திங்கள், 30 மே, 2011

இறைவனின் எதிரியா இப்லிஸ்?




ஓரிறையின் நற்பெயரால்

குர்-ஆனையும் இஸ்லாம் கூறும் கோட்பாடுகளையும் சரிவர புரிந்துக்கொள்ளாமல் குறை காணும் நோக்கிலோ அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலோ அணுகும் பலரின் அறிவின் மிகுதி உருவாக்கிய வாதம் தான் இப்லிஸ் இறைவனுக்கு எதிரி ,இப்லிஸ் இறைவனுக்கு எதிரியாக இருக்கிறான் எனும்போது அனைத்தும் முடியுமென்று சொல்லும் கடவுளுக்கே எதிரியா...? பார்த்தீர்களா இங்கு கடவுளுக்கே எதிரி இருக்கும் போது நம்மை எவ்வாறு காப்பாற்றுவார் என்று தங்களது திரிபுத்துவ வாதத்தை நிறுவ முயல்கின்றன சில நாத்திக சிந்தனைகள்

உண்மையாக இப்லிஸ் இறைவனின் எதிரியா? அவன் குறித்த குர்-ஆன் வசனங்கள் என்ன சொல்கிறது ... பார்ப்போம்

இறைவனின் படைப்பினங்களை மூன்று பெரும் பிரிவாக பிரிக்கலாம்

1. மலக்குகள் (வானவர்கள்)

2. ஜின்கள்

3. மனிதர்கள்

இப்லிஸ் குறித்து இப்னு கஸீர் இவ்வாறு விளக்கமளிக்கிறது

சைத்தான்களின் தந்தையின் பெயர்.ஜின் இனத்தைச் சேர்ந்தவனான இவனுக்குச் சந்ததிகளும் சேனைகளும் உண்டு. மறைவாக இருந்துக்கொண்டு மனிதர்களை வழி கெடுப்பதே இவர்களின் தலையாய பணியாகும்.

இப்லிஸ் என்ற பதம் ஜின்னினத்தின் மூல பிதாவை குறிக்கப் பயன்படுத்த பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக தீய செயல் புரிய தூண்டும் ஜின்களுக்கு இப்பெயர் பொருந்தும்.மேலும்

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55:15)

இறை படைப்பில் இரண்டாம் நிலை படைப்பான ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதாக குர்-ஆன் இயம்புகிறது. இத்தகைய படைப்பான இப்லிஸ் மீது இறைவன் கோபமுற காரணமென்ன?

இறைவன் மலக்குகளையும், ஜின்களையும் படைத்தபிறகு மூன்றாம் படைப்பான மனித படைப்பின் முதல் மனிதராக ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்த போது அந்த முதல் மனிதருக்கு மலக்குகள் மற்றும் ஜின்களின் தலைவனாக இப்லிஸை சிரம் பணிய பணித்தான். மலக்குகள் சிரம் பணிந்தார்கள் இப்லிஸோ சிரம் பணிய மறுத்தான் அந் நிகழ்வை குர்-ஆன் சூரா அல்-ஹிஜ்ரில் பின்வருமாறு எடுத்துரைக்கிறது

(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,

அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!

அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.

இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.

"இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.

அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.

"அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்."

"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவனும்) கூறினான். (அல்குர்ஆன் 15:28 லிருந்து 35 வரை)

இப்லிஸ் இங்கு இறைவன் புறத்திலிருந்து கோபமுற காரணம் அவனை வணங்கவில்லையென்பதற்காக அல்ல மாறாக தன்னை விட தாழ்ந்த படைப்பாக மனிதப் படைப்பை கருதி ஆதமுக்கு சிரம் பணிய மறுத்தால் தான். ஆக அவனது ஏவலுக்கு கட்டுபடாததே இங்கு இறைவனின் சாபம் அவன் மீது உண்டாக பிரதான காரணம் (பார்க்க அல்குர்ஆன் 07:12)

இவ்விடத்தில் இரு முக்கிய கேள்வி தோன்றலாம்.

(1) மலக்குகள் போல் ஏன் இப்லிஸ் சிரம் பணியவில்லை?

(2)இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது என்றால் இங்கு இப்லிஸ் அஃது சிரம் பணியாமல் இருந்தற்கு இறைவன் தானே காரணம்?

* மலக்குகள் இறைவனின் சொல்லுக்கு சிறிதும் மாறு செய்யாத நிலையுடனே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இறைவன் ஏவியவற்றை செய்வார்கள். அவன் தடுத்தவற்றை விட்டு விலகி கொள்வார்கள்.

அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 ன் சுருக்கம்)

அஃதில்லாமல் ஜின்கள் மலக்குகள் போலன்றி மனிதன் போன்று எதையும் சிந்தித்து செயல்படுத்தும் முறையில் இறைவனால் சிந்தனையுடன் படைக்கப்பட்ட படைப்பு. எனவே தான் மலக்குகள் இறை சொல்லுகிணங்க ஆதம்(அலைக்கு) சிரம் பணிய இப்லிஸோ (ஜின்) இறைவன் சொல்கிறான் என்றும் பாராமல் தன்னைவிட கீழ் நிலை படைப்புக்கு சிரம் தாழ்த்துவதா என இருமார்பு கொண்டான். அவனது சிந்தனை இறைவன் சொல்லுக்கு மாறு செய்ய தூண்டியது.

"நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் 7:12)

* அடுத்து இறை நாட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது.,என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இறைவன் நன்மை -தீமைகளை ஆராய்ந்து உணரும் பொருட்டு சில சோதனைகளை ஜின் -மனித மனங்கள் மத்தியில் ஏற்படுத்துகிறான். ஏனெனில் நாம் அவற்றை பகுத்து ஆய்ந்து இது சரியானதா? அல்லது தவறானதா? என்று அறிந்து அதை செயலாற்றுவதற்காக., உதாரணத்திற்கு இப்போதும் நாம் காண்கிறோம் சிலர் இறை மறுப்பாளானாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் செயல்களும் அவர்கள் சரியென்று காணும் அவர்களின் எண்ணமுமே தான் காரணமே தவிர இறைவன் அல்ல.

ஏனெனில் இறைவனின் ஏவல்களும் -விலக்கல்களும் மிக தெளிவாக நம்மை வந்தடைந்துவிட்டது மேலும் எவர்களுக்கும் எந்த ஒரு செயல் குறித்தும் சுயமாய் முடிவுகளை எடுக்கும் உரிமைகளையும் இறைவன் கொடுத்திருக்கிறான். எனவே தமது அறிவுக்கு உட்பட்டே இது நல்லது இது கெட்டது என நம்மால் முடிவெடுக்கும் நிலை இருக்கிறது இதே நிலையே தான் இறைவன் அங்கு இப்லிஸுக்கும் கொடுத்தான். தனது சிற்றறிவால் படைத்தவன் கூற்றை ஏற்க தயங்கினான்

அவ்வாறு இறைவனின் கோபத்திற்கு ஆளான இப்லிஸ் அடுத்து இறைவனிடம் கேட்டது குறித்து குர்-ஆன் கூறுகிறது.ஆதி மனிதருக்கு சிரம் தாழ்த்த மறுத்ததால் தன்னை சபித்த இறைவனிடம் இப்லிஸ் அவகாசம் கேட்கிறான் எதற்கு? இறுதி நாள் வரை வருகின்ற மனிதர்கள் யாவரையும் வழிகெடுத்து இறைவனுக்கு மாறு செய்வதற்காகவே... அதற்கு இறைவனும் ஒப்புதல் அளிக்கிறான்.

"என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான். (அல்குர்ஆன் 15:36)

"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;" (அல்குர்ஆன் 15:37)

(அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (அல்குர்ஆன் 15:39)

இங்கு ஒரு விசயம், இப்லிஸூக்கென்று எந்த ஒரு பிரத்தியேக சக்தியும் இல்லை. மாறாக இறைவனிடத்தில் வேண்டி இறைவன் அவனுக்கு அத்தகைய அவகாசத்தை தருகிறான். எனவே இங்கு ஆற்றல் இறைவனால் தான் இப்லிஸூக்கு வழங்கப்படுகிறது என்பது தெளிவு!.அவ்வாறு இப்லிஸூக்கு அத்தகைய ஆற்றல் வழங்கப்பட்ட போதிலும் அவன் குறித்தும் அவனது செயல்களின் விளைவு குறித்தும் மனித சமுதாயத்திற்கு மிக தெளிவாக எச்சரிக்கை செய்கிறான்.

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)

(மேலும் பார்க்க: அல்குர்ஆன் 2:208, 5:91, 6:142, 7:27, 7:200, 16:36, 19:44)

இவ்வாறு மிக தெளிவாக வழிகெடுக்கும் ஜின்கள் குறித்து மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்து அவனது சூழ்ச்சிக்கு இரையாகாமல் உங்களை காத்துக்கொள்ள்ளுங்கள் என்றே கட்டளை பிறப்பிக்கிறான்., காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் திருட்டு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க சொல்வார்களோ அதுப்பொல.

ஏனெனில் திருடன் காவல் நிலையத்தில் திருட முனைவதில்லை மாறாக ஊர் மக்களின் வீடுகளில் தான் திருடுவான். (இது ஒரு அளவுகோல் அல்ல ஒரு உதாரணமே) ஆக, இங்கு மனிதர்களுக்கும் -தீய செயல் புரிய தூண்டும் இப்லிஸூக்கும் (ஜின்களுக்கும்) தான் பிரச்சனையே ஒழிய இறைவனுக்கும் இப்லிஸுக்குமல்ல...

சுமார் நூறு வசனங்களுக்கு மேலாக குர்-ஆனில் இப்லிஸ் (ஜின்கள்) குறித்து இறைவன் மனிதர்களுக்கு தான் எச்சரிக்கை விடுக்கிறானே தவிர தன்னின் இயலாமையால் உருவான எதிரியாக எங்கேணும் இப்லிஸ் கூறப்படவே இல்லை.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

கஃபத்துல்லாஹ் வரலாறு




அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் இறைவன் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே இறைவன் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.



அப்படிப்பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.



உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன.



'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன.



உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா

'கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.



நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)



முதல் ஆலயம்



மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.



அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)

'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம்  அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்  ஆவார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.



நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள். (அபூதர் (ரலி) புகாரி 3366)



ஆதம் அலைஹிஸ்ஸலாம்  அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.



எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.



ஹாஜரா அலைஹிஸ்ஸலாம், கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது.



எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

'தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)



அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)



மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:

1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் பின்அதீ ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதீ 3860)



மக்காவை நோக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.



அபய பூமி



மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:



அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57)



அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், ''இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். (அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி)



இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் செய்த பிரார்த்தனை



இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' (அல்குர்ஆன் 2:126)



அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.



திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.



மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.



அல்லாஹ்வுடைய பாதுகாப்பு

'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.



அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.



இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

''(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5)



மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.



''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 2118)



இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.



கொலை, போர் செய்தல் கூடாது



நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:



அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.



''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 4313, 1834)



புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.

(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 6882)



காஃபிர்கள் நுழைவதற்குத் தடை



இஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.



ஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.



நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது (அல்குர்ஆன் 9:28)



ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ''எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது'' என அறிவிக்கச் செய்தார்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1622)



பல கடவுட் கொள்கை கொண்டவர்களைத் தடை செய்வது மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது.



ஏனெனில் கஃபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்திற்கும், அதன் வளாகத்திற்கும் தனிச் சட்டங்கள் உள்ளதைப் பார்த்தோம். அங்கே பகை தீர்க்கக் கூடாது; புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.



இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் இவ்வாறு மற்றவர்களுக்கு அங்கே தடை விதிக்கப்படுகிறது.

ஆனால் மற்ற பள்ளிவாயில்களில் அவர்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.



புனிதப் பயணம் மேற்கொள்ளுமிடம்



இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.



புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.



''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது.



1. அல் மஸ்ஜிதுல் ஹராம்,



2. மஸ்ஜிதுன் நபவி,



3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1189)



மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ''கஃபா'' ஆலயம் சென்று ''ஹஜ்'' செய்வது கட்டாயக் கடமையாகும்.



அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)



அளவற்ற நன்மை

'கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.



என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1190)



''மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, இப்னுமாஜா 1396, அஹ்மத் 14167)



எந்நேரமும் வழிபடலாம்



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.



ஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள். (ஜுபைர் இப்னு முத்இம் ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதீ 795)



தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு



இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.



''மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1881, முஸ்லிம் 5236)



கஅபா இடிக்கப்படுதல்



கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும். 



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். 'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும். (அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1593)



கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.



இதைப் பற்றி அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் கூறினார்கள். (புகாரி 1591, 1896)



''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 1595)



கியாமத் நாள் வரும் வரை தான் அல்லாஹ் கஅபாவை அபய பூமியாகவும், பாதுகாப்புத் தலமாகவும் ஆக்கியுள்ளான். எனவே கியாமத் நாள் வரும் போது ''கஅபா'' இடிக்கப்படுவது இறைவனுடைய பாதுகாப்புக்கு எதிரானது கிடையாது. 



நல்லுணர்வு பெறுவோம்



இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மினாவில் இருந்த போது ''இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ''அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள், ''இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்க மக்கள் ''அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். அவர்கள் (இது) ''புனிதமிக்க நகரமாகும்!'' என்றனர். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?'' என்றதும் மக்கள், ''அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு, ''உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக் கூறினார்கள். (புகாரி 1742)



இப்படிப்பட்ட புனிதங்களை உணர்ந்து அதன் மூலம் படிப்பினை பெற்று வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!

சுவனத்தில் கேட்ட காலடி சப்தம்!




மிஃராஜ் சென்று திரும்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஸஹாபியிடம் ''சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது?'' என வினவியதற்கு, ''நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன்'' என பதிலளித்தார் அந்த ஸஹாபி.. அவர்தான் பிலால் ரளியல்லாஹு அன்ஹு.



பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.



பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் ரளியல்லாஹு அன்ஹு ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார்.



அன்றைய அரபு உலகில் புரையோடிப் போயிருந்த பல தெய்வக் கொள்கையிலும், புரோகிதத்திலும், தனிமனித வழிபாட்டிலும் திளைத்திருந்த மக்களிடம் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.



அபரிதமான இணைவைப்பாளர்களுக்கு இடையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோரின் நிலை பரிதாபகரமாக இருந்தது. இணைவைப்பாளர்களின் கொடுமைக்கும் சித்தரவதைக்கும் ஆளாயினர்.



ஏகத்துவக் கொள்கைளின் எதிரில் இணைவைப்பும், தனிமனித வழிபாட்டின் அனுஷ்டானங்களும் புரோகிதமும் தவிடு பொடியாவதைக் கண்டு வெகுண்ட மக்கத்து இணைவைப்பாளர்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொன்டோரைக் கொடுமைப் படுத்துவதில் சிறிதும் சளைக்கவில்லை. உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து தம்வம்சத்தாரின் துணையுடன் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான்.



சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான்.



சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை

அவர்களின் உடல் சித்தரவதையால் சின்னா பின்னப் படுத்தப்பட்டு கசையடி, அடி உதை என தண்டனைகள் அதிகரிக்கப்பட்டும் கூட ''அஹதுன் அஹதுன்' என்றே கூறினார்கள்.



இணைவைப்பாளர்களின் இத்தண்டனைகள் சித்தரவதைகள் யாவுமே பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கையை மேன்மேலும் உறுதிப் படுத்தவே உதவியது.



அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விலைக்கு கேட்கிறார்கள். 10 தங்க காசுகளுக்கு பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் உமைய்யா விற்று விட்டு எக்காளத்தில் கூறுகிறான் ''இவரை நீர் ஒரு தங்கக் காசுக்கு கேட்டிருந்தாலும் நான் விற்றிருப்பேன்'' எனக் கூறுகிறான். ''பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக வேண்டி நீ 1000 தங்கக் காசுகள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன்'' என அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனுக்கு பதில் அளித்தார்கள்.



பின்னர் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விடுதலை செய்தார்கள். மதினாவிற்கு இடம் பெயர்ந்தபின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்த பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன.



மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நியமிக்கிறார்கள். அபிஷீனிய அடிமைக்கு இத்தனை பெரிய அந்தஸ்த்தா? என இணைவைப்பாளர்கள் எரிச்சலடைந்தனர்.

முதல் இமாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதல் முஅத்தீன் பிலால் ரளியல்லாஹு அன்ஹு என நாம் அறிகிறோம்.



பிலால் ரளியல்லாஹு அன்ஹு பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை(முன்னாள் எஜமான்) பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொன்றார்கள். மக்கா வெற்றி கொள்ளப் பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப் படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே.



நபிகளாரின் மரணத்திற்குப் பின் அண்ணல் நபிகளின் மீது கொண்ட அளவு கடந்த பற்றினால் பாங்கு சொல்லும் போது அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நினைவுக்கு வருவதை உணர்ந்த பிலால் ரளியல்லாஹு அன்ஹு பாங்கு கூற மறுக்கிறார்கள். தான் சிரியா சென்று ஜிஹாத் செய்யப்போவதாக அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சொல்கிறார்கள். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பாங்கு கூறுமாறு உத்தரவிடுகிறார்கள். அதற்கு பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ''நீர் எம்மை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது அல்லாஹ்வின் அருளை நாடியா? அல்லது உம் கட்டளைக்கு கீழ்படிய வேண்டியா?'' என்று வினவினார்கள்.



அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சிரியா செல்ல அனுமதி தந்தார்கள். சிரியா சென்றடைந்த பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் ஆட்சி காலத்தில் அங்கு சென்று சந்தித்து பாங்கு கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். பாங்கு கூறுகிறார்கள் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.



மிஃராஜ் சென்று திரும்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ''சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது?'' என வினவியதற்கு, ''நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன்'' என பதிலளித்தார்கள்.



பனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குழந்தைகள் ஏதுமில்லை. தம் 70 வது வயதில் சிரியாவின் தலை நகரான டமாஸ்கஸில் இயற்கை எய்தினார்கள்.


அல்லாஹ் அருள் மறையில் எங்கெல்லாம் ஈமான் கொள்வதைக் குறிப்பிடுகிறானோ அங்கெல்லாம் நல்லறங்கள் புரிவதையும் இணைத்தே கூறுகிறான்.நான் எதை ஏவியுள்ளேனோ அதை இயன்றவரை செய்யுங்கள். நான் எதைத் தவிர்ந்து கொள்ளக் கூறினேனோ அதை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளுங்கள். எனும் நபி மொழிக் கேற்ப பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்களின் வழியில் நாமும் செயல்பட்டு மறுமையில் வெற்றியடைய அல்லாஹ் அருள் புரிவானாக

எது சந்தோஷம்....?




அவன் மாபெரும் செல்வந்தன், சந்தோஷம் தான் இல்லை. தேடிக்கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பார்த்தான். சந்தோஷம் தான் கிடைக்கவில்லை.



மது, மங்கையர், போதைப்பொருள் என்று எல்லாவற்றின் பின்னும் அலைந்து பார்த்தான்.



மனம் மகிழ்ச்சியடையவில்லை. துறவறத்தில் இறங்கினால் சந்தோஷம் கிடைக்கும் என்று யாரோ சொல்ல அதையும் அவன் முயற்சி செய்துபார்க்க முடிவெடுத்தான். தனது வீட்டில் இருந்த தங்கம், வைரம், வைடூரியம் என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டுபோய் ஒரு ஞானியின் காலடியில் வைத்துவிட்டு, ",இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்களிடம் கொடுத்து விட்டேன், இனி இதில் எதுவுமே எனக்குத் தேவையில்லை. நான் நாடிவந்திருப்பது அமைதியையும், மன சந்தோஷத்தையும் மட்டுமே, என்று ஞானியிடம் சரணடைந்தான்.



அந்த ஞானியோ அந்த செல்வந்தன் கூறியதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. அவன் கொண்டுவந்த மூட்டையை மட்டும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். கண்ணைக் கூச வைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கத்தையும், வைரக் கற்களையும் பார்த்த யோகி, மூட்டையைச் சுருட்டி எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.



செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சி, "அடடா, இருந்திருந்தும் ஒரு போலி ஞானியிடம் போய் நமது செல்வத்தை ஏமாந்து கோட்டைவிட்டு விட்டுவிட்டோமே என்ற துக்கம் ஆத்திரமாக மாற அந்தச் செல்வந்தன் யோகியைத் துரத்த ஆரம்பித்தான்.



ஞானியின் ஓட்டத்திற்குச் செல்வந்தனால் ஈடுகொடுக்க இயலவில்லை. சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி கடைசியில் தாம் புறப்பட்ட அதே மரத்தடிக்கே வந்து நின்றார்.



மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திக் கொண்டு வந்த செல்வந்தனிடம் ஞானி, "என்ன பயந்துவிட்டாயா, இந்தா உன் செல்வம், நீயே வைத்துக் கொள்", என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்.



கைபோன தங்கமும் வைரமும் திரும்பக் கிடைத்துவிட்டதில் செல்வந்தனுக்குப் பிடிபடாத மகிழ்ச்சி. அப்போது அந்த ஞானி செல்வந்தனைப் பார்த்துச் சொன்னார் "இங்கே வருவதற்கு முன்னால் கூட இந்த தங்கமும் வைரமும் உன்னிடத்தில் தான் இருந்தது, ஆனால் அப்போது சந்தோஷம் உன்னிடத்தில் இல்லை, இப்போது உன்னிடம் இருப்பது அதே தங்கமும் வைரமும் தான். ஆனால் உன் மனதில் இப்போது சந்தோஷம் இருக்கிறது!’’



இதில் இருந்து புலப்படும் உண்மை ஒன்றுதான்.



சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை, மனதில் தான் இருக்கிறது. இந்த உண்மை செல்வத்தை மூட்டை கட்டிக் கொண்டு திரிந்த செல்வந்தரைப் போலவே நம்மில் பலருக்கும் கூடத்தெரிவதில்லை. 



சந்தோஷம் என்பது...

o மனத்தை ஒருவன் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவன் அடையும் சந்தோஷம் இருக்கிறது.



o உண்மையான சந்தோஷம் என்பது நம்முள்ளே இருக்கும் ஒரு தன்மையால், வாழ்வைப் பற்றிய ஒரு சிந்தனையால் ஏற்படுகிறது. திருப்திக்கான வழிமுறைகள் நம்மிடையே இல்லாவிட்டால், பொருளாதார வெற்றிகள் முதல் எவ்வளவு வெற்றிகள் இருந்தாலும் அது நம்மை மகிழ்விக்காது.

o நல்லவைகள் எதையாவது செய்வது, நல்லவைகள் எதையாவது நேசிப்பது, நல்லவைகள் எதையாவது நம்புவது இவைதான் வாழ்வில் சந்தோஷத்திற்கான அடிப்படைத் தேவைகள்.



o எவ்வளவு முறை தோல்வி பெற்றாலும் நீங்கள் வெற்றி பெறப் பிறந்தவர்கள். ஒரு காரியத்தை நன்கு செய்ததே அதன் வெகுமதிதான்.

o சந்தோஷம் என்பது பெரும்பாலும் கடும் உழைப்பால் ஏற்படுகிறது. வெறும் சிந்தனை, உணர்வு அல்லது உணர்ச்சியை அப்படியே சந்தோஷமாக அனுபவித்துவிடலாம் என்று கற்பனை செய்வது சிலர் செய்யும் தவறாகும். அழகை அருந்தமுடியுமா! சந்தோஷத்தை போராடிப் பெற வேண்டும். அது, மனிதர் வேலை செய்வதை விரும்புகிறது.



o தன்னிடம் இல்லாததற்காக வருந்தாமல், தன்னிடம் இருப்பதற்காக சந்தோஷமாக இருப்பவனே புத்திசாலியான மனிதன்.



o ஒவ்வொரு தலைமுறையும் பழமை தனக்குத் தந்த புதையலை சந்தோஷமாக அனுபவிக்கிறது. பிறகு புதிய சொத்துக்களை அப்புதையலில் சேர்த்துப் பெரிதாக்கி எதிர்காலத் தலைமுறைக்கு வழங்குகிறது.