மறதி என்பது மனித இயல்பாகும். அதனால்தான், "மக்களுள் முதலாமவர் மறதியில் முதல்வர்'' என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளையை மறந்து, தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து உண்டுவிட்டார். அதனால்தான் அவர் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வரலாறு.
ஆக, மறதி என்பது முதல் மனிதரிடமிருந்தே தொடங்குகிறது என்பதை அறியும்போது மறதி மனித இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மறதி மனித இயல்பாக இருப்பதால்தான் அவ்வப்போது மனிதன் மறந்துவிடுகின்றான். அதன் காரணமாக அவன் அல்லாஹ்விடம் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனவே அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: "திண்ணமாக அல்லாஹ் என்னுடைய சமுதாய மக்கள் தவறுதலாகச் செய்துவிடுதல், மறதியாகச் செய்துவிடுதல், நிர்ப்பந்திக்கப்பட்டுச் செய்தல் ஆகியவற்றை எனக்காக மன்னித்துவிட்டான்.'' (நூல்: இப்னுமாஜா: 2033)
மேலும் நபி (ஸல்) அவர்கள், "உங்களுள் ஒருவர் உணவுண்டால் பிஸ்மில்லாஹ் சொல்லட்டும்; தொடக்கத்தில் (பிஸ்மில்லாஹ் சொல்ல) மறந்துவிட்டால், பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று சொல்லட்டும்'' (பொருள்: முதலிலும் கடைசியிலும் அல்லாஹ்வின் பெயரால் உண்கிறேன்) எனக் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1781)
ஒரு துஆவைக் கற்றுத் தருகின்றபோதே, அதைச் சொல்ல மறந்துவிட்டால் இவ்வாறு சொல்லட்டும் எனச் சொல்லித் தருகின்றார்கள் என்றால் மறதி மனித இயல்பு என்பதை எந்த அளவிற்கு உணர்ந்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஒரு தடவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அது ஓர் அந்தி நேரத் தொழுகை. அது நான்கு ரக்அத்களைக் கொண்டது. ஆனால் மறதியால் இரண்டு ரக்அத்கள் மட்டும் தொழுது, தொழுகையை முடித்துவிட்டார்கள். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் அது குறித்துப் பேச எல்லோருக்கும் தயக்கம். அப்போது துல்யதைன் எனும் நபித்தோழர், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத்கள்) குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?'' என்று வினவினார். "இவர் சொல்வது உண்மைதானா?'' என்று சூழ இருந்த நபித்தோழர்களிடம் கேட்டார்கள். "ஆம்! இவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரண்டு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்'' என்று மறுமொழி பகன்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம். நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன். எனவே நான் (எதையேனும்) மறந்துவிட்டால் எனக்கு நீங்கள் நினைவூட்டுங்கள்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 401)
இந்நபிமொழியில், "நானும் உங்களைப் போன்ற மனிதர்தாம்'' என்று கூறி, "நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறந்துவிடுகிறேன்'' என்று கூறியுள்ளதன்மூலம் மறதி மனித இயல்பு என்பதை மெய்ப்பிக்கின்றார்கள். மறதி என்பது சாதாரண மனிதர்கள் முதல் இறைத்தூதர்கள் வரை அனைவருக்கும் சமமானது என்பதை உணர முடிகிறது. இருப்பினும் இறைத்தூதர்கள் நம்மைப்போன்ற மறதியாளர்கள் கிடையாது என்பதையும் நாம் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
قَالَ لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கும் மறதி ஏற்பட்டுள்ளது என்பதைத் திருக்குர்ஆன் வாயிலாக அறிகிறோம். களிர் (அலை) அவர்களோடு மூஸா (அலை) அவர்கள் கடற்பயணம் மேற்கொண்டபோது, தாங்கள் என்னிடம் எது குறித்தும் வினா எழுப்பக்கூடாது; பொறுமையாக இருக்க வேண்டுமென நிபந்தனை விதித்தார்கள். அந்நிபந்தனையை மறந்துவிட்ட மூஸா (அலை) அவர்கள், களிர் (அலை) அவர்கள் தாம் பயணம் செய்து சென்றுகொண்டிருந்த மரக்கலத்தைத் துவாரமிட்டதைக் கண்டபோது, "தாங்கள் ஏன் இந்த மரக்கலத்தில் துவாரமிடுகின்றீர்?'' என்று வினவினார்கள். அது குறித்துத் திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
அவ்விருவரும் (கடலோரமாக) நடந்தனர். இறுதியில் அவ்விருவரும் மரக்கலம் ஒன்றில் ஏறியதும் அவர் அதில் துளையிட்டார். மூஸா, "இதிலுள்ளோரை மூழ்கடிக்கவா நீங்கள் துளையிட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் மோசமான செயலைச் செய்துவிட்டீர்கள்'' என்று கூறினார். அதற்கு, "என்னுடன் பொறுமையாக இருக்க உங்களால் ஒருபோதும் இயலாது என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?'' என அவர் (களிர்) கேட்டார். அப்போது அவர் (மூஸா), "நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர். என் விஷயத்தில் என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்'' என்று கூறினார். (18: 71-73)
மறதி மனித இயல்பாக இருந்தாலும் சில வேளைகளில் ஷைத்தான் மனிதனுக்கு மறதியை ஏற்படுத்துகின்றான். அவன் ஒரு மனித விரோதி என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அவ்வப்போது அவன் மனிதனுக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டே இருப்பான். நல்லறங்களைச் செய்ய முனையும் போது அதில் மறதியை ஏற்படுத்திக் குழப்பத்தை உண்டுபண்ண முனைந்து செயல்படுவான். அது குறித்து நபி (ஸல்) அவர்கள் நமக்கு முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள்.
"உங்களுள் யாரேனும் தொழுதுகொண்டிருக்கும்போது அவரிடம் ஷைத்தான் வருவான். அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாத அளவுக்கு (மறதியை ஏற்படுத்தி)க் குழப்பத்தை உண்டாக்குவான். எனவே இந்த நிலையை உங்களுள் யாரேனும் அடைந்தால், (தொழுகையின் இறுதியில்) அமர்ந்தவாறு அவர் இரண்டு சஜ்தாக்கள் (சலாம் கொடுக்குமுன்) செய்துகொள்ளட்டும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 363)
قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ ۚ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا
மற்றொரு வரலாற்றுச் சான்றைக் காணலாம். மூஸா (அலை) அவர்கள் இறைநேசர் களிர் (அலை) அவர்களைச் சந்திக்கச் சென்றபோது தம்முடன் ஓர் இளம் பணியாளரையும் அழைத்துச் சென்றார்கள். அவர் பெயர் யூஷஉ பின் நூன் ஆகும். அல்லாஹ்வின் கட்டளைப்படி, உப்புத் தோய்க்கப்பட்ட மீனைச் சுமந்து வருமாறு தம் பணியாளரிடம் கேட்டுக்கொள்ள, அதை அவர் சுமந்து சென்றார். அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் நழுவிச் செல்லும் இடமே களிர் (அலை) அவர்களைச் சந்திக்கும் இடம் என்று மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அடையாளம் சொல்லியிருந்தான். அந்தத் தகவலை மூஸா (அலை) அவர்கள் தம் பணியாளரிடம் சொல்லி, தமக்கு அதைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்கள். பின்னர் இருவரும் அவரைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றார்கள். கடற்கரை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஓரிடத்தில் ஓய்வெடுத்தார்கள். அப்போது அந்த மீன் உயிர்பெற்று, கடலுக்குள் சென்றுவிட்டது. சட்டென விழித்த அந்தப் பணியாளர் அந்த மீன் உயிர்பெற்றுச் சென்றதைப் பார்த்துவிட்டார். ஆனால் மூஸா (அலை) அவர்கள் தம் உறக்கத்திலிருந்து எழுந்ததும் அந்தத் தகவலை அவர் தெரிவிக்க மறந்துவிட்டார். அது குறித்துத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
"பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் நிச்சயமாக மறந்துவிட்டேன். அதைப் பற்றி (உங்களிடம்) சொல்லவிடாமல் ஷைத்தான்தான் என்னை மறக்கச் செய்துவிட்டான். அது கடலில் விந்தையான முறையில் தனது பாதையை அமைத்துக்கொண்டது'' என்று கூறினார். (18: 63)
ஒரு நல்வினையைச் செய்ய மனிதன் முயலும்போது மனித விரோதியான ஷைத்தான் அதை மறக்கச் செய்கிறான் என்பதை இந்நிகழ்வின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.
மறதி மனித இயல்பாக இருந்தாலும் நாம் மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் உள்ளன. முதலில் நம்மையெல்லாம் படைத்த இறைவனை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது; மறுமை நாள், மரணம், நம் அன்றாடக் கடமைகள் முதலியவற்றை மறக்கவே கூடாது. இன்று கடமையை மறந்த பலர் நம் அன்றாட வாழ்வில் வலம் வருகின்றார்கள். ஐவேளைத் தொழுகை ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண்மீதும் கடமை; அதைப் பெரும்பாலோர் அலட்சியமாகக் கருதி விட்டுவிடுவது தொடர்ந்துகொண்டே உள்ளது. கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிடுகின்றான்; மனைவி தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிடுகின்றாள்; முதலாளி-தொழிலாளி, தாய்-தனயன், தந்தை-மகன், மகள்-தந்தை, பெரியவர்-சிறியவர் இப்படி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து, பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கடமையை நிறைவேற்றுதல் குறித்து நாம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கடமை தவறாமல் செயலாற்ற முடியும்.
நன்றி மறப்பது நன்றன்று-நன்றல்லது
அன்றே மறப்பது நன்று- என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
மறதி மனித இயல்பாக இருந்தாலும் நாம் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது பிறர் நமக்குச் செய்த உதவியைத்தான். அதை நாம் ஒருபோதும் மறவாமல் அவர் செய்த அந்த உதவிக்குக் கைம்மாறு செய்வது நம் கடமையாகும். எனவே பிறர் நமக்குச் செய்த உதவியை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அதே நேரத்தில், பிறர் நமக்குச் செய்த தீவினைகளையோ துன்பங்களையோ இடர்களையோ நாம் அவ்வப்போது மறந்துவிட வேண்டும். அதுதான் நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உகந்ததாகும்.
மற்றொரு கோணத்தில் பார்த்தால், சில வகை மறதி அல்லாஹ்வின் அருட்கொடையும் வெகுமதியும் ஆகும் என்றே சொல்லலாம். ஆம்! நாம் பார்க்கின்ற, செய்கின்ற, சொல்கின்ற எத்தனையோ விஷயங்களை அவ்வப்போது மறந்துவிடுகின்றோம். அந்த மறதி இயல்பாகவே நமக்குள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் அவ்வப்போது மறந்துவிடும் இயல்புநிலையை மட்டும் இறைவன் வைக்காதிருந்தால் நாம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்போம்.
ஒரு கணவன் செய்கின்ற சின்னச் சின்ன தவறுகளை மனைவி மறந்துவிடுகின்றாள்; அவன் தன்னைத் திட்டுவதையும் அடிப்பதையும் தொல்லை கொடுப்பதையும் அவ்வப்போது மறந்துவிடுகின்றாள்.
அதனால்தான் காலையில் சண்டையிட்டு, திட்டிவிட்டுச் சென்ற கணவனை மாலையில் மகிழ்ச்சியோடும் இன்முகத்தோடும் வரவேற்கிறாள். அதுபோலவே மனைவி அவ்வப்போது செய்துவிடுகின்ற சின்னச்சின்ன தவறுகளையும் குறைபாடுகளையும் கணவன் மன்னித்து, மறந்துவிடுகின்றான். அதனால்தான் காலையில் மனைவி செய்த ஏதோ ஒரு தவறுக்காக அவளைத் திட்டிவிட்டுச் சென்றவன் இரவில் இல்லம் திரும்பும்போது அவளுக்குத் தேவையானதை வாங்கிவந்து அன்போடு கொடுக்கின்றான்.
இப்படித் தம்பதியர் ஒருவருக்கொருவர் மறந்துவிடுவதால்தான் இல்லறமே நல்லறமாய் நடைபெறுகிறது; அதுபோன்றே ஒரு தொழிலாளி செய்யும் தவற்றை முதலாளி மறந்துவிடுவதால்தான் அந்தத் தொழிலாளி தொடர்ந்து அங்கேயே பணியாற்ற முடிகிறது. சிறியவர்கள் செய்யும் தவறுகளைப் பெரியவர்கள் மறந்துவிடுவதால்தான் சமூக வாழ்க்கை சீராக நடைபெறுகிறது. ஆக மறதி என்பது ஒரு கோணத்தில் இறைவனின் வெகுமதி என்றே சொல்லலாம்.
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்துவிட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதற்காக நீ எங்களை(க் குற்றம்) பிடித்துவிடாதே!'' (2: 286) என்ற பிரார்த்தனையை நாம் நாள்தோறும் மறக்காமல் செய்துவருவோம்.
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக