ஞாயிறு, 11 அக்டோபர், 2015

இறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி ....?



  

உண்மையில் கேட்பவனும் கொடுப்பவனுமாக இருக்கின்ற இறைவனுக்கே எல்லாப் புகழும்.
இந்த உலகத்தில் கேட்டுப் பெறுபவர்கள் கொடுத்து சந்தோஷம் அடைபவர்கள் என்று மனிதர்கள் இரண்டு வகையாக உள்ளனர். ஆனால் கேட்பவர்களுக்கும், அவர்களுக்குக் கொடுப்பவர்களுக்கும் உண்மையில் கொடுப்பவனாக இருப்பவன் இறைவன் என்பதே என் நிலைப்பாடு. இதில் உங்களுக்கும் உடன்பாடு இருக்கும் என்றே கருதுகிறேன்.



மனிதர்களிடம் கேட்டுப் பெறுகின்ற மனிதர்கள் ஒன்று உறவுக்காரர்களாக இருப்பார்கள், அல்லது பிச்சைக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் ஒருவகையில் எல்லா மனிதர்களுமே பிச்சைக்காரர்கள்தான். ஏனெனில் காற்றில் இலை அசைவதற்குக்கூட இறைவனுடைய உத்தரவு வேண்டியிருக்கும்போது இறைவனுடைய விருப்பமில்லாமல் ஒரு மனிதனால் இன்னொரு மனிதருக்கு எந்தவித நன்மையும் செய்துவிடுவது சாத்தியமில்லை.


அப்படியானால் நம்முடைய தேவைகளை இறைவனிடம் எப்படிக் கேட்டுப் பெறுவது? இதுதான் நம் முன் நிற்கும் முக்கியமான கேள்வி இப்போது. இதற்கு சரியான பதில் தெரியாததால்தான் பலர் வறுமையிலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். சிலர் மட்டும் செல்வத்துக்கு மேல் செல்வம் சேருபவர்களாக வாழுகின்றார்கள்.


அப்படியானால் மனித முயற்சிக்கும், உழைப்புக்கும் வேலையில்லையா என்று கேட்கக் கூடாது. ஏனெனில் ஒரு முக்கியமான பிரச்சனையை வேறு ஒரு கோணத்தில் பார்க்க நாம் இப்போது முயன்று கொண்டிருக்கிறோம்.
தட்டுங்கள் திறக்கப்படும் என்று இயேசு சொன்னதாக நாம் நம்புகிறோம். அப்படியால் தட்டுவது எப்படி என்பதுதான் இப்போதைய கேள்வி.


தட்டுவதாக நினைத்துக்கொண்டு நாம் கதவுகளை உடைத்துக் கொண்டிருக்கலாம். அதன் காரணமாக வீட்டுக்குச் சொந்தக்காரனின் கோபத்துக்கு ஆளாகி இருக்கலாம். அல்லது எந்தக் கதவைத் தட்ட வேண்டுமோ அதை விட்டுவிட்டு வேறு கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கலாம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பது சரிதான், ஆனால் கதவுகள் எங்கே என்பதுதான் கேள்வி என்று ஒரு கவிஞர்கூடக் கிண்டலாகச் சொன்னார். கதவுகளைப் பூட்டியது யார் என்றும் ஒரு கேள்வி உள்ளது. இறைவனுடைய அருளுக்குக் கதவுகளே கிடையாது என்ற கருத்தும் உண்டு. கதவு என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு இப்படியாக நாம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடிக் கொண்டிருக்கலாம். நமது நோக்கம் இங்கே வார்த்தை விளையாட்டல்ல. கதவு என்பதெல்லாம் ஒரு புரிந்து கொள்ளலுக்காகச் சொல்லப்பட்ட குறியீட்டுத் தன்மை கொண்ட சொல் அவ்வளவுதான்.


கொடுக்க இறைவன் தயாராக இருக்கிறான் என்பது சரி. கையேந்தி ஒரு மனிதன் என்னிடம் கேட்டுவிட்டால், அவனை வெறும் கைகளோடு திருப்பி அனுப்ப உங்கள் இறைவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். செருப்பின் வார் அறுந்து போனாலும் இறைவனிடமே கேளுங்கள் என்று கூறியதும் அவர்கள்தான்.


ஆனால் நாம் அப்படியா கேட்டுக் கொண்டிருக்கிறோம்? இல்லையே! அப்படியானால் நபிமொழிக்கு மாற்றமாக நாம் நடந்து கொண்டிருக்கிறோமா? இல்லை. நாம் மனிதர்களிடம் கேட்டுப் பெற்றாலும் இறைவனிடமிருந்து பெற்றதாகத்தான் அர்த்தம்.
என்றாலும், கேட்பதெல்லாம் கிடைத்து விடுவதில்லை. கேட்கும்போதெல்லாமும் கிடைத்துவிடுவதில்லை. ஏன்?
கேட்கும் முறை தெரியவில்லை. இதுதான் நான் சொல்ல வரும் முக்கியமான விஷயம்.


மனிதர்களிடம் கேட்பது, கேட்டுப் பெறுவது பற்றிய விஷயங்களிலெல்லாம் நாம் நிபுணர்களாக இருக்கிறோம். ஆனால் இறைவனிடம் எப்படிக் கேட்பது என்பதுதான் தெரியவில்லை. இதுவரை எப்படி நாம் இறைவனிடம் கேட்டிருக்கிறோம் என்பதை இப்போது நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.
முஸ்லிமாக இருந்தால் ஐவேளை தொழுது, அல்லது தொழும்போதெல்லாம் கேட்கிறோம். தொழுது முடித்துவிட்டுக் கையேந்திக் கேட்கிறோம். அல்லது கையேந்தாமல் மௌனமாகக் குனிந்து கேட்கிறோம். நமது ஆசைகளை, விருப்பங்களை, தேவைகளை முன் வைக்கிறோம். அரபி மொழியில் நமக்கு மனப்பாடமாகியுள்ள சில வசனங்களைச் சொல்கிறோம். அல்லது கும்பலாக அமர்ந்து ஒருவர் கேட்க, அனைவரும் அதற்கு 'அப்படியே ஆகுக' என்னும் 'ஆமீன்' போடுகிறோம்.


ஹிந்துவாக இருந்தால் கோயில்களுக்குச் சென்று கன்னத்தில் போட்டுக் கொண்டு அல்லது போட்டுக் கொள்ளாமல் கேட்கிறோம். அல்லது வீடுகளில் இருக்கும் பூஜை அறைகளில் அமர்ந்து கேட்கிறோம். கிறிஸ்தவர்களாக இருந்தால் தேவாலயங்களுக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி மண்டியிட்டு அல்லது மண்டியிடாமல் கேட்கிறோம்.


இப்படி ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவரும் அவரவர் மதச் சடங்கு சம்பிரதாயங்களுக்கேற்ப அரபி, உர்து, பாரசீகம், சமஸ்கிருதம், தமிழ் என பல மொழிகளிலும் கேட்கின்றனர். ஆனால் இப்படி மொழி வழியாக முன் வைக்கப்படும் பிரார்த்தனைகள் எதுவும் இறைவனின் காதுகளைச் சென்றடைவதில்லை என்பது என்னுடைய உறுதியான அபிப்பிராயம். (இறைவனுக்குக் காதுகள் உண்டா என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்). நம்முடைய பிரச்சனைகள் மொழியில்தான் தொடங்குகின்றன.
 

அரபியிலே கேட்டால்தான் இறைவனுக்குப் புரியுமா? அப்படியானால் ஒரு ஊமை என்ன செய்வான் என்று என் நண்பர் ஒருவர் கேட்டார். அவர் அரபி என்று சொன்னதை எந்த மொழிக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் கேட்டது சரியான கேள்வியாக எனக்குப் படவில்லை. காரணம், ஊமைக்கு வாய்க்குள் இருக்கின்ற ஒரு நாக்குதான் சப்தத்தைப் பொறுத்தவரை செயலிழந்துவிட்டதே தவிர, அவனுடைய மனதின் நாக்குகள் பேசுகின்றவர்களுடையதைவிட ஆற்றல் மிக்கது.


மௌனத்தின் எண்ணற்ற நாவுகள் ஒரு வினாடிகூட சும்மா இருப்பதில்லை. அவைகள் கணந்தோறும் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவை நம் காதுகளுக்குத்தான் கேட்பதில்லை. ஒரு ஊமைக்கும் தாய்மொழி இருக்குமல்லவா? அதில் அவன் நினைத்துக் கொள்வான். எனவே மொழியைப் பயன்படுத்தி இறைவனிடம் முறையிடும் கூட்டத்தினரில் ஊமையும் அடங்குகிறான் என்பதுதான் என் முடிவு.


மொழியைப் பயன்படுத்தி கேட்கப்படுகின்ற முறையீடுகள் இறைவனை ஏன் சென்றடைவதில்லை என்று நான் கூறுகிறேன்? ஏனெனில், நான் ஆராய்ந்த வரையில், இறைவனிடமிருந்து மனிதனுக்கு வந்த செய்தி மொழியைச் சார்ந்ததாக இல்லை. அது மொழி தாண்டியதாகவே இருந்துள்ளது. நபிகள் நாயகமவர்களுடைய வரலாற்றிலிருந்தே இதற்கான ஆதாரத்தை ஒருவர் பெறமுடியும்.


நபிகள் நாயகத்துக்கு மூன்று வழிகளில் இறைவனிடமிருந்து செய்தி அருளப்பட்டதாக அவர்களுடைய ஹதீஸ் தொகுப்புகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அதில் ஒருவழி, வானவர் ஜிப்ரயீல் மூலமாக சொற்களாகவே அருளப்பட்டது. இரண்டு, அதே வானவர் மனித உருவில் வந்து சொல்வது. மூன்று, தேனீக்களின் ரீங்காரம் போன்றும், மணியின் ஓசை போலவும் இறைச் செய்தி வந்தது. இந்த மூன்றுமே சாதாரண மனிதனுடைய நேரடி அனுபவத்துக்கு அப்பாற்பட்ட முறைகளே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மூன்றாவது முறையில் இறைச் செய்தி அருளப்பட்டதுதான் என்னை சிந்திக்க வைத்தது.


வானவர் ஜிப்ரயீலாவது அரபி மொழியிலேயே வசனங்களை இறக்கியிருக்க வாய்ப்புண்டு. ஒரு வானவர் எப்படி மனித மொழி பேசியிருப்பார் என்று சிந்திக்க ஆரம்பித்தாலும் நாம் கொஞ்சம் குழம்பிப்போக வாய்ப்புண்டு. ஆனாலும் நாம் அதை அப்படியே எந்தக் கேள்வியுமின்றி எடுத்துக் கொள்கிறோம். காரணம், எல்லாம் வல்ல இறைவன் வானவர்களுக்கு மானிட மொழி பேசும் ஆற்றலையும் வழங்கியிருப்பான் என்று நாம் நம்புகிறோம்.


ஆனால் மூன்றாவது வழியைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்தித்தால் அது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். தேனீக்களின் ரீங்காரத்திற்கு மொழி கிடையாது. மணியின் ஓசையும் அப்படியே. ஞொய் என்றும் டங் என்றும் இறைச் செய்தி வந்ததாக ஹதீஸ் கூறுகிறது. இப்படி வந்த செய்திதான் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக நபிகள் நாயகத்துக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இயற்கைதானே?
திருக்குர்ஆனில் ஒரு இடத்தில் மலைகளில் கூடுகளைக் கட்டுவதற்கு தேனீக்களுக்கு இறைவனே கற்றுக் கொடுத்தான் என்று கூறும்போது


وَأَوۡحَىٰ رَبُّكَ إِلَى ٱلنَّحۡلِ أَنِ ٱتَّخِذِى مِنَ ٱلۡجِبَالِ بُيُوتً۬ا وَمِنَ ٱلشَّجَرِ وَمِمَّا يَعۡرِشُونَ

'அவ்ஹா' என்ற சொல்லை இறைவன் பயன்படுத்துகிறான் (அத்தியாயம் 16 : வசனம் 68). நபிகள் நாயகம் அவர்களுக்கு செய்தி அனுப்பியதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் 'வஹீ' என்ற சொல்லின் இன்னொரு இலக்கண வடிவம்தான் 'அவ்ஹா' என்பது இங்கே கவனிக்கத் தக்கது. திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் அடிக்குறிப்புகளும் இதை உறுதி செய்கின்றன.


تفسير البغوي


அதாவது நபிகள் நாயகத்துக்கு இறைவன் அனுப்பியதும் வஹீதான். தேனிக்களுக்கு இறைவன் அனுப்பியதும் வஹீதான். செய்தியின் தன்மையும் கனமும்தான் வித்தியாசமானவை. ஆனால் சொல்லும் அது குறிக்கும் பொருளும் ஒன்றுதான்.


அப்படியானால், இறைவனிடமிருந்து மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும், ஏன், உயிரற்றதாகத் தோற்றமளிக்கும் இந்த பிரபஞ்சம் முழுமைக்கும் செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தச் செய்தி அல்லது உத்தரவு, மொழி கடந்ததாக இருக்கிறது. இதுதான் நாம் இங்கே கவனிக்கத் தக்க முக்கியமான விஷயமாகும்.


இறைவனிடமிருந்து வந்த, அல்லது வரும் செய்திகள் மட்டும்தான் மொழி கடந்து இருக்க வேண்டுமா? இறைவனுக்கு நாம் அனுப்பும் செய்திகளும்கூட மொழி கடந்து இருக்கலாமல்லவா? மொழி இல்லாத மொழிதான் இறைவனின் மொழி என்றால் அதிலேயே நாம் அவனோடு பேசுவதுதானே நாம் அவனுக்குச் செய்யும் சரியான மரியாதையாக இருக்க முடியும்? ஒருவருக்கு அவருடைய மொழியிலேயே பேசினால்தானே அவருக்கு நம்மீது பிரியம் வரும்? இதுதானே இயற்கை? இறைவனிடம் பேசும்போது, அவனுடைய மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதானே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்?


இறைவனுடைய மொழி மனதின் மொழி. இறைவனுடைய மொழி மௌனத்தின் மொழி. இறைவனுடைய மொழி மொழிகளைக் கடந்த மொழி. எனவே அவனுடைய மொழியில் கேட்பதுதான் அவனுக்குப் பிடிக்கும்.


அப்படியானால் பல மொழிகளிலும் செய்யப்படுகின்ற பிரார்த்தனைகளெல்லாம் வீணா என்று கேட்கக் கூடாது. காரணம், அவை வீணா அல்லது பயன் தரத்தக்கவையா என்பது கேட்பவரின் மனதைப் பொறுத்த விஷயம். ஏனெனில், நீங்கள் அரபியில் கேட்பதற்காக, அரபியை மிகச் சரியாக உச்சரிப்பதற்காக, நீங்கள் சமஸ்கிருதத்தில் கேட்பதற்காக, அதை மிகச் சரியாக உச்சரித்து விட்டதற்காக இறைவன் எதையும் கொடுத்து விடுவதில்லை. ஏனெனில் இறைவன் செயலைப் பார்ப்பதில்லை. அதன் பின்னால் உள்ள மனதையே பார்க்கிறான். அஷ்ஹதுஎன்ற உச்சரிப்பு வராத, அதைத் தவறாக அஸ்ஹதுஎன்று உச்சரித்த கறுப்பர் பிலாலின் தொழுகை அழைப்பு ஒலிதான் வானங்களைத் தாண்டிச் சென்று வானவர்கள் பதில் கூறுமளவுக்கு இருந்தது என்பதை இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.


ஏனெனில் இறைவன் கறுப்பர் பிலாலின் உச்சரிப்பைப் பார்க்கவில்லை. அவருடைய தூய வெள்ளை உள்ளத்தையே பார்த்தான்.


إنما الأعمال بالنيّات ، وإنما لكل امريء مانوى ، فمن كانت هجرته إلى الله ورسوله ، فهجرته إلى الله ورسوله ، ومن كانت هجرته لدنيا يصيبها ، أو امرأة ينكحها ، فهجرته إلى ما هاجر إليه ) رواه البخاري ومسلم في صحيحهما

இன்னமல் அஃமாலு பின் நிய்யத்தி. அதாவது எல்லா செயல்களுக்குமான விளைவு அல்லது பயன் அச்செயலின் பின்னால் உள்ள நோக்கத்தைப் பொறுத்துள்ளது என்று நபிகள் நாயகம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். இறைவனும் அதை உறுதிப் படுத்தியுள்ளான்.

وَٱتۡلُ عَلَيۡہِمۡ نَبَأَ ٱبۡنَىۡ ءَادَمَ بِٱلۡحَقِّ إِذۡ قَرَّبَا قُرۡبَانً۬ا فَتُقُبِّلَ مِنۡ أَحَدِهِمَا وَلَمۡ يُتَقَبَّلۡ مِنَ ٱلۡأَخَرِ قَالَ لَأَقۡتُلَنَّكَ‌ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلۡمُتَّقِينَ

ஆதமுடைய மகன்களான ஹாபில், காபில் என்ற இருவரும் பலி கொடுக்கின்றனர். அதில் ஒருவரின் பலியை ஏற்றுக்கொண்ட இறைவன் இன்னொரு மகனுடைய பலியை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம், அவரிடம் பயபக்தி இல்லாத காரணத்தால் என்று இறைவனே திருக்குர்ஆனில் கூறுகிறான் (அத்தியாயம் 05 : வசனம் 27).


لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَـٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡ‌ۚ كَذَٲلِكَ سَخَّرَهَا لَكُمۡ لِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَٮٰكُمۡ‌ۗ وَبَشِّرِ ٱلۡمُحۡسِنِينَ

மேலும், பலியிடப்படும் பிராணிகளின் சதைத்துண்டுகளோ அவைகளின் ரத்தமோ தன்னைச் சென்றடைவதில்லை என்றும், பலி கொடுப்பவர்களின் பயபக்திதான் தன்னை வந்து சேர்கிறதென்றும் இறைவன் திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறுகிறான் (அத்தியாயம் 22: வசனம் 36).


இப்படியான உதாரணங்கள் நிறைய உண்டு. எனவே, கூட்டிக் கழித்து நான் சொல்ல வருவது இதுதான்:
நீங்கள் மொழியைப் பயன்படுத்தினாலும் சரி, மௌனத்தைப் பயன்படுத்தினாலும் சரி, இரண்டும் ஒன்றுதான். காரணம், மொழியின் பின்னால் உள்ள மனதைத்தான் இறைவன் பார்க்கிறான்.


ஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயத்து அனுப்பும் முறையைத்தான் அவன் மிகவும் விரும்புகிறான். அதனால்தானோ என்னவோ ஹீராக் குகையில் நபிகள் நாயகத்தை முதன் முதலில் சந்தித்த வானவர் ஜிப்ரயீல் நபிகள் நாயகத்துக்கு இறைச் செய்தியை அறிவிக்கு முன்னர் மூன்று முறை மார்போடு மார்பாக இறுக்கமாக கட்டிப் பிடித்து, பின்னர் விட்டார்கள்.


இதைத்தான் சூஃபிகளும் 'ஸீனா-ப-ஸீனா', இதயத்திலிருந்து இதயத்துக்கு என்று கூறினார்கள்.
ஆசைப்படுவதுதான் 'துஆ' என்று என் ஞானாசிரியர், மறைந்த மேதை நாகூர் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களும் அடிக்கடி என்னிடம் கூறியுள்ளார்கள். அதன் பொருளை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொள்ள அவர்களது ஆசியும் இறைவனது அருளும் எனக்கு உதவின.


இதைத்தான் ஆங்கிலத்தில் Burning Desire என்று சொல்கிறார்கள். பற்றி எரியும் ஆசை. இப்படி ஒருவன் ஆசைப்பட்டு விட்டால் போதும். அது பிரார்த்தனையாகப் பரிணமித்து இறைவனுக்கு செல் பேசி மூலம் செய்தி அனுப்பியதுபோல உடனே சென்று சேர்ந்துவிடும். அதன் பிறகு, அந்த ஆசை நிறைவேறுவதற்கான பாதைகளை அது அவனுக்குக் காண்பிக்க ஆரம்பித்து விடும். இதனால்தான் இறைவன் சிலருக்கு சீக்கிரமாகவும் பலருக்கு தாமதமாகவும் தருகிறான் போலும். பற்றி எரிகின்ற ஆசை ஏதுமின்றி, கும்பலில் போடும் கோவிந்தாக்களுக்கு இந்த தகுதி கிடையாது என்பது வருந்தத் தக்க உண்மை.


சப்தமாகச் சொல்லாதீர்கள். குரல்களை உயர்த்தாதீர்கள் என்று என்று சில இடங்களில் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.
என்னுடைய கருத்தில் தவறு இருக்குமானால், இறைவன் மன்னிப்பானாக.


இறைவனிடம் கேளுங்கள். குரலை உயர்த்தாமல் கேளுங்கள். குரலே இல்லாமல் கேளுங்கள். மௌனமாகக் கேளுங்கள். மொழிகளிலிருந்து மீண்டு வந்து கேளுங்கள். உள்ளத்தால் கேளுங்கள். உணர்ச்சிகளால் கேளுங்கள். அந்த கருணையாளனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்


                     நாகூர் ரூமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக