியவர்கள் நிம்மதியையே சந்திக்கிறார்கள். துன்பமே வந்தாலும் அது எதிர்பார்த்த ஒன்றுதான் என அவர்கள் கருதும் போது, அதுவும் ஒருவகை இன்பமாக மாறிவிடுகிறது.


அஃதின்றி இறைவன் ஒருவன் இருக்கிறான் லட்சியம் செய்யாமல், எனது வாழ்வு இப்படித்தான் இருக்கும் இருக்க வேண்டும். நான் எதில் குறைந்தவன், எனக்கு தோல்வி என்பதே ஏற்படாது, துன்பம் என்பது என்பக்கம் திரும்பிகூட பார்க்காது..! என்று நினைத்து வாழ்க்கை பாதையில் செல்லுபவன், அவன் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக இம்மியளவு நடந்தாளும் துவண்டு போகிறான். துரும்பளவு துன்பத்தையும் மலையளவாக உணருகிறான். இது இறைவன் மீது பொறுப்புச் சாட்டாமையின் வெளிப்பாடே...!


கல்லையும் மலராக கருதிய காத்தமுன் நபி (ஸல்.)
நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு முதல்முறையாக வஹி வருகிறது. ஹிரா மலையிலிருந்து இல்லம் திரும்புகிறார்கள். ஹழ்ரத் கதீஜா ரலி அவர்களிடம் என்னைப் போர்த்துங்கள்..... என்னை போர்த்துங்கள்...! தனது கண் நிறைந்த கணவனாருக்கு ஆறுதல் மொழி கூறிய ஹழ்ரத் கதீஜா ரலி அவர்கள், தனது பெரிய தந்தையின் மகனாரும் வேத விற்ப்பன்னருமான வரக்கத்துப்னு நவ்பல் என்பவரிடம் பெருமானாரை அழைத்துச் செல்கிறார்கள்.


நடந்த நிகழ்வுகளை பெருமானாரிடம் விசாரித்து அறிந்த பெரியவரான வரக்கா "இந்த மக்கள் உங்களை இந்த ஊரை விட்டே விரட்டி அடிக்கும் காலையில் நான் உயிரோடிருக்க வேண்டுமே...! என் முழூ பலத்தையும் பிரயோகித்து உங்களுக்கு நான் உதவுவேனே...!" என்று கூறுகிறார்.
அதைச் செவியுற்ற அண்ணலார் "இமக்கள் என்னை இவ்வூரை விட்டே வெளியாக்குவார்களா...?" என வியப்புடன் கேட்டார்கள். ஆம்....! இம்மக்கள் உங்களுக்கு தொல்லைகள் பல தருவார்கள். உங்களுக்கு மடுமல்ல இதுவரை உலகத்தில் தோன்றியுள்ள அனைத்து தீர்க்க தரிசிகளுக்கும் இந்நிலைதான் ஏற்ப்பட்டுள்ளது. என்று வரக்கா பதில்கூறி அனுப்பினார். ஆனால் அதன்பின் அவர் நீண்ட நாட்கள் உயிரோடிருக்கவில்லை.


வரக்கா மூலம் இறைவன் பெருமானாருக்கு உணைமையை உணர்த்தினான். இறைவனின் தூது என்றவுடன் மக்கள் இன்முகத்துடன் ஏற்பார்கள். அத்தூதரை கொணர்ந்தவரை தலைமேல் வைத்து தாங்குவார்கள் என எதிர்பார்ரகலாகாது என்பதை அறிந்து கொள்ள பெருமானாருக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை. நாம் நடக்க போகும்பாதை மலர் விரிப்பல்ல, முள்மெத்தை என்பதை புரிந்து கொண்ட பெருமானார் ஸல் அவர்கள் இறை உத்தரவிற்கிணங்கஅந்த பாதையில் நடக்கத்துவங்கினார்கள். துவங்கியபோது அவர்கள் மீது மண்ணைவாரி இறைக்கப்பட்டது, சொல்லடிகள் கிடைத்தன, கல்லடிகள் கிடைத்தன. அப்பப்பா...!! கொஞ்ச நஞ்ச துன்பங்களா...?, "உலகத்தில் வேறு எவருக்கும் தரப்படாத அளவுக்கு எனக்கு துன்பங்கள் தரப்பட்டது." என்று அவர்களே வாய்திறந்து கூறும் அளவுக்கு துன்பங்கள்...! துயரங்கள்....!! முன்னறிவிப்பு செய்யப்பட்டது போன்றே நாடு கடத்தல்...! அத்தோடு நிற்கவில்லை, போர்....! போர்....! அவர்கள் உயிர்பிரியும் வரை ஓயாத போராட்டங்கள்.


ஆனால் அனைத்தையும் அண்ணலார் தாங்கிக் கொண்டார்கள் என்பது மட்டும் உண்மையல்ல, அனைத்தையும் இன்பமாக கருதினார்கள். புன்முறுவலுடன் எதிர்கொண்டனைத்தார்கள். கல்லால் அடித்து துரத்தியதையும் மலர் தூவி வரவேற்பதாக கருதினார்கள். அதற்கு அவர்களின் உறுதிகுழையாத மனம்தான் காரணம்...! அசைக்கமுடியாத இறையச்சம்தான் காரணம். துன்பம் நிகழத்தான் செய்யும் என்ற உணர்வுடன் வாழ்க்கை பாதையை துவங்கியதுதான் காரணம்.
உலகத்தில் ஒருவருக்கு துன்பம் ஏற்படாது என்றிருக்குமேயானால் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது...! முழுக்க முழுக்க தன்னை இறைபணிக்காகவே அர்பணித்துக் கொண்டவர்களுக்கே இந்த நிலை என்றால் இறைபணிக்கன்றி, தன்பணிக்காகவே ஈடுபடுபவர்கள் தன்னை துன்பம் சந்திக்காது என்று எங்கணம் எதிர்பார்க்க முடியும்...? தனது உடல், உடமைகள், மனைவி மக்கள் இவற்றுக்காகவே வாழும் மக்கள் துன்பத்தைக் காணாது தப்பிக்க இயழுமா...?


நாமென்ன இறைவனிடம் கொடுத்தா வைத்திருக்கிறோம். அவன் துன்பம் தராதிருக்க...! விரித்த கையுடன்தான் இவ்வுலகிற்கு வந்தோம். நமக்கென்ன உரிமை இருக்கிறது. இறைவனிட்ட பிச்சைதானே நாம். தந்தாளும் பொறுந்திக்கொள்ளவேண்டியது, தராவிட்டாலும் பொறுந்திக்கொள்ள வேண்டியதுதானே நம்மீது கடமை..!


திருக்குர்ஆன் கூறுகிறது.:

فَأَمَّا ٱلۡإِنسَـٰنُ إِذَا مَا ٱبۡتَلَٮٰهُ رَبُّهُ ۥ فَأَكۡرَمَهُ ۥ وَنَعَّمَهُ ۥ فَيَقُولُ رَبِّىٓ أَكۡرَمَنِ (١٥) وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَٮٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُ ۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ

ஒரு மனிதனை சோதிப்பதற்காக அவனது இறைவன் அருட்கொடைகளை அள்ளிகொடுத்து அவனை கண்ணியப்படுத்தும் போது, எனது இறைவன் என்னை கண்ணியப்படுத்தி விட்டான் என்று அவன் கூறுகிறான். அவனை சோதிப்பதற்காக பாக்கியங்களை சற்று குறைக்கும் போது எனது இறைவன் என்னை கேவலப்படுத்தி விட்டான் என்று அவன் உரைக்கிறான். அவன் அவ்வாறு கூறலாகாது.
                                            அல்குர்ஆன். 89.15.16


இறைவன் இந்த திருவசனத்தின் மூலம் கடிந்துரைக்கிறான். நான் தராதபோது எனது இறைவன் என்னை கேவலப்படுத்தி விட்டான் என்று கூறுகிறானே...! அவன் என்ன...? என்னிடம் கொடுத்தா வைத்திருக்கிறான்...? அவனை கண்ணியப்படுத்த வேண்டும் என்பது என்மீது கட்டாயமா...? என்னிடம் அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் துன்பத்தை தந்தாலும் கைகட்டி வாய்பொத்தி ஏற்றுக்கொள்ளவேண்டிய பிச்சைக்காரன்தானே அவன் அவ்வாறிருக்கையில் அவனை நான் கேவலப்படுத்தி விட்டதாக கூறுகிறானே..? யாரைப் பார்த்து என்ன வார்த்தை கூறுகிறான். இந்த உண்மையை புரிந்து கொண்டால் துன்பம் ஏது..? துயரம் ஏது...?

பொறுப்பு சாட்டுவதின் பெரும்பலன்

நபி ஹழ்ரத் யாகூப் அலை அவர்கள் தனது மக்கள் பதின்மரை அண்மை நாட்டுக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே வீதி வழியாக சென்றால் அவர்களுக்கு ஏதாவது துன்பம் நேரலாம் என அவர்களின் உள்ளுணர்வு கூறுகிறது. எனவே அவர்களை பல தெருக்கள் வழியாக பிரிந்து செல்ல கோரலாமென எண்ணுகிறார்கள். இருப்பினும் அல்லாஹ் விரும்பியவாறே நடக்கும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட அவர்கள் இறைவன் மீது பொறுப்பு சாட்டிவிட்டு, அவர்களை பிரிந்து செல்லுமாறு ஆணையிடுகிறார்கள்,

ஆனால் அவர்கள் பயந்தவாறே நிகழ்வு நடக்கிறது. அண்மை நாடு சென்ற தனது மக்களில் இளையவரை அரசாங்கம் திருட்டு குற்றத்தின் பெயரில் கைது செய்திருந்தது. அதனால் அவர்கள் கலக்கமுறவில்லை.

இந்த சம்பவத்தை திருக்குர்ஆன் கூறுகிறது.:

 وَقَالَ يَـٰبَنِىَّ لَا تَدۡخُلُواْ مِنۢ بَابٍ۬ وَٲحِدٍ۬ وَٱدۡخُلُواْ مِنۡ أَبۡوَٲبٍ۬ مُّتَفَرِّقَةٍ۬‌ۖ وَمَآ أُغۡنِى عَنكُم مِّنَ ٱللَّهِ مِن شَىۡءٍ‌ۖ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِ‌ۖ عَلَيۡهِ تَوَكَّلۡتُ‌ۖ وَعَلَيۡهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُتَوَڪِّلُونَ (٦٧) وَلَمَّا دَخَلُواْ مِنۡ حَيۡثُ أَمَرَهُمۡ أَبُوهُم مَّا ڪَانَ يُغۡنِى عَنۡهُم مِّنَ ٱللَّهِ مِن شَىۡءٍ إِلَّا حَاجَةً۬ فِى نَفۡسِ يَعۡقُوبَ قَضَٮٰهَا‌ۚ وَإِنَّهُ ۥ لَذُو عِلۡمٍ۬ لِّمَا عَلَّمۡنَـٰهُ وَلَـٰكِنَّ أَڪۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

"நாம் விளக்கத்தை அளித்த காரணத்தால் அவர் விளக்கம் உள்ளவராக இருந்தார். பெரும்பாலானோர் இவ்வாறு விளக்கமுள்ளவராக இருக்கமாட்டார்கள்."
                                               அல்குர்ஆன். 12:68


இந்த சம்பவத்தின் முக்கிய அம்சம் ஒன்று சுட்டிக்காட்டப்படுகிறது.:
இறைவன் மீது பொறுப்புச் சாட்டி காரியத்தை துவங்குகிறோம். அத்தகைய சூழ்நிலையில் அக்காரியம் நன்மையாகத்தான் அமையும் என்று கட்டாயமில்லை. இறைவன் நாட்டப்படி துன்பமும் ஏற்படலாம். ஆனால் பொறுப்புச் சாட்டியதால் அதை தாங்கும் மனப்பான்மை ஏற்படுகிறது.

தலைக்கு மிஞ்சியப்பின் தவக்குல்

இறைவன் மீது பொறுப்புச் சாட்டுதல் என்பது காரியத்தின் துவக்கத்தில் ஏற்ப்பட வேண்டும். காரியத்தை சாதிக்க தலைகீழ் புரண்டு, காரியம் முடியாத போது "என்ன செய்வது...? எல்லாம் இறைவன் நாட்டப்படி தானே நடக்கும்." என்று கூறவது உண்மையான தவக்குல் அல்ல. காரியம் ஆற்றும் போதே ஏற்படும் நெஞ்சழுத்தம் போன்ற நோயை அது தடுக்காது.


சிலர் ஒரு பெண்ணுக்கு ஒரு மாப்பிளையை குறிவைத்து முயற்ச்சிகள் பல செய்வாரகள். கைகூடாத போது திருமணம் சொர்கத்தில் அல்லவா நிச்சய்யிக்கப்படுகிறது...! நாம் நினைத்தது நடக்குமா..? என்று கூறுவார்கள்.
மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவரிடம், அவருக்கு நாம் பிழைக்க மாட்டோம் என்று உறுதியாக தெரந்து விட்ட சந்தர்ப்பத்தில் உங்கள் மனைவி மக்களை...விட்டுச் செல்கிறீர்களே அவர்களை யார் காப்பாற்றுவார் என்று அவர்களை நீங்கள் கேட்டுப் பாருங்கள்., வான் நோக்கி கை உயர்த்தி இறைவன் காப்பாற்றுவான் என்று சமிக்கை காட்டுவார். அதே மனிதருக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது இந்த எண்ணம் தோன்றியிருக்குமா...?


காரியத்தின் துவக்கத்தில் இத்தகைய மனப்பக்குவம் ஏற்படுவதற்கு கடும் பயிற்சி தேவை. திருகுர்ஆனின் ஆழிய சிந்தனை தேவை. நபிமொழியின் தெளிந்த ஞானம் தேவை. நல்லோர்களின் சகவாசம் தேவை. ஏகாந்தமான எண்ணமே இறைநேசத்தின் அடித்தளமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக